குழந்தைகளும், ஒளியுலகமும்
நண்பர் திரு. நல்லசோறு ராஜுமுருகன் மாதம் ஒரு நாள் நடத்தும் குழந்தைகளுக்கான ஒன்றுகூடலுக்கு பல தடவைகள் அழைத்தும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாமல் இருந்தது, நான் செல்ல முடியாத காரணத்தால் எனது நண்பர் செல்வம் அவர்களை செல்லுமாறு கூறியவுடன் அவரும் மகிழ்வாக ஏற்றுக்கொண்டு சென்றார். அவரின் தனிச்சிறப்பான அறநெறிநாடகக்கலை மற்றும் பொம்மை நாடகம் மற்றும் பொம்மைகள் செய்முறை என குழந்தைகளுடன் குழந்தையாக பயிற்றுவித்து கொண்டிருந்தார். இம்முறை நானும் நேற்று (28.10.2018 ஞாயிற்றுக்கிழமை) தடைகள் அனைத்தும் விலகி செல்ல முடிந்ததில் சந்தோசம். என்றைக்குமே நம்முடைய அடுத்த தலைமுறை குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது நிறைய விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கும். எனக்கு என் பதின்ம வயதில் கிடைக்காத அல்லது அறியவே செய்யாத பல விஷயங்கள் இன்று உள்ள குழந்தைகளுக்கு ரொம்ப சீக்கிரமாகவே கிடைத்துவிடுகிறது. ஆனால் அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் சிக்கலே. அதையெல்லாம் தாண்டி நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியையும், அறிவையும் போதிக்கும் பாரம்பரியமான விளையாட்டுக்களை முற்றிலுமாக மறந்தாயிற்று. அதை இந்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் இவ்வளவு தூரம் தன்னுடய நேரத்தையும், உழைப்பையும் கொடுக்கும் நல்லசோறு ராஜுமுருகனையும் மற்றும் அவரது நட்பு வட்டத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்விற்கு சென்று அந்த குழந்தைகளுக்கு எனக்கு தெரிந்த ஒளிகலையை கற்று கொடுத்ததில் மகிழ்ச்சி.
இன்றைய குழந்தைகளின் பெரும் பிரச்சனை அவர்களுக்குப் படிப்பைத் தவிர எதையும் முறையாக கற்றுக்கொடுப்பதில்லை. (படிப்பும் உண்மையிலேயே முறையாக கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்பது வேறு விஷயம்). இதில் விளையாட்டை எப்படிக் கற்றுக்கொள்வது. என்னுடைய பதின்ம வயது வரை ஆக்கப்பூர்வமான விளையாட்டுகள் சொல்லிக்கொடுக்கப்படாமலேயே முந்தைய தலைமுறையினரால் அடுத்து வருபவர்களுக்கு அருமையாக கடத்தப்பட்டன. ஆனால், அதன் பின் வந்த தலைமுறைக்கு விளையாட நேரம் கொடுக்கப்படவேயில்லை. அதோடு மட்டுமில்லாமல் அக்குழந்தைகளுக்குப் புத்தகத்தை மட்டுமே சுமந்து ஓடவேண்டும் எனும் மனநிலையை புகுத்தி, அவர்கள் பந்தைய குதிரைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு, கிட்டதட்ட என் பதின்மவயதுக்கு அடுத்ததலைமுறையோடு கொஞ்சம், கொஞ்சமாக உடலையும், மனதையும் உறுதி செய்யும் பாரம்பரிய விளையாட்டுகள் அழிக்கப்பட்டுவிட்டன. பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள், எல்லா பக்கமும் கான்கிரீட் காடுகளாக மாற்றிவிட்டு நடுவில் சின்ன இடத்தில் ஊஞ்சலும், சறுக்கு மரமும் உருவாக்கிவிட்டால் அவர்கள் விளையாடி மகிழ்வார்கள் என்று இந்த உலகமும், பெற்றோர்களும் நம்புவது தான் அறியாமையின் உச்சம். இல்லையென்றால் வீட்டில் கார்ட்டுன் சேனல் அல்லது கைபேசியை கொடுத்துவிட்டால் நம்மை தொல்லைப்படுத்தாமல் இருப்பார்கள் என்பது இன்றையப் பெற்றோரின் நம்பிக்கை. கைபேசியில் அல்லது தொலைக்காட்சியில் குழந்தைகள் பழகும் வன்முறை இருக்கிறதே, அது மிகக்கொடுமையானது. சின்ன வயதிலேயே மாய உலகத்தின் கணினி விளையாட்டுகளில் அனைத்துவிதமான ஆயுதங்களையும் கையாண்டு அதீதமான ரத்ததையும், வன்முறையையும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஒடியாடி வியர்வை உதிர விளையாடும் விளையாட்டுகள் இன்று இல்லை. அப்படி விளையாடினால் தானே நேரத்திற்கு சரியாக பசிக்கும், உண்பதும் செரிமானமாகும், நோயும் அண்டாது. அதை தான் தனது குழந்தைகளுக்கான ஒன்றுகூடலில் பயிற்றுவிக்கிறார் நல்லசோறு ராஜுமுருகன்.
அதோடு நில்லாமல் அன்றாடம் அவர்களது வாழ்வியலுக்கு தேவையான பலவிதமான விஷயங்களையும் குழந்தைகள் தாங்களாகவே உருவாக்கி கொள்ளும் நேர்த்தியையும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார். தாங்களாகவே ஒரு பொருளையோ அல்லது வேறு விஷயங்களையோ உருவாக்கும் திறன்பெரும் குழந்தைகள் மனதில் வரும் மாற்றமும், தன்னம்பிக்கையும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. அத்தகைய மாற்றம் இன்றைய சூழலில் மிக, மிக அவசியமானது என்பதால், ராஜூமுருகன் அவர்கள் முன்னேடுக்கும் இந்த முயற்சி தனித்துவமானதும் அவசியமானதும் கூட. அதில் நானும் ஒரு அங்கமாக அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இன்று நாம் என்ன பேசினாலும் கைபேசியை குழந்தைகளிடத்தில் இருந்து விலக்கி வைத்திடமுடியாத, அதே சமயத்தில் தவிர்க்கவும் முடியாத நிலையில் இருக்கிறோம். அப்படியானால் அதை அவர்களுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்த சொல்லி கொடுத்தல் நலம். அப்படி ஒரு முயற்சி தான் கைபேசியின் வாயிலாக ஒளிப்படக்கலையின் மூலம் புகைப்படங்களை நேர்த்தியாக எப்படி எடுப்பது என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது. கண்டிப்பாக கைபேசியின் வழியே விளையாடும் விளையாட்டுகள் மூலம், அழித்தலை விட, அதே கைபேசியின் வழியே அழகான ஒரு விஷயத்தை ஆக்கவும் முடியும் என்று அவர்களுக்கு புரியவைத்தலே பயிற்சியின் நோக்கம். அதை நோக்கிய ஆரம்பம் நேற்றைய நாளில் தொடங்கியாயிற்று. மறுபடியும் அனைவருக்கும் மிகப்பெரும்நன்றிகள். இப்படி ஒரு பயிற்சியளிக்க எனை அழைத்த எனது நண்பர் நல்லசோறு ராஜுமுருகனுக்கு என்றும் நன்றியும், மகிழ்வும்…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
+91 9171925916