வாழ்ந்து பார்த்த தருணம்…11

In the mood for எஸ்.ரா…

திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த சமயம். கையில் கிடைக்கும் பணத்தில் பெரும்பாலும் ஒன்று, என்னுடைய கேமராவுக்கான பிலிம் ரோல் அல்லது புத்தகம் இரண்டுக்கும் தான் செலவழிப்பேன். பிலிம் ரோல் வாங்க, புகைப்படமெடுப்பதற்காக வெளியில் செல்ல மற்றும் எடுத்தப் புகைப்படத்தை டெவலப் செய்து நகலெடுக்க, இத்தனைக்கும் ஆகும் செலவை மனதில் கணக்குப்போட்டு கையில் வந்திருக்கும் பணம் மேலே சொன்னவற்றிற்க்கு போதுமானதாக இருந்தால் யோசிக்காமல் வாங்குவது பிலிம் ரோல் தான். ஆனால், குறைவாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு புத்தகம் வாங்கி விடுவேன். (அன்றைய நிலையில் இப்படி யோசித்துச் செலவழிக்கும் அளவுக்கான பணம் வருவதே அரிது) எப்பொழுதுமே, அப்போதிலிருந்து இன்று வரை என் மனதில் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் இருந்து கொண்டே இருக்கும். கையிலிருக்கும் பணத்தை பொறுத்து புத்தகத்தின் பட்டியல் உடனடியாக தயாராகி விடும். அதில் அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் முதன்மையானது எஸ்.ராவின் புத்தமாகத் தான் இருக்கும். முதலில் துணையெழுத்தில் ஆரம்பித்தது என நினைக்கிறேன். அது தொடராக ஆனந்தவிகடனில் வந்த பொழுதும் படித்து, பின்னர் அது புத்தகமாக வெளிவந்த போதும் வாங்கி பைண்டிங் செய்து வைத்திருந்தேன். அப்புறம் கதாவிலாசம், தேசாந்திரி, ஆதலினால், பதேர் பாஞ்சாலி என இன்றுவரை நீண்டு கொண்டே செல்கிறது. அவருடைய புத்தகத்தை படிக்கும் போதெல்லாம் அவரை சந்தித்து உரையாட வேண்டும் என எண்ணம் மனதினுள் எழுந்து மறையும். அவரைச் சந்திக்க என்னுள் சிறு தயக்கமும், கூச்சமும் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அப்படி ஒரு சந்திப்பு வெகு சீக்கிரமே நடந்தது. எஸ்.ரா திரைத்துறைக்குள் வெற்றிகரமான வசனகர்த்தாவாக வலம்வர ஆரம்பித்த சமயம் அது.

என்னுடைய நண்பன் ஒருவன் எஸ்.ரா பணிபுரியும் ஒரு திரைப்படத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அத்திரைப்படத்தின் பணி நிமித்தமாக எஸ்.ராவை சந்திக்கச் செல்ல இருந்தான். சரியாக அந்த நேரத்தில் நண்பனுடைய வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். எஸ்.ராவைப் பார்க்கப் போகிறேன் வருகிறாயா என கேட்டான். கொஞ்சம் கூட யோசிக்காமல் வருகிறேன் எனச் சொல்லி, அவனுடன் கிளம்பிவிட்டேன். கோடம்பாக்கம் பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பில் இருக்கும் அவரின் வீட்டிற்கு இருவருமாக சென்றோம். சென்ற சமயம் எஸ்.ரா அவருடையக் கணினியில் இசை தொகுப்பு ஒன்றை கேட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் வருவதை பார்த்தவுடன் கேட்பதை நிறுத்திவிட்டு, நண்பனுடன் தற்பொழுது வேலை செய்துகொண்டிருக்கும் திரைப்படப் பணியை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். நான் அவர் பேசுவதையே கவனித்தபடி இருந்தேன். பேச வேண்டியதை பேசிய பிறகு, இறுதியில், பொதுவான விஷயங்கள் பற்றிய பேச்சுப் போய், அந்தப் பேச்சு இசையின் பக்கம் திரும்பியது. உடனே எஸ்.ரா, நீங்கள் வரும் பொழுது இந்த இசை தொகுப்பை தான் கேட்டுகொண்டிருந்தேன் என சொல்லி தன்னுடைய கணினியில் இசை தொகுப்பு ஒன்றை ஓடவிட்டார். அந்த இசை ஓட ஆரம்பித்ததும் உடல் சிலிர்த்து மனதினுள் இனம்புரியா ஒரு உணர்வலை எழுந்ததை இங்கே எழுத்துகளில் விவரிக்க இயலவில்லை. அதுவரை என்னுடய இசை ஆர்வம் தமிழோ அல்லது பிற மொழியோ எதுவானாலும் பாடல்கள் என்ற அளவிலேயே இருந்தது. அந்த நிமிடம் வரை நான் பாடலற்ற இசை கோர்வைகளை பெரிதாகக் கேட்டதில்லை. ஆனால் அவர் அன்று ஓடவிட்ட இசைத் தொகுப்பு என்னுடைய ஆழ்மனம் வரை ஊடுருவியது. (https://www.youtube.com/watch?v=fIgU9aNpb9k&t=29s) இசை கேட்டு முடித்ததும் அந்த தொகுப்பு பற்றியும், அது இடம்பெற்ற படம் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவருடன் பேச நினைத்தையெல்லாம் மறந்து அவர் பேசுவதை மட்டும் கேட்டு கொண்டிருந்தேன். பொதுவாக பாடல்கள் என்பதை தாண்டி இசைக்கோர்வை என்பது மனதினுள் எற்படுத்தும் ரசவாதம் எத்தகையது எனப் புரிந்த தருணம் அது.

எஸ்.ராவுடனான சந்திப்பு முடிந்து வந்தவுடன். அந்த இசைக்கோர்வை இடம்பெற்ற படத்தை தேடினேன். அந்த திரைப்படம் In the mood for love. ஹாங்காங் நாட்டிலிருந்து வெளிவந்த Wong Kar-wai எனும் இயக்குநரின் முக்கியமான திரைப்படமது. In the mood for love திரைப்படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் இசை இந்த மூன்றும் பின்னி பிணைந்து பார்வையாளனுக்கு ஏற்படுத்தும் ரசவாதம் அற்புதமானது. இத்திரைப்படத்தை முடிந்தவரை கைப்பேசியின் எந்தவித தொந்தரவுமற்ற நாளில், ஒலியை தரமாக வெளிப்படுத்தும் சாதனத்துடன் பாருங்கள். கண்டிப்பாக அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த படம் பார்த்தவுடன் இப்படத்தின் இசை தொகுப்பை இணையத்தில் தரவிறக்கி கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

அதன் பின்னர் என்னுடைய இசை கேட்கும் அறிவே (கேட்கும் அறிவு மட்டுமே) மாறியது. தொடர்ச்சியான தேடலில் பாடல்களற்ற இசை கோர்வை எத்தகைய வலிமையானது எனப் புரிந்தது. திரைப்படத்தின் பாடல்கள் அல்லாமல், இசைக்கோர்வைகளையும் தேடி, தேடிச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்படி தேடிச் சேகரித்ததில் முக்கியமான ஒருவரின் இசை அற்பதமானது. அந்த இசை கலைஞனின் இசையை சில வருடங்களுக்கு முன்பே தமிழின் முன்னனி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் விருது நிகழ்ச்சியின் பின்னனியில் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் நம்முடைய அபிமான நடிகர் விருது வாங்க வரும்பொழுது பின்னனியில் ஒலிக்கும் இந்த இசை நம்முடைய அட்ரினலை எகிறவைக்கும். அப்பொழுது தெரியாது அந்த இசைக்கு சொந்தகாரர் யானியெனும் இசையரசன் என்று. அந்த இசை (https://www.youtube.com/watch?v=Xw7HeJ781Do). அதன் பின்னர் யானியின் இசைக் கோர்வைகளை தேடித் தேடி கேட்டாயிற்று. யானியின் இசை அற்புதம். யானியைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் வேண்டாம் என்பதால் தவிர்க்கிறேன். நான் சொல்வதைவிட நீங்களே அவரின் இசைக் கோர்வைகளை தேடிக்கேளுங்கள். அப்பொழுது உங்களுக்கே புரியும். என்னுடைய இசை கேட்கும் மாற்றத்திற்கான விதையை என்னுள் விதைத்த எஸ்.ராவிற்கு மனப்பூர்வமான நன்றியும், மகிழ்வும்…

பின் குறிப்பு : இவ்வளவு எழுதிய நான், தமிழின் இசை ஆன்மா இசைஞானியை பற்றி எழுதவில்லை. காரணம், அவரைப் பற்றி மட்டுமே தனியாக எழுதவேண்டுமென்பதால். இசைஞானியின் பாடல்களைவிட, அவரின் பின்னனி இசை தொகுப்புகள் மிகவும் வலிமையானவை. அதையெல்லாம் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில். இசைஞானி அவரை, அவரை, அவரைப் பற்றி மட்டுமே பேசலாம்.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *