வாழ்ந்து பார்த்த தருணம்…121

தொலைந்து போதல்…

தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தொலைந்து போகாத மனிதன் என்று யாராவது இருக்கின்றானா என்கிற கேள்வி கேட்கப்பட்டால், எத்தனை பேர் நான் இது வரை தொலைந்து போனதில்லை என சொல்வார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் தொலைந்து போவது என்றைக்குமே மிக ருசியானது. எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கலாம் என நினைக்கிறேன், வயது மிகச் சரியாய் நினைவில் இல்லை. அந்த வயதில் ஒரு முறை குடும்பத்தோடு ஒரு வழிபாட்டு கூட்டத்திற்கு போய்விட்டு, கூட்டம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறோம், என் அம்மாவின் கரங்கள் என்னுடைய கரங்களை பற்றி இழுத்து வந்து கொண்டிருக்கிறது. கூட்டம் நடந்த இடத்திற்கும் பிரதான சாலைக்கும் இடையே ஒரு குறுகலான செம்மண் சாலை போடப்பட்டிருந்தது. அந்தச் செம்மண் சாலையில் நெரிசலான கூட்டத்தின் இடையே எங்கேயோ வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்த போது, பற்றியிருந்த என் அம்மாவின் கரங்களை தவறவிட்டேன். கரங்களை தவறவிட்ட சில நொடிகளில் சூழ்நிலை விளங்கிவிட்டது. என்ன செய்வதென தெரியாமல், அப்படியே திகைத்து நின்றபடி, நின்ற இடத்தை விட்டு நகராமல் அழுகையை ஆரம்பித்து விட்டேன். 5 அல்லது 10 நிமிடங்கள் இருக்கலாம், போன வழியே அப்படியே திரும்ப தேடிக் கொண்டே வந்த என் அம்மா சரியாக என்னை கண்டுபிடித்து விட்டார்கள். அடி செமத்தியாக விழுந்தது. அன்று தொலைந்து போன போது என்னுடைய வயது என்ன என்பது சரியாக என் நினைவுகளில் இல்லாவிட்டாலும், தொலைந்து போன அந்த 10 நிமிடங்களும், அந்த குறுகலான செம்மண் சாலையும், என்னை கடந்து சென்ற அந்தக் கூட்டமும், என்னுடைய அழுகையும், அன்று வாங்கிய அடியும் அப்படியே நினைவடுக்குகளில் இன்றும் உறைந்து போய் இருக்கின்றன. அந்த வயதில் எதுவும் யோசிக்க முடியாமல் வந்த அழுகையை இப்பொழுது யோசித்தாலும் நகைச்சுவையாய் இருக்கிறது. வாழ்வில் பதின்ம வயதுகள் முடிந்து பொருளாதார தேவைக்காக மற்றும் இந்த சமூகம் நமக்கு கொடுக்க வேண்டும் என்று நாம் அடம்பிடிக்கும் அங்கிகாரத்திற்காக ஓட ஆரம்பித்த பிறகு நமக்கு தொலைந்து போக வாய்ப்பிருக்கிறதா!?.

மேலே சொல்லியிருக்கும் கேள்விக்கு எத்தனை பேரிடம் விடை இருக்கிறது எனத் தெரியவில்லை. இல்லை என்றால் உண்மையில் இந்த வயதிலும் தொலைந்து போகலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா எனவும் தெரியவில்லை. நாம் வளர்ந்துவிட்டோம் என நம்மையே நாமும், நம்மை சுற்றி இருக்கிற சமூகமும் நம்ப ஆரம்பித்த பிறகு, உண்மையில் மனதளவில் தொலைந்து போதல் என்பதே சாத்தியமற்றதாக ஆகிவிடுகிறது. இல்லையெனில் நாமே நம்மை தொலைந்து போவதற்கு சாத்தியமில்லை என நம்புகிறோம். உண்மையில் இன்றைய சூழலில், யாரையாவது கூப்பிட்டு நீங்கள் இப்பொழுது இருக்கும் சூழலில் இருந்து ஒரு 10 நாட்கள் தொலைந்து போக முடியும் என்று சொன்னால், இங்கு பெரும்பாலானவர்கள் தொலைந்து போக தயாராய் இருப்பார்கள் என நம்புகிறேன். காரணம், இன்று வளர்ச்சி என்கிற பெயரில், எது வளர்ச்சி என தெரியாமலேயே நம்மை சுற்றி இருக்கும் சமூகம் அசுரத்தனமாய் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்த ஓட்டம் சரியா, தவறா என்று கூட யோசிக்க முடியாமல், இல்லையெனில் யோசிக்க நேரம் இல்லாமல், அந்த சமூகத்தோடு சேர்ந்து தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் அல்லது யாராவது அவர்களின் வளர்ச்சியை காட்டி பார்த்தியா எப்படி வளர்ந்திருக்கேன்னு என சொல்கையில், அதனைப் பார்த்தவுடன் அங்கும் அது நமக்கான வளர்ச்சியா என அங்கேயும் யோசிக்க முடியாமல் ஓட ஆரம்பித்துவிடுகிறோம். இது மாதிரி யோசிக்காமல் அப்படியே ஓடிக்கொண்டிருக்கும் நபர்களிடம் கேட்டால், இந்த ஓட்டம் ஒரு நாள் நிற்கும் அப்பொழுது கால் மேல கால போட்டு உட்கார்ந்து இந்த ஓட்டத்தில் இருந்து தொலைந்து போவேன் எனச் சொல்வார்கள். உண்மையில் வளர்ச்சிக்காக ஓடிக் கொண்டிருக்கும் யாராவது, ஒரு நிலையில் நின்று, அந்த ஒட்டத்தில் இருந்து தொலைந்து போய் விலகி, கால் மீது கால் போட்டு அமர்ந்து இருக்கிறார்களா என தேடிக் கொண்டேடேடே இருக்கிறேன். தேடலும் தொடர்ந்த படி இருக்கிறது, எல்லா காலத்திலும் கால் மேல் கால்போட்டு அமர்ந்திருக்க இருக்கைகள் நிறையவே இருக்கின்றன ஆனால் அதில் அமரத்தான் ஆள் இல்லை.

இத்தனைக்கும் நடுவில் தொலைந்து போக எங்கே நேரம் இருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட வயது வரை நம்மை வழிநடத்தியவர்கள் கைகளில் இருந்தது. அந்தக் குறிப்பிட்ட காலகட்டதிற்கு பிறகு, நம்முடைய தொலைந்து போதல் நம்முடைய கைகளுக்கே வந்துவிடுகிறது. ஆனால் நாம் தான் அதனை உணராமலும், தொலைந்து போக தயாராய் இல்லாமல் இருக்கிறோம். காரணம், நாம் இல்லையென்றால் இவைகள் எல்லாம் என்ன ஆகும் என்கிற ஒரு நிலை நம்மை சுற்றி இருப்பதாக நினைக்கிறோம் அல்லது இந்த அமைப்பு இயங்குவதே நம்மால் தான் என ஆணித்தரமாய் நம்புகிறோம். அது மட்டும் இல்லாமல் வளர்ச்சி என்கிற பெயரில் இந்த உலகம் நம் கைகளில் கொடுத்திருக்கும் தொழில்நுட்ப கருவிகள் எல்லாமே நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பவைக்கப்படுகிறோம். அதன் மூலம் நீ இல்லையேல் இந்த கருவிகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்கிற மிக சிறப்பானதொரு கட்டமைப்பு நம்மை சுற்றி உருவாக்கப்பட்டு விடுகிறது. இத்தனை அக்கப்போர்களுக்கு நடுவே நின்று கொண்டு எங்கிருந்து தொலைந்து போவது. வாய்ப்பேயில்லை. ஆனால் இத்தனையும் தாண்டி ஒருநாள் தொலைந்து போக முடியுமா என்றால் முடியும். ஆனால் அது அவரவர் கைகளில் இருக்கிறது. என்னைக் கேட்டால் குறைந்தது இங்கு அவசரமாய், அசூரகதியாய் இரக்கமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சமூக ஓட்டத்தில் இருந்து, ஒரு 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது, அப்படியே கொஞ்ச நாட்களுக்கு தொலைந்து போங்கள் எனச் சொல்வேன். என்னளவில் தொலைந்து போதல் வரம். உங்களை யார் என்றே தெரியாத, உங்களை பற்றிய எவ்வித பிம்பத்தையும் கட்டமைத்து பார்க்காத சமூகத்திற்கு நடுவே கொஞ்சமாய் போய் உலவிப் பாருங்கள். அப்படியானதொரு தொலைந்து போதலின் ரூசி அலாதியானது, அற்புதமானது, வாருங்கள் தொலைந்து போகலாம். நம்மிடம் தொலைந்து போனதை நாம் தொலைந்துபோய் மீட்டெடுக்கலாம், மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *