வட்டத்தின் வெளியே…
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நெருக்கமான உறவினர் ஒருவரின் சிகிச்சைக்காக தொடர்ந்து சில நாட்கள் ஒரு பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்படி ஒரு நாள் அந்த மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு கண்ட காட்சி ஒன்று வேடிக்கையாக இருந்த அதே நேரம் வேதனையாகவும் இருந்தது. அந்த மருத்துவமனையில் இருந்த ஒரு பகுதியின் பிரதான நுழைவாயில் அது. அந்த உள் நுழையும் வாயிலுக்கு நேர் எதிரே கொஞ்சம் தள்ளி போடப்பட்டிருந்த காத்திருப்பவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அந்த மருத்துவமனைக்குள் ஒரு பதின்ம வயதை தாண்டிய ஒரு நபர் கையில் நெகிழியால் செய்யப்பட்ட ஒரு பெரிய கூடையுடன் உள்ளே வந்தார். அவர் தூக்கி வந்த அந்த கூடையைப் பார்க்கும் போதே அது குழந்தையை சுமந்து செல்வதற்காக உள்ளது என்பது தெரிந்தது. அவர் பின்னாலே அவரது மனைவி முழுமையான முகப்பூச்சுடன் ஒரு விஷேச வீட்டிற்கு வருவதைப் போல் வந்து கொண்டிருந்தார். அவரது உடையில் சுருக்கங்கள் எதுவும் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டே வந்தார். மிகச் சரியாக நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்த இருக்கையில் வந்து, அந்தக் குழந்தையை வைத்திருந்த அந்த பெட்டி போன்ற பெரிய கூடையை வைத்தார் அந்த நபர். அதனை வைக்கும் போதே எனக்கு உள்ளுக்குள் பதறியது. காரணம் அந்த பெட்டி அந்த இருக்கையில் இடித்ததைக் கூட அந்த நபர் கவனிக்கவில்லை. அந்த இருக்கை வேறு இரும்பால் செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இடிக்கப்பட்ட பெட்டியின் அதிர்வு, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தொந்தரவு செய்யவில்லை. அப்பொழுது தான் கவனித்தேன், அந்தப் பெட்டியின் உள்ளிருந்த குழந்தைக்கு வயது அதிகபட்சமாக பிறந்து இரண்டு மாதம் மட்டுமே இருக்கலாம். அவ்வளவு குட்டியாக தலையை சாய்த்து அந்த பெட்டிக்கு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு களேபரங்களுக்கும் நடுவில் அதன் தாய் தனது துப்பட்டாவையும், உதட்டு பூச்சையும் சரி செய்து கொண்டிருந்தது பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்தப் பெட்டியை அங்கேயே வைத்து விட்டு, அந்த நபர் இங்கேயே இரு நான் போய் விசாரித்துவிட்டு வருகிறேன் என அந்த இடத்தை காலி செய்தார்.
இங்கே எத்தனை பேருக்கு இப்பொழுது சொல்லப் போகும் விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. ஒரு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை. தன் கண்களின் பார்வையால் முழுமையாக எதனையும் பார்த்துக் கண்டறிய முடியாது. தன் தாயைக் கூட தனக்குள் இருக்கும் உள்ளுணர்வின் மூலமே கண்டு கொள்ளும். அதனால் தான் குழந்தைப் பிறந்த சில மாதங்கள் வரை, மிகச் சரியாகச் சொல்வதானால், அந்தக் குழந்தையின் தலைப்பகுதி நிலையாக எவ்விதமான பிடிமானமும் இல்லாமல் நிற்கும் வரை. தாய்மார்கள் தங்களின் கரங்களிலே வைத்துப் பழக்குவார்கள். இன்னொரு வகையில் தாயின் கருப்பையில் இருந்து வெளிவந்து பின் சில மாதங்களாவது அது தன் தாயின் உடல் சூட்டினை தனக்கான ஆற்றலாக மாற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இன்றைய நவீன உலகம் குழந்தையை தூக்குவதையே ஒரு மிகப் பெரிய “வேலைப்” பளுவாக யோசிக்க வைத்து, அதனைத் தவிர்க்கும் மனநிலையை நோக்கி நம்மை வெகு சிறப்பாக வெற்றிகரமாக நகர்த்தி இருக்கிறது. அது எப்படி எனில், நாம் நமது முந்தைய சந்ததியிடம் இருந்தோ, முந்தைய தலைமுறையிடம் இருந்தோ எதுவுமே கற்றுக் கொள்ளவோ, எடுத்துக் கொள்ளவோ தேவையே இல்லை. நீங்கள் எப்படிக் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை எப்படி வளர்க்க வேண்டும் என ஆரம்பித்து. இங்கு எல்லாவற்றையுமே இந்த நவீன உலகம் கற்றுக் கொடுக்கும். அதன்படி நீங்கள் நடந்து கொண்டால் போதுமானது. மற்றவற்றை எல்லாம் இந்த நவீன உலகமும், அந்த உலகத்தில் இருக்கும் ஆகச் சிறந்த அறிவாளிகளும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளவோ மெனக்கெடவோ தேவையே இல்லை. ஒரு வேளை இப்படியான நவீன உலகத்துக்குள் நடமாடும் ஒருவர் நம் முன்னோர்களோ அல்லது முந்தைய தலைமுறையோ கற்றுக் கொடுத்த வழிகளை பின்பற்றி நடப்பவர்களைக் காண நேர்ந்தால், இந்த நவீன உலகின் பிதாமகன், பிதாமகள்களின் பார்வையில் அவர்கள் எல்லோரும் நாகரிகம் தெரியாவர்களாக ஆக்கப்படுவதோடு மட்டுமில்லாமல். தங்களுக்கு இந்த நவீன உலகைப பற்றி எதுவுமே தெரியவில்லை என்கிற ஒரு விதமான குற்ற உணர்வுக்கு உள்ளாக்கப் படுவார்கள்.
இந்த நவீன உலகத்தின் பார்வையில் நம் முன்னோர்களும், முந்தைய தலைமுறையும் முட்டாள்கள். அவர்களுக்கு குறிப்பாக அறிவியல் பூர்வமாக எதுவுமே தெரியாது என்பது போன்ற மாயையை நம்மிடயே இருக்கும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ள மக்களை வைத்தே, நம் எண்ணத்திற்குள் ஊடுருவது தான் இன்று நவீன உலக பிதாமகர்களின் பிரதான வேலையாக இருக்கிறது. அந்த வேலையையும் மிக கச்சிதமாக செய்து கொண்டும் இருக்கிறார்கள். அதனால் தான் திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக் கொள்வதையும் திருமண பேக்கேஜுக்குள் சலுகை விலையில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன, குழந்தை பெற்றுக் கொடுக்கும் மருத்துவமனைகள். ஆம் புரிந்து தான் சொல்கிறேன். இன்று நாம் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதனையும் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது அவர்களிடம் கொடுத்து விட்டோம். அதுவும் இல்லை எனில் கொடுக்க வைக்கப்பட்டோம். பிறக்கும் குழந்தைக்கோ அல்லது தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்கோ தாயின் உணர்வும், உடல் சூடும் எந்த அளவுக்கு தவிர்க்கவேக் கூடாத விஷயம் என்பதற்கு, நாம் எந்த இணையத்திற்குள்ளே மேய்ந்து நம்மை அறிவாளிகளாக காட்டிக் கொண்டிருக்கிறோமோ, அதற்குள்ளாகவே நிறைய காணொளியாகவே ஏற்றி வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் நம் கண்களில் படாது. அப்படியான காணொளி ஒன்றில் பிறந்த குழந்தை ஒன்று தாயின் கருவில் இருந்து வெளிவந்த பிறகு மூச்சு விடாமல் அமைதியாக இருக்க, அந்தக் குழந்தையை அதன் தாயின் மார்புச் சூட்டில் சிறிது நேரம் வைத்திருப்பார்கள். சிறிது நேரம் அந்த தன் தாயின் மார்புச் சூட்டில் இருக்கும் அந்தக் குழந்தை, அதன் மூலம் தான் உள்வாங்கிய ஆற்றலைக் கொண்டு மூச்சு விட ஆரம்பிக்கும். அதனைக் காணும் யாருக்கும் ஒரு நிமிடம் உடல் சிலிர்ப்பது உறுதி. மற்றொரு உதாரணம் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண் அவர்கள் ஆற்றல் குறைவாக பிறந்த தன்னுடைய குழந்தையினை, எப்படி தன்னுடைய உடல் சூட்டினைக் கொண்டே மீண்டும் ஆற்றல் மிக்க ஆரோக்கியமான குழந்தையாக ஆக்கினார் என்பதனை ஒரு முறை நேர்காணலின் போது விரிவாகச் சொன்னார். இப்படிப்பட்ட உதாரணங்கள் பல உண்டு. ஆனால் இன்று தாயுக்கும் சேயுக்குமான இப்படியான தவிர்க்கவே முடியாத, தவிர்க்கவே கூடாத உணர்வுப்பூர்வமான உறவினைத் தான், இன்றைய நவீன உலகத்தால் தவிர்க்க வைக்க முடிந்திருக்கிறது. இந்த நவீன உலகத்தின் அறிவாளிகள் வரும் காலத்தில் இயந்திர மனிதர்களை வைத்து தான் இந்த உலகத்தை ஆளப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா. அதெல்லாம் தேவையே இல்லை. ஒரு குழந்தையின் பிறப்பில் இருந்தே மேலே சொல்லியுள்ள விஷயங்களை, நாம் இந்த நவீன உலகம் சொல்வதைக் கேட்டு செய்ய ஆரம்பித்தாலே போதும். பிறக்கும் குழந்தைகள் இயந்திர மனிதர்களாகத் தான் வளர்வார்கள். அப்புறம் தனியாக எதற்கு வெட்டியாக எந்திர மனிதர்களை உருவாக்கிக் கொண்டு நேரம் தான் வீண். அதனை எல்லாம் தாண்டி, நாமே உணர்வுகள் எல்லாம் செத்துப் போன இயந்திரங்களாக மாற வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்குs
9171925916