வாழ்ந்து பார்த்த தருணம்…163

நத்தை நகரும் நிலம்…

ஒரு வழியாக இந்த ஊரடங்கு இம்சைகள் எல்லாம் ஒழிந்து, மறுபடியும் கடந்து இரண்டு மூன்று வாரங்களாக வாரத்தின் இறுதி நாள் ஞாயிறு அன்று காலை மலையேற்றம் மிகச் சிறப்பாக தொடர ஆரம்பித்திருக்கிறது. இந்த ஊரடங்கின் இம்சைகளுக்கு முன்னதாக ஒரு ஞாயிறு மலை ஏற நான் மட்டுமே போக வேண்டிய சூழல். சரி என மலையேறக் கிளம்பிவிட்டேன். அப்படிப் போகும் போது எந்த மலை ஏறலாம் என யோசித்துக் கொண்டே இரு சக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடத்தை தாண்டும் போது எந்த மலை ஏற வேண்டுமென முடிவு செய்துவிட்டேன். அன்று ஏறப்போகும் மலை எது என மனதினுள் முடிவானவுடன். அந்த மலைக்கு போவதற்கான வழி மூளைக்குள் அப்படியே வரைபடமாக விரிய வண்டியை வேகமாக சாலையில் செலுத்த ஆரம்பித்தேன். அந்த மலைக்குப் போக பிரதான சாலையில் இருந்து ஒரு குறுகலான பாதைக்கு மாறி ஒரு குறிப்பிட்டப் பகுதியை கடந்த பின்னர், சிறிது தூரம் ஒரு பெரிய கண்மாயின் கரையில் பயணிக்க வேண்டும். இந்த மலைக்குப் போவதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவெனில் மலைக்கு போவதற்கு முந்தைய நாள் மழை பெய்திருந்தாலோ அல்லது நாம் போகும் போது மழை பெய்து கொண்டிருந்தாலோ சிக்கல் தான். காரணம், போகும் வழியில் இருக்கும் கண்மாய் கரை முழுவதும் செம்மண் பாதை தான். மழை பெய்தால், அந்த செம்மண் பாதை முழுவதும் மிக மோசமாக வழுக்கும். அதில் இரு சக்கர வாகனத்தை உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். சிறிது அசந்தாலும் வண்டி குடை சாய்வதை அந்த ஆண்டவனால் கூட தடுக்க முடியாது. அதனால் மழை பெய்யும் நாட்களில் அந்த மலைக்குப் போவதை தவிர்த்து விடுவேன்.

ஆனால் அன்று கதை வேறு மாதிரி வடிவத்தில் வந்தது, சரியாகப் பிரதான சாலையில் இருந்து அந்த மலைக்குப் போவதற்கானப் பாதையில் போய்க் கொண்டிருந்தேன். அந்த குறுகலான பாதையில் பாதி வழி தான் தாண்டியிருப்பேன். மழை நச நசவென மெல்லியதாக தூற ஆரம்பித்தது. மழையைப் பார்த்த மனமோ வா சமாளித்துக் கொள்ளலாம் எனச் சொல்ல, யோசிக்காமல் வண்டியை மலையை நோக்கி செலுத்த ஆரம்பித்தேன். ஆனால் மழைத் தூரல் மட்டும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. அந்த குறுகலான சாலை முடிந்து ஒரு கோவில் வளாகத்தை தாண்டியவுடன் வரும் சாலையில் இருந்து, மேல் நோக்கி மண் ரோடு ஒன்று கண்மாய் கரைக்கு ஏறும். அப்படி மேல் நோக்கி ஏறும் அந்த மண் சாலையைக் கண்களில் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. இன்று எனக்கு மண்டகபடி இருக்கிறதென. பெய்த மழையில் மண் வேறு இளகி இருப்பதும் தெரிந்துவிட்டது. வேறு வழியில்லை என இரு சக்கர வாகனத்தை மேல் நோக்கி ஏற்றினால். மிகச் சரியாக வாகனத்தின் முன் சக்கரம் வழுக்கி தொப்பென அந்த மேல் நோக்கி ஏறும் மண் சாலையில் விழுந்தேன். நல்லவேளையாக பெரிய அடி ஒன்றும் இல்லை. கிழே விழுந்த வாகனத்தை தூக்கி நிறுத்தி, விடாத விக்ரமாதித்யன் போல் எழுந்து கிளம்பினால். என்னைக் கடந்து போன ஒருவர் தம்பி மத்த வண்டி போன தடத்துலயே போகாம கொஞ்சம் விலகி வண்டிய ஓட்டிட்டு போங்க வழுக்காது என்று மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை மிகச் சாதாரணமாக உதிர்த்து விட்டுப் போனார். அவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மற்ற வண்டி போன தடத்தில் இருந்து விலகி ஓட்டியபடி மலையடிவாரத்துக்கு போய்விட்டேன். என்னுடைய இருசக்கர வாகனம் மலையடிவாரத்தை அடைவதற்கும் மழை நிற்பதற்கும் சரியாக இருந்தது. சரி இன்றைய நாள் இப்படித் தான் என முடிவெடுத்துவிட்டு மலையில் ஏற ஆரம்பித்தேன். மழை பெய்ததால் மலையில் ஆள் நடமாட்டம் அரவே இல்லை.

மேல் நோக்கி ஏற ஆரம்பித்தேன். ஒரு ஐம்பது படிகள் ஏறி இருப்பேன், அப்பொழுது தான் கவனித்தேன். ஐம்பதியோராவது படியில் நத்தை ஒன்று மிக மெதுவாக ஊர்ந்தபடி இருந்தது. அதனைப் பார்த்தவுடன் அதனை புகைப்படமெடுக்க ஆசைப்பட்டு அப்படியே அதன் அருகில் அமர்ந்து அதனை எந்த வகையிலும் தொந்தரவு செய்து விடாமல், அதன் நகர்தலுக்கு ஏற்றபடி என்னை நகர்த்திக் கொண்டே என்னுடைய அலைப்பேசியின் கேமராவில் கோணங்களை வைத்தால். எதுவும் திருப்திகரமாக இல்லை. கேமரா கோணங்கள் சரியாக இருந்தால் புகைப்படம் தெளிவாக இல்லை. சரியென அதன் அருகில் போனால் நத்தையின் முகத்தில் இருக்கும் ஆண்டெனாக்கள் உள்நோக்கி சுருங்கி விடுகின்றன, முகத்தில் இருக்கும் இரண்டு பெரிய ஆண்டெனாக்களில் ஒன்று தான் அதன் கண்கள் எனப் படித்திருக்கிறேன் என்பதால் இனி அதனை தொந்தரவு செய்யக் கூடாது என முடிவெடுத்து. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகாக ஒரு கோணத்தை வைத்து அதனை நோக்கி நத்தை நகர்ந்து வரும் வரை காத்திருந்தேன். என்னுடைய மனம் அதன் முன் முகத்தை தெளிவாக பதிவு செய்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. நத்தையின் ஒரு குறிப்பிட்ட நகர்வில் அதன் முகம் கொஞ்சம் தெளிவாக பதிவாக கோணம் எதிர்பார்த்தது போல் இல்லையென்றாலும் புகைப்படத்தில் நத்தையின் முகத்தை பார்க்கையில் மனதுக்குள் சந்தோசமாக இருந்தது. மலைப்படிகளில் யாருமே இல்லை என்பதால் நத்தை நகர்வதை சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி இருந்தேன். அதன் ஒவ்வொரு அசைவும் மிக நிதானமாக, அதே நேரம் மிக நுட்பமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து மலைப்படிகளில் யாரோ சிலர் ஏறிவரும் ஓசைக் கேட்க. திரும்பிப் பார்த்தால் பள்ளி மாணவர்கள் மூன்று, நான்கு பேர் குழுவாக மேலேறிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் கைகளில் கேமரா ஒன்றும் இருந்தது. அவர்கள் வருவதைப் பார்த்ததும் நான் அங்கிருந்து நகர்ந்து மேலேற ஆரம்பித்தேன். சரியாக அவர்கள் கண்ணிலும் அந்த நத்தை அகப்பட்டு விட, அவர்கள் வைத்திருந்த கேமராவில் அதனைப் புகைப்படமெடுக்க முயல, அவர்களால் அது முடியவில்லை. அதில் ஒருவன் நத்தையை எடுத்து வாகான ஒரு இடத்தில் வைத்து புகைபடமெடுக்கலாம் எனச் சொல்ல, ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதனை கைவிட்டுவிட்டு மேல் நோக்கி ஏற ஆரம்பித்தார்கள்.

நத்தையை அவர்கள் தொந்தரவு செய்யாமல் விட்டதை பார்க்கையில் என் மனம் சற்று நிம்மதியாக இருந்தது. காரணம் இப்பொழுது எல்லாம் ஆர்வக் கோளாரில் புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொள்கிறேன் என்கிற பெயரில் கேமராவைத் தூக்கும் எல்லோருக்கும் மனிதனைப் போலவே மற்ற உயிரினங்களும் நில் என்றால் நிற்க வேண்டும், சிரி என்றால் சிரிக்க வேண்டும், தான் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்க வேண்டும் என்கிற மனநிலையில் சுற்றிக் கொண்டிருப்பதை பலமுறை கவனித்தபடி இருக்கிறேன். தன்னுடைய சக உயிரைப் பற்றி இந்த மனிதன் புரிந்து வைத்திருக்கும் லட்சணம் இது தான். ஒரு புகைப்படம் எடுக்கும் கலைஞன் மனிதனை அல்லாது அதுவும் இயற்கை சார்ந்து விஷயங்களை புகைப்படமெடுக்க வேண்டும் என நினைப்பவன், அதற்கு முதலில் அதனை தொந்தரவு செய்யாமல் புகைப்படமெடுக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவை முதலில் கற்க வேண்டும் என நினைக்கிறேன். அது இல்லாத போது இருக்கவே இருக்கிறான் மனிதன் எனும் சல்லிப் பயல், அவனை நீங்கள் கேமரா முன்னால் நிறுத்தி என்ன குரங்கு வித்தை செய்யச் சொன்னாலும் செய்வான். அதனால் அவனை வைத்து எல்லாவிதமான சோதனை முயற்சியும் செய்யுங்கள். தயவு செய்து மற்றவற்றை விட்டுவிடுங்கள். இல்லையெனில் எந்த உயிரையும் தொந்தரவு செய்யாமல் புகைப்படமெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அன்றைக்கு அந்த குழுவில் இருந்த யாராவது அந்த நத்தையை தொந்தரவு செய்திருந்தால் கண்டிப்பாக சத்தம் போட்டிருப்பேன். ஆனால் அது நடக்கவில்லை. அந்த குழு அங்கிருந்து நகர்ந்ததும் நத்தை அதன் போக்கில் நகர்வதை உறுதி செய்துவிட்டு மேல் நோக்கி ஏற ஆரம்பித்தேன். அன்று நத்தையிடம் நான் கற்றுக் கொண்ட விஷயம் நிதானம். இன்றைக்குப் பெரும்பாலான மனிதர்களிடம் அரிதாகிப் போன ஒன்று தான் நிதானம். மேலேறி உச்சியை அடைந்தவுடன் வாகனத்தில் இருந்து கிழே விழுந்ததால் உண்டான கால் வலிக் காரணமாக, ஒரு ஓரமாக போய்ப் படுத்துவிட்டேன். அப்படி மல்லாக்கப் படுத்தபடி கண்களை மூடினால், கனவில் நத்தை அந்த மலை முழுவதும் நகர்ந்து திரிந்தபடி இருந்தது. அப்பொழுது சில மழைத்துளிகள் என் முகத்தில் விழ ஆரம்பிக்க, மீண்டும் மழை நச நசவெனப் பெய்யத் தொடங்கியது, அன்று காலையில் இருந்தே மழை பெரிதாக அடித்து வெளுக்காமல். இப்படித்தான் சாரலாகவே பெய்து கொண்டிருந்தது. மீண்டும் அதே வழுக்கும் கண்மாய் மண் கரையில் வண்டி ஓட்டிப் போக வேண்டும். இம்முறை ஒரு நத்தையை போல் நிதானமாக நகர்ந்து செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டே வண்டியை ஓட்டினேன். இம்முறை வழுக்கவேயில்லை. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *