வாழ்ந்துப் பார்த்தத் தருணம்…06

ஒரு 90வயது தாயுள்ளமும், ஒரு கிடையில் தப்பிய ஆட்டுக்குட்டியும்…

கடந்து இரு மாதங்களாக நல்லசோறு ராஜமுருகன் அவர்களின் குழந்தைகளுக்கான ஒன்று கூடலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்துப் போய் கொண்டிருக்கிறேன். பொதுவாக ஒரு வயதுக்கு மேல் அதிகமாக நகர்புரத்திலேயே இருக்கும் சூழல் அமைந்ததால், கிராமங்்களுக்கு அதுவும் பிரதான விவசாய பூமியாக பச்சைபசேல் என, வாகனப்  புகை அதிகம் ஊடுறுவாத, மிக எளிமையாக பட்டோபம் ஏதுமற்ற சுற்றிலும் கோழி, ஆடு, மாடு என இயற்கைக்கு தீங்களிக்காமல் வாழும் சூழல் இருக்கும் இடம் குறைவு. மேற்சொன்ன அத்தனை சுழலும் இருக்குமிடம் தான் ராஜமுருகனின் வீடும் தோட்டமும். இந்த காரணங்களுக்காகவே அவர் வாழும் சூழலை மிகவும் நேசிக்கிறேன். அவரின் வீட்டில் ராஜமுருகனின் தாயாரின் தாயாரும் இருக்கிறார். அந்த தாய்க்கு வயது 90 இருக்கும். அவர் வீட்டுக்கு செல்லும் போது எல்லாம், பயிற்சி அளிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் ஒன்று அவர் வீட்டை சுற்றி புகைப்படமெடுத்துக் கொண்டிருப்பேன் அல்லது அந்தத் தாயாரைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அவரை இயல்பாக புகைப்படமெடுக்க முயற்சித்தபடியே இருப்பேன். இன்னும் கூட என் மனதில் உருவகபடுத்தியிருக்கும்ப் அந்த புகைப்படம் மாட்டவில்லை. சரியாக எடுக்கவேண்டும். ஆனால், நான் எடுப்பது அவரை எந்த வகையிலும் தொந்தரவு படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கண்டிப்பாக எடுப்பேன். அதுவல்ல சொல்ல வந்த விஷயம். பொதுவாக பெரும்பாலானவர்களின் பொது புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயம் வயதானவர்கள் என்றால், அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் ஒரே நச்சரிப்பு, அதிகமாக எல்லாவிஷயத்திலும் தலையிடுவார்கள் இப்படி இன்னும் நிறைய. இதெல்லாம் உண்மையா, பொய்யா என்கிற விவாதம் தேவையேயில்லை. இன்றைய அவசர உலகத்தில் பணத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் போது. அவர்களுடன் நிதானமாக உட்கார்ந்து பேச எல்லோருக்கும் நேரமில்லை. அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் குறையை அவர்கள்மீது எறிந்துவிடுகிறோம். அவ்வளவு தான். ஆனால் 90 வயதிலிருக்கும் இந்தத் தாய் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. அங்கிருக்கும் ராஜமுருகனின் வீட்டின் ஒரு பக்க முனையில் அமைதியாக அமர்ந்தபடி எதையோ ரசித்தபடி இருப்பார்.

ராஜமுருகன் வீட்டில் ஒரு ஆட்டுக்குட்டி இருக்கிறது. அதன் முன்னங்கால்களில் ஒன்று வளராமல் பிறந்திருக்கிறது. அதனால் அது நடக்க முடியாமல் படுக்கவைக்கப்பட்டே இருக்கும். ராஜமுருகனிடம் நான் மூன்று கால்களை வைத்து தத்தி, தத்தி நடக்கவைக்கலாமே என கேட்டேன். சிறிதுநாள் நடந்தது. அதன் பின் அதனால் முடியவில்லை. பின்னங்கால்களில் பலமில்லை எனச் சொன்னார். இந்த முறை சென்றபோது தான் கவனித்தேன். ராஜமுருகனின் பாட்டி அதை படுக்கவைத்திருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் மரபெஞ்சில் அமர்ந்தபடி அதற்கு புல்லை கொடுத்துக்கொண்டிருந்தார். அதுவும் எத்தி, எத்தி ஆர்வமாக சாப்பிட்டபடி இருந்தது. அந்தக் காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் புகைப்படமெடுக்க அருகில் சென்றபோது நிமிர்ந்து என்னை சாதாரணமாக ஒரு பார்வை பார்த்தார். அப்புறம் ஆட்டுக்குட்டிக்கு ஊட்ட ஆரம்பித்துவிட்டார். அவர் அந்த ஆட்டுக்குட்டியை கவனித்து கொண்ட விதம். ஒரு தாய் தவழ முடியாமல் படுத்திருக்கும் தன்னுடைய குழந்தைக்கு உணவளிப்பது போல் இருந்தது. அந்த ஆட்டுக்குட்டிக்கென அங்குள்ள மரத்தில் சின்ன தொட்டில் ஒன்று இருக்கிறது. படுத்தே இருக்கும் அந்த குட்டி சில சமயங்களில் என்னை அந்த தொட்டிலுக்கு கொண்டு போங்கள் என்பது போல் கத்தும். உடனே அதைத் தூக்கி போய் அந்த தொட்டிலில் வைத்துவிடுவார் ராஜமுருகன். அந்த குட்டி அதிலிருந்தபடி காலை ஆட்டியபடி ஆடிக்கொண்டிருக்கும்.இன்னொரு விஷயமும் கவனித்தேன் ராஜமுருகன் வீட்டிற்கு வருபவர்கள். குறிப்பாக பெண்கள் சாப்பிடும் முன் அம்மாயி சாப்பிட்டாங்களா எனக் கேட்காமல் சாப்பிட்டதேயில்லை. அவர் சாப்பிடவில்லை என்றால் சாப்பாட்டை தட்டில் போட்டு அவரிடம் கொடுத்துவிட்டு, அவர்களும் எடுத்து போய் அவருடன் அமர்ந்து பேசியபடி தான் சாப்பிட்டார்கள். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இருந்த போது நான் கவனித்த வரை, வீடுகளில் பெரியவர்கள் சாப்பிட்டார்களா என கேட்பது அருகிப்போய். அப்படியே கேட்டாலும், அது வெறும் கடமைக்காக தான் இருக்கிறது. அந்த வீடுகளில் எல்லாம் தொலைகாட்சி பெட்டி ஓடியபடி இருக்கும். ஏனென்றால் வெளியே போக தான் வாய்ப்பேயில்லையே அப்புறம் வேறு வழி(லி).

அம்மாயி 90 வயதானாலும் தன்னுடைய வேலைகளை அவரே கவனித்து கொள்கிறார். ஆட்டுகுட்டியை கவனித்து கொள்கிறார். அதைக் கொண்டு தொட்டிலில் அமர்த்தியவுடன் அந்த குட்டி படுத்திருந்த இடத்தை கூட்டி பெருக்கி சுத்தபடுத்தி விடுவார். வீட்டின் ஒரு முனையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர், பின்னர், அது கொஞ்சம் அலுப்பாக இருந்தால், வீட்டின் திண்ணையில் இருக்கும் கயிற்று கட்டிலில் அமைதியாக வந்து படுத்துவிடுவார். அவர் வயதில் இருக்கும் ஒருவருக்கு உள்ள நிதானம், அமைதி பொதுவாக அந்த வயதிலிருக்கும் யாரிடமும் நான் பார்த்ததில்லை. பெரும்பாலும் நான் சந்தித்த குறிப்பாக நகர்புறத்தில் வசிக்கும் பெரியவர்கள் அதிகமாக புலம்புவதை தான் கேட்டிருக்கிறேன். அது பெரும்பாலும் தான் பெற்ற பிள்ளை பற்றியதாகத் தான் இருக்கும். பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் சுற்றிலும் கான்கீரிட் காடுகளாக இருந்தால் எங்கு தான் போவது. அவர்களால் அந்த நகரத்தில் இருக்கிறோம் என்ன பட்டோபத்தையும் விடமுடியாமல், அதே சமயத்தில் கிராம வாழ்க்கைக்கும் திரும்ப முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாழ்பவர்களைப் பார்த்துவிட்டு அம்மாயியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஒரு வித சந்தோசம் தோன்றும். என் மனதில் தோன்றும் அந்தச் சந்தோசம் என்பது அலாதியானது. நம் கண்முன்னே ஒரு அழகான பின்புலத்தில், சலனமில்லாமல் நதி ஒன்று அமைதியாக ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஒரு மனநிறைவான சந்தோசம் தோன்றுமே அத்தகையது அது. அதுவும் அந்த ஆட்டுக்குட்டியை அவர் கவனித்து கொள்ளும் அழகே தனி. அவரிடம் அவர் வாழ்ந்த வாழ்கையை பற்றி கேட்க வேண்டும். அந்தச் சலனமற்ற நிதானத்தை கற்றுக்கொள்ள வேண்டுமேன நினைக்கிறேன். அடுத்தடுத்து செல்லும்போது அம்மாயிடம் பேச வேண்டும் ஒரு ஆட்டுகுட்டியை போல் அவர் அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்க வேண்டும். பார்க்கலாம்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *