வாழ்ந்து பார்த்த தருணம்…138

சாருவும், பாலகுமாரனும், சுஜாதாவும் ஒரு எளிய வாசகனும்….

பாலகுமாரனை பற்றி சாரு குமுதத்தில் எழுதியிருந்த கட்டுரையை, தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருந்தார், அதிலிருந்து சில வரிகள், சாருவின் வார்த்தைகளிலேயே சுஜாதா தன்னுடைய கணையாழியின் கடைசிப் பக்கங்களில் என் நாவல்களை “மலம்” என்று திட்டியிருந்தார். நான் ஒன்றும் கோபித்துக் கொள்ளவில்லை. அது அவருடைய கருத்து, அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆனால் எனக்கு சுஜாதாவின் எழுத்து ரொம்பவும் இஷ்டம். அதில் 95 சதம் இலக்கியம் அல்ல என்றாலும் ஒரு சுவாரசியமான, புத்திசாலித்தனமான வெகுஜன எழுத்து அவருடையது. (அவருடைய கனவுத் தொழிற்சாலை நாவல், நகரம் போன்ற சிறுகதைகள் அப்பழுக்கற்ற இலக்கியத்தில் சேரும்). அவர் தன்னுடைய இறுதி மூச்சு வரை எழுதினார். நானும் அவருடைய எழுத்தில் ஒன்று விடாமல் படித்தேன். ஆனால் அவர் என் எழுத்தை மலம் என்று திட்டியவர். எப்போதுமே நான் அப்படித்தான். உங்களைப் பற்றிய என் அபிப்பிராயம் என்னைப் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தால் மாறி விடாது. இதற்கு என்ன அர்த்தம் என்றால், நான் உங்களுடைய பொம்மலாட்ட பொம்மையும் அல்ல, நீங்கள் என் சூத்ரதாரியும் அல்ல.

ஆனால் சுஜாதாவைப் போல் பாலகுமாரனின் எழுத்துக்குள் என்னால் செல்ல முடியவில்லை. பாலாவின் எழுத்தில் இருந்த ஏதோ ஒரு பழமையின் தாக்கம் என்னை அதற்குள் அனுமதிக்கவில்லை. சுஜாதாவும் பாலகுமாரனும் இரு வேறு துருவங்களாக இருந்தார்கள். நான் சுஜாதாவின் பக்கம் இருந்தேன். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை நெருங்க மாட்டேன். தினமுமே அவரை நான் மாலையில் மெரீனா கடற்கரையில் பார்ப்பேன். வாக்கிங் முடிந்து நான் கதீட்ரல் ரோட்டில் காப்பி குடிக்கப் போனால் அங்கேயும் வடை பஜ்ஜியோடு காப்பி குடித்துக் கொண்டிருப்பார். இந்த வடை பஜ்ஜி வீட்டுக்குத் தெரியாது என்று பத்திரிகையில் எழுதியிருந்தார். ஒருநாளும் நான் அவரோடு பேச முற்பட்டதில்லை.  ஆனால் பாலாவின் கதை அப்படி அல்ல. அவர் பேசின முதல் வார்த்தையிலேயே ஒரு வாத்சல்யம் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. “உன் நாவல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் சாரு.” அட்டகாசமாகச் சிரித்தபடி மந்தைவெளி நார்ட்டன் ரோடு ஓரத்தில் நின்று சொன்னதை என்னால் மறக்க முடியாது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு பழமைவாதி என்று நினைத்துக் கொண்டிருந்த மனிதர் என் நாவல் பிடிக்கும் என்கிறார். ஆனால் நவீனவாதி என்று நினைத்த மனிதர் என் எழுத்தை மலம் என்று திட்டுகிறார். அதை விடுங்கள், பாலா என்னை அந்நியோன்னியமாக ”நீ” போட்டுப் பேசியதே என்னைக் கவர்ந்து விட்டது. அதன் பிறகு ரோட்டில் என்னைப் பார்க்கும் போதும், நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சியின் போதும் (நடப்பதாக பேர் பண்ணுவார், அவ்வளவுதான்!) அரை மணி நேரத்துக்குக் குறையாமல் பேசி விடுவோம். என் நாவல்கள் பிடிக்கும் என்று அவர் ஒன்றும் சும்மா சொல்லவில்லை. உள்ளே புகுந்து புறப்பட்டுப் பேசுவார். ”ஒத்தனுக்குக் கூட இந்தத் துணிச்சல் கிடையாது சாரு, என்னையும் சேர்த்தே சொல்கிறேன். நீ தனிதான். ஆமாம், நான் உன்னை வீட்டுக்குக் கூப்பிட்டேனே, ஏன் வரவேயில்லை… வா… வா… உனக்குப் பிடிக்கும்…”

மேலே உள்ள வரிகள் சாரு பாலகுமாரனை பற்றி எழுதியுள்ள கட்டுரையின் ஒரு சின்ன பகுதி மட்டுமே. அந்த கட்டுரையை முழுமையாய் வாசிக்க வேண்டும் எனில் அவருடைய இணைய பக்கம் சென்று படித்துக் கொள்ளுங்கள். அதற்கான இணைய சொடுக்கினையும் பின்னூட்டத்தில் கொடுக்கிறேன். இன்னுமுமே நிறைய எழுத வேண்டுமென நினைத்தேன், அன்றாட வேலை பளு கொஞ்சம் அதிகமாகவே படுத்துகிறது. அதனால் முழுமையாய் எழுதமுடியவில்லை. ஆனால் அடுத்தடுத்த கட்டுரைகள் கண்டிப்பாக நான் ஏன் சாருவை நேசிக்கிறேன், அவர் பக்கம் நிற்கிறேன் என்பது பற்றியதாகத் தான் இருக்கும். ஏற்கனவே எழுத வேண்டும் என யோசித்து வைத்த தலைப்புகளை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு, ரொம்ப நாளாக சாருவை பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்ததை இந்த தருணத்தில் எழுதுவது தான் சரியாக இருக்குமென்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. அதனால் இதன் தொடர்ச்சி அடுத்தடுத்த இரண்டு கட்டுரைகளில் கண்டிப்பாக இருக்கும், சரி விஷயத்திற்கு வருவோம், மேலே சொல்லியுள்ள சாருவின் வரிகளை படித்த பிறகும் கூட, அவரை பற்றிய உங்களின் ஈரவெங்காய புரிதல் மகா மட்டமாக சாருவின் மீது சேற்றை வாரி இறைக்கும் மனநிலையில் தான் இருக்கும் எனில், உங்களை பற்றி பேச “ஒன்றுமே” இல்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை…மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *