வாழ்ந்து பார்த்த தருணம்…149

வந்து…

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக எதுவுமே எழுதவில்லை. இரண்டு காரணங்கள் ஒன்று கணினி தட்டச்சுப் பலகையில் பிரச்சனை. அதனை சரி செய்ய தாமதமாகி விட்டது. இரண்டாவது எழுதுவதற்கான சூழல், எழுத வேண்டும் என உட்கார்ந்தால் குறைந்தது மூன்று மணி நேரங்களை அது முழுமையாய் எடுத்துவிடும். எழுதிக் கொண்டிருக்கும் அந்த மூன்று மணி நேரங்களும் வேறு இடையூறு இல்லாமல் இருத்தல் நலம். அன்றாட பணிகளுக்கான சூழல் அந்த மூன்று மணி நேரத்தை எனக்குக் கொடுக்காமல் கொன்று எடுத்துவிட்டது. எழுதாமல் இருக்க காரணம் தேடக் கூடாது தான். என்ன செய்ய இனி இடையூறுகளுக்கும் பழகி எழுத வேண்டும் என நினைக்கிறேன், காரணம் சாரு எழுதுவதற்கு உகந்த நேரம் எது என இந்த மாதம் ஐந்தாம் தேதி அவரின் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார். கண்டிப்பாக போய் வாசியுங்கள். சாரு எழுதியிருப்பதைப் பார்க்கும் போது என்னயெல்லாம் எதைக் கொண்டு அடிப்பது என எனக்கே தெரியவில்லை. இனிமேலாவது எழுதாமல் இருக்க காரணம் சொல்லாமல் தொடர்ந்து எழுத வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். இப்படி பொது வெளியில் எழுதிய பிறகாவது எனக்கே எனக்கு அறிவு வருகிறதா எனப் பார்க்கலாம். சரி காரணப் புராணம் போதும். இப்பொழுது விஷயத்திற்குள், வர வர எனக்கு வந்து என்கிற வார்தையைக் கேட்டாலே பல நேரங்களில் மிகப் பெரும் அசூயை ஏற்பட்டு விடுகிறது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு மிக முக்கியமான கலந்துரையாடல், அந்த கலந்துரையாடலில் நான்கு பேர் இருந்தோம். ஒரு மிக முக்கியமானப் பணியை எடுத்து செய்வதற்கு முன்னதாக, அந்தப் பணியின் தன்மை எப்படிப்பட்டது, எந்தெந்த கோணத்தில் இருந்தெல்லாம் அதனை அணுக வேண்டும் என்பது போன்ற மிக முக்கியமான விஷயங்களைப் பணி தொடங்குவதற்கு முன்பாகவே பேசி தெளிவு பெறுவதற்கான கலந்துரையாடல் அது.

நான்கு பேருமே நாங்கள் அந்தப் பணியை எப்படிப் பார்க்கிறோம், அதனை தொடங்கும் முன் என்ன மாதிரியான முன் தயாரிப்புகள் இருக்க வேண்டும் எனப் பேச்சுப் போய்க் கொண்டிருந்தது. அப்படியான பேச்சில் நான்காவதாக பேச ஆரம்பித்தார் ஒருவர், இங்கே ஒருவர் எனக் குறிப்பிடுவது ஆண் என்கிற பொருளில் அல்ல. இதனை இங்கு சொல்லக் காரணம், இனிச் சொல்லப் போவது எல்லாமே பொதுமைப்படுத்தித் தான். இது மனிதனுடைய எல்லா பாலினத்துக்கும் பொருந்தும். அப்படி நான்காவதாக ஒருவர் பேசிக் கொண்டிருக்கையில், அவர் ஒரு பத்து நிமிடங்கள் தான் பேசியிருப்பார், அந்த பத்து நிமிடங்களுக்குள் ஒரு நாற்பது முறையாவது வந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினார். கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மண்டை காய்ந்து விட்டது. சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக, கோர்வையாக சொல்வதற்குள், அந்த நபருக்கு நாக்குத் தள்ளி விட்டது. இத்தனைக்கும் அவர் வேலை செய்யும் துறையில் பழுத்த அனுபவம் உள்ள மனிதர். இந்தக் கலந்துரையாடல் என்றில்லை, பல்வேறு தருணங்களில், பல பேச்சுக்களில் தொடர்ந்து கவனித்தே வருகிறேன். வந்து, இப்ப பார்த்தீங்கன்னா, புரிஞ்சதா என இப்படி சில வார்த்தைகள் இருக்கின்றன. இப்படிப் பட்டியல் போட்டால் நாடு தாங்காது என்பதால் விட்டுவிடுகிறேன். மேலே சொல்லியுள்ள வார்த்தைகளை அதிகமாக திரும்ப, திரும்ப பயன்படுத்தி, சொல்ல வந்த விஷயத்தை கோர்வையாக சொல்ல முடியாமல், பல பெரிய தலைகளே திணறுவதை பல முறை பார்த்துக் கொண்டே வருகிறேன். அதுவும் அப்படி பேசுபவர்களின் தமிழ் உச்சரிப்பு இருக்கிறதே அது நாராசம் முடியல. ஒரு சின்ன உதாரணம், தகவலகம், இந்த வார்த்தையை உடனடியாக யாருகெல்லாம் வாசிக்க முடிகிறது. அதுவும் உங்களின் நாக்கு இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்கிறது என சோதித்துப் பாருங்கள், இது அத்தனையும் நான் வாசிக்கவே மாட்டேன், எழுதவும் மாட்டேன் என்கிற தெனாவெட்டால் வருவது. வேறு எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை.

ஒரு முக்கியமான கலந்துரையாடலில் சொல்ல வந்த விஷயத்தை ரத்தினச் சுருக்கமாக கோர்வையாக சொல்ல முடியவில்லையெனில், அது மிகப் பெரிய நேர விரயம் மட்டுமல்ல, நீங்கள் சொல்ல வந்ததும் சொல்லப்படுபவர்க்கு கடைசி வரை முழுமையாக புரியப் போவதே இல்லை. இப்படித்தான் இன்றைக்கு பல பேச்சுக்கள் இருக்கின்றன. இது மட்டுமல்ல, இன்றைக்கு தொலைக்காட்சி கலந்துரையாடலில் ஆரம்பித்து, பல மேடைப் பேச்சுக்கள் என பல பேச்சுக்களில், பல இடங்களில் இந்த வந்து என்கிற வார்த்தை நீக்கமற நிறைந்திருப்பதை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கண்டு கொள்ள முடியும். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும், நீங்கள் யாருடனாவது பேசும் போது ஒரு அரைமணி நேரம் உங்களின் பேச்சை கவனியுங்கள், அதில் எத்தனை முறை வந்து என்கிற வார்த்தையை திரும்ப, திரும்ப பயன்படுத்துகிறீர்கள் என எண்ணிப் பாருங்கள். எண்ணியும் பாருங்கள். அப்பொழுது தெரியும், இப்படியான பேச்சுக்களால் தான் பல நேரங்களில் நாம் சொல்லும் விஷயங்கள் நம் பேச்சை கேட்கும் நபரால் முழுமையாய் புரிந்து கொள்ளப்படுவதே இல்லை. அதற்கு மிக, மிக முக்கியமான காரணம் நம்மிடம் பேச வார்த்தைகள் இல்லை. ஏனென்றால் நாம் வாசிப்பதில்லை. எழுதுவதும் இல்லை. நாம் வாசிக்காத, எழுதாத காரணத்தால் நம் மூளைக்குள் வார்த்தைகள் இல்லாமல் போகின்றன. நம் மூளைக்குள் வார்த்தைகள் இல்லாத காரணத்தால், ஒரு வார்த்தையிலிருந்து அடுத்த வார்த்தைக்குப் போக முடியாமல் வந்து, வந்து, வந்து என நொண்டி அடித்துக் கொண்டே பேசுகிறோம். மற்ற எல்லா உயிரினங்களிடமிருந்தும் மனிதனை வேறுபடுத்தி காட்டுவதில் மிக, மிக முக்கியமானது மொழி. அந்த மொழி தான் சக மனிதனிடம் பேச, தன் உணர்வுகளைச் சொல்ல, மற்றவர்களுடன் தன்னை எளிதாக தொடர்பு படுத்த ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அதனைத் தான் இன்று இழந்து கொண்டிருக்கிறோம். அதனை நாம் சரி செய்யாதவரை நம்முடைய அடுத்த தலைமுறையும் மிக, மிக மோசமாக நொண்டி அடித்துக் கொண்டே தான் இருக்கும்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *