வாழ்ந்து பார்த்த தருணம்…09

வாசித்தல் எனும் போதை

நான் என்னுடைய பதின்ம வயதுகளில் பாட புத்தகத்தின் மேல் மிகுந்த கசப்புணர்வு கொண்டு திரிந்தவன்.பள்ளி நாட்களில் ஒவ்வோரு மாதங்களுக்கு இடையில் எழுதும் எந்த ஒரு பரிட்சையிலும் முழுமையாக எல்லா பாடங்களிலும் வெற்றி என்பது எனக்கு அரிதினும் அரிது. கால் வருட பரிட்சை, அரைவருட பரிட்சை இரண்டிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான். ஏதேனும் சமயங்களில் மட்டுமே அதிசயம் நடக்க வாய்ப்பிருந்திருக்கிறது. அந்த அதிசயம் நிகழும் நேரங்களில் கிடைக்கும் ரேங்கை வருடம் முழுவதும் சொல்லி திரிவதுண்டு.எப்படி புத்தகம் என்றாலே காத தூரம் ஓடினேனோ பின் நாட்களில் அதே புத்தக வாசிப்பை மிகப்பெரும் காதலுடன் நேசிக்க துவங்கினேன். ஆனால் புத்தகத்தின் மீதான தாக்கம் எப்படி வந்ததேன்று மிகச்சரியாக தெரியவில்லை. யோசித்தால் சில விஷயங்கள் நினைவில் வந்து போகின்றன. அப்போழுதய வீட்டின் பொருளாதார சூழல் மற்றும் படிப்பின் மீதான கசப்புணர்வு ரெண்டும் சேர்த்து சீக்கிரமே வேலைக்கு செல்லும் சூழல் அமைந்துவிட்டது. வேலைக்கு என்று வந்தவுடன் ஒவ்வோரு நாளும் முடியும் பொழுது அன்றைய பணி சுழலின் அழுத்தங்களை மறக்க புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை என்னுடனே பணியாற்றிய என் தாய்மாமன் மகன் தான் பழக்கப்படுத்தினான். இன்று வரை என்னுடைய ஆகச்சிறந்த நண்பர்களின் அவன் மிக முக்கியமானவன்.

அவன் பெயர் விஜய். விஜய் அப்பொழுது மிகப்பெரிய ராஜேஸ்குமார் ரசிகன் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் வெளியாகும் அனைத்து பாக்கெட் நாவல்களையும் வாங்கிவிடுவான். எங்களில் பணி சூழல் முடிய இரவு 11 மணிக்கு மேல் ஆகும். ஆனாலும் அதன் பிறகு படிக்க ஆரம்பித்து அவனும் நானும் ஆளுக்கொரு நாவலை எடுப்போம் வாசித்துவிட்டு மாற்றிக்கொள்வோம். இப்படி அதிகாலை 3மணிவரை அந்த வாசிப்பு நீண்டு பின்னர் உறங்க சென்றிருக்கிறோம். சலிக்காமல் இது தினசரி இரவு நடக்கும். நாள் முழுவதும் வேலை செய்த களைப்பு இருந்தாலும் இரவு புத்தகத்தை தொட்டவுடன் எல்லா வலியும் மறந்துவிடும். அந்த பழக்கம் தான் பின்னர் ராஜேஷ்குமாரில் இருந்து தாவி, இந்திராசெளந்தர்ராஜனில் தொடர்ந்து பின்னர் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகமாகி அவரின் கதாவிலாசம் படித்த பிறகு மிகப்பெரும் எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது.
இடைப்பட்ட வருடங்களில் ஒரு முறை கேரளாவின் கோழிக்கோட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போழுது அங்கு வேலை செய்த நண்பர்களில் ஒருவர் அங்குள்ள நூலகம் பற்றி சொன்னார். போய் பார்த்தால் நிறைய பழங்காலத்து சரித்திர பின்னனி நாவல்களாக இருந்தன, அதுவரை அப்படிப்பட்ட எழுத்துகள் பக்கம் போனதில்லை என்பதால் சிறு தயக்கம் இருந்தது, கூட வந்த நண்பர் தான் சாண்டில்யனின் கடல்புறா நாவலை எடுத்து கொடுத்து படியுங்கள் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என சொன்னார். படிக்க ஆரம்பித்ததும் சும்மா ஜிவ்வேன பறந்தது, அன்றைய நிலையில் வாசிப்பின் போது அந்த நாவல் கொடுத்த தாக்கம் வார்த்தைகளில் சொல்ல இயலாதது. கிட்டதட்ட அந்த நாவலை வாசித்தை இப்படி சொல்லலாம் ராஜ போதையில் திளைத்தேன். அந்த நாவல் கொடுத்த தாக்கம் தான், அதை உள்வாங்கிய விதம் தான். பின்நாட்களில் எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரின் எழுத்துகள் மீதான காதலையும், அதை தாண்டியும் வாசிப்பை தொடர செய்தது.

என்னுடைய தொடர்ச்சியான இந்த படிப்பின் மீதான ஈர்ப்பே என்னுடைய கண்களை ஒளிப்பதிவு கருவியின் வழி இந்த உலகத்தின் ஆன்மாவை கண்டடைய கற்றுக்கொடுத்தது. என்றும் படிப்பின் வழி தன்னை உணர்தல் மிகப்பெரும் அனுபவம். அந்த படிப்பின் வழி உணர்ந்த அனுபவமே என்னுடைய புகைப்பட பயிற்சியிலும் என்னை இயக்குகிறது. இன்று படிப்பது அரிதாகி விட்டதால் முக்கியமான பேச வேண்டிய சுழல்களில் வார்த்தைகளற்று தடுமாறுகிறோம். படியுங்கள் கண்டடைவீர்கள். அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய கதாவிலாசம் மூலம் எனக்கு நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் என்றால் மிகையில்லை. என்றும் அவருடைய ரசிகன் நான் என்று சொல்வதில் எனக்கு பெருமையே. ஒரு ரசிகனாக விருது வென்ற திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். அவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் சகாத்ய அகடமி விருதெல்லாம் அவருக்கு ஒன்றுமேயில்லை. அவரின் எழுத்துக்கள் வழியே அவர் உயர உயர போய்க்கொண்டிருக்கிறார்.அவரின் எழுத்து காலம் கடந்து நிற்கும் அதில் சந்தேகமேயில்லை. முடிக்கும் முன் ஒரு சின்ன விஷயம் எனக்கு இன்றும் பாட புத்தகம் என்றால் அதே கசப்புணர்வு தான் தோன்றி மறைகிறது. மகிழ்ச்சி.

பின்குறிப்பு : ‘எழுத்துக்கும் சாவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்காதீர்கள். நல்ல எழுத்து சாவதில்லையே தவிர, நல்ல மனிதன் செத்துப் போகிறான்’’ – ‘போராட்டங்கள்’ நூலில் சாண்டில்யன்

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *