படிக்க முடியாத(படாத) புத்தகம்…
கடந்த நான்காம் தேதி செவ்வாய் கிழமை. மதுரை திருமங்கத்தில் மாலை நேர குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது. அழைத்தவர் நண்பர் செல்வத்தின் மூலம் அறிமுகமான பெண் பேராசியர் திரு மீனா அவர்கள். தொடர்ச்சியாக குழந்தைகளுக்குச் சொல்லி கொடுக்கும் வாய்ப்பும், அவர்களிடையே இயங்கும், அளவாளவும் வாய்ப்பும் கிடைப்பது அரிது. அதனாலேயே கேட்டவுடன் ஒப்புக்கொண்டு நானும், செல்வமும் இருவருமே சென்றோம். பொதுவாக இதுபோல கிராமபுற அருகிலிருக்கும் அரசு பள்ளிகளுக்கு செல்லும் போது தான் நம்மை நமக்கே யாரென்று அக்குழந்தைகள் கற்றுக் கொடுப்பார்கள். உணர்த்துவார்கள். இக்குழந்தைகளுக்கு நீங்கள் யார்?. உங்களின் திறமையென்ன?. உங்களின் பாராக்கிரமங்கள் என்ன?. என்று உங்களை ப்பற்றிய எதுவுமே அவசியமில்லை, அதனால் கொஞ்சமும் தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் அவர்களிடத்தில் இருந்து கேள்விகள் வந்து விழும். அவர்களின் முன் நான் யார் தெரியுமா? என்ற பினாத்தல் எல்லாம் வேலைக்கே ஆகாது. அமைதியாக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு. அவர்களின் மனதை படித்தால் மட்டுமே அவர்களிடையே உங்களின் குரல் சென்றடையும். அது ஒரு ஜென் நிலை.
கிராமபுற குழந்தைகளுக்கும், நகர்புற குழந்தைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமிருக்கிறது. பொதுவாக எல்லோருடைய பொது புத்தியிலும் நகர்புற குழந்தைகள் தான் அறிவாளிகள், நன்கு படிப்பவர்கள் மற்றும் புத்திசாலிகள் என்ற எண்ணமிருக்கும். ஆனால், உண்மையான முகத்திலறையும் நிஜம் வேறுமாதிரியானது. நகர்புற குழந்தைகள் நல்ல பயிற்சி அளிக்கப்பட்ட இயந்திர மனிதர்கள் போல. கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் வரும். ஆனால், அதைத் தாண்டிய சிந்திக்க மறுக்கப்பட்டவர்கள். நாளடைவில் பதிலைத் தாண்டி சிந்திப்பதையே மறந்துவிடுகிறவர்கள். ஆனால், கிராமப்புற குழந்தைகளிடத்தில், நீங்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து பதிலை விட, எதிர்கேள்வியே அதிகம் வரும். அந்த கேள்விக்கான பதில் அது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால். அவர்களின் மனதை படிக்கவே முடியாது. இது தான் சவாலே. அந்த சவாலை எதிர்கொள்வதில் தான் உங்களின் அனுபவமும், ஆளுமை திறனும் இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டிய விஷயம். அந்தக் குழந்தைகளின் முன் உங்களின் ஈகோ உடைந்து நொறுங்குவதை கண்கூடாக பார்க்க முடியும். உங்களின் ஈகோ உடைந்து நொறுங்குவதைப் பார்க்கும் திராணி இருந்தால் மட்டுமே அவர்களைக் கையாளவே முடியும். அப்படி நம் ஈகோவை தூக்கி எறிந்து விட்டு, அக்குழந்தைகளில் ஒருவராக கலந்து கரைதலை ரசிக்கும் மனதை எனக்களித்த அக்குழந்தைகளை நேசிக்கிறேன். தொடர்ந்து இந்த பயணத்தில் படிக்கப்படாத அவர்களின் மனங்களை படிக்க வேண்டும். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916