வாழ்ந்து பார்த்த தருணம்…154

திருவிழாவிற்கு முன் ஒரு இரவு உலா…

இன்று பொதுவாகக் கூட்டம் என்றாலே எனக்கு ஆகாது அல்லது என் குழந்தைகளுக்கு ஆகாது என்கிற சொல்லாடல் வெகு பிரபலமாகிக் கொண்டே இருக்கிறது. காரணம், எனக்கு நான் மட்டுமே போதும் என்கிற மனநிலை பரவலாகி வருவதனால் உருவாகி வரும் வியாதி இது. அதுவும் போக மக்கள் கூட்டம், அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு இல்லை எனக் காரணம் சொல்லப்படுகிறது. அதனால் மக்கள் கூடும் ஒரு திருவிழாவோ அல்லது பண்டிகை நாளோ வருகையில், மேலே சொன்ன காரணங்களால் இன்றைக்கு வெளியே போவது என்பது அருகிக் கொண்டே வருகிறது. வீட்டிலேயே தொலைக்காட்சி முன்னாலேயே உட்கார்ந்தோ அல்லது வீட்டுக்குள்ளே சாப்பிட்டுத் தூங்கியோ, அந்தத் திருவிழா நாளும் மற்றுமொரு நாளாக கடந்து போய் விடுகிறது. அதுவும் வீட்டில் இருக்கும் பெண்கள் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. இப்படியான நிலையில் இம்முறை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு கடைவீதி உலா எப்படி இருக்கப் போகிறது என்கிற ஒருவிதமான குறுகுறுப்பான மனநிலை இருந்து கொண்டே இருந்தது. காரணம், கடந்த வருடம் நோய் தொற்று காரணமாக வீதியோர கடைகளுக்கோ, மக்கள் கூடுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், வெளியில் செல்ல முடியவில்லை. அதனால் இந்த முறை கண்டிப்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு வீதி உலாவை தவறவிடக் கூடாது என திண்ணமாக திட்டமிட்டு விட்டோம். கூட என்னுடன் வரத் தயாராக இருந்த மற்றவர்கள் மழை மற்றும் உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக கடைசி நிமிடத்தில் வர இயலாமல் போக, நான் மட்டுமே செல்ல வேண்டிய சூழல். அதனால் என்ன என கிளம்பி ஆகிவிட்டது.

பொதுவாக இது போன்ற தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு உலா போகலாம் என்கிற முடிவு செய்யப்பட்டவுடன், என்னுடைய முதல் நிபந்தனையே போகுமிடத்தில் எதுவும் வாங்கக் கூடாது என்பது தான், அப்படி கூட வரும் நபர்கள் யாராவது, ஏதாவது வாங்கினால், அதனை அவர்களே சுமந்து வர வேண்டும். அந்தப் பொருளை மற்றவர்களிடம் அதிலும் குறிப்பாக என்னிடம் கொடுக்கக் கூடாது என சொல்லி விடுவேன். காரணம், மிக, மிக எளிமையானது. தீபாவளி நாளுக்கான முந்தைய இரவு கடை வீதிக்கு போனால், நீங்கள் நடக்க வேண்டாம், அங்கிருக்கும் கூட்டமே உங்களை நகர்த்திக் கொண்டு போகும், இதனை ஒரு வேளை நீங்கள் போயிருந்தால் உணர்ந்திருக்கலாம். அப்படிப்பட்ட கூட்டத்திற்கு நடுவில் பொருட்களை வாங்கிக் கொண்டு சுமப்பது என்பது, எவ்வளவு கடினம் என்பது போய் பார்த்தால் தெரியும். அப்புறம் எதற்கு அப்படியான கூட்டத்திற்குள் போக வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்குள் தோன்றினால் நீங்கள் வீட்டிலேயே உருட்டலாம் என்பது தான் என்னுடைய பதில். ஒரே ஒரு வரியில் சொல்வதானால், அப்படியான வீதி உலா, ஒரு அட்டகாசமான, அற்புதமான அனுபவம். அப்படியான உலாவை நீங்கள் உங்களுக்கான அனுபவமாக எடுத்துக் கொள்ள முடிந்தால் நல்லது. இல்லையெனில் வீட்டிலேயே எதையாவது உருட்டிக் கொண்டிருக்கலாம், மற்றபடி ஒவ்வொரு முறையும் இப்படியான வீதி உலாவை சாலையோரக் கடைகள் துவங்கும் இடத்தில் இருந்து ஆரம்பித்து, அப்படியே கடைசி முனை வரை போய், பின்னர் அங்கிருந்து வேறு வழியாக தொடங்கும் இடத்தை அடைவோம். ஆனால் இம்முறை என்னுடைய இரவு உலா மதுரையின் பிரதான வீதியின் வேறு முனையில் இருந்து தொடங்கியது மிக தற்செயலானது. அதில் சிறிது தூரம் நகரவே முடியாத அளவு மக்கள் கூட்டம் மிக, மிக நெருக்கடியாக நகர்ந்தபடி இருக்க. அடுத்த கொஞ்ச தூரத்தில் அப்படியான நெருக்கடி இல்லாமல் இயல்பாக இருந்தது. இப்படித்தான் இம்முறை இரவு உலா முழுவதுமே.

இது போன்ற இடங்களில் பலவிதமான மனித மனங்களை பார்க்க முடியும், படிக்க முடியும். உதாரணமாக பேரம்,பேசுவதில் நாம் எப்பேர்ப்பட்ட வல்லவர்கள் என்பதை, இது போன்ற இடங்களில் தான் நீங்கள் கண்டுணர முடியும். ஒரு மணி நேரமாக பேரம் பேசி கடைக்காரனை கதற விட்டு ஒன்றுமே வாங்காமல் போகிறவர்களையும் பார்க்க முடியும். அதே நேரம் எவ்வித பேரமும் பேசாமல் கடைக்காரன் சொன்னதை அப்படியே நம்பி ஏமாறும் நபர்களையும் பார்க்க முடியும். இப்படித் தான் அன்று நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே, ஒரு சாலையோரக் கடையில் காதணியின் விலையை கேட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் விலை சொல்லிவிட்டு, வேறு ஒருவர் விலை கேட்டதும் திரும்பி அவரிடம் பேசிவிட்டு திரும்பிய கடைக்காரரிடம், ஒரு உறுதிபடுத்தலுக்காக அந்த பெண் மீண்டும் விலையைக் கேட்க, இம்முறை கடந்த முறை சொன்ன விலையை விட 20ரூபாய் கூடுதலாக அந்தக் கடைக்காரர் சொல்ல, அங்கே ஒரு அற்புதமான அதகளம் ஆரம்பமானது. அதுவும் ஒரு பெண்ணிடம் விலையை மாற்றிச் சொன்னால் என்ன நடக்கும் என்பது, என் கண் எதிரே சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்த அந்த கடைக்காரரின் கண்களில் தெரிந்தது. அடுத்த தரிசனமாக ஒரு கணவன் மனைவிக்கிடையில் ஒரு உரையாடல், மனைவி கணவனிடம் வேறு எதையோ பார்த்தபடி, ஏங்க அங்க ஒண்ணு பார்த்தோம்ல அதுவே நல்லாயிருந்ததுச்சுங்க எனச் சொல்ல, அத அங்கேயே சொல்ல வேண்டியதுதானடி என மனைவியைப் பார்த்துக கத்தியபடி, அந்த கணவன் வந்த வழியே திரும்ப போக வேண்டுமே என்கிற அவஸ்தையில், தன் முதுகு பக்கமாய் அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்த வழி நோக்கி திரும்ப, தான் வந்த வழியில் நகர முடியாமல் நகரும் மக்கள் நெருக்கடியைப் பார்த்தவாறே, தன் இரு கைகளிலும் சுமந்திருக்கும் பொருட்களையும் ஒரு முறை பார்த்த போது, அந்த கணவனின் கண்களில் தெரிந்தது, பயமா, கோபமா, பரிதாபமா, இயலாமையா அல்லது விரக்தியா என்பதை சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. அந்த நிமிடத்தில் நீங்கள் அங்கே நின்று பார்த்தால் ஒழிய, அந்த முகத்தில் தெரிந்ததை உங்களால் உணர்ந்து கொள்ளவே முடியாது. இப்படியான பல மனிதர்களின் நவரசம் தழும்பும் பன் முகங்களை, அவர்களின் அந்த நேரத்து உடல் மொழியை உணர நீங்கள் முதலில் உங்களை உணர்ந்திருத்தல் அவசியம். அப்படியே போகிற போக்கில் அங்கிருந்த ஒரு சாலையோரக் ஒரு கடையில் ஒரு நபர் பொருளை ஏமாற்றி எடுத்துச் செல்ல எத்தனிக்க, அங்கே பெரிய களேபரத்துடன் சகட்டு மேனிக்கு அந்த நபருக்கு அடி விழுந்து கொண்டிருந்தது. அடி விழுந்து கொண்டிருக்கும் போதே அடி வாங்கும் நபர் கூட்டத்தின் நடுவே மாயமாய் மறைந்து விட்டார். மறுகணமே, அடி கொடுத்த கடையின் வியாபாரி வியாபாரத்தில் முழ்க, அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்த சுவடே தெரியாமல் மக்கள் நகர்ந்தபடி பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்கள். இது போன்ற நேரங்களில் பார்க்கும் இன்னுமொரு அதிசய நிகழ்வு, வருடத்தில் பல நாட்கள் அந்தக் கடை தெருவின் வழியே போயிருப்பேன், அப்பொழுது எல்லாம் அங்கிருக்கும் கடைகளில், அதுவும் பெண்களுக்கான குறைந்த விலையில் விற்கும் ஆபரணக் கடைகளில் நாலு பேர் கூட மொத்தமாக நின்று பொருள் வாங்கிப் பார்த்ததேயில்லை. ஆனால் இன்று அதே கடையில் பெண்களுக்கிடையில் உள்ளே செல்லவும் வெளியே வரவும் பெரும் போராட்டத்துடன் கூடிய தள்ளுமுள்ளே நடந்து கொண்டிருந்தது. உள்ளே செல்லும் பெண்களில் பாதி பேர் ஆளுக்கு நாலு பொருள் வாங்கினால் போதும், அந்த கடைக்காரன் பெரிய பணக்காரன் ஆகிவிடலாம். ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து வெளியே வரும் பெண்கள் வாங்கிய பொருட்களைப் பார்த்தால், கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் அந்த கடைக்காரன் பணக்காரன் ஆக மாட்டான் என்று மட்டும் விளங்கியது. இன்னும், இன்னும் நிறைய இருக்கிறது பதிவின் நீளம் கருதி போதும். மகிழ்ச்சி

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *