வாழ்ந்து பார்த்த தருணம்…135

பசியும், உணவும், உணவு வெளியேற்றமும்…

ஷாலினின் பதிவு மீண்டும் ஒரு முறை பசியையும், உணவையும் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது. வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பது எவ்வளவு சத்தியமோ, அதே போல் உணவின் அருமையும் பசித்திருத்தலின் பின்னால் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஏதோ ஒன்றை நோக்கி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறைக்கு பசியின் உண்மையான அவஸ்தை தெரியுமா எனத் தெரியவில்லை. இல்லை, அவர்கள் பசி என்கிற ஒன்றை மதிக்கிறார்களா எனத் தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ இன்றைக்கு சாப்பிடும் நேரத்தில் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் கூட, யாரும் யாரையும் சாப்பிட்டிறீர்களா என கேட்பது மிக, மிக அருகிக் கொண்டே வருகிறது. இன்றைக்கு வீம்புக்காக சாப்பிடாமல் இருப்பவர்களும், பசி இருந்தும் சாப்பிடாமல் இருந்து விட்டு அதனைப் பெருமையாக சொல்லிக்கொள்ளும் மனிதர்களும் தான் அதிகம். உண்மையில் உணவு கிடைக்காமல் பசித்திருத்தல் என்பது வேறு. ஆனால் எல்லாம் இருந்தும் பசியை அலட்சியப்படுத்திவிட்டு அதனை பெருமையடிப்பது என்பது வேறு. எனக்குப் பசிக்கிறது என்று சொன்னதற்காக பல முறை ஏளனமும், அவமானமும் படுத்தப்பட்டிருக்கிறேன். அதற்கு சொல்லப்பட்ட காரணம் தான் மிகக் கொடுமையானது. வேலையின் மீது கவனம் இருக்கும் மனிதனுக்கு பசிக்காதாம், பசியின் அவஸ்தையில் காதடைத்து தலைவலியே வரும் நேரத்தில் அப்படி சொல்லும் போது, எவன் டா சொன்னது உங்களுக்கு வேலையில் கவனமா இருக்கவனுக்கு பசிக்காதுன்னு என்று உரக்க கத்த வேண்டும் போல் பலமுறை எனக்குத் தோன்றியதுண்டு. ஆனால் பசியினால் உடலில் கத்தக் கூட திராணி இருக்காது. உண்மையில் பசியின் உச்சம் ஒருவனை எந்த எல்லைக்கும் கொண்டு போகும். அதனால் தான் பசித்தால் பத்தும் பறந்து போகும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

சாரு சொன்னது போல், என்னைப் பொறுத்தவரை உணவும், உணவை வெளியேற்றுவதும் மதம் போன்றவையா எனக் கேட்டால் அது சத்தியமான உண்மை. உடற்பயிற்சி, உணவு, உறக்கம், உடல் தேவை இந்த நான்கு விஷயங்களில் உங்களிடம் இருக்கும் ஒழுக்கம் தான் உங்களின் உடலை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். ஆனால் இன்றைக்கு இந்த நான்கையுமே கிட்டத்தட்ட சிதைத்து விட்டோம். இன்றைக்கு வளரும் குழந்தைக்கு உடல் கழிவு வெளியேற்றத்தை பற்றி என்ன மாதிரியான புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் எனப் பார்த்தால், அதிலும் மிக, மிக மோசமான புரிதலைத் தான் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மனிதனுடைய உடம்பில் இயல்பான விஷயமாக நிகழ்வது கழிவு வெளியேற்றம். ஆனால் மனித உடலின் சுழற்சியில், இயல்பாக நடைபெறும் ஒன்றைப் பற்றி மிக, மிக மட்டமாகவும், அதுவும் வீட்டைத் தவிர வேறெங்கு சென்றாலும், இன்றைய குழந்தைகள் உடல் கழிவு வெளியேற தூண்டப்படும் நேரத்தில், அதனை சுதந்திரமாக சொல்லும் மனநிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறோமா என யோசித்தால், கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மையான பதில். அப்படியே வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட நம்முடையே அலைப்பேசியும், தொலைக்காட்சியும் நம் குழந்தைகளின் உடல்கழிவு வெளியேற்றத்தை தடுத்து விடுகின்றன. நமக்கு செளகரியமான நேரத்தில் தான் நம்முடைய குழந்தைகளின் உடல் கழிவு வெளியேற்றம் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் எந்த நேரத்தில் வந்து சொல்லுது பாரு என்கிற வசவு சர்வசாதாரணமாக நம்முடைய திருவாயில் இருந்து வரும். இப்படிப்பட்ட சூழலில் அந்தக் குழந்தை என்ன செய்யும்?, வந்தாலும் சொல்லாது. அப்படியே அடக்கிவிடும். அப்புறம் எப்படி அதற்குப் பசிக்கும். இப்படி செய்வதை எல்லாம் செய்துவிட்டு, நாம் சாப்பிடும் நேரத்தில் நம் குழந்தைக்கும் பசிக்க வேண்டும் என யோசிப்போம் பாருங்கள், அடடா நம்மைவிட அதி புத்திசாலிகள் அதுவும் குழந்தை வளர்ப்பில் யாரும் இல்லை.

சோற்று ஜாதி கட்டுரையில் ஒரு இடத்தில் ஷாலின் எழுதியிருந்த விஷயம் மிக முக்கியமானது. அதில் சாருவிடம் சாப்பிட ஒரு பார்சல் கொடுத்திருந்தார்கள். உடனே அவர் அங்கே இருந்த ஒரு பையனை அழைத்து இன்னொரு பொட்டலம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். அந்தப் பொட்டலத்தைக் கொடுத்து, “ரொம்ப லேட் ஆயிடுச்சு, நீ சாப்பிடு” என்று அவருக்கே உரித்தான மிளிர் தொனியில் சொன்னார். சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்கும்போது எனக்குக் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. (இதை எழுதும்போதும் வருகிறது) வாயில் சப்பாத்தி ருசியுடன் கண்ணீரின் உப்பும் சேர்ந்து கொண்ட போது இந்த உலகின் ஆகச்சிறந்த உணவாக அது இருந்தது. பின்பு தனக்கு அனுப்பப்பட்டிருந்த வாடகைக் காரிலேயே என்னையும் வீட்டுக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தார். சாருவோடு எவ்வளவோ முரண்கள் இருந்தும் சாருவை ஒரு தந்தையாய் மதிப்பதற்கு இது மிக, மிக முக்கியக் காரணம். உணவை ஆத்மார்த்தமாக நேசிப்பவர்கள் மற்றவர்களைப் பட்டினியாய் இருக்க விடுவதில்லை. உணவு என்பது ஒரு உணர்வு. “சாப்பாட்டுல என்னங்க இருக்கு?” என்று யாராவது கேட்டால் சொல்லுங்கள். “சாப்பாடுலதாங்க எல்லாமே இருக்கு. ”இந்த வரிகளை வாசிக்கையில் என்னையறியாமல் கண்கள் கலங்கிவிடுகின்றன, காரணம் உணவை ஆத்மார்த்தமாக நேசிப்பவர்கள் மற்றவர்களைப் பட்டினியாய் இருக்க விடுவதில்லை. உணவு என்பது ஒரு உணர்வு. ஆனால் இன்றைய தலைமுறை பெற்றோர்கள் உணவையும், பசியையும், உணவு வெளியேற்றத்தையும் குறிப்பாக தூக்கத்தையும் மிக, மிக மோசமாக அலட்சியப்படுத்துவதை கண்முன்னே பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஒன்று தொலைக்காட்சி அல்லது அலைபேசி இந்த இரண்டும் படுக்கை வரை என்பது போய், படுக்கைக்குள்ளாகவே வந்துவிட்டன. இப்படியான நிலையில் உணவும், உணவு வெளியேற்றமும், பசியும் எப்படி இவர்களுக்குத் தெரியும். கண்டிப்பாக வாய்ப்பேயில்லை. அதனால் தான் இரண்டு விஷயங்கள் இங்கே பெருகிக் கொண்டே வருகிறது. ஒன்று இன்றைக்கு திருமணத்திற்கு பின் இயல்பாக கருவுறுதலில் ஏற்பட்டுள்ள சிக்கல். இரண்டு அப்படியே சிக்கலையெல்லாம் தாண்டி, தான் பெற்ற குழந்தை நேரத்திற்கு பசிக்கிறது என்பதையும், உணவு வெளியேற்றத்தையும் நாம் என்ன செய்து கொண்டு இருந்தாலும் சொல்லும் சுதந்திரத்தை கொடுக்காமல், கொடுமையாக அவர்களை வளர்ப்பது. முதல் ஒன்று உருவாவதிலேயே சிக்கல். இரண்டு அப்படியே உருவாகி வந்ததை உருவாக்குவதில் சிக்கல். இன்றைய குழந்தைகள் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி உடல்கழிவை வெளியேற்ற வேண்டும், அதாவது எல்லோதுக்கும் புரியும்படி சொல்வதானால், ஆய் வருகிறது என்பதைச் சொன்னால், எங்கே நம்மை திட்டிவிடுவார்களோ என பயந்தே சொல்லாமலேயே இருந்து விடுகின்றன. அதனால் அவர்களின் ஆரோக்கியம் மிக, மிக மோசமாக சிதைக்கிறது என மிகப்பெரும் ஆய்வுக் கட்டுரை ஒன்று காணக்கிடைத்தது. அதனைப்படிக்கும் போது மனம் மிகவும் வலித்தது. நாம் தான் இது போன்ற வெட்டியான விஷயங்களை படிப்பதில்லையே. நமக்கு தான் இருக்கவே இருக்கிறது அலைப்பேசியும், தொலைக்காட்சியும் அதில் வரும் பல அறிவுப்பூர்வமான செய்திகளை படித்து அதைப் பற்றி மட்டுமே உரையாடலாம், பேசலாம். அப்ப எப்ப சார் பசிக்கும் பேசிக்கிட்டே இருந்தா பசி தெரியாதுப்பா, ஓ அப்படியா… மகிழ்ச்சி.

கடைசியாக ஒன்று:
என்றைக்காவது ஒரு நாளாவது பசியோடு அலையும் மனிதனின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து, அந்த கண்களுக்குள் சென்று பாருங்கள். முடிந்தால் அந்த மனிதனுக்கு உணவு வாங்கிக்கொடுத்து அதன் பின் அவனுடைய கண்களைப் பாருங்கள், பசியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அந்த மனிதர்களின் கண்களை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அந்த கண்களில் தெரியும் நன்றி உணர்ச்சிக்கு இணை இந்த உலகத்தில் ஏதுமில்லை. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *