வாழ்ந்து பார்த்த தருணம்…151

மூன்று…

நாம் எதை வாசிக்கிறோம்?, எப்படி வாசிக்கிறோம்?, எதற்காக வாசிக்கிறோம்?. மூன்று மிக முக்கியமான கேள்விகள். கடந்த இரண்டு நாட்களில் மூன்று வெவ்வேறுத் தளங்கள், மூன்று கோணங்கள், மூன்று எழுத்தாளர்கள். ஒன்று சாரு, இரண்டு ஜெயமோகன், மூன்று ஏஸ்.ரா. மேலே சொல்லியுள்ளவைகள் வெவ்வேறு நேரங்களில் படித்தவை. ஒவ்வொருன்றிலிருந்தும் எடுத்துக் கொள்ள நிறையவே உண்டு. பொதுவாக எழுத வேண்டும் என்கிற உந்துதல் எழுகிற போதெல்லாம், வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலும் கூடவே வந்துவிடுகிறது. வாசிக்காமல் எழுதிவிட முடியுமா என்றால் வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது. அப்படியே எழுதினாலும் அது எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது ரகசியமெல்லாம் இல்லை, கண்டிப்பாக உருப்படியாக இருக்காது என்பது தான் நேரடியான பதில். பொதுவாக இலக்கியம் என்கிற ஒன்றை வாசிக்கும் நிலையை அடைகிற வரை எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியதேயில்லை. ஜெயமோகனின் தளத்தில் அவர் நேற்று அக்டோபர் 15ம் தேதி பதிவேற்றியுள்ள எழுத்தை வாசிக்கப்போய் அதிலிருந்து அப்படியே நகர்ந்து, நேற்றைக்கு அவர் பதிவேற்றியிருந்த கட்டுரைகளுக்கு தொடர்புடைய மேலும் இரண்டு கட்டுரைகளுக்கான சுட்டிகளின் வழியே போய், மேலும் இரண்டு கட்டுரைகளை வாசிக்க வேண்டி வந்தது. மூன்றையும் சேர்த்து வாசித்து முடிக்கையில் பல்வேறு விதமான திறப்புக்கள், தெளிவுகள் கிடைத்தன. ஜெயமோகனின் இன்றைய கட்டுரைக்கும், எஸ்.ராவின் தளத்தில் படித்த கட்டுரைக்கும், அதோடு சாருவின் தளத்தில் படித்த கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இருக்கிறது. அது எப்படிப் பார்க்கலாம்.

அக்டோபர் 10ம் தேதி சாரு தனது தளத்தில் இரண்டு பதிவுகள் பதிவேற்றி இருக்கிறார். இரண்டையுமே வாசித்தேன், விருப்பமிருந்தால் நீங்களும் அவருடைய தளத்திற்கு சென்று வாசியுங்கள். சாரு அதில் மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ள விஷயம் வணிக எழுத்தையும், இலக்கியத்தையும் ஏன் வேறு படுத்தி படிக்க வேண்டும் என்பதையும். அதில் இலக்கியம் ஏன் முக்கியமானது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். என்னளவில் என்னுடைய வாசிப்பு வணிக எழுத்தில் இருந்து இலக்கியத்திற்கு மாறிய பிறகு தான் என்னுடைய சிந்தனையில் ஆகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது என்று சொல்லலாம். அந்த மாற்றத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. காரணம், அதனை நீங்கள் நிகழ்த்திப் பார்த்தால் மட்டுமே உங்களுக்கு அது புரியும். எனக்கு நிகழ்ந்தது தான் உங்களுக்கும் நிகழ வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒரே ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் எனில், இலக்கியத்தை தீவிரமாக வாசித்து உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கிய பிறகு, இந்த உலகில் ஒரு சராசரி மனிதனை சலனப்படுத்தி வீழ்த்தும் எதுவும் உங்களை சலனப்படுத்தாது. உலகமே வணிகமயமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு மனிதனை மிக எளிதாக இன்று சலனப்படுத்தி விடமுடியும் என்பது தான் தவிர்க்கவே முடியாத உண்மை. ஒரு சின்ன சலனமே உங்களை ஏமாற்ற போதுமானதாய் இருக்கும். இன்று சலனமில்லாமல் இருப்பது என்பது பெரும் சவால். என்கிட்ட இது இருக்கு உன்னிடம் இது இல்லையா என்கிற ஒரே ஒரு சொல்லில் நாம் வீழ்ந்து விடுகிறோம். அதையெல்லாம் தாண்டி மிகச்சிறந்த இலக்கிய வாசிப்பு கண்டிப்பாக உங்களை அதிலிருந்து விலகி இருக்க வைக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

சரி ஜெயமோகனின் கட்டுரைக்கும் எஸ்ராவின் கட்டுரைக்கும் சாரு எழுதியுள்ளதற்கும் என்ன சம்பந்தம். சொல்கிறேன், சாரு குறிப்பிட்டுள்ள வணிக எழுத்தை தாண்டி இலக்கிய வாசிப்புக்கு பழகி இருந்தால் மட்டுமே, மேலே சொல்லியுள்ள ஜெயமோகன் மற்றும் எஸ்.ராவின் தளங்களில் எழுதியுள்ளவை உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் சுத்தம், வெறுமனே சராசரி வணிக எழுத்தை மட்டும் வாசிப்பவர்களுக்கு அதனைப் படித்து உள்வாங்குவது மிக மிகக் கடினம். புரியவில்லையெனில் என்ன கருமத்திற்கு அதனை வாசிக்க வேண்டும் என யோசிப்பவர்களுக்கு மேலே இரண்டாவது பத்தியில் சொல்லியிருப்பது தான் பதில். கண்டிப்பாக கடைசி வரை சுயசிந்தனையே இல்லாமல் யாரோ ஒருவர் சொல்லும் ஒரு வார்த்தை கூட உங்களை சலனப்படுத்தி விட முடிகிற, மிக, மிக மோசமான, பலகீனமான மனநிலையில் தான் காலம் பூராவும் வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால் இலக்கிய வாசிப்பு என்பது மிகப் பெரும் திறவு கோல். அது என்னையே என்னிடம் தீவீரமாக கேள்வி கேட்க வைத்திருக்கிறது. பல நேரங்களில், பலவிதமான சலனங்களின் பாதிப்பில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து என்னையே எனக்கு மிகச் சிறப்பாக திருப்பித் தந்திருக்க்கிறது. இங்கே மனிதர்கள் மிக எளிதாக உடைந்து போக, நம்பிக்கையற்ற தன்மையோடு இருக்க, தன்னுடைய நலனை மட்டுமே சிந்திப்பவர்களாக மட்டுமே இருக்கக் காரணம், அடிப்படையில் வாசிப்பின் போதமைதான் என பலமுறை எனக்குத் தோன்றிய துண்டு. என்னையே எனக்கு பல நேரங்களில் அடையாளம் காட்டிக் கொண்டே, அதே சமயம் என்னை பற்றிய மிகச் சிறந்த விமர்சனத்தை எனக்குக் கொடுத்து கொண்டும், என்னை செதுக்கிக் கொண்டும் இருப்பதாலேயே, இன்னும், இன்னும் என வாசிப்பின், எழுதுவதின் தொடர்ச்சியை தக்க வைத்துக் கொண்டு இருக்க முடிகிறது. இல்லையெனில் ஒரு சராசரி மனிதனாக எவ்வித மெனக்கெடலும் இல்லாத, எழுதாத, வாசிக்காத வணிக எழுத்தை மட்டும் வாசித்து வணிக மனநிலை மனிதனாக மட்டும் வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால் நாம் அதற்காக பிறக்கவில்லையே…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *