வாழ்ந்து பார்த்த தருணம்…112

தொழி உழக்கல்…

தலைப்பில் சொல்லியிருக்கும் வார்த்தையைப் படித்தவுடன் அது எது சம்பந்தப்பட்டது என எத்தனைப் பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. சரி, இன்றைய நாள் காலை எப்பொழுதும் போலான விழிப்பு இல்லை கொஞ்சம் சோம்பல், அசதி, காரணம், வாரத்தில் ஒரு நாள் மலையேற்றத்தை முக்கியமான பழக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். அதுவும் மனைவியுடன், அதனால் முடிந்த சனியென்று மலையேற்றம், அதுவும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து தினசரி செய்ய வேண்டிய உடற்பயிற்சியை எல்லாம் முடித்து விட்டு பிறகு தான் கிளம்புவது. அதனால் மலையேற்றம் சென்று வரும் நாள் அன்று இரவு, அசதியால் தூக்கம் மிகுதியாகி விடும், உடம்பை ஒரேடியாக படுத்தி எடுக்கக் கூடாது என்பதால், ஞாயிறு தூக்கத்தை அதன் போக்கில் விட்டு விடுவது வழக்கம். அப்படி இன்று காலை எழுகையில் மணி ஏழு. சரியென மெதுவாக எழுந்து வந்து கதவை திறந்தால், சில்லென்ற குளிரான வானிலையில் சிறுதூறல் என அட்டகாசமான காலையாக இருந்தது. அதே நேரம் அந்தத் தூறலின் நடுவே வீட்டின் எதிரில் இருக்கும் நிலத்தில், ஒரு மனிதர் இரும்பு உருளை ஒன்றினை உழவு மாட்டோடு பூட்டி வயலில் அடித்துக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்ததும் வீட்டின் முற்றத்தில் இருந்தவாறே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். கிழே போய் வயலினுள் இறங்கி புகைப்படங்கள் எடுக்கலாம் என யோசித்து, காலை கடன்களை எல்லாம் கொஞ்சம் அவசர அவசரமாக முடித்துவிட்டு கிழ் இறங்கினால், அவர் வேலையை முடித்து மாட்டை ஏறக்கட்டிக் கொண்டிருந்தார். சரி நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என நினைத்துக் கொண்டேன். பார்த்தால் அடுத்ததாக வேறுவிதமான ஒரு நீளமான கட்டை ஒன்றை உழவு மாட்டோடு பூட்டி, மீண்டும் ஏற்கனவே உருளையை வைத்து உழுத நிலத்திற்குள் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். உடனடியாக அலைபேசியை எடுத்துக்கொண்டு, வயலினுள் போய் இறங்கி புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் அவரிடம் கேட்டேன் இதற்கு முன் நீங்கள் ஒரு இரும்பு உருளையை வைத்து நிலத்தை செம்மைப் படுத்தினீர்கள் இல்லையா, அந்த வேலையின் பெயர் என்ன என கேட்டேன். அவர் ஏதோ சொன்னார். அவர் வேலையை செய்து கொண்டே என்னிடம் பேசியதால், முதல் இரண்டு முறை அவர் சொன்னது சரியாக விளங்கவில்லை. மீண்டும் சொல்லுங்கள் எனக் கேட்ட போது தான் அந்த வேலையின் பெயர் தொழி பிறட்டி எனச் சொன்னார். தொழி பிறட்டி என்பது மதுரை வட்டார வழக்கு, பின்னர் இணையத்தில் போய் தேடிய போது தான் அவர் சொன்னதன் பொதுவான வார்த்தை தொழி உழக்கல் என்பது தெரிந்தது.

அதாவது ஒரு நிலத்தின் உள்ளிருக்கும் சிறு, சிறு செடிகளை எல்லாம் இந்த முறையில் மண்ணிலிருந்து உழுக்கி எடுத்து மண்ணை, அதாவது அந்தச் செடிகளால், செடிகளின் வேர்களால் சிறு, சிறு கட்டிகளாக இருக்கும் மண்ணை சமன்படுத்தி, ஒரே துகள்களாக சமநிலை ஆக்குவது தான் தொழி உழக்கல். அதன் அடுத்த படியாக செய்யப்படுவது தான் பரம்படித்தல். அதாவது தொழி உழக்கல் மூலமாக அந்த நிலத்தின் மண்ணை முழுவதுமாக ஒரே நிலைக்கு கொண்டு வந்த பிறகு, அதே நிலத்தை சமன்படுத்துவதற்காக செய்யப்படுவது தான் பரம்படித்தல். இப்படி உழவு, தொழி உழக்கல், பரம்படித்தல் என்பது தான், ஒரு நிலத்தில் நெல் பயிரிடப்படுவதற்கு முன்னர், அந்த நிலைத்தை தயார் செய்து பண்படுத்தி பயன்படுத்தும் வரிசை முறைகள். இன்றைக்கு வகை, வகையாக அரிசியை கேட்டு வாங்கி சமைத்து சாப்பிடும் எத்தனை பேருக்கு மேலே சொல்லியிருக்கும், அந்த அரிசியை நமக்கு கொடுக்கும் இந்த நிலத்தினை எப்படி தயார் செய்கிறார்கள் எனத் தெரியும். அல்லது தெரிந்து கொள்ள என்றைக்காவது, கொஞ்சமாவது சிந்தித்திருக்கிறோமா. இந்தக் கேள்வியை படித்தவுடன் ஏன் இதை தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது என்கிற கேள்வி உங்களிடத்தில் தோன்றுமெனில், இந்த உலகத்தில் நீங்கள் உயிர் வாழ நீங்கள் மட்டும் காரணமல்ல என்கிற உண்மை உங்களுக்கு இன்னும் விளங்கவே இல்லை என்று பொருள். அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி உங்களின் அடுத்த தலைமுறைக்கு இப்படியான விஷயங்களை கடத்துவீர்கள் வாய்ப்பேயில்லை. நாம் இந்த பூமியில் பிறக்கும் போது முழு நிர்வாணமாய் பிறக்கிறோம். அப்படி பிறப்பதற்கு பின்னால் கூட இரு உயிர்களின் கூட்டு என்கிற ஒன்று இருக்கிறது. அதனையும் தாண்டி, அதன் பின் நம்மை நோக்கி வரும் ஒவ்வொன்றுக்கும் பின்னால் இங்கிருக்கும் கோடிக்கணக்கான உயிர்களின் உழைப்பும், அவைகளின் பரிமாண சுழற்சியும் இருக்கிறது என்கிற உண்மை உங்களுக்கு உரைக்கும் புள்ளியில் தான், நாம் மனிதன் என்கிற சொல்லுக்கு அருகதை உடையவர்களாக ஆகிறோம்.

இன்றைய நிலையில் இந்த உலகமே சுருங்கி நம் கைக்குள் வந்துவிட்டதாக நம்புகிறோம் அல்லது நம்பவைக்கப்படுகிறோம். ஆனால் எக்காலத்திலும் இந்த உலகம் சுருங்காது. நாம் தான் நம்முடைய வளர்ச்சி, கண்டுபிடிப்பு என்கிற போலியான பிம்பத்தின் பெயரால் இந்த உலத்தை சுருக்கி, நம்முடைய சட்டைப்பைக்குள் கொண்டு வந்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் எல்லாவற்றைம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அடைந்து விடலாம், உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டு விடலாம் என ஆழமாக நம்ப வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நடைமுறை உண்மை தலைகீழாக இருக்கிறது. உண்மையான உலகம் என்பது கண்டிப்பாக நாம் சுருக்கி வைத்திருப்பதாக நம்பும், நம்முடை வளர்ச்சி என்கிற கண்டுபிடிப்பினுள் இல்லை. அது வெளியே மிகப் பிரமாண்டமாக இருக்கிறது. அதனை நம்மால் உட்கார்ந்து இடத்தில் இருந்தெல்லாம் கண்டைந்து விட முடியாது. கொஞ்சமாவது இறங்கி சென்று தெரிந்து கொண்டாலே ஒழிய, நம்மை தாண்டிய இந்த உலகத்தினை பற்றிய உண்மையான புரிதல் சாத்தியமேவில்லை. இப்படியான யோசனை மனதினுள் ஒடிக் கொண்டிருந்த பொழுது, இன்றைக்கு காலை நடந்தது அப்படியே மனதினுள் ஓடியது. காலையில் வீட்டின் எதிரில் இருக்கும் நிலத்தில் நடக்கும் உழவு வேலைகளை புகைப்படம் எடுக்கச் சென்று, நிலத்தில் வேலை செய்யும் பெரியவரிடம் பேசிவிட்டு வந்ததை என்னுடைய மகள் வீட்டின் முதல்தள முற்றத்தில் இருந்தபடியே, பார்த்துக்கொண்டே இருந்தாள். என் மகளின் வயது ஐந்து. வீட்டிற்கு வந்ததும் என்னிடம், நாளைக்கு என்னையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் அப்பா என்றால். கண்டிப்பாக கூட்டிப் போகிறேன் ஆனால் அப்பா இறங்கியது போல் வெறும் காலுடன் அந்த ஈர நிலத்தின் சகதியினுள் நீயும் இறங்க வேண்டும் எனச் சொன்னேன். உடனடியாக மண்ணு அழுக்குலப்பா, அது என்ன எதாவது செஞ்சிடும்ல, என்னோட உடம்புக்கு எதாவது வந்துடும்ல என்றால். அவள் என்னிடம் அப்படிக் கேட்ட அந்த நேரம் வரை அந்த நிலத்தில் பரம்படித்தல் நடந்து கொண்டே இருந்தது. உடனடியாக மகளிடம் அதோ அந்த மாமா நிலத்துல தான கால் வச்சு வேலைப்பார்க்கிறாங்க, அவங்கள அந்த ஈர மண் எதாவது செஞ்சிருக்கா எனக் கேட்டேன், அவள் உடனடியாக இல்லப்பா என மறுத்தாள். அப்ப நாமளும் இறங்கலாமா எனக் கேட்ட பொழுது, சந்தோசமாக சரிப்பா எனச் சொன்னாள். அவளிடம் சொன்னேன் நீ தினசரி பசிக்குதுன்னு சொல்லி சோறு சாப்பிடுறே இல்லையா, அது கடையில இருந்து மட்டும் காசு கொடுத்ததும் வந்திடாது, அதுக்கு முன்னாடி இந்த நிலத்துல நிறைய வேலை பாக்கணும் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளுடைய பார்வை பரம்படிக்கும் மாமாவின் மீது நிலைக்குத்தி நின்றது. அந்த பார்வையை விலக்காமல் நாளைக்கு கண்டிப்பாக ஈர மண்ணுல இறங்குவோம்பா என்றாள். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *