வாழ்ந்து பார்த்த தருணம்…139

அதகளம் + அறிமுகம் = சாரு

போன கட்டுரையில் சொல்லியது போல், இது, ஒரு எழுத்தாளர், ஆசான் மற்றும் பலவாறாக என் வாழ்வில் பங்காற்றியிருக்கும் சாரு என்கிற சாரு நிவேதிதா எனக்கு எப்படி அறிமுகமானார். அவர் மீதான என்னுடைய மதிப்பும் காதலும் ஏன் தனித்துவமானது என்பதை பற்றியது. எனவே, சாரு என்கிற பெயரே எனக்கு ஆகாது என்பவர்கள், இந்த கட்டுரையை முற்றிலும் தவிர்த்து விடலாம். இல்லை, சாருவைப் பற்றி உங்களின் பார்வையை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். முன்னரே இதனைச் சொல்லக் காரணம். உங்களின் பொன்னான நேரத்தை மற்ற உபயோகமான, உருப்படியான வகைகளில் செலவழிக்கலாம் இல்லையா அதனால் தான். சரி இப்பொழுது விஷயத்திற்குள், என் வாழ்வில் வாசிப்பு என்பது தோராயமாக இருபத்தைந்து வருடங்களாக தொடர்கிறது. வாசிப்பின் தொடக்கம் குமுதம், ஆனந்த விகடனில் ஆரம்பித்து, ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலில் தொடர்ந்து, இந்திரா செளந்தராஜனில் நகர்ந்து, எஸ்.ராவினை வாசித்ததின் வழியே இலக்கியம் என்கிற வகைமைக்குள் வந்தடைந்தது. அதன் பின் வாசிப்பின் மீதானப் பார்வையே மாறிவிட்டது. இது தான் என்னுடைய வாசிப்பின் வழியே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் பயணத்தின் சிறிய முன் கதை சுருக்கம். என்னளவில் பொதுவாக ஒரு எழுத்தாளர் வாசகனுக்கு அறிமுகமாவது, ஏதாவது ஒரு புத்தகத்தின் வழியாகவோ அல்லது யாராவதுப் பரிந்துரைப்பதின் வழியாகவோ இருக்கும். அந்தப் பரிந்துரை கூட பல நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தின் வழியாக இருக்கும். இப்படித்தான் எஸ்.ரா, ஜெயமோகன், பா.ராகவன், ஆர்.அபிலாஷ், அம்பை, ஜெயகாந்தன், நகுலன், கி.ஜானகிராமன் என்கிற இந்த பட்டியல் சற்றே நீநீநீளமானது. ஆனால் எனக்கு சாரு அறிமுகமான கதையே வேறு. அப்படி எனக்கு அறிமுகமானப் புள்ளியில் இருந்து இன்று வரை பல சந்தர்ப்பங்களில் என்னை ஆச்சர்ய படுத்திக் கொண்டே இருப்பவர் சாரு. அப்படியானால் அதற்கு முன் சாரு என்கிற ஒருவரைப் பற்றி உனக்குத் தெரியவே தெரியாதா என்றால் தெரியும். அது எப்படியெனில், எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நண்பர்கள் வட்டத்துக்குள் சாருவைப் பற்றி பேச்சு வருகையில், அவரைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துக்கள் எதுவுமே, இங்கே அச்சில் ஏற்ற முடியாதவை. சாருவே சொல்கிறார் இல்லையா, ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சலாவது என்னுடைய குடும்பத்தை முதற்கொண்டு கேவலப்படுத்தி, அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு வசையாக பொழிந்து எழுத்தப்பட்டு வருகின்றன என்று, அப்படித் தான் என் நட்பு வட்டத்தால் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்பொழுது எல்லாம் இவ்வளவு கேவலமான நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தும் இவனுடைய புரிதல் என்ன லட்சணத்தில் இருக்குமென யோசித்திருக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்பு திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், திரைத்துறையில் மிக முக்கியமான, புகழ்பெற்ற ஒரு தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம், பொதுவாகத் திரைப்படத்தில் வேலை செய்யும் உதவி இயக்குநர்களுக்கும், அதே திரைப்படத்தில் வேலை செய்யும் உதவி ஒளிப்பதிவாளர்களுக்கும் ஒரு இணக்கமான நட்பு இருக்கும். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு பணிகள் முடிந்து கிளம்பும் முன், ஒரு சிறிய கலந்துரையாடல் ஓடும், இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில், ஒரு நாள் அந்தத் தயாரிப்பாளரின் அலுவலகத்துக்கு ஏதோ ஒரு வேலை நிமித்தமாக உதவி இயக்குநர்களும் வந்திருந்தார்கள், ஒளிப்பதிவாளர் குழுவும் போயிருந்தோம். போன வேலை சீக்கிரமே முடிந்து விட்டது. அதனால், அந்த அலுவலகத்திற்கு வெளியே இருக்கும் பெரிய ரோட்டின் முனையில் நின்று, உதவி இயக்குந நண்பர்களும், எங்களுடைய உதவி ஒளிப்பதிவாள நண்பர்கள் குழுவும் உலகத் திரைப்பட விமர்சனங்கள், அந்த இயக்குநரின் திரைப்படம் இப்படி, இந்த இயக்குநரின் திரைப்படம் அப்படி, அந்தத் திரைப்படத்தை இப்படி எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் எனத் தொடங்கி, நாம் தான் தமிழ் திரைத்துறையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பன உட்பட, பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றி பிரித்து மேய்ந்து கொண்டிருந்தோம். அந்தப் பிரித்து மேய்தல் கொஞ்சமே கொஞ்சமாய் வாசித்தலின் பக்கம் திரும்பியது. யார், யார் என்னனென்ன வாசித்துக் கொண்டிருக்கிறார்கள், யார், யாரை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கையில், ஒரு உதவி இயக்குந நண்பன், தான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைப் பற்றி ஒரு சம்பவம் சொன்னான். அந்தச் சம்பவம் தான், சாரு என்கிற ஒருவரைப் பற்றி மிக முக்கியமான அறிமுகத்தை, ஒரு வித ஆர்வத்தை என்னுள் தூண்டிய சம்பவம்.

அந்த சம்பவம் இது தான், இனி இந்த உதவி இயக்குந நண்பனின் வார்த்தைகளிலேயே, அந்தப் புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன், (அந்த நண்பன் சொன்ன புத்தகத்தின் பெயர் என்னுடைய நினைவடுக்குகளில் இல்லை, அதனால் மன்னிக்கவும்), அப்படி வாசித்துக் கொண்டிருக்கையில் ஒரு குறிப்பிட்டப் பக்கம் வந்தவுடன் ஒரே ஒரு வார்த்தை திரும்ப, திரும்ப இரண்டு பக்கம் முழுமைக்கும் இருந்தது. எனக்கு ஒரே ஆச்சர்யம் ஒரே ஒரு வார்த்தை ஏன் திரும்ப, திரும்ப பக்கம் முழுவதும் சொல்லப்பட வேண்டும் என யோசித்தேன், அதன் பின் மனதில் ஏதோ ஒன்று தோன்ற, எத்தனை முறை அந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது என எண்ண ஆரம்பித்துவிட்டேன். (எத்தனை முறை எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் சொன்னான், அந்த எண்ணிக்கையும் என்னுடைய நினைவடுக்குகளில் இல்லை), அப்படி எண்ணி முடித்துவிட்டு, அடுத்தப் பக்கத்தை திருப்பினால், ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. அடுத்தப் பக்கத்தில், போன பக்கத்தில் எழுதியிருந்த வார்த்தை எத்தனை முறை எழுதப்பட்டிருக்கிறது என எண்ணியவர்கள், இதற்கு மேல் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டாம் எனச் சொல்லப்பட்டிருந்தது என சொல்லிய அந்த இயக்குந நண்பன், அதன்பின் சொல்லியது தான் அதகளமே. ஒரு எழுத்தாளன் எந்த அளவு ஒரு வாசகனின் மனநிலையை உள்வாங்கி இருந்தால் இப்படி எழுதியிருக்க முடியும் என சிலாகித்துச் சொன்னான். அந்த நேரம், அந்த நொடி எனக்கு உடனடியாக சாருவை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும், அவருடன் கண்டிப்பாக உரையாட வேண்டுமென தோன்றியது. இதைப் பற்றி இவ்வளவு சொல்லும் நீ அந்தப் புத்தகத்தை தேடிப் படிக்கவில்லையா என்றால், இல்லை என்பது தான், நேரடியான நேர்மையான பதில். ஆனால் அவரின் சில புத்தகங்களையும், அவரின் இணைய வெளி எழுத்துக்களையும் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி வாசித்ததில் எது என்னை அவரை கண்மூடித்தனமாக நேசிக்க வைத்தது என்பதை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளில் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு சின்ன இசைக்கோர்வைப் பாடல் ஒன்று, குறிப்பாக அதில் வரும் பெண்ணின் குரல் என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலைப் பற்றி, அந்த பாடலைப் பற்றி, அதன்பின் பசியைப் பற்றி ஒரு முக்கியமான விஷயமும் எழுதவேண்டியிருக்கிறது, (பசியை பற்றி தொடர்ந்து எழுதுவதற்கும் சாருவின் எழுத்தே அடிப்படைக் காரணம்) இது இரண்டையும் முடித்தவுடன் சாருவை பற்றிய இந்த கட்டுரையின் தொடர்ச்சி தொடரும்…

கடைசியாக :
இன்றைய நாட்களில் வாசித்துக்கொண்டிருப்பது, சாருவின் நான் தான் ஒளரங்கசீப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன், அவருடைய இணையப் பக்கத்தையும், அதுவும் போக, ஒஷோவின் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகளும் வாசிப்பு ஓடிக்கொண்டிருக்கிறது, மற்றும் முகமூடிகளின் பள்ளத்தாக்கும், ராஸலீலாவும் வாங்கி வைத்திருக்கிறேன் இன்னும் வாசிக்க தொடங்கவில்லை, மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *