வாழ்ந்து பார்த்த தருணம்…157

ஐ லவ் யூ சாரு…

காலையிலேயே எழுதி பதிவேற்ற வேண்டும் என நினைத்து, அன்றாட அலுவல் சங்கடங்கள் மற்றும் இன்று பார்த்து கைகளில் மடிக் கணினி வேறு இல்லை என்பதால் எழுதிப் பதிவேற்ற தாமதமாகிவிட்டது. அதனால் தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் சாரு.

இன்று சாருவின் பிறந்தநாள் என்றவுடன், கண்டிப்பாக ஆசானைப் பற்றி சில வரிகளாவது எழுத வேண்டும் எனத் தோன்றும் போதே, அவர் சொன்னதும் ஞாபக அடுக்குகளில் வந்து போனது, அவர் ஏற்கனவே என்னைப் பாராட்டினால் அது அவர்களையே அவர்கள் பாராட்டி கொள்வதை போலத் தான் எனக்குத் தோன்றுகிறது என்று சொல்லிவிட்டார். அதற்காக விட்டுவிட முடியுமா என்ன வாய்ப்பேயில்லை. கடந்துக் கட்டுரையில் சொல்லியிருந்தது போல் ராஸலீலா வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்கிற மனநிலையில் இருந்து இதனை எழுதுகிறேன். ராஸலீலாவின் வழி சாருவின் எழுத்துக்களை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பது தான் இங்கே மிக முக்கியம். ஏற்கனவே ஒரு எழுத்தாளராக சாரு எனக்கு எப்படி அறிமுகமானார் என்பதை எனது 139வது கட்டுரையில் சொல்லியிருந்தேன், அதில் சாருவைப் பற்றி என்னிடம் சொல்லும் பலரும் அவரைப் பற்றி கண்டிப்பாக நேர்மறையாக சொன்னதே இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் புரிந்துகொள்ள முடிந்த விஷயம் ஒன்று தான், நீங்கள் சாருவை எந்த கோணத்தில் பார்க்கிறீர்களோ அதுவே நீங்கள் தான். உங்களால் சாருவை, அவரின் எழுத்துக்களை உங்களை நீங்களே பகுத்தாய்வு செய்யும் மனநிலையோடு அணுக முடிந்தால் கண்டிப்பாக அது நேர்மறையானதாகத் தான் இருக்கும். ஆனால் அவரின் எழுத்துக்களை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் அல்லது வாசித்துவிட்டு எதிர்மறையாக பேசுகிறீர்கள் எனில் கண்டிப்பாக, அது நீங்களே உங்களை பற்றி சொல்கிறீர்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவரை என்னிடம் சொல்லப்பட்ட அல்லது சொல்லிய அப்படி எந்த ஒரு எதிர்மறை கருத்தினை முன் வைத்தவர்களையும் பார்க்கையில், மேலே சொல்லியுள்ளது அப்பட்டமான உண்மை என எனக்கு நீருபணமாகிக் கொண்டே வருகிறது. அதனால் தான் சொல்கிறேன் சாரு என்னையே என்னிடம் கண்ணாடியைப் போல் தன் எழுத்துக்களின் வழியே காட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால் என்னை நானே கூராய்வு செய்யவும், என்னை செம்மைப்படுத்தவும், மேம்படுத்தவும் அவரை தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் சாருவை புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரை வாசிக்கையில் நீங்கள் நீங்களாக இருக்கக் கூடாது. இதனை எப்படி நீங்கள் புரிந்துகொள்கிறீர்களோ அங்கிருந்து தான் சாருவின் அதகளம் ஆரம்பமாகிறது. என்னால் உறுதியாக சொல்ல முடியும் அவரைப் போல் ஒரு துணிச்சலான இந்த வாழ்வின் மீதான கட்டுடைத்தலை தன்னுடைய எழுத்தின் வழியே வேறு யாரும் நிகழ்த்த முடியும் என நான் நம்பவில்லை. அதே போல் அவரைப் போலான பேரன்பை வேறெங்கும் கண்டதும் இல்லை. மீண்டும் ஒரு முறை என் ஆசானுக்கு, வழிகாட்டிக்கு அன்பு முத்தங்களுடன் இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

எழுத்தாளர் பாரா சாருவை வாழ்த்தியுள்ள
எவன் என்ன சொன்னாலும் என் எழுத்தின் இடமும் இருப்பும் நானறிவேன் என்கிற தெனாவட்டுக்கு நிகரான அழகு வேறில்லை.
அழகன் சாருவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
என்கிற ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமானவைகள், ஐ லவ் யூயூயூயூயூ சாரு, மகிழ்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *