வாழ்ந்து பார்த்த தருணம்…136

காற்றின் ரீங்காரத்தினிடையே பரவிய இசை…

வருடம் ஒரு முறை சொந்த ஊருக்கு செல்வது வழக்கம், போன வருடம் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல இயலவில்லை. இந்த வருடம் கண்டிப்பாக தவறாமல் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் உறுத்திய படி இருந்தது. நல்ல வேளையாக எவ்விதமான தடங்களும் இல்லாமல் மிக சிறப்பாக போக முடிந்ததில் மகிழ்ச்சி. பொதுவாக ஆடி மாத காற்று என்பதையே, இன்றைக்கு காங்கிரீட் காடுகளாக உருமாறிவிட்ட நகர்புற இடங்களில் உணர முடிவதே இல்லை. ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆனால் இன்று ஆடிக்காரில் ஏறி ஐநூறு கீலோமீட்டர் வேகத்தில் போனால் வெளிப்படும் காற்றில் கூட அம்மி நகருமா எனத் தெரியவில்லை. ஆனால் இன்றும் தன்னுடைய பழமையை தன்னுள்ளே ஒளித்து வைத்து பாதுகாக்கும் நம்முடைய கிராமங்களில், ஆடிக்காற்றின் ஆட்டம் அட்டகாசமாய் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இந்த முறை ஊருக்கு போயிருந்த போது, மிக முக்கியமாக சற்று ஊருக்கு வெளியே வீற்றிருக்கும் குலசாமி கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட வேண்டுமென திட்டம். அந்தக் கோவிலுக்கு போய் வருடங்கள் பல ஆகிவிட்ட படியால், அந்த கோவில் இருக்குமிடம் நினைவுகளில் இருந்து மறைந்திருந்தது. இந்த முறை அங்கே சென்ற போது வயல்வெளி, வாழைத் தோப்பு சுற்றிலும் வெட்டவெளி என மிக, மிக அட்டகாசமான இடத்திற்கிடையில், கோவில் மிக, மிக அமைதியாக அற்புதமாக அமைந்து இருந்தது. முழுமையாக கட்டப்பட்ட கட்டிடம் இல்லாத, தரைதளம் மட்டுமே போடப்பட்டுப் பெரிய வேப்ப மரநிழலில் தோப்பு மற்றும் வயல்களுக்கு இடையில் சிறப்பாக இருந்தது. அந்த கோவில் முழுமையான கட்டிடமாக இல்லாமல் இருந்தது தான் மிக அழகாக இருந்தது. பூஜையை எல்லாம் முடித்துவிட்டு அமர்ந்தால், ஆடிக்காற்று சும்மா அள்ளியது, கோவிலின் ஒரு பக்கம் வாழைத்தோப்புக்கு பம்பில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆடி காற்றின் அதகளமான ஒலி, பின்னனியில் தண்ணீர் விழும் ஓசை என அந்த இடத்தை விட்டு நகரவே மனமில்லாமல் அப்படியே படுத்துக் கிடந்தோம்.

அன்று இரவு கவியத்தொடங்கிய நேரத்தில், ஊரில் நாங்கள் தங்கியிருந்த அண்ணனின் வீடு மொட்டை மாடியில் இருந்தேன். ஆடிக்காற்று என் உடலின் மீது பரவிச் செல்லும் சிலிர்ப்பையும், அதன் ஒலியையும் உள்வாங்கி ரசித்த படியே அமர்ந்திருந்தேன். அப்பொழுது தான் மிக, மிக முக்கியமான இசைக்கோர்வை ஒன்றை கேட்க வேண்டுமென மனதிற்குள் ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. உடனடியாக அலைப்பேசியை எடுத்து, சாருவின் முகநூல் பக்கத்திற்கு போய், அந்த இசைக்கோர்வையை தேடித் தேடிக் கண்டும் பிடித்துவிட்டேன். சாருவின் பக்கத்தில் போய் அதனை ஏன் தேட வேண்டும் என்கிற கேள்வி இருக்கிறது இல்லையா, அது வேறொன்றுமில்லை, இடையில் உடல்நிலை மோசடைந்து இருந்த காலகட்டத்தை பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அந்த நேரத்தில் எனக்கு துணையாக இருந்தது என் அலைபேசியின் வழியே நான் வாசித்த எழுத்தும், கேட்ட இசையும் தான். அதில் சாரு இடையிடையில் தொடர்ந்து தான் ரசித்த இசை கோர்வைகளை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பரிந்துரைப்பதோடு, அதனுடைய இணைய சொடுக்கினையும் பகிர்ந்திருப்பார். அப்படி சாரு பகிர்ந்திருந்த ஒரு இசைக் கோர்வை தான், அந்த நேரத்தில் எனக்கு மிகப் பெரும் ஆறுதலாக, வலியை மறக்கடிக்கும் வடிகாலாக, ஒருவிதமான நேர்மறையான ஆற்றலை பரவச்செய்யும் உந்துசக்தியாக இருந்தது. Into the Deep Blue என்கிற அந்த இசைக்கோர்வை இன்று உலகளவில் பலரது மனங்களை கட்டிப்போட்டிருக்கும் யானியுடையது. இது யானியுடைய இசை தான் என தெரியாமலேயே பல நேரங்களில் அவரது இசையை கேட்டுவிட்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னால், திரைப்பட விருது வழங்கும் விழாக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகையில் யானியின் இசை தான் பின்னனியில் அதகளமாய் ஒலிக்கும். அப்படியான யானியின் இசை கொடுத்த தாக்கம் என்னை பலமுறை ஆட்க் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உன்னத மனிதனின் அதகளமான இசைக்கோர்வை, மெல்லியதாக இரவு கவியத் தொடங்கும் வேளை, சற்றே ஈரப்பதமான சில்லட்ட ஆடிக்காற்று, மொட்டை மாடி, மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் வயல் வெளியின் பின்னனியில் சூரியன் மறையும் ஏகாந்த வானம் என்பதைத் தாண்டி, அப்படியே காற்றினுடே பரவியபடியே இருந்த யானியின் இசையை கேட்க, கேட்க உடல், மனம் இரண்டும் சிலிர்த்தபடி இருந்தது.

பொதுவாக இசையமைப்பாளர்களின் முகபாவணை என்பது, அதுவும் குறிப்பாக மேடையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, அந்த இசைக்குள் அமிழ்ந்து போவதை விட, அந்த இசை நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக அரங்கேற்ற வேண்டும் என்கிற மனநிலையிலேயே இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் மட்டுமே அதில் விதிவிலக்கு, அந்த விதிவிலக்குகளில் சந்தேகமே இல்லாமல் யானி முதல் இடத்தில் இருக்கிறார். மனுசன் மேடையேறி தன் முன்னே இருக்கும் பியானோவில் தன்னுடைய விரல்கள் தொட்ட நொடியில் இருந்து, கொஞ்சம், கொஞ்சமாய் அந்த இசைக்குள் கரைய ஆரம்பிப்பார் பாருங்கள், யப்பா வாய்ப்பேயில்லை. அதுவும் மேலே குறிப்பிட்டிருக்கும் Into the Deep Blue எல்லாம் ஒருவிதமான ரகளையான துள்ளளோடு வேகமாய் நகரக்கூடிய இசைக்கோர்வை. மனுசன் அந்தத் துள்ளளையும், உற்சாகத்தையும் அப்படியே உள்வாங்கியபடி, பியோனோவில் விரல்களை விளையாட விட்டிருப்பார். அதுவும் போக எனக்கு பிடித்த இசைக்கருவிகளில் முக்கியமானது வயலினும், செல்லோவும். இந்த இசைக்கோர்வையில் ஒரு இடத்தில் தோல் கருவியின் தாளம் முடிந்து, யானியின் பியானோவோடு, வயலினும், செல்லோவும் இணையும் பாருங்கள் அப்படியே மெய் சிலிர்க்கும். அதிலும் அந்த நேரம் யானியின் முகத்தை பார்க்க வேண்டுமே, அப்படியே கண்களை முடி லயித்து, தலையை இசையின் தாளத்திற்கு ஏற்றாற் போல் ஒரு வெட்டு வெட்டுவார் பாருங்கள் வாய்ப்பேயில்லை. யானி என்கிற மனிதனின் விரல்கள் மீட்டும் பியோனோவின் வேகம், அதோடு ரகளையாக அதகளப்படுத்தும் பின்னனி இசை, யானியின் உடல் மொழி, முகபாவணை என ஒவ்வொருன்றும் மிக, மிக சிறப்பாக அரங்கேறும் மேடையைப் பார்க்க, அந்த இசையைக் கேட்க, தனியான காரணம் எதுவுமே தேவையே இல்லை. அதுனுள் விழுந்து ஆயிரம் முறை கூட கரைந்து போகலாம், காரணம் ஒரே ஒரு பெயர் யானி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *