வாழ்ந்து பார்த்த தருணம்…147

உரையாடலற்ற கடவுளின் வெளி…

மிக முக்கியமான வழிபாட்டு நேரத்தில் ஒரு ஆலயத்தினுள் இருக்கிறீர்கள், அந்த நேரத்தில் கடவுள் வழிபாட்டை செய்பவர் எந்த மொழியில் அதனை நடத்த வேண்டும் என நினைக்கிறீர்கள், யோசியுங்கள். கடந்த மாதம் ஒரு சிறு பயணம், ஒரு முக்கியமான சந்திப்பிற்காக ஒரு மணி நேரம் பயண தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூருக்கு செல்ல வேண்டி இருந்தது, அதிகாலையே கிளம்பி விட்டோம், போகும் வழியில் காலை உணவையெல்லாம் முடித்துவிட்டு, சேர வேண்டிய இடத்தை காலை 8:30மணிக்கு எல்லாம் அடைந்து விட்டோம். ஆனால் நாங்கள் சந்திக்க வேண்டிய நபரின் அலுவலகம் 10மணிக்கு தான் திறக்கும் எனச் சொல்லிவிட்டார்கள். சரி என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில், கூட வந்திருந்த ஒருவர் அருகில் ஒரு ஆலயம் இருக்கிறது அங்கு சென்று வரலாம் எனச் சொன்னார். சரி என கிளம்பி விட்டோம். வரும் போதே அந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார். சந்திப்பு முடிந்த பின் போய் வரலாம் என நினைத்திருந்தோம். ஆனால், நேரம் வேறு விதமாக முடிவெடுத்தது, சரி என ஆலயத்திற்கு போனால், அது ஒரு சிவ ஆலயம். ஒரு சின்ன கல் குன்றின் மேல் அமைந்திருந்தது. குன்று எனச் சொல்லக் காரணம், அது மலையும் அல்லாது சமதளமும் அல்லாது ஒரு 30 அல்லது 40 அடி உயர கல் குன்றின் மேல் இருந்தது தான். கீழிலிருந்து மேல் நோக்கி ஏறுகையில் கவனித்தால், அந்த குன்று, அதன் மேல் இருந்த அந்த கோவில், அதன் பின்னனியில் எவ்விதமான கட்டிடங்களும் இல்லாத நீல வானம் என அட்டகாசமாக இருந்தது. அதனை எல்லாம் ரசித்துக் கொண்டே கோவில் வாசலை அடைந்தால், கோவிலின் பிரதான வாயில் அடைக்கப்பட்டிருந்தது, காலை எட்டு மணிக்கெல்லாம் வர வேண்டிய கோவில் அர்ச்சகர் இன்னும் வரவில்லை, அப்பொழுது அங்கிருந்த நபர் ஒருவர் சாமி இப்ப வந்திருவார், பக்கதுலப் போயிருக்கார், நீங்க பின்னாடி போய் சுத்திட்டு வாங்க அதுக்குள்ள வந்திருவார் எனச் சொன்னார்கள்.

கோவிலுக்கு பின்புறம் ஒரு அற்புதமான தாமரைக் குளம் இருக்கிறது. அதனையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என கூட வந்திருந்தவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். அதனால் யோசிக்காமல் கோவிலுக்கு பின்னால் இருக்கும் தாமரை குளத்திற்குப் போனால், அந்த குளம் மிக அட்டகாசமாக இருந்தது, முதன் முறையாக இந்த கோவிலுக்கு வருவதால், அந்த குளத்தைப் பார்த்ததும் மனம் குதூகலித்தது, இதற்கு முன்னால் பல தாமரை குளங்களை பார்த்திருக்கிறேன் என்றாலும், அது எல்லாமே கோவிலின் பக்கத்தில் இருக்கும், அதுவும் போக படிகள் எல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட குளமாகவோ இல்லை, எதாவது கிராமத்திற்கு பக்கத்தில் இருக்கும் தோண்டப்பட்ட குளமாகவோ இருக்கும், இது அப்படி இல்லை. கல் குன்றில் மேல் இயற்கையாக உருவானது. மழை பொழியும் நீர் அப்படியே அந்த குன்றின் மேல் இருக்கும் ஒரு பெரிய பள்ளத்தினுள் விழுந்து குளமாக இருக்கிறது. இங்கே படியெல்லாம் கிடையாது, கால் நனைக்க வேண்டுமெனில், கொஞ்சம் இறங்க வசதியாக, சரிவாக இருக்கும் இடத்தில் மட்டுமே இறங்கி கை, கால்களை நனைத்துக் கொள்ள முடியும். அந்தக் குளத்தில் இருக்கும் தண்ணிரைத் தான் அருகில் இருக்கும் கிராமத்து மக்கள் குடிதண்ணீராக பயன்படுத்துகிறார்கள். நாங்கள் போன சமயத்தில் நிறைய பெண்களும் சில ஆண்களும் அந்த குளத்தின் தண்ணீரைக் குடங்களில் சுமந்து செல்வதை பார்க்க முடிந்தது. ஒரு சிறு கல் குன்று, அதன் மேல் ஒரு சிவ ஆலயம், பின்னால் தாமரைக் குளம் பின்னனியில் ஏகாந்த வானம், மக்கள் நடமாட்டமும் வெகு குறைவு. அதனால் பெரியதாக சத்தம் ஏதுவுமில்லாத அமைதி என அந்தக் காலை பொழுது அட்டகாசமாக இருந்தது. நிறுத்தி நிதானமாக தாமரை குளத்தை சுற்றி சுற்றி வந்து என்னுடைய அலைப்பேசியில் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தேன். நேரம் கடந்ததே தெரியவில்லை. கிளம்பும் நேரம் வந்தவுடன், அப்படியே கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு கிளம்பி விடலாம் என எழுந்தால், சாமி வந்துட்டார் கோவில் நடை திறந்தவிட்டார்கள் எனச் சொல்லப்பட்டது.

இன்னொரு விசயமும் இருக்கிறது கொஞ்சம் வெயில் ஏறிவிட்டால் அந்த தாமரை குளத்தின் அருகில் உட்கார்ந்து இருப்பது கஷ்டம், ஒன்று காலை வெயில் ஏறுவதற்கு முன்னதாக அல்லது மாலை அந்த தாமரை குளத்தின் கரையில் வந்து அமந்தால் கண்டிப்பாக நேரம் போவது தெரியாமல் மனம் லேசாவதை உணர முடியும். நாங்கள் திரும்பி வரும் போது கோவிலின் நடை திறந்திருந்தது. கோவிலுக்குள் சென்றோம் அர்ச்சகர் வந்திருந்தவர்களின் கைகளில் வைத்திருந்த பூமாலைகள் மற்றும் தேங்காய் பழங்களை வாங்கி விட்டு கருவறைக்குள் சென்றார், சத்தமில்லாமல் தீப ஆராதனை காட்டி வெளியே வந்தார், மந்திர உச்சாடனைகள் ஏதுமில்லை, எனக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. இவை எல்லாம் அர்ச்சகர் வெளியே வந்து வேறு ஒரு பக்தரிடம் உள்ளிருந்து கொண்டு வந்த மாலையை கொடுக்கும் வரை தான். அதன் பின் பார்த்தது தான் சுவாரஸ்யமான திருப்பமே, அது என்னவெனில், மாலையைக் கொடுத்தவரிடம் அர்ச்சகர் சைகையில் பேசுவதை கவனித்த பிறகு தான் தெரிந்தது, அர்ச்சகர் பேச்சுத் திறன் இல்லாதவர் என்பது. அந்த அர்ச்சகர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வந்திருந்த பக்தரிடம் சைகையில் பேசிக் கொண்டிருந்தை பார்வையை விலக்க மனமில்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த நொடி மனத்திற்குள் தோன்றி மறைந்ததை இங்கே வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அர்ச்சகரையே பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே திரும்பி கருவறைக்குள் இருந்த இறைவனை இரு கை கூப்பி வணங்குகையில் கண்களில் நீர் கசிந்தது. சில நேரங்களில் நாம் ஏன் உணர்வுகளால் உந்தப் படுகிறோம் என்பதற்கு காரணம் எல்லாம் சொல்லி விளக்கிட முடியாது. அது ஒரு நிலை அவ்வளவே. அந்த அர்ச்சகர் வந்திருந்தவரின் வேண்டுதலை ஒவ்வொன்றாக கேட்டு அதனை செய்தபடி இருந்தார், அங்கிருந்தது பேரமைதி மட்டுமே. இங்கு கடவுளிடம் என்ன மொழியில் பேச வேண்டும் என்பதை பற்றிய மிகப் பெரிய விவாத மேடைகளும் அதற்காக அடுக்கடுக்கான காரணங்களும் நம்முன்னே அடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதை எல்லாம் தாண்டி, என் கண்முன்னே வேறு ஒன்று அற்புதமாக அந்த கடவுளால் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் கடவுளை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதில் தான் எல்லாமே இருக்கிறது. நமக்கும் கடவுளுக்கான தூரத்தை எது முடிவு செய்கிறது அல்லது யார் முடிவு செய்கிறார்கள்? அதையும் தாண்டி நமக்கும் கடவுளுக்குமான தூரம் என்கிற ஒன்று இருக்கிறதா, அப்படியெனில் அந்த தூரத்தை கடந்து கடவுளை அடைய யாரெனும் நமக்கு நடுவில் வர வேண்டுமா, இவை எல்லாம் கடந்து கடவுள் நமக்குள் இருக்கிறாரா இல்லை நாமே கடவுளா, கேள்விகள், கேள்விகள், கேள்விகள் யோசியுங்கள் தெளிவான விடை கிடைக்காமாலா போகும். கண்டிப்பாக கிடைக்கும். விடை என்றுமே நம் தேடலில் தான் இருக்கிறது. தேடல் என்றுமே என்னை சலிப்படைய வைத்ததே இல்லை. தேடல் தான் ஒருவனை எப்பொழுதும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *