வாழ்ந்து பார்த்த தருணம்…110

காதலின் உன்மத்தத்தில் கதறும் ஓர் உன்னத ஆன்மாவின் கண்ணீர் குரல்…

இசை நம் வாழ்வில் எந்த அளவு முக்கியமானது, இப்படி ஒரு கேள்வி இன்றைய தலைமுறையை நோக்கி கேட்கப்பட்டால் எப்படியானதொரு பதில் வரும் என யூகிக்க முடியவில்லை. காரணம் இன்றைய தலைமுறை தான் காணும், கடந்து வரும், அனுபவிக்கும் இன்னும் இன்னபிறவற்றின் மீது பெரிதான கவனமோ அல்லது ஈடுபாடோ கொண்டு எது ஒன்றையுமே அணுகுவதில்லை. அதனால் பெரும்பாலான நேரங்களில் எதையும் ஆழ்ந்து கவனிப்பதேயில்லை. அதனால் அனுபவம் என்கிற சொல்லின் அர்த்தத்தை உள்வாங்காமலேயே யாவற்றையும் கடந்துவர பழகிவிட்டது. இப்படி எல்லா நேரங்களிலுமே வெறும் வெற்றுப் பார்வையாளர்களாகவே இருந்துவிட்டால் போதும். அதனைத் தாண்டி எதனையும் புரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ளத் தேவையில்லை என்கிற மனநிலையை நோக்கி இன்றைய தலைமுறை நகர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியான தலைமுறையினரிடம், இசையைப் பற்றிய ரசனையும் எப்படியானதாக இருக்கிறது எனப் பார்த்தால், எப்பொழுதுமே இசை என்பது கொண்டாட மட்டுமே, அதை தாண்டி அதனுள் ஆழ்ந்து போய் எதோ ஒன்றை கண்டடைவது அல்லது அந்த இசையால் தன்னை மீட்டெடுப்பது என்பதெல்லாம் கண்டிப்பாக வாய்ப்பேயில்லை. மேலே குறிப்பிடுள்ளதைப் போல் எல்லாம் அவர்களிடம் போய் பேசினால், அவ்வளவு தான், இவ்வளவு தூரம் தீவிரமா யோசிக்க அதுல என்ன இருக்கு, இசைய கேட்டோமா, ஆடுனோமா, கும்மியடிச்சமான்னு அத்தோட அடுத்த வேலையப் பார்க்க போய்கிட்டே இருக்கணும். அதவிட்டுட்டு என்கிற மனநிலை தான் மேலோங்கி இருக்கிறது. அப்படியான தலைமுறையினரிடம் உருவாகும் காதலும் எப்படி இருக்கும், அது எப்படியென்றால் ஒரு பொண்ணயோ, ஆணையோ மடக்குனமா, காதலிச்சமா, சுத்துனமா, ஜாலியா இருந்தமா அப்புறம் அவ கிடைக்கைலைன்னா திரிஷா இல்லைனா திவ்யா, அவன் கிடைக்கலைன்னா அஜித் இல்லைனா அன்பழகன் அப்படின்னு போய்கிட்டே இருக்கணும். அதவிட்டுட்டு என்பவர்களிடம் போய், காதலின் ஆழத்தில் முழ்கி பிதற்றும் ஒரு பாடலைப் பற்றி பேசினால் எப்படி இருக்கும். தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என்பதாலும், அப்படியானவர்களை தாண்டிக் காதலின் மீது உண்மையான புரிதலோடு அதனை உள்வாங்குபவர்களுக்குகாக என்கிற யோசனையில் இப்பொழுது இங்கே குறிப்பிடப்போவது காதலினுள் ஆழ்ந்து போகும், தொலைந்து போகும் ஒரு பாடலை பற்றித் தான். கிட்டத்தட்ட இந்தக் கட்டுரை எழுதப்படும் நாள் வரை 90கோடி பார்வைகளை கடந்து இன்றைக்கும் இந்த பாடலின் காணொளி இணையத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.

எப்பொழுதும் போல சர்வதேச இசை தேடலை இணையத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கையில், 2014ல் ஜெர்மனியில் நடந்த ஒரு சர்வதேச குரல் தேடல் மேடை. மொத்தம் மூன்று பேர் நடுவர்கள். அதில் ஒருவர் பெண். மேடையில் பாடப்போகும் பாடகருடைய பாடலின் இசை தொடங்கி முதல் வரி பாட ஆரம்பித்த 10வது நொடியில், விருப்பகுறியை தாங்கி நிற்கும் அந்த பெண் நடுவரின் சுழல் நாற்காலி பாடுபவரை நோக்கி திரும்பிவிட்டது. அப்படி திரும்பியவருக்கு அங்கே ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கிறது. அப்படியே அந்தப் பாடலின் 3வது வரி பாடத் தொடங்கி முடிவதற்குள்ளாக 23வது நொடியில் அடுத்த நடுவரின் சுழல் நாற்காலியும் திரும்ப, அவருக்கும் அங்கே ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கிறது. அப்படியே அந்தப் பாடல் பாடப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த பெண் நடுவரான ஜெர்மன் பாடகி Lena Meyerயை மேடையில் பாடும் அந்தக் குரலும், அந்தப் பாடலும் பைத்தியம் பிடிக்க வைத்திவிட்டது எனச் சொல்லும் அளவுக்கு அந்தக் குரல் தேடல் மேடையில் பாடகியின் உணர்வுகள் வெளிப்பட்டபடி இருந்தன. ஒரு நடுவரை, அதுவும் ஒரு பாடகியை, ஒரு பாடல் பைத்தியம் பிடிக்க வைக்கிறதென்றால், அது எந்த பாடல், யார் பாடியது என்கிற தேடலை இணையத்தில் தொடங்கினால், அந்தப் பாடலை பாடியவர் பாடகி Rihanna. பாடலின் பெயர் Stay. இந்தப் பாடலை Rihannaவுடன் இணைந்து பாடியதோடு அந்த காணொளியிலும் அவருடன் நடித்தவர் Mikky Ekko. இந்தப் பாடலை எழுதிய மூவரில் Mikky Ekkoவும் ஒருவர். சர்வதேச இசையை தொடர்ந்து கேட்பவர்களுக்கு Rihannaவை பற்றியும், அவரது காந்தக் குரலை பற்றியும் தனியாக அறிமுகப்படுத்தத் தேவையேயில்லை. ஆனால் அப்படியான இசையை கேட்காதவர்களுக்கு Rihannaவை பற்றி சொல்ல வேண்டுமெனில், குறிப்பாக மேலே குறிப்பிட்டிருக்கும் Stay என்கிற பாடலையே எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாடலை உங்களால் ஆழ்ந்து கேட்க முடிந்தால், அந்தப் பாடலை பாடும் குரல் உங்களை உச்சபட்சமாக என்ன செய்யும் என்பதை நீங்கள் உணர விரும்பினால், இந்த பாடலை கேட்டுப்பாருங்கள். வாய்ப்பேயில்லை உங்களை உருக்கி, உலுக்கி எடுத்துவிடும் வல்லமை கொண்டது இந்தப் பாடலும் இந்த பாடலை பாடிய Rihannaவின் குரலும். யப்பா சாமி முடியல எனத் தோன்றிவிடும். ஆனாலும் திரும்ப, திரும்ப கேட்க வைக்கும். அந்த ரசவாதம் தான் இந்த பாடலின் மிகச் சிறந்த ஆன்மா.

Rihannaவை பற்றிச் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் நாம் கேள்விப்பட்டிறாத கரிபியக் கடல் பகுதியில் இருக்கும் Barbados (பார்படோசு) என்கிற சுதந்திரமான தனித்தீவில் இருக்கும் Saint Michael என்கிற பகுதியை சேர்ந்தவர் தான் Rihanna. அமெரிக்காவின் மிக முக்கியமான தயாரிப்பாளரான இவான் ரோஜர்ஸ் என்பவர் தான் Rihannaவின் திறமையை இனம் கண்டு வெளியே கொண்டு வந்தவர். இன்றைக்கு Rihanna பாடகி மட்டுமல்லாமல் நடிகை, பாடலாசிரியை, பெண் தொழிலதிபரும் கூட. Rihannaவைப் பற்றிய தகவலையெல்லாம் தாண்டி, Stay என்கிற பாடல் இசைக் கோர்வையை பற்றி சொல்லவும் நிறைய இருக்கிறது. குறிப்பாக இந்தப் பாடலின் காணொளி படமாக்கப்பட்ட விதமும், அதனை படத்தொகுப்பு செய்த விதமும் என இரண்டுமே வாய்ப்பேயில்லை. மிகத் தரமான சம்பவமாக இருந்தது பார்ப்பதற்கு. ஒரு உன்னதமான காதலுக்குள் வீழ்ந்து, அப்படியே உருகி வழிந்து, மிகப் பெரும் தேடலுடன் கதறும் ஒருவரின் குரல். அதிலிருந்து உருவாகும் வ(லி)ரிகள் எப்படி இருக்கும் என யோசிப்பவர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம். ஒட்டுமொத்த பாடலிலும் Rihannaவின் முகபாவணைகளில் தெறிக்கும் காதலின் ஏக்கத்தை என்னவென்று எழுத. அதுவும் Rihanna அமர்ந்து பாடும் இடம், அவரின் ஏக்கத்திற்கு Mikky Ekkoவின் பதில் வரிகளாக Mikky Ekko அமர்ந்து பாடும் இடம் என இரண்டையுமே கவனியுங்கள். அதுவும் பாடல் முடிவடையப் போகும் இறுதி நிமிடங்களில், என்னுடன் இருப்பதற்கு நீ வேண்டும் என்கிற வரிகள் பாடப்படுகையில், சரியாக இந்த பாடலின் காணொளியின் 3:29 நிமிடங்களில் தொடங்கி பாடல் முடியும் வரை Rihannaவின் முகத்தில் இருந்து வெளிப்படும் காதலின் வலி, அந்த கண்களில் வழிந்தோடும் கண்ணீர் இரண்டுமே கண்டிப்பாக உலுக்கி எடுத்துவிட்டது. இப்படியான பாடலை மிகச் சிறப்பாக உள்வாங்கி குரல் தேடல் மேடையில் பாடிய நபரை பற்றி அந்தக் காணொளியை பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள். 2014ல் ஜெர்மனியில் நடந்த அந்த சர்வதேச குரல் தேடல் மேடையின் காணொளி மற்றும் அசல் பாடலான Rihannaவின் Stay என்கிற பாடலின் காணொளி என இரண்டையுமே தேடிப் பாருங்கள். Rihannaவின் காதலின் வலியில், அவளது கண்ணீரில் கரைந்து போங்கள், அதனுள் கண்டைய நிறையவே இருக்கிறது, மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *