வாழ்ந்து பார்த்த தருணம்…13

விலை மதிக்க முடியாத பொக்கிஷம் எது?

புகைப்படக்கலையை மனப்பூர்வமாக நேசித்துப் பயணிக்கும் ஒவ்வொரு புகைப்படக் கலைஞனிடத்திலும் இந்தக் கேள்வியை கேட்டால் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். என்னுடைய புகைப்படப் பயணத்திலும் அப்படிப்பட்ட பொக்கிஷமான விஷயங்கள் இருக்கின்றன. அப்படிபட்டத் தருணங்கள் என்னைச் சிரிக்க, சிந்திக்க, சிலிர்க்க வைத்திருக்கிறது. நாம் எடுக்கும் புகைப்படங்கள் ஏதோ ஒரு தருணத்தில் நிகழும் சம்பவங்கள் மூலமாக காலத்தால் அழிக்கமுடியாத புகைப்படங்களாக மாறும். அது அந்தப் புகைப்படம் எடுக்கப்படும் போது தெரிய வாய்ப்பு குறைவு. ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். சில ஆண்டுகளுக்கு முன் 2007லிருந்து 2008 காலகட்டத்தில் என் வாழ்வில் நடந்த சம்பவம் அது. திரைதுறையில் உதவி ஒளிப்பதிவாளராக சுற்றிக் கொண்டு இருந்த சமயம், எப்பொழுதெல்லாம் கையில் காசு கிடைக்கிறதோ (எப்போழுதாவது கிடைக்கும் என்பது வேறு விஷயம்) அப்பொழுதெல்லாம் கிடைத்த காசில் ஒரு பிலிம் ரோலை வாங்கி கொண்டு அன்றைய நட்பு வட்டத்தோட சென்னையை சுற்றி எங்காவது புகைப்படமெடுக்க கிளம்பி விடுவதுண்டு. அப்படி ஒரு முறை விழுப்புரம் பகுதியில் இருக்கும் கூத்தாண்டவர் கோவிலின் திருவிழா நாள். இந்தியா முழுவதும் இருக்கும் திருநங்கைகள் கூடுமிடம். அந்த திருவிழாவை புகைப்படமெடுக்க கிளம்பிவிட்டோம். காலையிலேயே போய் சேர்ந்தாயிற்று. பிலிம் ரோல் என்பதால் ஒவ்வொரு புகைப்படம் எடுக்கும் போதும் திக், திக் தான். அங்கு வந்திருந்த இந்தியாவில் வெளிவரும் ஒரு முக்கிய ஆங்கில இதழின் புகைப்படக்காரர், அவர் என்னோடு வந்திருந்த நண்பனின் நண்பர் (நண்பனின் நண்பன் நமக்கும் நண்பனே) அறிமுகப்படலம் முடிந்து ஆளுக்கோரு திசையில் புகைப்படமெடுக்க ஆரம்பித்தோம்.

இரவானது அந்த ஆங்கில இதழின் புகைப்படக்காரர் கடந்த முறை திருவிழாவின் போது எடுத்த ஒரு திருநங்கையின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டே சுற்றி கொண்டிருந்தார். அந்த திருங்கையைப் பார்த்தால் கண்டிப்பாக அவரிடம் கொடுத்துவிட வேண்டும் எனச் சொல்லிகொண்டிருந்தார். கையில் வைத்திருக்கும் கேமராவோடு புகைப்படங்களை எடுத்துக்கொண்டே நாங்களும் கண்களை தேட விட்டுக்கொண்டிருந்தோம். இரவானதால் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நேரம் சென்று கொண்டே இருந்தது கோவிலைச் சுற்றி புகைப்படமெடுத்தபடி வந்து கொண்டிருந்தோம். நான் அளவாக தான் எடுத்துக் கொண்டிருந்தேன். காரணம், கையில் இருந்தது ஒரே ஒரு பிலிம் ரோல் மட்டுமே. அப்பொழுது ஆங்கில நாளிதழின் புகைப்பட நண்பர் அந்த திருநங்கையை பார்த்துவிட்டார். ஓடிச்சென்று அவரிடம் பேசிவிட்டு தான் கடந்த வருடம் எடுத்தப் புகைப்படத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். அதை வாங்கி பார்த்த அந்த திருநங்கையின் கண்களில் ஆனந்த கண்ணீர். ஒரு வருடம் கழித்து தன்னைத் தேடி வந்த ஒருவர், தன்னை இவ்வளவு அழகாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன் கையில் கொடுக்கும் போது அவரின் மனநிலை என்னவாக இருக்கும். நாம் திருநங்கைகளை எப்படி மதிக்கிறோம் என்பது ஊரறிந்த ரகசியம். அவர்களுக்கு அது ஏப்பேர்பட்ட வலி, அவர்களின் அந்த வலி மிகுந்த மனநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள், அப்பொழுது தான் அந்தப் புகைப்படம் அந்த திருந(த)ங்கைக்கு எவ்வளவு விலைமதிப்பில்லாதது எனப் புரியும்.

ஒரு திருநங்கையாக வாழ்வதின் வலி என்னவென்று உணராதவராக நீங்கள் இருந்தால். நான் (சரவணன்) வித்யா என்ற பெயரில் ஒரு புத்தகம் இருக்கிறது (https://ta.wikipedia.org/…/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9…. வித்யா என்ற ஒரு திருந(த)ங்கை எழுதியது. வாங்கிப் படித்துப் பாருங்கள். என்னை உலுக்கிய புத்தகமது. ஒரு சராசரி மனிதனின் திருநங்கைகள் குறித்த பார்வையிலிருந்து என்னை முற்றிலும் மாற்றிய புத்தகமது. அந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, இந்தச் சமூகம் திருநங்கைகளை பற்றி எனக்கு சொல்லியிருந்த, உணர்த்தியிருந்த அத்தனை பிம்பங்களையும் அடித்து நொறுக்கியது. கண்டிப்பாக வாங்கி படியுங்கள். அந்த ஆங்கில நாளிதழ் புகைப்படக்காரரின் கையிலிருந்து திருந(த)ங்கை அந்தப் புகைப்படத்தை கையில் வாங்கியவர் சில விநாடிகள் அதை கண்களில் நீருடன் பார்த்து கொண்டிருந்துவிட்டு, சடாரென அந்த ஆங்கில நாளிதழ் நண்பரின் தலையில் கைவைத்து நீ நல்லாயிருக்கணும் தம்பி என வாழ்த்தினார். அத்திருந(த)ங்கையின் ஆன்மாவிலிருந்து வந்த வாழ்த்து அது. அந்த திருந(த)ங்கையின் ஆழ்மனதிலிருந்து எழுந்த நீ நல்லாயிருக்கணும் என்ற அந்த ஒற்றை சொல் ஆசிர்வதித்துக்கொண்டிருந்த அவரின் நடுங்கும் கரங்களின் வழியே நண்பரின் உச்சந்தலையினுள் இறங்குவதை பார்த்து கொண்டிருந்தேன் அப்படியே சிலிர்த்து விட்டது எனக்கு. என் கண்கள் பனிப்பதை தடுக்க விரும்பவில்லை. பார்த்துகொண்டிருந்த எனக்கே இப்படியென்றால் நண்பர் சில நொடிகள் அப்படியே சிலையாகிவிட்டார். நண்பரின் கண்களில் சில துளிகள் எட்டி பார்த்தது. பார்த்துக்கொண்டிருந்த கூட இருந்த அத்தனை நண்பர்களின் உடம்பும் சிலிர்த்து அடங்குவதை கவனிக்க முடிந்தது. பல வருடங்களுக்கு பின் தன் மகனை சந்திக்கும் ஒரு தாயின் ஆழ்மனதிருந்து எழும் ஆசிர்வாதமது.

ஆன்மாவோடு எடுக்கப்படும் ஒரு புகைப்படம் எப்பேர்ப்பட்ட விஷயத்தை எனக்கு கொண்டு வந்து கொடுக்கும் என்று சிலிர்த்து உணர்ந்த தருணம் அது. இதோ அந்த நிகழ்வை எழுதி கொண்டிருக்கும் போதே என் உடல் சிலிர்ப்பதையும், கண்களில் சில துளிகள் திரள்வதையும் உணர்ந்தபடியே எழுதுகிறேன். அந்த திருநங்கையின் மனதிலிருந்து எழுந்த உளப்பூர்வமான வார்த்தைகளுக்கு விலைமதிப்பே கிடையாது. காலத்துக்கும் அந்த ஒற்றை வார்த்தை உங்களைச் செலுத்தும். (அப்படிபட்ட சம்பவமொன்று என் வாழ்விலும் பிரிதொரு தருணத்தில் நடந்தது. அதை பற்றி அடுத்த முறை பேசுவோம்.) நான் எடுக்கும் புகைப்படம் என்பது வெறும் புகைப்படம் மட்டுமல்ல அது தன்னுள்ளே ஆயிரம் ஆன்மாக்களை ஒளித்து வைத்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். இன்று நான் புகைப்பட பயிற்சி அளிக்க செல்லும் இடங்களுக்கு வருபவர்களுக்கு முதலில் அந்த ஆன்மாவையேத் தான் கற்றுத் தருகிறேன். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *