வாழ்ந்து பார்த்த தருணம்…130

விதை…

சில நாட்களாக எழுத முடியவில்லை அல்லது எழுதக் கூடிய சூழ்நிலை இல்லை எப்படி வேண்டுமானாலும் அதனை எடுத்துக் கொள்ளலாம். அதனால் அதைப் பற்றி தனியாக நிறைய சொல்ல வேண்டியிருப்பதால், எழுதாமை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்க்கலாம், பேசலாம். இப்பொழுது நேராக விஷயத்திற்குள். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒரு நாள் காலை வேளையில், என்னுடைய வீட்டிற்கு அருகாமையில் குடியிருக்கும் சகோதரி ஒருவரோடு நானும், எனது மனைவியும் பேசிக் கொண்டிருந்தோம், அந்த சகோதரி அப்பொழுது தான் வயல் வேலைக்கு போய்விட்டு வந்திருந்தார். அதிகாலை வயல் வேலையை செய்து முடித்து வீட்டிற்கு வந்து தயாராகி, பின்னர் வேறு ஒரு வேலைக்கு அவர் செல்ல வேண்டும். அதனால் என் மனைவி அவரிடம் அதிகாலையிலேயே வேலைக்கு போய்விட்டு வந்து மீண்டும் வேறு ஒரு வேலைக்கு தயாராகிப் போகும் போது உடல் சோர்வாக இருக்காதா எனக் கேட்டார். அப்பொழுது அந்தச் சகோதரி சொன்ன பதில் தான் இங்கே கவனிக்கப்பட வேண்டியது. அந்த சகோதரி சொன்ன பதில், உடல் சோர்வு இருக்கத் தான் செய்யும். ஆனால் இன்றைக்கு வயல் வேலைக்கு வேலை தெரிந்த ஆட்கள் கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக விதை ஊன்றும் வேலை தெரிந்த ஆட்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாகி கொண்டே இருக்கிறது. அதனால் என்னை போன்ற விதையை சரியாக விதைக்க அல்லது ஊன்ற தெரிந்த ஆட்களை வேலைக்கு அழைக்கையில் அந்த அழைப்பை என்னால் மறுக்க முடியவில்லை. என்னை பொறுத்தவரை, அந்த வேலையில் கிடைக்கும் வருவாயை என்பதைத் தாண்டி, விதை நடும் வேலையில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கிறது, அதனால் என்னை அழைக்கையில் மறுக்காமல் சென்றுவிடுவேன் என்று சொன்னார். இந்த இடத்தில் ஒரு சின்ன சொல்லப்பட வேண்டிய முக்கியமான தகவல் ஒன்று உண்டு.

இப்பொழுது என்னுடைய குடும்பம் குடியிருக்கும் இடம் சற்றே பெரிய கிராமம், கிராமத்தை சுற்றிலும் வேளாண் நிலங்கள் அதிகம். பிரதான வேளாண்மை நெல் தான். ஆனாலும் அந்த நெல் பயிரிடலும் ஒரு போகம் தான், காரணம் இங்கே 90 சதவீத நெல் பயிரிடல் என்பது கால்வாய் பாசனத்தை நம்பித் தான் இருக்கிறது. அதனால் வருடம் ஒரு முறை மட்டும் திறக்கப்படும் தண்ணீரை பொறுத்தே நெல் பயிரிடல் நடக்கும். அதனால் முதல் போகம் நெல் பயிரிடல் முடிந்ததும், நிலத்தை அப்படியே போட்டு விடுவார்கள். இனி அடுத்த வருடம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் மாதத்தை பொறுத்து நெல் பயிரிடலுக்கு நிலம் தயாராகும். அதனைத் தாண்டி ஒரு போகம் நெல் பயிரிடல் முடிந்ததும் கிணறு வைத்திருப்பவர்கள் மட்டும் அந்தந்த வருடத்தில் கிணற்றில் ஊறும் நீரின் அளவை பொறுத்து காலநிலைக்கு ஏற்றவாறான தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களாக பயிற் செய்வார்கள். அதில் வெள்ளரி, பூசணி, பாகற்காய், மிளகாய் அதோடு இன்னும் சில பயிரிடல்களும் நடக்கும். அப்படியான கிணற்று பாசன பயிரிடல் தான் நெல் பயிரிடல் முடிந்து இப்பொழுது தொடங்கியிருக்கிறது. அப்படியானதொரு விதை பயிரிடலுக்கு சென்று வந்த அருகாமை வீட்டு சகோதரிடம் பேசிக் கொண்டிருந்தது தான் மேலே சொல்லியிருப்பது. இப்பொழுது விஷயம் என்னவெனில் கிட்டத்தட்ட அந்த சகோதரியின் தலைமுறையோடோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையோடோ விதைப் பயிரிடலை இயந்திரத்திற்கு தாரை வார்க்கப் போகிறோம். இப்படி கொஞ்சம், கொஞ்சமாய் இந்த நிலத்திற்கும், மண்ணிற்கும், மனிதனுக்குமான தொடர்பை தொலைத்து விட்டு, வளரும் தலைமுறைக்கு பாட புத்தகத்தையும், அலைபேசியையும், மடிகணியையும் அவர்களது கைகளில் கொடுத்து படிக்கச் சொல்லிக் கொடுத்து என்னத்த கிழிக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை. இப்படி தன்னை சுற்றி நடக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீதும் பிரஞனையோ, கவனமோ இல்லாமல், வெறும் பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமே படித்து வளரும் தலைமுறை எப்படியானதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அப்படிப் படித்து வளரும் தலைமுறையில் இருந்து வரும் ஒரு நபர், மாவட்ட ஆட்சியாளராகவோ, அல்லது வேளாண் துறையின் முக்கியமான பொறுப்பில் வந்து அமரும் அதிகாரியாகவோ வந்து அமர்ந்தால், மேலே சொன்னது போலான விஷயங்களை பற்றி அந்த நபருக்கு எப்படியான புரிதல் இருக்கும், அதனை அவர் எப்படிக் கையாள்வார் என்பதை கண்டிப்பாக புரிந்து கொள்ளவே முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஒரு முறை என்னுடன் பணிபுரிந்த சக நண்பர்கள் மற்றும் சில வெளிநாட்டினரும் சேர்ந்து ஒரு முக்கியமான பணி ஒன்றினை முடித்துவிட்டு மதியம் உணவருந்த உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம். வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நண்பர்கள் அன்றைய பணிக்காகவே முந்தய நாள் இரவு தான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்திருந்தார்கள். உணவகத்தில் எல்லோருக்கும் உணவு வரவழைக்கப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்பொழுது வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு நண்பரிடம் இருந்து ஒரு கேள்வி எங்களை நோக்கி வந்தது. அந்த கேள்வி என்னவெனில், நாங்கள் எல்லாம் மேஜை கரண்டியை பயன்படுத்தி உணவை உண்கையில், நீங்கள் மட்டும் ஏன் உணவருந்த வெறும் கைகளை பயன்படுத்துகிறீர்கள், மேஜை கரண்டியை பயன்படுத்துவது தானே சுத்தமானதும் மற்றும் நாகரிகமானதும் கூட என்பது தான் அந்த வெளிநாட்டு நண்பரின் கேள்வி. அப்பொழுது அந்த வெளிநாட்டு நண்பருக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி புரியவைத்தோம், உணவு என்பது வெறுமனே உயிர்வாழ்வதற்காக உண்பது அல்ல. அதையும் தாண்டி அந்த உணவு நம்முடைய கலாச்சாரம், ஆரோக்கியம், நமது எண்ணங்கள் என பலநிலைகளில் நம்மோடு சம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட உணவுக்கும் நமக்குமான தொடர்பு என்பது நாம் அதனை தொடும் புள்ளியில் இருந்து ஆரம்பமாகிவிடுகிறது. அதனால் நீங்கள் ஒரு முறை மேஜை கரண்டியை ஓரமாக வைத்து விட்டு உணவை கைகளில் எடுத்து அந்த உணவின் தன்மையை உங்களின் விரல் தொடுதலின் வழியே முதலில் உணருங்கள், அதன் பின்னர் சாப்பிட ஆரம்பியுங்கள் எனச் சொன்னோம். உடனே மேஜை கரண்டியை ஓரமாக வைத்து விட்டு தன்னுடைய கைகளில் உணவை எடுத்தவர், சில நொடிகள் தன்னுடைய விரல்களில் அதன் ஸ்பரிசத்தை உணர்ந்த பிறகு, சாப்பிட ஆரம்பிக்க, அப்பொழுது அவர் முகத்தில் தெரிந்த ரசனையான, ரகளையான, ஈடுபாடான ரசித்தலை இங்கே வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதன் பின்னர் ஏன் நாங்கள் கைகளால் உணவருந்துகிறோம் என்பதன் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்து ஏற்றுக்கொள்வதாய் சொன்னார். ஆனால் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு நாகரிகம் என்கிற பெயரில் என்ன சொல்லிக்கொடுக்கிறோம்? இந்த கேள்விக்கான விடை இதனை படித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். அந்த மேஜை கரண்டி எப்படி, தொடுதலை புறக்கணிப்பதின் வழியே நமக்கும் உணவுக்குமான தொடர்பை துண்டிக்கிறதோ, அது போலத் தான் மிக முக்கியமாக விதை நடுதல் போன்றவற்றிக்குள் நுழையப்போகும் இயந்திரங்களும் நமக்கும் மண்ணுக்குமான தொடர்பை துண்டிக்க களம் இறக்கப்படுகின்றன. காரணம், விதை இந்த மண்ணில் ஊன்றப்படும் அந்த தருணத்தில் எந்த ஒரு மனிதனின் மனமும், இந்த விதை விரியமாய் வளர்ந்து அமோக விளைச்சலை கொடுக்க வேண்டும் என்று இறைஞ்சி மண்ணை நோக்கி வேண்டியபடி தான் அந்த விதையை ஊன்றும். ஆனால் இயந்திரம் என்ன வேண்டும்? இந்த கேள்வியை உங்களிடமே விடுகிறேன். விதையற்றதை உண்டு வீரியமில்லாத வெற்று மனிதர்களாய் வலம் வரபோகிறோமா அல்லது ?…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *