வாழ்ந்து பார்த்த தருணம்…159

நான் பிழை…

சில நாட்களுக்கு முன்பிருக்கும் அதிகாலையிலேயே முழிப்பு தட்டி விட்டது. புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது குடியிருக்கும் வீடு அமைந்திருக்கும் இடத்தை சுற்றிலும் வயல்வெளிகள் என்பதால், வீட்டிற்குள் இயல்பாகவே குளிர் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்படி வீட்டிற்குள் ஊடுருவி இருந்த குளிர்ச்சிக்குள் போக மனமில்லாமல். போர்வையின் கதகதப்பில் படுத்து கிடக்கும் போது, ஒரு பாடலின் வரி சாரலின் குளிர்ச்சியைப் போல் மனதுக்குள் தோன்றி பரவ ஆரம்பித்தது. சமீப நாட்களாக கேட்கும் பாடல்களில் பாடலின் வரி என்பதெல்லாம் கவனிக்கும் படியாக இருப்பதெல்லாம் அரிதாக ஆகிவிட்ட சூழலில், மிகச் சரியாய் வரிகள் ஞாபக இருப்பதென்பது அதிசயம் தான். அதுவும் அந்தப் பாடலை இரண்டொரு முறை கேட்டிருந்தாலே பெரிய விஷயம் தான். அப்படியிருக்கையில் மிகச் சரியாக முதல் வரி மனதிற்குள் சடாரென தோன்றி பாடலின் இசையோடு மனதிற்குள் முணு முணுப்பது என்றானவுடன், சட்டென படுக்கையை விட்டு எழுந்துவிட்டேன். வீட்டில் உள்ளவர்கள் ஆழமான உறக்கத்தில் இருக்க, உறக்கத்தில் இருந்த யாரையும் தொந்தரவு செய்யாமல், ஒரு பூனையைப் போல் சத்தமில்லாமல் எழுந்து, நகர்ந்து வேறு ஒரு அறைக்கு அலைப்பேசியை எடுத்துக் கொண்டு போய் விட்டேன், இரவு அணைத்து வைத்திருந்த அலைப்பேசியின் இணையத்தை சொடுக்கிவிட்டு, பாடலை தேடிக் கேட்டால், அந்த அதிகாலை நேரத்தின் மிக, மிக நிசப்தமான சூழலில், அந்த அறையில் பரவியிருந்த அதிகாலை குளிரில் மிக சன்னமாக பாடலின் இசை ஒலிக்கத் தொடங்க, அந்த அறையினுள் மெல்லிய சாரலிசை ஊடுருவ தொடங்கியது.

பொதுவாக ஒரு பாடல் எவ்விதமான மனநிலையிலும் கேட்கக் கூடியதாக இருப்பது என்பது அரிதானது தான். இந்தp பாடல் அப்படியான பாடல் என எனக்குள் தோன்றியது. அந்தp பாடல் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில், அனிருத்தின் இசையில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்திற்காக வெளியாகி இருக்கும் நான் பிழை என்று தொடங்கும் பாடல். மிக எளிமையான, ஆனால் மிகச் சிறப்பான காதலான வரிகளோடு வெளிவந்திருக்கும் பாடல். சமீப நாட்களில் திரும்ப, திரும்ப கேட்கத் தூண்டும் பாடலாய் நான் பிழை மாறியிருக்கிறது. சமீப நாட்களில் வெளியான இன்னுமொரு மலையாள பாடலும் அப்படியான தாக்கத்தை எனக்குக் கொடுத்தது. அந்த பாடலைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அதன் பின் இந்த பாடல் தான் திரும்ப கேட்கும் மனநிலையைக் கொடுத்திருக்கிறது. அதுவும் போக இந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அருமை. விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவினுடைய சட்சட்டென மாறும் குறும்பான முக பாவணைகளின் வழியே வெளிப்படும் காதல் அற்புதமாய் இருந்தது. ஒரு மெல்லிய நீர் ஓடும் ஓடையின் ஒசையைப் போல் வெகு நிதானமான இசைக் கோர்வை இந்தப் பாடல் முழுவதும் நிரம்பியிருக்கிறது. ஒரு பாடல் வரிகளை எழுதும் போது ரொம்பவே அறிவுஜீவித்தனமான உவமைகளாக இல்லாமல், மிக எளிமையான உவமையோடு ஆனால் அட வேற மாரி யோசிச்சிருக்கான்யா இவன், செம்மயா இருக்குல வரி என ஆச்சர்யப்படுத்தும் வரிகளாக எழுதுவது விக்னேஷ்சிவனுக்கு இயல்பாகவே வருகிறது என நினைக்கிறேன். இப்படி இந்தப் பாடலின் வரிகள் குட்டி குட்டி ஆச்சர்யங்களாக இருக்கின்றன.

ஒரு பாடல் படமாக்கப்பட்ட விதத்தைத் தாண்டி, அதனைக் கேட்கும் போது நமக்குள்ளும் பல விதமான காட்சிகளை ரகளையாக, ரசனையாக ஓட வைக்க வேண்டும், இன்று பெரும்பாலான பாடல்கள் அப்படியில்லை. வெகு சொற்பமாகவே அப்படியான பாடல்கள் வெளிவருகின்றன, அந்த வகையில் நிறைய நேரங்களில் அனிருத்தும் எழுந்து கொல குத்து, குத்தும் மனநிலைக்கு ஏற்றவாறே பாடல்களை கொடுக்கிறார். சில நேரங்களில் மட்டுமே நான் பிழை போன்ற அற்புதங்கள் வருகின்றன. நான் பிழைப் பாடலை பொறுத்தவரை ஒரு அற்புதமான பியானோவின் விரல் மீட்டலுடன் நான் பிழை என்கிற வரியை பாடத் தொடங்கும் அந்தக் குரல் அப்படியே நம்மை பாடலுக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும். நிதானமாய் தொடங்கும் ஒரு பாடலை இன்று கேட்க வைப்பதே ஒரு பெரும் சவால் தான். அப்படியானப் பாடலை யோசித்து கதைக்குள் வைப்பது, அதனை ரசனையாக படமாக்குவது, அதையும் தாண்டி அந்த நிதானத்தினை பார்வையாளனுக்கு சிறப்பாக கடத்துவது போன்ற பல சவாலான விஷயங்கள் இப்படியான பாடல்களுக்கு உண்டு. ஆனால் நான் பிழை அவை எல்லாவற்றையும் தாண்டி மிக சிறப்பாக நிதானமாக, ரகளையாக, ரசனையாக ரசிக்க வைத்திருக்கிறது. பாடல் வரிகள். பாடலின் இசை, பாடகர்களின் குரல் என அனைத்துமே நான் பிழையை மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டியபடி இருக்கின்றன. அப்புறம் என்ன அதிகாலை மெல்லியதான குளிரை உள்வாங்கியபடியே, முடிந்தால் ஒரு ரகளையான நடையோடு காதில் ஒலிவாங்கியை பொருத்தி நான் பிழை பாடலைக் கேட்டுப்பாருங்கள், கண்டிப்பாக பிழையாய் இருக்காது. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *