வாழ்ந்து பார்த்த தருணம்…210

எதற்குப் பண்டிகை…

தோராயமாக ஒரு இருபது வருடங்கள் முன்பிருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரத்தில் இருந்து ஒரு முக்கால் மணி நேர பயண தூரத்தில் இருந்த சற்றே பெரிய ஊர் அது. அன்றைய காலகட்டத்தில் அந்த ஊரில் இருந்த மிக முக்கியமான உணவகத்தின் காசாளாரக பணியில் இருந்தேன். அந்த உணவகம் அங்கிருக்கும் பிரதான பேருந்து நிலையத்தின் வெளியே இருந்தது. நான் தான் அங்கே காசாளர் என்பதால் பண பரிவர்த்தனை சம்பந்தமான வகையில் நிறைய பேரிடம் எளிதாக கலந்து உரையாடும் வாய்ப்பிருந்தது, அப்படித்தான் அந்த உணவகத்திற்கு வெளியே அந்த உணவகத்தால் நடத்தப்படும் தேநீர் கடைக்கு அன்றாடம் தேநீர் தூள் கொடுக்கும் ஒருவர் நண்பரானார். அவர் தான் அந்தப் பகுதியில் பெரும்பாலான தேநீர் கடை மற்றும் உணவகங்களுக்கு ஒரு பெருநிறுவனத்தின் தேநீர் தூளை விநியோகிப்பவர். அது ஒரு தீபாவளி சமயம். அதனால் அன்று என்னிடம் பணம் பெற்றுக் கொள்ள வந்த அவரிடம். என்ன பாஸ் இந்த தடவ தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் எனக் கேட்டேன். சரக்குப் போடணும் பாஸ் என்றார். சரி அப்புறம்?. அப்படியே மட்டையாகணும். அப்புறம்?. தெளிஞ்சதும் திரும்பவும் சரக்கப் போடணும். அப்புறம்?. அப்புறமென்ன மறுபடியும் மட்ட தான். இப்படியே சரக்கப் போட, மட்டையாக, சரக்கப் போட, மட்டையாக அப்படின்னு இந்த தீபாவளிய சிறப்பா கொண்டாடணும் அப்படின்னார். எனக்கு மனதுக்குள் வெளங்கிடும் அப்படின்னு தோன்றியதை அவரிடம் சொல்லவில்லை. கட் பண்ணா இருபது வருடங்களுக்கு பிறகு கடந்த வருட தீபாவளிக்கு வீட்டிற்கு வந்திருந்த மிக நெருக்கமான உறவினரின் குடும்பத்துடன் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சின்ன மலை கிராமத்திற்கு போய் வரலாம் எனக் குடும்பத்தோடு கிளம்பினோம். காலை போய் விட்டு மாலைத் திரும்புவதாகத் திட்டம். கிளம்பிப் போய் மலை எல்லாம் ஏறிச் சுற்றிவிட்டு. மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். விடிந்தால் தீபாவளி என்பதால் வழியெங்கும் பட்டாசு வைக்கும் ஒலிகள் காற்றையும், காதையும் கிழித்துக் கொண்டே இருந்தன. ஒருவிதமான கொண்டாட்ட மனநிலை வழி எங்கும் நிரம்பி இருந்தது. ஒரு இடத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திரும்பி சின்ன, சின்ன கிராமங்களின் வழியே நான் இப்பொழுது குடி இருக்கும் வீட்டை அடையலாம். அப்படி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறமாக சிறிய கிராமங்களின் வழியே செல்லும் சாலைக்குள் வண்டியைத் திருப்பினோம். அந்தச் சாலையில் நுழைந்த சிறிது தூரத்தில் இடது பக்கமாக மீண்டும் வளைவு ஒன்றுத் திரும்பும். அப்படித் திரும்பும் வளைவில் வண்டியை திருப்புகையில் இரு சக்கர வாகனங்கள் நிறைய சாலையை அடைத்துக் கொண்டு அந்தச் சாலையில் ஒரே போக்குவரத்து நெரிசலாக இருந்தது.

பொதுவாக அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் எல்லாம் இருக்காது. அப்படியிருக்கையில் ஏன் என யோசித்துக் கொண்டே கிடைக்கிற இடைவெளியில் வண்டி முன்னோக்கி நகர்த்திக் கொண்டே போனால், ஒரு இடத்தில் மூன்று இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மிக மோசமாக மோதி, அதன் முன் சக்கரங்கள் ஏடா கூடமாக சிக்கி வீழ்ந்து கிடந்தன. அதனைப் பிரிக்க சில பேர் போராடிக் கொண்டிருந்தார்கள். அதன் அருகிலேயே மூன்று பேர் சாலையில் விழுந்து கிடந்தார்கள். மூன்று பேருக்குமே இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வயதிருக்கலாம். மூன்று பேருமே இடுப்பில் கைலிக் கட்டியிருந்தார்கள். மூவருக்குமே தலையில் பலத்த அடி. அவர்கள் தலையில் இருந்து வழிந்த இரத்தம் அந்தச் சாலையின் ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு நடுவில் இருக்கும் வெள்ளைக் கோட்டைத் தாண்டி வந்து அப்படியே நின்று இருந்தது. காரின் முன் இருக்கையில் என் மகளுடன் இருந்த நான். என் மகளின் கண்களை சட்டென மூடி தலையை வேறு பக்கமாகத் திருப்பினேன். அவர்கள் விழுந்து கிடந்த நிலையைப் பார்க்கும் போதே மூவருமே பிழைப்பது மிகக் கடினம் எனத் தெரிந்தது, அங்கு நின்று இருந்தவர்கள் பேசியதை வைத்து மூன்று பேருமே குடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அந்த விபத்து நடந்த இடத்தைக் கடந்து வண்டி போய்க் கொண்டிருந்த பாதையில் ஒரு இரண்டு நிமிட பயணத்திலேயே இடது புறமாக ஒரு மதுபானக் கடை கண்களில் பட்டது. மதுபானக் கடையின் வாசலில் ஒரு பெருங் கூட்டம் சரக்கை வாங்க முண்டியடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் யாருக்கும் அங்கிருந்து அரைக் கிலோ மீட்டர் தொலைவில் குடித்து விட்டு ஓட்டியதால் வண்டி மோதி மூன்று உயிர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பது கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னொரு பக்கம் தெரிந்தும் பிரயோசனம் இல்லை என்றும் தோன்றியது. ஒரு நிமிடம் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த மூவரின் குடும்பம் பற்றிய எண்ணங்கள் மனதிற்குள் தோன்றி மறைந்தன. அவர்களின் வருகைக்காக, அந்த தீபாவளியைக் கொண்டாட மகிழ்வோடு அவர்களின் குடும்பத்தினர் காத்திருப்பார்கள் இல்லையா. அதில் எத்தனைக் குழந்தைகள், மனைவி, சகோதரி, அம்மா, அப்பா, தம்பி என எவருக்கும் அந்த தீபாவளி மகிழ்வாக இருக்கப் போவதில்லை. இதனை எல்லாம் யோசிக்கும் போதே கண்களுக்குள் கண்ணீர் திரண்டது.

அந்தக் குடும்பத்துக்கு இந்த தீபாவளி மட்டுமல்ல, இனி வரும் எல்லா தீபாவளியிலுமே அந்த இழப்பின் வலி மனதிற்குள் கீறிக் கொண்டே இருக்கும். இதனை எல்லாம் அவர்கள் ஏன் யோசிக்கவே இல்லை என்கிற கேள்வி மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அப்படியே முடிந்த 2023 தீபாவளிக்கு வந்தால், தீபாவளிக்கு முந்தைய நாள் நெருங்கிய உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததால். அன்றைய தினம் மாலை வரை மருத்துவமனையில் இருந்து விட்டு, அதன்பின் இரவு தான் வீட்டுக்கு வர முடிந்தது. தீபாவளிக்கு முந்தைய இரவு என்பது ஒரு வகையில் கொண்டாட்டம் என்றால். இன்னொரு வகையில் அந்தக் கொண்டாட்டமே பயமாகவும் மாற ஆரம்பித்திருக்கிறது. காரணம் குடித்துவிட்டு, குறிப்பாக இளைஞர்கள் தாறுமாறாக கத்திக் கொண்டே ஒரு இரு சக்கர வாகனத்தில் மூன்று அல்லது நான்கு பேர் உட்கார்ந்து வண்டி ஓட்டிக் கொண்டு போவதை வீடு வரும் வரை பல்வேறு சாலைகளில் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இதில் எத்தனை வாகனங்கள் சரியாக தன் வீட்டை அடையும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அவர்களுக்கு வாகனங்களை கொடுப்பது யார் பெற்றோர்கள் தானே. கேட்டால் வண்டி கொடுக்கலைன்னா செத்துடுவேன்னு மிரட்டுறான் என்கிற பதில் அவர்களிடம் இருந்து கண்டிப்பாக வரும். குடிச்சிட்டு வண்டிய தாறுமாறா ஓட்டுனா சகாமாட்டானா. ஆனா அப்படி செத்தா அவன் மட்டும் சாகாம இன்னும் இரண்டு மூணு பேர சேர்த்து சாகடிப்பான் இல்லையா. அதெல்லாம் சரி. இந்தப் பண்டிகை என்பது எதற்காக குடித்து விட்டு மட்டையாகவா. இல்லை குடித்து விட்டு மற்றவர்களை சாகடிக்கவா. எனக்குப் புரியவில்லை. இதில் தீபாவளிக்கு மது எவ்வளவுக்கு விற்றிருக்கிறது என்கிற புள்ளி விபரமெல்லாம் தனியாக வெளியிடுகிறார்கள். அதிலும் நம்ம ஊர்ல தாண்டா சரக்கு ஜாஸ்தி விற்றிருக்கிறது என்கிற பெருமை கூந்தல் வேறு. உண்மையில் பண்டிகை என்பது உற்சாகம் என்பது போய் உற்சாக பானம் என்கிற உயிரைப் பறிக்கும் கேடு கெட்ட சாக்கடையாக மாறிக் கொண்டே வருகிறது. இப்படியே போனால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்குs
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *