வாழ்ந்து பார்த்த தருணம்…108

அறியப்படாத பாடலின் குரலுக்குள் ஒளிந்திருந்த ஆன்மாவை உணரவைத்த குரல்…

இங்கே எத்தனை பேர் தான் பேசும் வார்த்தைகளின் மீதும், அப்படி பேசப்படும் வார்த்தைகள் நம் நாவில் இருந்து வெளிப்படுகையில் உண்டாகும் ஒலியின் வழியே ஏற்படும் அதிர்வின் மீதும் கவனத்தோடு இருக்கிறோம் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு நபரை நோக்கியோ அல்லது ஒரு குழுவாக இருக்கும் கூட்டத்தை நோக்கியோ பிரயோகிக்கப்படும் வார்த்தைகளும் சரி. அந்த வார்த்தைகளை உதிர்க்கும் மனிதனிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகளின் மீதான ஒலியும் சரி, கேட்பவர்களின் மனதினுள் மிகப் பெரும் அதிர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடியது என்பதை இங்கே பல நேரங்களின் நாம் சரியாக உணர தவறிக் கொண்டே இருக்கிறோம். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டையுமே மிகச் சிறப்பாக தன்னை கட்டுப்படுத்தி கையாள முடிந்த ஒரு மனிதனால், தன் எதிரே இருக்கும் எப்படியான சூழலையும் மிக சாதுர்யமாக சமாளிக்க முடியும் என்பது உறுதி. அதற்கு ஏராளமான உதாரணங்கள் நம்முடைய அன்றாட வாழ்விலேயே உண்டு. ஆனால் நாம் தான் அதனை கவனிக்க தவறிக் கொண்டே இருக்கிறோம். இப்பொழுது இந்தப் புள்ளியில் இருந்து கொண்டு யோசியுங்கள். ஒரு பேச்சாளர், ஒரு வாழ்வியல் பயிற்சியாளர், ஒரு தொலைக்காட்சி ஊடக நெறியாளர், ஒரு பாடகர் என இவர்களில் ஒருவரின் குரலையாவது நம்முடைய அன்றாட தினப்படி வாழிவில் ஒரே ஒரு முறையேனும் கேட்காமல் அந்த நாளை கடந்து போகிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை. அப்படி நம்முடைய வாழ்வில் மிகப் பெரும் தாக்கத்தை சர்வசாதாரணமாக ஏற்படுத்தும் இப்படிப்பட்டவர்களின் குரல்களையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் கொஞ்சமே கொஞ்சமேனும் கவனித்துப் பாருங்கள். அப்பொழுது புரியும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், அதன் வழியே உருவாகும் ஒலி என இரண்டுமே எவ்வளவு தூரம் நம் வாழ்வில் மிகப் பெரும் விளைவுகளை சர்வசாதாரணமாக ஏற்படுத்தும் என்பது. இவ்வளவு தூரம் நம்மை நோக்கி வரும் வார்த்தை மற்றும் அது உண்டாக்கும் ஒலி இரண்டும் முக்கியத்துவம் பெறுவதினால் தான், பல திரைப்பட பாடல்களும், பல்வேறு இசைக் கோர்வைகளும், நம்மை தன்னை மறந்து மகிழவும், காதல் கொள்ளவும், அழவும் வைக்கின்றன. அப்படி ஒரு கொஞ்சும் குரலில் உருக வைத்த பாடல் தான் இணையத்தில் உலவிக் கொண்டிருக்கையில் ஒரு சர்வதேச குரல் தேடல் மேடையில் ஒலித்தது. அந்தப் பாடலின் பெயர் Homesick.

பொதுவாக இங்கே திரையிசை பாடல்களுக்கும் சரி, இசை கோர்வைகளின் வழியே வெளியாகும் பாடல்களுக்கும் சரி, அந்தப் பாடலை பாடிய குறிப்பிட்ட சில பேரின் குரலுக்காகவே திரும்ப திரும்ப கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அப்படி என்னை மீண்டும், மீண்டும் கேட்க வைத்துக் கொண்டே இருக்கும் பாடல் தான் Homesick என்கிற பாடல். சில பாடல்கள் அது எவ்வளவு சிறப்பான பாடலாக இருந்தாலும், அந்தப் பாடல் வெளியாகும் நேரங்களில் கவனிக்கப்படாமலேயே போய், பின்னர் எதோ ஒரு புள்ளியில் கவனம் பெற்றிருக்கின்றன. கிட்டதட்ட Homesickம் அப்படியான பாடல் தான். பெல்ஜியம் நாட்டில் நடந்த ஒரு சர்வதேச குரல் தேடல் மேடையில் எனக்கு அட்டகாசமாய் அறிமுகமான பாடல் தான் Homesick. அந்த மேடையில் பாடலின் இசை 16வது நொடியில் இருந்து தான் ஒலிக்க தொடங்குகிறது. 25வது நொடியில் தான் பாடுபவரின் குரல் வெளிப்படுகிறது. அவர் குரல் வெளிப்பட்ட அடுத்தடுத்த நொடிகளில் அதாவது 28,29,30வது நொடிகளில் மின்னல் வேகத்தில் விருப்பக் குறியிட்டினை தாங்கி இருக்கும் நடுவர்களின் சுழல் நாற்காலிகள் பாடுபவரை நோக்கி திரும்பிவிட்டன. மீதம் இருந்து ஒரு நடுவரின் சுழல் நாற்காலியும் 55 நொடியில் திரும்பிவிட்டது. காரணம் வேறு வழியே இல்லை பாடுவவரின் குரல் ஏற்படுத்திய தாக்கம் அப்படியானது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரி தான் 14வயதே நிரம்பிய Jade. பொதுவாக இப்படியான குரல் தேடல் மேடைகள் முன்னதாகவே நடுவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டே அரங்கேற்றப்படுகின்றன என்கிற ஒரு குற்றச்சாட்டு தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அதில் உண்மை இருக்கலாம். ஆனாலும் சில தருணங்களை நீங்கள் என்ன தான் முன்னரே ஒத்திகை பார்த்திருந்தாலும், அது அந்தத் தருணம் கொடுக்கும் ஒருவித அதிர்வில் வேலைக்கே ஆகாமல் போய்விடும். காரணம் அந்தத் தருணம் ஏற்படுத்தும் ரசவாதம் அப்படியானது. அப்படியான மிகச் சிறப்பான ரசவாத சம்பவமாக தான் இந்த பெல்ஜியம் குரல் தேடல் மேடையை கலக்கிய Jade ன் குரலைக் கேட்டேன்.

அப்படியான Homesick பாடலின் அசலை இணையத்தில் தேடிய போது தான், பல பேர் Jade ன் குரலில் இந்தப் பாடலை கேட்ட பிறகு தான் இணையத்தில் அசலான பாடலை தேடி தேடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது, அந்த பாடலின் கீழ் இருந்த பின்னூட்டங்களின் வழியே அறிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பின்னூட்டங்களில் பல பேர் இந்தப் பாடலை மேடையில் பாடி எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்காக Jadeக்கு நன்றி சொல்லியிருந்தார்கள். அப்பொழுது தான் ஒன்று புரிந்தது. ஆன்மாவுடன் செய்யும் செயல் எதுவும், அந்த நேரத்தில் இல்லாவிட்டாலும் வேறு ஒரு உன்னதமான தருணத்தில், அந்தச் செயலின் ஆன்மாவை மிகச் சிறப்பாய் எதன் வழியாகவோ மீட்டெடுத்து விடும் என்பது. பின்னர் போய் தேடிய போது தான் இந்த பாடலுக்கு என்கிற தனியாக காணொளி எதுவும் உருவாக்கப்பட வில்லை என்பது தெரிந்தது. இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது இந்த பாடலின் அசலான காணொளியை பார்த்தீர்களானால் பின்னூட்டத்தில் பகிருங்கள். மற்றப்படி இந்த பாடலின் அசல் வடிவம் இணையத்தில் ஒலி வடிவிலே இருக்கிறது. அசலான இந்த பாடலை பாடிய பாடகியின் பெயர் Dua Lipa. Dua Lipa லண்டனை சேர்ந்த பாடகி. பாடல் ஆசிரியை, மாடல், ஆடை வடிமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். Homesick பாடலின் அசலான காணொளி இல்லையென்றாலும் இவர் BBCயின் ஒரு முக்கியமான நிகழ்வுக்காக மேடையில் பாடிய இணைய காணொளி ஒன்று இருக்கிறது. அந்த மேடையில் இந்தப் பாடலின் முதல் வரியான, இந்த வானம் விழும் இடத்தில் அந்த வானத்தின் நீல நிறத்தில் நான் ஒளிந்திருக்கிறேன் என்கிற வரியை பாடத் தொடங்கும் அவரின் குரலும் சரி, அவர் பாடியிருக்கும் விதமும் சரி வாய்ப்பேயில்லை. கேட்டுக்கொண்டிருக்கும் நம்முடைய காதுகளுக்குள் இறங்கி அப்படியே நம்மை கட்டிப்போட்டு விடுகிறார். கொஞ்சும் குரல் என்று சொல்வார்கள் இல்லையா அப்படியான வசீகர குரல் தான் Dua Lipaவினுடையது. அதன் பின் அவருடைய உடை, அந்த உடையில் தேவதையை போல் பாடும் அவரின் உடல்மொழி என பலவற்றை இங்கே சொல்வதை விட நீங்களே பார்த்து, கேட்டு விடுங்கள். மேலே சொல்லியுள்ள Jade ன் குரல் தேடல் மேடையின் காணொளி மற்றும் Dua Lipaவினுடைய குரல் மட்டும் ஒலிக்கும் காணொளி மற்றும் BBCயின் விழா மேடையில் பாடிய Dua Lipaவினுடைய காணொளி என ஒவ்வொன்றினையும் வரிசையாக அடுத்தடுத்து இணையத்தில் தேடிப் பாருங்கள். நீங்களும் அந்த கொஞ்சும் குரலினுள் நீலவான வண்ணத்தில் சிறிது நேரம் கரைந்து போங்கள், மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *