வாழ்ந்து பார்த்த தருணம்…120

போகுமிடம்…

அன்றாட வாழ்வில்,பணியில், பயணத்தில் என ஒரு நாளின் பல அன்றாட அக்கப்போர்களில் இருந்து மனதினை விலக்கி, அப்படியே அந்த மனதை இலகுவாக்கி தக்கையை போல் மிதக்க விட்டு என்னை காப்பாற்றுவதில் மிக முக்கியமான பெரும்பங்கு இசைக்கு உண்டு. இசையை பொறுத்த அளவில் அதனை மிகச் சிறப்பாய் லயித்து, அனுபவித்து, ஆழ்ந்து கேட்க கூடிய ரசிகன் ஒருவன் என்னுள் எப்பொழுதுமே உயிர்ப்போடு இருக்கிறான். அதனாலேயே இசையை எப்பொழுதுமே என்னுடைய தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயே அணுகுகிறேன். அதனாலேயே என்னுடைய ரசனைக்குள் அடைபடும் எந்த ஒரு இசையையும் அதன் ஆன்மாவோடு லயித்து கேட்க பழகி இருக்கிறேன். பொதுவாக இங்கே பிறப்பில் இருந்து பதின்ம வயதுககளுக்குள் நுழையும் வரையிலான வளர்ச்சியில் எந்த ஒரு நபரும் (இங்கே நபர் என குறிப்பிடுவது ஆண், பெண் இருபாலரையும் தான்) என்ன மாதிரியான இசையைக கேட்டு உள்வாங்கி வளர்கிறார்களோ, அது மாதிரியான இசை தான் இயல்பாகவே அவர்களின் ஆழ்மனதின் நினைவலைகளில் நீந்தியபடியே இருக்கும். சம காலத்தில் அந்த ஆழ்மன இசையை ஒத்த இசையை கேட்கையில், மனம் அதுவாக அந்த இசையின் பின்னால் சென்று லயித்து கேட்க ஆரம்பிக்கும். அப்படி என்னுடைய ஆழ்மன நினைவலைகளில் நீந்திக்கொண்டிருக்கும் இசை வடிவங்களை சமகாலத்தில் இசையமைக்கும் இரு இசையமைப்பாளர்கள் அடிக்கடி தீண்டி சென்றபடி இருக்கிறார்கள். அந்த இருவரில் முதலாமவர் ஜீ.வி.பிரகாஷ், இரண்டாமவர் ஜிப்ரான் சமீபத்தில் அப்படி ஜிப்ரானின் இசையில் வெளியான முக்கியமான திரைப்பட பாடல் ஒன்றினைக கேட்டேன். அந்தப பாடல் மாறா என்கிற இன்னும் வெளிவராத திரைப்படத்திற்காக வெளியாகி இருக்கும் யார் அழைப்பது என்கிற பாடல்.

இன்றைக்கு இருக்கும் பாடகர்களில் பல பேரின் ஆழமனதினுள் நுழைந்து அவர்களை தன் குரலால் வருடி விடும் பாடகர்களில் முக்கியமானவராக அறியப்படும் சித் ஶ்ரீராமின் குரலில், பாடலாசிரியை தாமரையின் வரிகளில் வெளியாகியிருக்கும் பாடல் தான் யார் அழைப்பது என்கிற பாடல். மாறா திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சார்லி திரைப்படத்தின் அதிகாரகார பூர்வ தமிழ் பதிப்பு. மலையாளத் திரைப்படமான சார்லி திரைப்படத்தை பற்றிச் சொல்ல நிறையவே இருக்கிறது, படம் வெளியான முதல் வாரத்திலேயே மீண்டும் மீண்டும் மூன்று முறை திரையரங்கு சென்று பார்த்த திரைப்படம் தான் சார்லி, அதன் பின் இணையத்தின் வழியே எத்தனை முறை சார்லி திரைப்படத்தை பார்த்தேன் என்பதற்கு கணக்கு இல்லை, சார்லி திரைப்படத்தை பற்றி இரண்டு மூன்று பதிவுகள் எழுதும் அளவுக்கு விஷயங்கள் நிறையவே அந்தத திரைப்படத்தில் உண்டு. அதனால் சார்லி திரைப்படத்தைப் பற்றி தனியாக எழுதுகிறேன். இப்பொழுது மாறா திரைப்படத்திற்காக வெளியாகி இருக்கும் பாடலைப் பற்றி மட்டும். பொதுவாக இன்றைக்கு இருக்கும் பாடலாசிரியர்களில் என்னுடைய மனதுக்கு நெருக்கமானவர் பாடலாசிரியர் தாமரை, ஆங்கிலம் கலக்காத தமிழ் வார்த்தைகளில் அவர் எழுதும் ரசனையான, ரகளையான பாடல் வரிகளுக்கு என்றுமே மிகப் பெரும் ரசிகன். அந்த வகையில் இந்தப் பாடலுக்கு அவர் எழுதியிருக்கும் வரிகளும், அந்த வரிகள் பாடப்பட்ட விதமும், இந்தப் பாடலின் இசை கோர்வையும் சும்மா அதகளமாய், அற்புதமாய் இருக்கிறது என்பது எல்லாம் சும்மா சாதாரணமான வார்த்தை.

இப்படி சொல்ல மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. ஏற்கனவே பலமுறை மலையாளத்தில் சார்லி திரைப்படத்தை பார்த்துவிட்டேன். இப்பொழுது வரை அந்தத் திரைப்படம் எனக்கு சலிக்கவேயில்லை. இன்னும் பல முறை பார்த்து குதுகலிக்க வேண்டி இருக்கிறது, அந்த வகையில் மாறா என்கிற சார்லியின் தமிழ் பதிப்பாக வெளியாக போகும் திரைப்படத்தின் கதை முழுவதும் தெரிந்துகொண்டு, மாறா திரைப்படப் பாடலை வரி வரியாக கேட்கையில், அது கொடுக்கும் ஒருவிதமான சுகமும், ரசனையும் மிக,, மிக அலாதியானது.  சில பாடல்கள் மட்டுமே முதல்  முறை கேட்கும் போதே, நம்மை அந்த பாடலுக்குள் இழுத்து செல்லும் வல்லமையுடன் இருக்கும். அப்படியானதொரு பாடல் தான் இந்தப் பாடல். முதன் முதலில் இந்தப் பாடலை கேட்ட போதே இசை தொடங்கும் முதல் புள்ளியில் இருந்தே மனம் அதனுள் உள்நுழைந்து இசையின் வரிகளோடு சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டது. சார்லி திரைப்படத்தை பொறுத்த அளவில் முடிவில்லா பயணம், அப்படியான பயணத்தில் சந்திக்கும் மனிதர்களின் முரண், விரக்தி, தேடல், தற்கொலை, காதல் என பல அடுக்களை கொண்டது. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் பிரதான நாயகியின் பார்வையில் ஒலிக்கும் இந்த பாடல் மிக, மிகச் சிறப்பு. இந்தப் பாடலுக்காக எழுத்தப்பட்டுள்ள வரிகள் அனைத்துமே ரகளையாய், அட்டகாசமாய் எழுதப்பட்டிருகின்றன. இதனை ஏன் சொல்கிறேன் என்பது நீங்கள் மலையாள திரைப்படமான சார்லியை பார்த்திருந்தால் எளிதில் விளங்கிவிடும். இல்லாவிட்டாலும் ஒன்றும் பிரச்சனையில்லை, கொண்டாட்டமான நம்முடைய வாழ்வும், அந்த வாழ்வின் ஆன்மாவாக இருக்கும் பயணமும், மனித வாழ்வில் எந்த அளவு மகத்துவமானது என்பதை உணர்ந்திருந்தாலே இந்தப் பாடலை மிக சிறப்பாய் ரசிக்க முடியும். குறிப்பாக அந்தப் பாடலின் சரணத்தின் வரிகளில் சரியாக 2.02 நிமிடங்களில் “சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில், போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா” என்று வரும் வரிகள், உண்மையில் மிக, மிக அற்புதமாக அனுபவித்து எழுதப்பட்ட வரிகள். அதன்பின் வரும் சரணத்தின் வரிகளும் ரகளையாய் தொடர்கையில், அந்த சரணம் முடியும் இடத்தில் சரியாக 2:44 நிமிடங்களில் அடங்காத நாடோடி காற்றல்லவா என முடியும் இடமும் மிக அற்புதம். மனித வாழ்வில் பயணம் என்பதின் உண்மையான ஆழமான அர்த்தத்தை உள்ளார்ந்து புரிந்து கொண்டவர்களுக்கு மேலே சொன்ன வரிகளுக்கு பின்னால் இருக்கும் ஆன்மா எளிதில் விளங்கிவிடும். ஆனால் அதைவிடுத்து எதுக்கு இந்தளவு ஆழ்ந்து ரசிக்கிறீர்கள், பாட்ட கேட்டோமா போனோமான்னு இருங்க என சொல்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *