வாழ்ந்து பார்த்த தருணம்…02

நடவு

இன்று என் வாழ்வின் மிக முக்கியமான நாள். இன்று காலை வீட்டு வரி வசூலிக்க பெண் ஒருவர் இப்பொழுது குடியிருக்கும் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் கொடுக்க கையில் ரொக்கமாக பணம் இல்லாததால், பணம் எடுத்துவர வெளியே சென்றபோது தான் கவனித்தேன். போகும் வழியில் வீட்டில் இருந்து சிறிது தூரத்திலேயே வயலில் நாற்று நடும் வேலை நடந்து கொண்டிருந்தது. பார்த்தவுடன் புகைப்படமெடுக்க மூளை பரபரத்தது, அதை சற்று அடக்கிவைத்துவிட்டு, பணம் எடுக்கும் இயந்திரத்தைத் தேடிப் போய் பணத்தை எடுத்து வந்து, வரிவசூலிக்க வந்த பெண் பணியாளரிடம் கொடுத்துவிட்டு, மனைவி மற்றும் எனது மகளையும் அழைத்துக் கொண்டு நடவு நடக்கும் நிலத்திற்கு சென்றேன். நீண்ட நாளாக என் மனைவி வயலில் இறங்கி நாற்று நட வேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். என்னுடய பள்ளி பருவ வயதில் நான் விவசாய வேலை செய்ததுண்டு. என் அத்தை முறை சொந்தம் ஒருவரின் நிலத்தில் வேலை செய்த அனுபவமும் உண்டு. என் மனைவியோ பேருந்திலோ, தொடர்வண்டியில் செல்லும்போதோ விவசாயத்தை வேடிக்கை பார்த்ததோடு சரி. மனைவிக்கு நீண்ட நாளாக விவசாய நிலத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என ஆசை. எனக்கும் என் மகளுக்கு அவள் தட்டில் விழும் அரிசி எங்கிருந்து வருகிறது என்பதை இப்போழுதிலிருந்தே புரியவைத்து வளர்க்க வேண்டும் என ஆசை.

எனது மகளுக்கு இப்பொழுது 3வயது முடிந்து 4மாதம் ஆகிறது. இன்றைக்குப் பள்ளி செல்லும் 90 சதவீத குழந்தைகளுக்கு (என் குழந்தையை இன்னும் நான் பள்ளியில் சேர்க்க வில்லை) தாங்கள் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது எனத் தெரியாது. கேட்டால் கடையில் இருந்து வருகிறது என்பார்கள். நாம் உண்ணும் உணவின் பின்னால் இருக்கும் மனித உழைப்பு என்பது மிக அசாதாரணமானது. தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் ஒவ்வொரு மனிதனும் கூட அதை பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் துர்ரதிர்டவசமாக அப்படி ஒரு புரிதல் இங்கு சுத்தமாக இல்லை. அதனால் தான் ஒரு விவசாயின் சாவிலிருந்து, நம் கண்முன்னே வீணடிக்கப்படும் உணவு வரை, எதுவுமே நமக்கு வலிப்பதேயில்லை. ஒரே ஒரு நாள் உழுது முடித்த நிலத்தில் நடவு பணி நடக்கும்போது அங்கே போய், அந்த நடவுக்காக வைக்கப்பட்டிருக்கும் நாற்றை வாங்கி, வயலில் உங்கள் காலின்முட்டிக்கு சற்று கீழ் வரை இறங்கும் அந்த ஈரசகதியில் இறங்கி, ஒரு மணிநேரம் நிமிராமல் நாற்று நட்டு பாருங்கள். அதன் வலியும் அருமையும் அப்பொழுது பு(தெ)ரியும். அப்படி நடவு நடக்கும் நிலத்தில் இறங்கி அவர்களுடன் பேசிக்கொண்டே, என் மனைவி நடவு நட ஆரம்பித்தாள் சிறிது நேரத்திலேயே, அங்கு நாற்று நடும் வேலையில் இருக்கும் பெண்களிடம், இப்படி குனிந்து கொண்டே வேலை செய்யும்போது குறுக்கு வலிக்காதா எனக் கேட்டாள். அதற்கு அங்கிருந்த பெண் அப்படி வலிக்குதுன்னு நிமிந்தோம்னா, உடனே கூலி கொடுப்பவர் என்னம்மா பால்லாங்குழி ஆட்றியா என திட்டிவிட்டு, அடுத்தநாள் வேலைக் கொடுக்க மாட்டார் எனச் சொன்னார். தொடர்ந்து அந்த வலிய எல்லாம் பத்தி நினைக்கவே கூடாது. குனிஞ்சா சட, சடன்னு நடவ நட்டுகிட்டு போயிகிட்டே இருக்கணும். ஏன்னா இந்த வேலை அப்படி, இந்தா காலை 7மணிக்கு வந்தோம் இன்னும் கஞ்சி தண்ணி குடிக்கல என சொல்லிக் கொண்டே நாற்று நட ஆரம்பித்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை. ஏனென்றால், நாங்கள் அனைவரும் காலை உணவை முடித்துவிட்டே வயலுக்கு வந்திருந்தோம்.

நம் தட்டில் விழும் உணவுக்காக உழைப்பவர்கள் உணவருந்தவில்லை, நாங்கல் உணவை சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறோம் என்பது எப்பேர்ப்பட்ட நகைமுரண். இன்று எத்தனைபேருக்கு, குறிப்பாக உணவை கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வீணடிப்பவர்களுக்கு, இந்த உழைப்பை பற்றி என்ன தெரியும். காசுக்கொடுத்தால் உணவு நம் தட்டில் வந்து விழும் நம்புகிறவர்களாக இருந்தால், உங்களை போன்றோரை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். இன்று நாசாவிலிருந்து இஸ்ரோ வரை அனைவருமே ஒரு கிரகம் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டால், அங்கு முதலில் பயிரிட முடியுமா என்று தான் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஒரு வேளை இந்த பூமி அழியும் நிலை ஏற்பட்டால், உங்களிடம் இருக்கும் கோடிகளை வைத்து கொண்டு அந்த கிரகதிற்கு போய் விடலாம். ஆனால், போன பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தை தின்று உயிர்வாழ முடியாது. நாம் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான பாடம் இது தான். பள்ளி படிப்பெல்லாம் அப்புறம் தான். ஆனால், நம் குழந்தைகளுக்கு கைபேசியில் மாயகணினி விளையாட்டுகளை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் கால்களிலும், கைகளிலும் இருக்க வேண்டியது, விலை உயர்ந்த கால்உறையோ அல்லது கைபேசியோ இல்லை. உழுது முடித்து கிடக்கும் இந்த விவசாய மண்ணின் சகதி, அதற்கு முன், உங்கள் கைகளால் அந்த நாற்றை வாங்கி அந்த நிலத்தை வணங்கி நட வேண்டும். அதை பார்த்து உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு முன், நம்மில் எத்தனை பேருக்கு விவசாயம் பற்றிய அடிப்படைத் தெரியும் என்று யோசித்து பாருங்கள். இன்று ஆனா ஊனா வென்றால் எனக்கும் விவசாயம் பண்ணனும் ஆசையிருக்கு என சொல்வது ஒரு வித போதையான அந்தஸ்தின் அடையாளமாகிவிட்டது. என் மகளுக்கு புரிகிறதோ, இல்லையோ அவளிடம் சொல்லி கொண்டிருந்தேன். ஆயிரம் கோவில்களுக்கு சென்று பல வித மதங்களின், பல வித வடிவ கடவுள்களை வணங்குதைவிட, இந்த நிலத்தையும், இந்த மண்ணையும், இங்கு நடப்படும் இளம் நாற்றையும் வணங்குதலே சிறப்பு. ஏனென்றால் இது தான் வளர்ந்து நாளை உன்னுடைய தட்டிற்கு உணவாக வருகிறது என்று. அவள் ஏதோ ஒன்றை புரிந்து கொண்டவளாய், நாற்றை நட்டுமுடித்து கிளம்பும் முன், கிழக்கு நோக்கி வணங்கிக் கொண்டிருந்த என்னுடய மனைவியை பார்த்து மகளும் வணங்க ஆரம்பித்தாள். நாற்று நட்டு முடித்து கிளம்பும் முன், கடைசியாக பிரித்து நடும் கட்டில் இருக்கும் நாற்றிலிருந்து பாதியை அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு, நட்ட நிலத்தின் விளைசல் நன்றாக இருக்க வேண்டும் என கிழக்குநோக்கி வேண்டி வணங்க வேண்டும் என்பது மரபு. அமோக விளைசலை கொடு இறைவா. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
+91 9171925916