வாழ்ந்து பார்த்த தருணம்…140

முன்குறிப்பு :
இது கொஞ்சமே கொஞ்சம் நீளமான கட்டுரை, அதனால் எப்பொழுதும் சொல்வது தான், உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள், தவிர்த்து விடலாம், மகிழ்ச்சி…

பசித்திருக்கும் கரங்கள்…

சுமார் பதினேழு அல்லது பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இருக்கலாம் என நினைக்கிறேன். அப்பொழுது உணவுத்துறை சார்ந்தப் பணியில் இருந்த நேரம், அந்த வருடத்தின் என்னுடையப் பிறந்தநாளுக்கு சில நாட்கள் முன்னதாக நண்பன் ஒருவனிடம் இரவுப் பணியெல்லாம் முடித்துவிட்டு இயல்பாக ஒரு உரையாடல் ஓடிக் கொண்டிருந்தது. பேச்சின் இடையே நண்பன் கேட்டான், உன்னுடைய பிறந்தநாளுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று, என்னுடைய பதிலில் புத்தாடை இனிப்புகள் என வழக்கமானதாக சொல்லிக்கொண்டே வந்தேன். அவன் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை, எனக்குள் ஒரு சின்ன குறுகுறுப்பு, என்ன செய்யப் போகிறாய் என அவன் கேட்டதற்குப் பின்னால் எதோ ஒன்று இருக்கிறது என என் மனதினுள் தோன்றியது. உடனே அவனிடம் நீ உன் பிறந்தாளுக்கு என்ன செய்வாய் எனக் கேட்டேன். அவன் கடந்த பல வருடங்களாக என்னுடையப் பிறந்தநாளுக்கு இரத்தம் தானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்று சொன்னான், எனக்கு உடனே என் மூளைக்குள் யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பது போல் இருந்தது. எனக்கு அவனுடைய பதிலில் இருந்து வெளிவர வெகு நேரம் ஆனது. காரணம் அது வரை அப்படி ஒரு கோணத்தில் என்னால் யோசிக்க முடிந்ததே இல்லை. அந்த நொடி அவனைப் பார்க்கையில் ஒரு வித பொறாமையாக இருந்தது. உடனே அவனிடம் நீ இரத்த தானம் கொடுப்பதாக இருந்தால் எந்த மருத்துவமனைக்கு செல்வாய் எனக் கேட்டேன். அப்பொழுது பணியிலிருந்த ஊரில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சொன்னான். அதன் பின் என்னுடைய பிறந்தநாள் அன்று அந்த நண்பனை அழைத்துக் கொண்டே, அந்த மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்துவிட்டு வந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக இரத்த தானம் செய்தது அப்பொழுது தான். அன்றைக்கு இரத்தம் கொடுத்து விட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வருகையில், அழுகையும், மகிழ்ச்சியும் கலந்த ஒருவிதமான மனநிலையில் இருந்தேன். அந்தத் தருணத்தில் என்னை அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்த நண்பனை அப்படியே அணைத்துக் கொண்டேன், அந்த நண்பனின் பெயர் கண்ணதாசன்.

சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக முதன் முதலில் இரத்த தானம் கொடுத்த அந்த நிகழ்வு தான், என் வாழ்வில் பல விஷயங்களை பார்க்கும் கோணத்தை மாற்றியது எனச் சொல்லலாம். அதன் பின் தொடர்ந்து இரத்ததானம் செய்து கொண்டிருந்தேன். அப்படியான நேரங்களில் என் கண்முன்னே நிகழ்ந்த பல சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகப் பெரும் படிப்பினைகள். இந்த வாழ்வின் அர்த்தத்தை புரிய வைத்தவைகள், அதனைப் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும். எழுதுகிறேன். முதன் முதலில் இரத்த தானம் கொடுத்த அந்த முதல் புள்ளியில் இருந்து தொடங்கிய மாற்றம், இன்று வரை பல்வேறு நிகழ்வுகளாக என்னுடைய வாழ்வெங்கும் பயணித்த படி வந்து கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக என்னுடைய குடும்பத்தினர்களில் இறந்தவர்களின் நினைவு நாளில் அப்பொழுது வசித்துக் கொண்டிருக்கும் ஊரில் உள்ள ஏதாவது ஆதரவற்ற இல்லத்திற்கு உணவு கொண்டு சென்று அன்றைய நாளை அவர்களோடு கழிப்பதை வாடிக்கையாக மாற்றிக் கொண்டிருந்தேன். அப்புறம் என்னுடைய மகள் பிறந்த பிறகு, அவளுடையப் பிறந்த நாளை அப்படியான இல்லத்திற்குச் சென்று அன்றைய நாளை அங்கேயே கழிப்பது வழக்கமானது. இப்படி போய்க் கொண்டிருக்கையில், கடந்த இரண்டு வருடமாக சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை இங்கே விளக்கிச் சொல்லத் தேவை இல்லை. இந்த நிலையில் இந்த வருடம் மகளின் பிறந்தநாளுக்கு வீட்டிலேயே எத்தனை பேருக்கு நம்மால் முடியுமோ அத்தனை பேருக்கு மட்டும் சமைத்து எடுத்துச் சென்று, பிறந்த நாளுக்கு காலையில் ஆலயம் செல்லும் போது கொடுத்துவிடலாம் என தீர்மானித்து மகளின் கைகளாலேயே கொடுத்துவிட்டும் வந்தோம். இந்த நிகழ்விற்குப் பிறகு வீட்டில் இருப்பவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள், ஏன் குறிப்பிட்ட நாளில் மட்டும் கொடுக்க வேண்டும், எப்படியும் தினமும் அன்றாடப் பணிகளுக்காக வெளியில் செல்கையில் மதிய உணவை கூடவே எடுத்துச் செல்வது வழக்கம், அதே வழக்கத்தோடு தினமும் நீங்கள் வெளியில் செல்லும் போது நீங்கள் செல்லும் வழியில் ஒருவருக்கு உணவை கொடுத்து விட்டுப் போங்கள் எனக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் கிடைக்கும் அனுபவம் இருக்கிறது இல்லையா அப்படியான ஒவ்வொரு அனுபவமும் விலை மதிக்க முடியாதது.

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு பசங்க என்றொரு திரைப்படம் வெளியானது இல்லையா, அதில் ஒரு முக்கியமான காட்சியில், படத்தின் பிரதான நாயகன் ஏதோ ஒரு முயற்சியில் தோல்வியடைந்து விரக்தியான மனநிலையில் இருப்பான். அப்பொழுது அவனோடு இருக்கும் நாயகி அவன் சட்டைப் பையில் இருந்து ஒரு 20 ரூபாயோ 50 ரூபாயோ எடுத்து அவர்கள் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் ஒரு பாட்டியை அழைத்துக் கொடுப்பாள். பின்னர் நாயகனைப் பார்த்து, இந்தப் பாட்டி அவருடைய பிள்ளைகளால் கைவிடப்பட்டு தெருவில் வசிக்கிறார். என்னால் முடிந்த போது அவருக்கு உதவி செய்வேன். அதன் வழியே என்னுடைய கவலைகளிலும் இருந்து வெளிவருவேன் எனச் சொல்வாள். எனக்கு மிக மிகப் பிடித்தமான நெருக்கமான காட்சி அது. இங்கே நம்மைச் சுற்றி அப்படியானவர்கள் நிறையவே உண்டு. ஆனால் நாம் தான் இந்த வாழ்வின் ஓட்டத்தில் அப்படியானவர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. காரணம், இன்று காரணமே இல்லாமல் நம்முடைய பசியையே, நாம் மதிக்காத போது மற்றவர்களின் பசியைப் பற்றி நமக்கு எப்படித் தெரியும். வாய்ப்பேயில்லை. ஒரு காலத்தில் பிள்ளைகள் எல்லாம் அப்படிப் பெற்றோரை கைவிட மாட்டார்கள். சும்மா உழைக்க மனமில்லாமல் பிச்சை எடுக்க வந்து விட்டார்கள் என கூசாமல் சொல்லியிருக்கிறேன். ஆனால் இதெல்லாம் என் அருகில் நடக்காத வரை தான். ஒரு நாள் என் குடும்பத்துக்கு மிக, மிக நெருக்கமான ஒரு தாய்க்கே அப்படியொரு நிலை வந்து போது, அந்த அதிர்வில் இருந்து மீள எனக்கு நெடுநாட்கள் ஆனது. ஒரே மகன், அப்பா கிடையாது, பார்த்து பார்த்து வளர்த்தார் அந்தத் தாய், அந்த மகனுக்கு மணமுடித்த சிறிது நாட்களிலேயே, இந்த தாய் தெருவில். அந்தத் தாயையும் தெரியும், அந்த பையனையும் தெரியும், என்னால் அதனை நம்பவே முடியவில்லை. தற்பொழுது அந்தத் தாய் மகனோடு இல்லை. மகன் சகலவசதிகளுடன் நல்ல வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இந்த தாய் ஒரு ஆசிரமத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கிறார். இடையிடையில் எங்கள் வீட்டுக்கு வருவார். அலைப்பேசியில் அழைத்துப் பேசுவார், மகனைப் பற்றி மூச்சு விடமாட்டார், நாங்களும் கேட்பதில்லை. இன்று ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் அப்படியானவர்களைத் தான் சந்தித்து கொண்டிருக்கிறேன். உணவளித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்படி இன்று காலை செல்லும் வழியில் சரியாக கவனிக்க வில்லையா, இல்லை யாருமில்லையா எனத் தெரியவில்லை, அன்றாடப் பணிக்காக நான் செல்ல வேண்டிய இடத்தை அடைகிற வரை இன்று கொடுக்க வேண்டிய உணவுப் பொட்டலம் என்னுடைய இரு சக்கர வாகனத்தை மேலே அப்படியே இருந்தது. என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில், நான் செல்ல வேண்டிய வழிக்கு எதிரில் இருக்கும், ஒரு நீண்ட சாலையினுள் வண்டியைச் செலுத்தினேன், அது ஒரு தொடர்வண்டி நிலைய அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்கள் இருக்குமிடம். அதன் உள்ளே செல்லும் முனையில் ஒரு வங்கியின் பணம் வழங்கும் இயந்திரம் இருக்கும் இடம் இருக்கிறது. அதன் அருகே ஒரு வயதான மூதாட்டி அமர்ந்திருந்தார், உள்ளே செல்லும் போது அவரை சரியாக கவனிக்கவில்லை. உள்ளே கொஞ்ச தூரம் போய் யாரும் இல்லாமல் திரும்பிக் கொண்டிருக்கையில் தான் அவரை தொலைவில் இருந்தே கவனித்து விட்டேன். அவரை நோக்கி வாகனத்தை செலுத்தி, அவர் அருகாமையில் போய் நடைப்பாதைக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி போய் உணவை அவரது கைகளில் கொடுக்கலாம் என யோசித்த படி வண்டியை நிறுத்துகையில், அந்த மூதாட்டி அவரை நோக்கித் தான் நான் வருகிறேன் எனக் கணித்தவர், நான் வண்டியை விட்டு இறங்கும் முன்னே என் அருகில் வந்துவிட்டார். நானும் பொதித்து வைத்திருந்த உணவு பொட்டலத்தை அவரின் நடுங்கும் கரங்களில் கொடுத்த அந்த நொடி மனதிற்குள் என்னவெல்லாமோ ஓடியது. அவர் தன்னுடைய கரங்களில் அந்தப் பொட்டலத்தை வாங்கிய நேரம் அந்த மூதாட்டியின் மிருதுவான கரங்கள் என் கைகளில் பட்டது இல்லையா, அந்த நொடியை என்னவென்று சொல்ல, அப்படியே என்னை கட்டுப்படுத்தி கண்கள் கலங்கிவிடக் கூடாது என உறுதியாக இருந்தேன். எல்லாம் என் வண்டியை சொடுக்கும் வரை தான், வண்டியை சொடுக்கிவிட்டு அவரை நிமிர்ந்துப் பார்த்தேன் அவரின் நடுங்கும் அந்த மிருதுவான கரங்களால் என்னை கையெடுத்துக் கும்பிட்டார். என்னால் என் கண்கள் பனிப்பதை தடுக்கவே முடியவில்லை. இதனைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்த நொடி கூட என் கண்கள் குளமாவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நம்முடைய குடும்பரீதியிலான, எத்தனையோ கொண்டாட்டங்களுக்கான நாட்கள் வருகின்றன, நாமும் அது மாதிரியான கொண்டாட்டங்களுக்கு, யாரை அழைக்கலாம், யாரை அழைக்க வேண்டாம் என்கிற பெரிய பட்டியல் தயாரித்து, அழைக்க வேண்டியவர்களை மட்டும் அழைத்து, கொண்டாடித் தீர்ப்போம், அப்படியான கொண்டாட்டங்களின் பெயரைச் சொல்லி உணவையும் தாராளமாக கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் வீணாக்குவோம். ஆனால் அப்படி வெறும் பட்டோபமான கொண்டாங்களுக்கும், அதில் வீணாக்கப்படும் உணவுகளுக்கும் இடையில் வாழும் இந்த சமூகத்தில் தான், பசித்திருக்கும் கரங்களும் நீண்டு கொண்டே இருக்கின்றன. கொண்டாட்ட கூத்தில் அப்படியான கரங்கள் நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. உங்களால் முடிந்தால் அப்படியான பசித்திருக்கும் கரங்களில் உணவை கொடுத்துப் பாருங்கள், அந்த நொடி ஒவ்வொரு கரங்களுக்குள்ளும், கண்களுக்குள்ளும் பரவும் நன்றி உணர்விற்கு இணையான ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை. மகிழ்ச்சி….

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *