எங்கே தோற்கிறோம்…
எனது இநூறாவது பதிவான புத்தனின் பார்வையில் காயம் என்கிற பதிவில் வந்த இரண்டு பின்னூட்டங்கள் மிக முக்கியமாவையாகப்பட்டன. அதற்கு பதில் பின்னூட்டம் இடுவதை விட. தனிப் பதிவாகவே எழுதிவிடலாம் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு. சரி அந்த இரண்டு பின்னூட்டங்களின் சாராம்சத்தை மட்டும் சொல்லிவிட்டு நேரடியாக விஷயத்திற்குள் போய் விடலாம். முதலாவது பழிவாங்குவதன் ருசி, வெறுமனே கடந்து போவதை விட சுவையாக உள்ளது. இரண்டாவது ஏனெனில் மாயைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் 99% உண்மைக்குக் கிடைப்பதில்லை. சரி இப்ப விஷயத்திற்குள். இது வரையிலான என் வாழ் நாளில் பெரும் பகுதியை உணவகத்துறையிலும், திரைத்துறையிலும் தான் கழித்திருக்கிறேன். இந்த இரண்டுத் துறையில் இருந்தும் கற்றுக் கொண்ட பாடங்கள் மிக அதிகம். திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய பயணத்தில். சூழல் காரணமாக உதவி இயக்குநராகவும் சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். அப்படி உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு முக்கியமான சூழலில். ஒரு நாள் கதை விவாதத்தின் போது. நான் அப்பொழுது பணி செய்து கொண்டிருந்த இயக்குநர் சொன்ன ஒரு வார்த்தை இன்று வரை என் மனதில் பசுமரத்தாணி போல் அப்படியே பதிந்திருக்கிறது. அவர் சொன்ன வார்த்தை இது தான். உன்னுடைய எதிரி எப்பொழுது ஜெயிக்க ஆரம்பிக்கிறான் என்றால். அவனைப் பற்றிய எண்ணங்களை உன்னுடைய சிந்தனைக்குள் செலுத்தும் போது தான் என்றார். எனக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகளில் இருந்த உண்மைகளைப் பற்றி ஆழமாக யோசித்த போது சுரீர் என்று வலித்தது. எவ்வளவு பெரிய உண்மை. உண்மை தான் நாம் நம்முடைய எதிரியாகவோ அல்லது பிடிக்காதவர்களா கருதும் ஒருவரிடமிருந்து நம்மை நோக்கி வரும் வார்த்தைகளையோ அல்லது நிகழ்வையோ தான் நம் வாழ்நாள் முழுவதுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் சுமந்து கொண்டிருக்கிறோம் இல்லையா. அப்படியிருக்கையில் நம்மைப் பற்றிய நம்முடைய சிந்தனை என்பது எப்பொழுது சாத்தியம். உண்மையில் எவ்விதமான இடையூறும் இல்லாத நம்மைப் பற்றி நமக்கான முழுமையான சிந்தனை என்பது சாத்தியமே இல்லை என்பது தான் முகத்தில் அறையும் உண்மையான பதில்.
காரணம். நம்மோடு ஒத்துப் போகாத அல்லது நம் பேச்சை எவ்விதமான மாற்றுக் கருத்தும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிற மனிதர்களைத் தவிர. கொஞ்சம் பச்சையாக சொல்வதென்றால். நமக்கு, நம் கருத்துக்கு ஜால்ரா தட்டாத எவரையுமே நாம் பிடிக்காதவர்களின் பட்டியலிலோ அல்லது எதிரிகளின் பட்டியலிலோ சேர்த்து விடுகிறோம். இப்படி ஒவ்வொரு தனி மனிதனிடமும் மிக, மிக நீண்ட பட்டியல் ஒன்று இருக்கிறது. அந்தப் பட்டியலில் இருக்கும் மனிதர்கள் ஒரு வேளை நமக்கு நல்லதே செய்தாலும் அல்லது நல்ல வார்த்தைகளையேச் சொன்னாலும். அவர்கள் செய்வதும், சொல்வதும் சரியானது தான் என்று நமக்கு முழுமையாகத் தெரிந்தாலும். நம்மால் அதனை முழுமனதோடு ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம். மேலே சொல்லியுள்ள பட்டியலுக்குள் அந்த நபர் வந்து விடுகிறார் என்கிற ஒரே ஒரு காரணம் தான். அதனைத் தாண்டி நாம் சரியானவர்களாக இருப்பதற்காக அங்கீகாரத்தை இந்த சமூகத்திடம் இருந்தோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்தோ கண்டிப்பாக எதிர்பார்க்கிறோம். அதன் நேரடி வெளிப்பாடு தான் மேலே சொல்லியுள்ள பின்னூட்டமான மாயைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் 99% உண்மைக்கு கிடைப்பதில்லை என்பது. அப்படியானால் நாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற அங்கீகாரத்திற்காகத் தான் நம்மை சரியானவர்களாக வைத்துக் கொள்ள எத்தனிக்கிறோமா என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்துவிடுகிறது இல்லையா. உண்மையில் இங்கே நல்லவைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதை விட. நல்லவை போன்ற மாயைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமே நம்மை முழுமையாக கோபம் கொள்ள வைக்கிறது அல்லது விரக்தி நிலைக்குத் தள்ளுகிறது. இது தான் பழிவாங்கும் ருசியாக மாறுகிறது. இதனைத் தான் மற்றொரு பின்னூட்டமான பழிவாங்குவதன் ருசி, வெறுமனே கடந்து போவதை விட சுவையாக உள்ளது எனச் சொல்வது. அப்படியெனில் உண்மையான ருசி எது.
முதலில் உண்மையான ருசியை நமக்குள் நமக்குத் தேடத் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னளவில் என்னை சரியாக வைத்துக் கொள்கிறேன் என்பதற்காக இந்தச் சமூக மற்றும் சுற்றத்தாரின் அங்கீகாரமே எனக்குத் தேவையில்லை என்கிற நிலையை நோக்கி கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்திருக்கிறேன் அல்லது நகர்ந்து கொண்டே இருக்கிறேன். இதனால் என்னவாகிறது என்றால். நான் என்ன பண்ணினாலும் என்னை அங்கீகரிக்கவில்லை என்கிற விரக்தியோ புகாரோ என்னிடமில்லை. இந்த மனநிலையே மிகப் பெரும் ருசியானது. அதன் ருசியை அனுபவிக்க வேண்டுமெனில் கண்டிப்பாக மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் நம்முடைய மனநிலையில் இருந்து நம்மை நாமே விடுவிக்க வேண்டும். சரி அதிலிருந்து விடுபட்டாயிற்று. அத்தோடு அந்தச் சமூகமும், சுற்றமும் சும்மா இருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை. நாம் எந்த அளவுக்கு மாறுகிறோமோ அதற்கு தகுந்தாற் போல் நம்மை வண்டி, வண்டியாக குறை சொல்ல ஆரம்பிக்கும். அதனையும் கடந்து வரத் தான் வேண்டும். வேறு வழியே இல்லை. காரணம். உண்மையான ருசியின் சுவை அப்படி. என்னுடைய நகர்த்தலின் அடுத்த படியாக என்னை அங்கீகரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறை சொல்லாமலாவது இருங்களேன் எனச் சொல்ல ஆரம்பித்தேன். அதுவும் கொஞ்ச காலம் தான். அதன் பின் குறைதான சொல்ற. சொன்னா சொல்லிட்டுப் போ என்கிற மனநிலையை நோக்கி நகர்ந்து விட்டேன் அல்லது நகர்ந்து கொண்டேடேடே இருக்கிறேன். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். இந்த நகர்தல் என்பது கண்டிப்பாக விரக்தியின் பால் எடுக்கப்பட்டது அல்ல. நான் என்ன செய்கிறேன் என்பதை முழுமையாக புரிந்து, தெரிந்து நகர்ந்தது. இதனால் என்ன பயன் என்றால். என்னை குறை சொல்பவர்களையும் சரி. என் கருத்தோடு ஒத்துப் போகாதவர்களையும் சரி எந்தக் காலத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் எதிரியின் பட்டியலிலோ அல்லது பிடிக்காதவர்களின் பட்டியலிலோ ஏற்றுவதே இல்லை. இதனாலேயே என்னை நோக்கி வரும் என்னைக் குறை சொல்லும், காயப்படுத்தும் சொற்களை எல்லா நேரங்களிலும் இல்லாவிட்டாலும் மிகப் பெரும்பாலான நேரங்களில் கடந்து வர, அதனை என் நினைவுகளில், சிந்தனைகளில் ஏற்றாமல் காற்றோடு பறக்கவிடப் பழகியிருக்கிறேன். என்னுடைய பட்டியல் சிறியதாக மாற, மாற என்னுடைய சிந்தனைக்குள் உலவும் மனிதர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது. அதனால் ஏற்படும் அழுத்தமற்ற மனச் சமநிலை என்பது பயிற்சித்துப் பார்த்து அதனுடைய ருசியறிந்தால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியது. இல்லையெனில் இதனைப் போன்ற ஆயிரம் வார்த்தைகளில் அதனை எழுதினாலும் புரிந்து கொள்ளவோ, ருசி கொள்ளவோ முடியாது. கிட்டத்தட்ட மேலே சொல்லியுள்ள பட்டியலிட்டப்பட்ட மனிதர்களிடமிருந்து நம்மை நோக்கி வரும் வார்த்தைகளில் தான் தொடர்ந்து நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம். அந்தத் தோல்வியை தவிர்க்க முடியாதவரை. புத்தனின் மனதினை அடைய விடாத சொற்களின் ருசியை கடைசி வரை சுவைக்கவே முடியாது. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்குs
9171925916