வாழ்ந்து பார்த்த தருணம்…155

அலைக்கற்றைகளற்ற…

கடைசியாக எழுதியதிற்கும் இந்தக் கட்டுரைக்குமான இடைப்பட்ட நாட்களில் ஒரு விஷயத்தைப் பற்றி அல்லது ஒரு செய்தியைப் பற்றி நிறைய யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அந்த நிகழ்வின் வழியே எனக்குள் தோன்றியதை இரண்டு முறை எழுதியும் அது முழுமை பெறவில்லை என்கிற ஏதோ ஒரு உறுத்தல் காரணமாக அதனைப் பதிவேற்றவில்லை. ஆனாலும் இரண்டு கட்டுரைகளுக்கு பின்னதாக என்னை நிறையவே யோசிக்க வைத்த அந்தச் செய்தியை, நிகழ்வைப் பற்றி எழுதுகிறேன். இப்பொழுது இந்தக் கட்டுரைக்கான நிகழ்வுக்குள், ஒரு நாள் உங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் உங்கள் அலைப்பேசி தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குச் சென்றுவிடுகிறது, ஒரு குறிப்பிட்ட நேரம் வரையோ அல்லது அந்த நாளின் பகல் முழுவதுமோ, நீங்களே நினைத்தாலும் அலைப்பேசியின் வழியே யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. உங்களையும் யாரும் தொடர்பு கொள்ள முடியாது என்கிற இடத்தில் இருக்கிறீர்கள் என்றால், அப்பொழுது உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்?. கடந்த பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அப்படியான பயணம் ஒன்று வாய்த்தது. அது ஒரு மலை. அந்த மலையைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்கான நீர் ஆதாரங்களை இந்த மலையில் இருந்து வரும் நீரே நிரப்புகிறது. அப்படியான மலையில் இருந்து வரும் நீரின் தொடக்கப் புள்ளியைப் பற்றிய ஒரு பதிவுக்காக ஒரு பயணம். நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும், தேடக் கூடாது என்று சொலவடை உண்டு இல்லையா, அதற்கான அர்த்தம் இந்தப் பயணத்தில் மிகச் சிறப்பாக புரிந்தது. என்ன புரிந்தது என்பதை விளக்கவெல்லாம் முடியாது. நீங்களே அப்படியான ஒரு பயணத்தை மேற்கொண்டால் தான் அதனை விளங்கிக் கொள்ள முடியும்.

அந்த மலைப் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனம் செல்ல வழி இல்லை. வாகனம் செல்லக்கூடிய இடம் வரை சென்று, அதன் பின் ஒரு நான்கு கிலோமீட்டர்கள் மேல் நோக்கி நடந்து போக வேண்டும். போகும் பாதை முழுவதும் கரடுமுரடான கற்கள் சிதறி கிடக்கும் வழி தான். அதுவும் போக மழை பெய்து முடித்த நேரம் என்பதால் எங்கெங்கு காணினும் ஈரம். அது நல்ல பசுமையான அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட காடு என்பதால், போகும் வழியெங்கும் இலைகளின் மீதிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டே இருந்தது. மழையின் ஈரம் காரணமாக இதமான குளிர் காற்றில் பரவி படர்ந்திருந்தது. கற்களிடையே தான் பாதை என்பதால் கற்களை மிதிக்கும் போதெல்லாம், காலில் காலணி அணிந்திருந்தாலும், மழையின் ஈரத்தால் அந்த கற்களில் ஏறியிருந்த குளிர் கால்பாதங்களில் வழியே உடலுக்குள் பரவி உடல் சிலிர்த்தபடி இருந்தது. இதற்கு நடுவில் நல்ல அரை அடி நீள மரவட்டை பூச்சிகள் அங்காங்கே கற்களுக்குக் கிடையில் ஊர்ந்தபடி இருந்தன. இவையெல்லாற்றவற்றையும் ரசித்தபடி நடந்து கொண்டிருக்கையில் தான் அலைப்பேசியில் இருந்து ஒரு விதமான வினோத ஒலி வெளிவந்தபடி இருந்தது. என்னவென்று எடுத்துப் பார்த்தால், அலைப்பேசி தன்னுடைய நிறுவனத்தின் அலைக்கற்றைக் காற்றில் எங்காவது சிக்குகிறதா என தேடியதன் விளைவாகத் தான் அந்த ஒலி எனத் தெரிந்து. அதனை மெளனமாக்கினேன். இனி இந்த மலையில் இருந்து இறங்கும் வரை அலைப்பேசி அழைப்புக்கு வழி இல்லை எனத் தீர்க்கமாக தெரிந்தவுடன், மலையேறி இறங்கும் வரை மனது இயல்பாகவே கவனம் முழுமையையும் முழுக்க, முழுக்க அந்த நொடியின் செயலில் குவிப்பது தெரிந்தது. அப்பொழுது மனதிற்குள் தோன்றிய எண்ணம், இம்மாதிரியான பயிற்சிக்காகவே இது போன்ற இடங்களுக்கு வர வேண்டும் எனத் தோன்றியது. அந்த மலையேற்ற நடைபயணம் முழுவதுமே எக்காரணத்தைக் கொண்டும் அங்கிருக்கும் மரங்களில் இருந்து ஒரு இலையைக் கூட அவசியமின்றி பறிக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். அப்படி இலையை பறிக்கக் கூடிய அவசியம் ஏற்படவில்லை, அதனால் பறிக்கவுமில்லை. அதற்கு மிக முக்கியமான காரண சம்பவம் ஒன்று இருக்கிறது, அதனை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

அந்த மலையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை அடைந்தவுடன் ஒரு சிறிய அருவியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது, அது ஒரு மிகச் சிறிய ஐந்து அடி உயரத்தில் இருந்து விழுந்த அருவி தான், அதனால் அதன் அருகில் இருந்து பார்க்கையில், அந்த அருவியில் இருந்து விழும் தண்ணீர் அந்த மலையின் அடர்ந்த வனத்திற்குள் இருந்து வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. சிறிது தூரம் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டோம், அதுவே பதிவு செய்ய போதுமானதாக இருந்தது. இதில் மிக, மிக முக்கியமாக மனதினுள் வலி ஏற்படுத்திய விஷயம் ஒன்று வழியெங்கும் இருந்தது. அது என்னவெனில், நாங்கள் போகும் போதும் சரி, வரும் போதும் சரி வேறு யாரும் அந்த பகுதிக்கு வரவில்லை, பின்னர் விசாரித்த போது தான் தெரிந்தது. ஒரு பக்கம் கடுமையான மழை என்பதாலும், நாம் வந்திருப்பது வாரத்தின் தொடக்க நாள் என்பதாலும் ஆட்கள் யாரும் வரவில்லை. வார இறுதி நாட்களில் கண்டிப்பாக ஆட்கள் அதிகமாக வந்து போவார்கள் என்று சொல்லப்பட்டது. அப்படி வார இறுதி நாட்களில் வந்து போகும் நபர்கள் செய்யும் அட்டுழியத்தின் மீச்சங்களை கண்களில் பார்த்ததைத் தான் மேலே வலி எனக் குறிப்பிட்டிருந்தேன். அப்படி வார இறுதி நாட்களில் வரும் பிரகஷ்பதிகள் தூக்கி வீசியெறிந்து விட்டுப் போன மதுப்புட்டிகளும், நெகிழிப்பைகளும் போகும் வழியெங்கும் இறைந்து கிடத்தன. மலை மீது ஏறுகையில் கொஞ்சம் சுதாரிக்காமல் காலை வைத்தோமானால் சிதறிக் கிடக்கும் மதுபாட்டிகளின் கண்ணாடித் துண்டுகள் நம் காலை ஆழமாக பதம் பார்ப்பது உறுதி. இதில் மதுகுடிப்பவர்கள் மட்டும் தான் என்றில்லை, மற்றவர்களும் நொறுக்கு தீனிக்களை கொண்டு போய் உள்ளே வைத்து தான் தின்பேன் என கொண்டு போய் தின்று முடித்த நெகிழிப்பைகளை அப்படியே வனத்தினுள் வீசி விட்டு வந்து விடுகிறார்கள். இவை அனைத்தையும் பார்த்த போதெல்லாம் எழுத்தாளர் ஜெ,மோவினுடைய அறம் புத்தகத்தில் யானை டாக்டர் கே வை பற்றிய பகுதியில், மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொரு நாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்க வேண்டும் என ஒரு வரி தான் ஞாபகம் வந்தது. அந்த வரிகளில் குறிப்பிட்ட மனிதனின் கீழ்மைகள் அந்த மலைக் காட்டில் என் கண்முன்னே சிதறிக் கிடந்தது.

எத்தனை முறை இந்த இயற்கையிடம் மனிதன் அடிவாங்கினாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே இல்லை என்பதற்கு அவன் காட்டுக்குள் கொண்டு சென்று குவிக்கும் குப்பைகளே சாட்சி. அலைக்கற்றைக்குள் மொத்த உலகத்தையும் கொண்டு வந்து விட்டோம் என்கிற மமதையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நடுவில், அலைக்கற்றைகளற்ற உலகம் ஒன்று இங்கே இருக்கிறது என்பதும், அந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு அலைக்கற்றை பற்றி ஒன்றுமே தெரியாது என்பதும், அந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தான் வாழும் நிலத்தையும், அதன் உயிர்நாடியான வனங்களையும் பற்றி மட்டுமே தெரியும் என்பதும், இந்த மனிதன் என்கிற சல்லிப்பயலுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. இயற்கைச் சமநிலைப் பற்றி விலங்குகளுக்கு இருக்கும் அறிவில் பாதியாவது இந்த மனிதன் என்கிற சல்லிப் பயலுக்கு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. பாடப் புத்தகம் தாண்டி வாசியுங்கள், வாசியுங்கள் எனச் சொல்வது கொஞ்சமேனும் நாம் வாழும் இயற்கை சூழல் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் தான். இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக மீண்டும் ஒரு முறை அறம் புத்தகத்தில் உள்ள யானை டாக்டரை வாசித்த போது என் கண்கள் கலங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. அதில் டாக்டர் கே, யானை ஒன்றின் காலுக்குள் ஏறியிருக்கும் மதுபாட்டிலை அகற்றி, அந்த யானைக்கு சிகிச்சையளிப்பது பற்றி முழுமையாக விவரிக்கப்பட்டிருக்கும். அதனைப் போய் ஒரு முறையாவது வாசியுங்கள். அப்படி வாசித்த பின்னும் உங்களால் உங்கள் கைகளில் இருக்கும் நெகிழிப் பைகளையோ அல்லது வேறு ஏதேனும் புட்டிகளையோ சர்வ அலட்சியமாக வீதிகளிலும், வனங்களிலும் தூக்கி வீசியெறிய முடிந்தால். உங்களிடம் சொல்ல ஒன்றுமில்லை. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *