வாழ்ந்து பார்த்த தருணம்…137

சிட்டுக் குருவியின் ஜன்னல்…

கடந்த கட்டுரையில் எழுதியிருந்தது போல் இந்த முறை சொந்த ஊருக்கு மிகச் சிறப்பாக போய் வந்தாயிற்று. அப்படி இந்த முறை ஊரில் தங்கியிருந்த போது, குறிப்பாக மொட்டை மாடியில் இருந்த போது கவனித்த இன்னுமொரு முக்கியமான விஷயம், சிட்டுக்குருவிகளின் வருகையும், அதன் கீச்சு கீச்சு சத்தமும். பொதுவாக இங்கே சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு சொல்லப்பட்ட மிக முக்கியமான காரணம், அலைப்பேசி நிறுவனங்களின் வளர்ச்சியும், அதன் பயன்பாடும், அலைக்கற்றை கோபுரங்களும் மற்றும் அதன் வழியே வெளியாகும் அலைக்கற்றைகளின் கதிர்வீச்சும் தான், என பரவலாக சொல்லப்பட்டது அல்லது நம்ப வைக்கப்பட்டது. அப்படியான காரணத்தை இன்னும் ஆழமாக நம்ப வைக்கும்படியாக 2.0 என்கிற திரைப்படமும் வெளியாகி ஆமாம், அலைக்கற்றை கதிர்வீச்சு தான் காரணம் எனச் சொல்ல ஆரம்பித்து விட்டோம். ஆனால் உண்மையில் அறிவியல் பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் அலைக்கற்றை தான் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் என்பதை நிருபிக்க முடியவில்லை. அதையும் தாண்டி அலைப்பேசி நிறுவனங்களின் மீதான இந்த குற்றச்சாட்டை சுமத்துவதின் வழியே, அப்பாடா நம் மீது தவறு இல்லை என்பது போலான மிகச் சிறப்பான பாவனையில் சுற்ற ஆரம்பித்து விட்டோம். அதனைப் பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. நமக்குத் தான் வழுவான காரணம் கிடைத்துவிட்டதே, அப்படியே அந்தக் காரணத்தோடு ஒத்துப் போய்விட்டு, எந்த உயிரினம் எப்படி அழிந்து போனால் நமக்கு என்ன, நாம் தான் அதற்குக் காரணம் இல்லையே என்கிற மனோபாவத்தில், நாம் நம்மை புனிதர்களாக எண்ணி நடமாடிக் கொண்டிருக்கிறோம். சரி இங்கே எத்தனை பேர் சில வருடங்களுக்கு முன்பு வரை சிட்டுக்குருவி நம்மோடு இருந்த கால கட்டத்தில், அதனை உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள். சரி கவனிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சின்ன தகவல், பொதுவாக சிட்டுக்குருவிகள் நாம் வாழும் வீட்டுக்குள் தான் தன்னுடைய கூட்டை அமைத்து வாழும் தன்மையுடையது. ஆனால் இன்று நம்முடைய வீட்டுக்குள் ஏன் அவை இல்லை, பொதுவெளியிலும் இல்லை. உண்மையில் அலைக்கற்றையின் கதிர்வீச்சு மட்டும் தான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனதற்கு காரணமா?. கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மையான பதில். அலைக்கற்றை மட்டும் தான் காரணம் என்றால், இன்றும் என்னுடைய சொந்த ஊரில் அவை வீட்டுக்குள்ளும், வீட்டின் அருகிலும் எப்படி வசித்துக் கொண்டிருக்கின்றன, அதே ஊரில் அலைப்பேசி கோபுரங்களுக்கு குறைவில்லையே, அப்படியானால் உண்மையான காரணம்.

பொதுவாக நாம் நம்முடைய வீட்டைத் தவிர வேறு எங்காவது சென்று தங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். அப்படி நாம் சென்று தங்குமிடம், நம்முடைய உறவினர்களின் வீடாக இருக்கலாம், நெருங்கிய நண்பர்களின் வீடாக இருக்கலாம், இல்லை, வெளியே எங்காவது வாடகை கொடுத்து கூட தங்கலாம். நாம் அப்படி வீட்டைத் தாண்டி வெளியிடத்தில் தங்குவதற்கு முன், நாம் யோசிக்கும் மிக முக்கியமான சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதலில் பாதுகாப்பு, இரண்டாவது நமக்கான வசதி, மூன்றாவது நம்மை தங்குமிடத்தில் இருப்பவர்கள் நடத்தும் விதம். இப்படி இந்த மூன்று விஷயங்களும் நமக்கு நம்பிக்கைக்கூரிய வகையில் இருந்தால் மட்டுமே, நாம் நம்முடைய வீட்டைத் தாண்டி வெளியில் சென்று தங்குவோம். இல்லாவிட்டால், அது எவ்வளவு வசதியான இடமாக இருந்தாலும், நாம் தங்குவதையே தவிர்த்துவிடுவோம். இந்த புள்ளியில் இருந்து யோசியுங்கள். வளர்ச்சி என்கிற பெயரில் நாம் பலி கொடுத்த உயிரினங்களில் முதன்மையானது சிட்டுக்குருவி. பொதுவாக சிட்டுக்குருவிகள் நம்முடைய வீட்டுக்குள் கூடு கட்டி, நாம் சுத்தப்படுத்தும் உணவுப் பொருட்களில் இருந்து சிதறும் உணவு தானியங்களை உண்டு, உயிர் வாழ்ந்தவை, நாம் நாளடைவில் எதையும் சுத்தப்படுத்தி சாப்பிடும் வேலையைக்கூட செய்யாத சோம்பேறிகளாகி விட்டோம். இதனால் பெருநிறுவனங்களே நாம் சுத்தப்படுத்துவதற்கு கஷ்டப்படுவதை பார்த்து மனது கேட்காமல், எல்லாவிதமான உணவு தயாரிக்கும் பொருட்களையும் சுத்தப்படுத்தி, கண்களை கவரும் வண்ண, வண்ண நெகிழிப்பைகளில் அடைத்து நம் கண் முன்னே பல்பொருள் அங்காடிகளில் அடுக்கிவிட்டார்கள். நாமும் நோகாமல் அதனை வாங்கிவந்து சமைத்து, அப்படி சமைக்கும் நேரத்தில் சிதறுவதையும் கொஞ்சம் கூட யோசிக்காமல், நம்முடைய சமையலறையில் இருக்கும் பாத்திரம் கழுவும் குழிக்குள் தள்ளி சாக்கடையில் கலந்து விடுகிறோம். அப்புறம் எங்கிருந்து உணவு தானியம் சிதறும் வாய்ப்பேயில்லை. அதைப் பற்றி நமக்கு கவலையும் இல்லை. காரணம் சிட்டுக்குருவி காணாமல் போனதற்கு அலைப்பேசி நிறுவனங்களே காரணம், நாம் கண்டிப்பாக இல்லை.

பொதுவாக சிட்டுக்குருவிகள் நம் வீட்டினுள் வந்து தன்னுடைய கூட்டை அமைப்பதற்கு நம்முடைய வீட்டின் ஜன்னலைத் தான் பயன்படுத்தும், அதன் வழியே தான் கூடு கட்டுவதற்கான பொருட்கள், தன்னுடைய குஞ்சுகளுக்கான இரை என எல்லாவற்றையும் கொண்டு வரும். சிட்டுக்குருவிகள் வீட்டினுள் கூடு கட்டுவதை கவனித்திருப்பவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். ஆனால் அந்த குருவிகள் வந்து செல்லும் நம் வீட்டு ஜன்னல்களின் நிலை என்ன, நகரமயமாகிக் கொண்டே இருக்கும் இன்றைய அசுரத்தனமான வளர்ச்சியில், ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்குமான இடைவெளி என்பதே இல்லாமல், பக்கத்து வீட்டு சுவற்றை ஒட்டி தான் இன்று வீடே கட்டப்படுகிறது. அப்படியான வீடுகளில் ஒரு பக்கம் தான் ஜன்னலே, அதன் வழியாகவும் காற்று கூட வர முடிவதில்லை. அப்புறம் குருவி எப்படி வரும். கொஞ்சம் வசதியானவர்கள் கட்டும் வீட்டில் எல்லா பக்கமும் ஜன்னல் வைத்தாலும், அதனை மிகச் சிறப்பாக வலை வைத்து அடைத்து விடுகிறார்கள். அதையும் தாண்டி தப்பித் தவறி குருவி ஏதாவது வந்தால், அந்த குருவி கூடுகட்ட கொண்டு வரும் பொருட்கள் எல்லாம் Dust allergy வகைமையில் வந்துவிடும். அதனால் இன்றைய குழந்தைகளிடம் குருவிகள் கூட கட்ட கொண்டு வரும் நார்களை Dust என கூசாமல் சொல்லிவிடுகிறோம். சில வருடங்களுக்கு முன்னால் விட்டுக்குள் இருக்கும் குருவியின் கூட்டை தவறுதலாக யாராவது கலைத்து விட்டால் கூட, குடும்பத்திற்கு ஆகாது என வீட்டில் இருப்பவர்கள் பதறுவார்கள். காரணம் சக உயிரின் மீது நாம் வைத்திருந்த அக்கறையும், அன்பும் அப்படியானது. ஆனால் அவை இன்று எங்கே போனது அந்த அன்பும், அக்கறையும்?, நம்முடனே இருந்த ஒரு சக உயிர் எவ்வளவு தூரம் நம்மீது நம்பிக்கை வைத்திருந்தால். நாம் இருக்குமிடத்தை பாதுகாப்பானதாக எண்ணியிருந்தால், நம் வீட்டுக்குள் வந்து, தன்னுடைய குடும்பத்தை அது அங்கே உருவாக்கும். ஆனால் நாம் வளர்ச்சி என்கிற பெயரில், நம்மிடையே நம்மை மட்டுமே நம்பி வாழ்ந்த, ஒரு சக உயிரினுடைய உயிர் வாழும் சூழல் அனைத்தையும் நம்முடைய வசதிக்காக முற்றிலும் சிதைத்து விட்டு, கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் அலைபேசி அலைக்கற்றைகளின் மீது பழி சுமத்திவிட்டு சுற்றித் திரிகிறோம். அப்புறம் எப்படி நம்மை இந்த இயற்கை மன்னிக்கும் சொல்லுங்கள். இந்த இயற்கையைப் பொறுத்தவரை அதற்கு மனிதனும் மண் புழுவும் ஒன்று தான். நாம் தான் இயற்கையை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயற்கை தான் யார் என்பதை காட்டி, நம் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. நாம் தான் அடிவாங்கியும் திருந்தாமல் சுற்றிக்கொண்டிருக்கிறோம்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *