வாழ்ந்து பார்த்த தருணம்…169

தேளின் தடம்…

சாரு தன்னுடைய இணையப் பக்கத்தில் கடந்த மாதம் இருப்பத்தி இரண்டாம் தேதி ஒளரங்ஸேப் நூறு விழாவினைப் பற்றிய அனுபவத்தை எழுதியிருந்தார். என்னுடைய சில சூழல்கள் கொஞ்சம் கடுமையானதாக இருந்ததால், என்னால் அந்த விழாவிற்குப் போக இயலவில்லை. அதனால் ஏற்பட்ட ஒரு வெறுமையான வருத்தம் மனதினுள் இருந்து கொண்டிருந்தாலும். விழாவினைப் பற்றி சாரு எழுதுவதை வாசிப்பதின் வழியே அந்த வருத்தத்தை ஒரு மாதிரியாக சமாளிக்கிறேன். சாரு எழுதியிருந்த பல விஷயங்களை வாசித்து உள் வாங்கயபடி இருக்கிறேன். அப்படி அதில் சாரு குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என்னுடைய நினைவுகளைப் பல வடிவங்களில் கிளறியது. விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் உலவிய ஒரு பூரானை யாரும் அடிக்காமல் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தினார்கள் என்பது எனக்குப் பெரும் திருப்தியை அளித்தது எனச் சாரு எழுதியிருந்தார். ஒரு வகையில் இது போன்ற நிகழ்வுகளை அவர் அணுகும் விதம் இந்தப் புவியின் மீதான சாருவின் நேசிப்பு, எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. சாருவை கண்மூடித்தனமாக நேசிப்பதற்கு இதுவே எனக்குப் போதுமானதாயும் இருக்கிறது. இந்த பூமி அனைத்து உயிர்களுக்குமானது என்பதை செயலில், இதை விட சிறப்பாக வெளிப்படுத்த முடியாது. இது தான் சாருவின் எழுத்திற்கு செய்யும் ஆகச் சிறந்த மரியாதையாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இந்தச் சம்பவம் கிளறிய நினைவு என்னவெனில், ஒரு வருடத்திற்கு முன்பு இருக்கும், முதல் ஊரடங்கோ அல்லது இரண்டாவது ஊரடங்கோ முடிந்த நாட்களில், ஒரு நாள் இரவு கவியத் தொடங்கிய நேரம், ஒரு ஏழு மணிக்கு மேல், முதல் மாடியில் இருக்கும் என்னுடைய வீட்டில் இருந்து கீழிறங்கி வீட்டின் முன்னால் இருக்கும் சாலையை ஒட்டிய வெற்றிடத்தில் உலவிக் கொண்டிருந்தேன். சொல்ல வந்த விஷயத்தை சொல்வதற்கு முன் சில தகவல்கள், என் வீடு இருக்கும் இடத்தைச் சுற்றி முழுவதும் வேளாண் நிலம் தான். நீர் வரத்தைப் பொறுத்து, வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ நெல் பயிரடப்படும் நிலங்கள் சூழ்ந்த பகுதி. அதனால் வேளாண் வேலைகள் நடைபெறுவதைப் பொறுத்து, சக உயிரினங்களின் நடமாட்டம் அங்காங்கே கண்ணில் படும். நெல் எல்லாம் அறுவடை முடிந்து வெயில் வெளுத்துக் கொண்டிருந்த நேரம் அது. அதனால் பகலின் வெம்மையில் வெளிப்படாத உயிர்கள் சில, இரவின் குளுமைக்காக வெளிவருவது உண்டு. சில நேரங்களில் சில உயிர்கள் கண்ணில் படும், சில உயிர்கள் சத்தமில்லாமல் வந்து போய்விடும்.

அப்படித் தான் அன்று கீழே இறங்கி வீட்டின் முன்னால் இருக்கும் வெற்றிடத்தில் நடந்து கொண்டே, யாருடனோ அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தேன். என் மகளும் அந்த இடத்தில் அங்கும், இங்குமாய் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்படியே நடந்தபடி பேசிக் கொண்டிருக்கையில் தான் சாலையை கவனித்தேன், ஒரு சின்ன கரிய பூச்சியை போன்ற உருவம் ஒன்று சாலையின் அந்த புறமும், இந்த புறமும் நகர்ந்து உலாத்தியபடி இருந்தது. கூர்ந்து பார்த்த போது தான் தெரிந்தது. அது ஒரு கால் அடி நீளமுள்ள ஒரு கருந்தேள். அதனைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே உடலும், மனமும் சில்லிட்டது. அவ்வளவு பெரிய தேளை அப்பொழுது தான் முதல் முறையாக நேரில் பார்க்கிறேன். அதனைப் பார்த்தவுடன் கீழே விளையாடிக் கொண்டிருந்த என் மகள் அதனை கவனித்திருக்கிறாளா எனப் பார்த்தால். அவள் அதனை கவனிக்கவில்லை, ஒரு வேளை அவளை கூப்பிட்டு காண்பித்தால், ஆர்வக் கோளாரில் அதன் அருகே போக வாய்ப்பிருக்கிறது என்பதால், அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவள் ஒரு பக்கம் விளையாடியபடி இருந்தாள், அந்த தேள் நடமாடிக் கொண்டிருந்த சாலையில் வாகனங்கள் போவது வருவதுமாய் இருந்தது. அதனையும் தாண்டி என் வீட்டின் முன் புறத்தில் தான் சாலையோர மின்சார கம்பம் விளக்குடன் இருந்தால், அந்த விளக்கில் இருந்து சாலையில் பரவிய வெளிச்சத்தில் தேளின் நடமாட்டம் தெளிவாய் தெரிந்தது. சாலையின் நிறமும், தேளின் நிறமும் ஒரே மாதிரியாக இருந்ததால். கூர்ந்து பார்த்தால் ஒழிய, அங்கே தேள் ஒன்று உலாவுவது யாருக்கும் தெரியாது. அதன் நடமாட்டத்துக்கு இடையில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதன் அருகே கடந்து செல்லும் நேரத்தில், வாகனத்தின் வேகத்தில் வெளிப்படும் காற்று அதன் மீது படும்பொதெல்லாம் யாரோ தன்னை தாக்க வருகிறார்கள் என்று நினைத்து வாகனம் கடந்து செல்லும் அந்த ஒரு நொடி தன்னுடைய கொடுக்கை விரைப்பாக மாற்றி அப்படியே சில நொடிகள் நிற்கும். பின்னர் சாலையில் அலைய ஆரம்பிக்கும். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒவ்வொரு முறை கொடுக்கினை விரைப்பாக வைக்கும் போதும் எல்லாம் என்னுடைய கண்கள் விரிந்து உடம்பு சில நொடிகள் சில்லிட்டது.

பொதுவாக தேளோ, பூரானோ, பாம்போ இது போன்ற பல உயிரினங்களைப் பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் இருக்கிறது இல்லையா, அது இது போன்ற உயிரினங்களை கண்ணில் பார்த்தாலே, அதனை உடனடியாக அடித்துத் தீர்த்துவிடு என்பதாகத் தான் இருக்கிறது. அது நம்மை விட்டு பல அடிகள் விலகி நின்றால் கூட, இது போன்ற சில உயிர்களைத் தேடிப் போய் கொன்றுவிடுவோம். அப்படி ஒரு மிக மோசமான பயத்தை இந்த சமூகத்தில் நாம் உருவாக்கி உலவவிட்டிருக்கிறோம். அதனையெல்லாம் கடந்து அப்படியான உயிர் ஒன்றினை அது நம்மை தாக்கிவிடும் என்கிற பயம் எதுவுமின்றி கவனிப்பதே மிகச் சிறப்பான புரிதல் எனத் தோன்றுகிறது. அப்படி அதனை கவனித்துக் கொண்டிருக்கும் போதே, அது சாலையில் இருந்து இறங்கி வீட்டின் அருகில் இருக்கும் மண் பாதையின் குறுக்காக வீட்டை நோக்கி குறுக்குவெட்டில் வர ஆரம்பித்தது, உடனே அங்கிருந்த குச்சி ஒன்றினை எடுத்து அது வரும் பாதையில் தூக்கிப் போட்டேன். குச்சி விழுந்த இடத்தின் அதிர்வால் சில நொடிகள் அது அங்கே நின்றது. அதற்கு எனக்குமான இடைவெளி ஒரு பத்து அடிகள் தான் இருந்தது. சில நொடிகள் அதே இடத்தில் அசையாமல் நின்று கொண்டு என்னையே பார்ப்பது போல் இருந்தது. நானும் அசையாமல் அதனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். சில நொடிகள் கடந்தது. அது அப்படியே திரும்பி சாலையில் ஏறி சாலையின் மறுபக்கத்தை நோக்கிப் போக ஆரம்பித்தது. நின்ற இடத்தில் இருந்து நகராமல் அது போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வீட்டின் மேலிருந்த தம்பி கீழ் இறங்கி வந்தான், அவனிடம், டேய் இப்ப நான் ஒரு விஷயம் சொல்லுவேன். அத கேட்டுட்டு போய் பார்க்கணும்னா, பக்கத்துல போய் பார்த்துட்டு எதுவுமே செய்யாம வரணும் என்றேன். அவன் சொல்லுங்க என்றான், இங்க எங்கயாவது தேள் ஒண்ணு நடமாடுறது உன் கண்ணுக்குத் தெரியுதா என்றவுடன், அவன் எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்த்து இல்லையே என்று ஒருவித பயத்தோடே சொன்னான். உடனே அவனிடம் தேள் கடந்து சென்ற இடத்தை சாலைக்கு மறுபுறம் காட்டி, அங்கே இருக்குற செடிக்கு இடையில பாரு என்றேன். அவன் பார்த்துவிட்டு சரியாக தெரியாததால், தன் கையில் வைத்திருந்த அலைப்பேசி விளக்கினை சொடுக்கி அதன் அருகில் போய் பார்த்துவிட்டு வந்தவன் முகத்தில் பயத்தின் ரேகைகள் படர்ந்திருந்தன. ஏண்ணே போட்டுச்சுன்னா அவ்வளவு தான் போலயே என்றான். அதப் போய் நோண்டாம இருந்தா போடாது, அது பாட்டுக்கு போயிரும் என்றேன். அவன் எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்த தேள் அங்கு இல்லை. ஒரு உயிரினை, அதுவும் நாம் உயிர் பயம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு உயிரினை, அதன் வெளியில் அதனுடைய சுதந்திரமான நடமாட்டத்தை, அதனை எவ்வித தொந்தரவும் செய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது ஒரு மிகச் சிறந்த அனுபவம். அன்று அந்த அனுபவம் அட்டகாசமாக இருந்தது. இதனைப் படிக்கும் யாருக்காவது சரியான முட்டாக் கூ……… இருப்பான் போல, போட்டுச்சுன்னா அப்புறம் தெரியும் என்று உங்களுடைய மனநிலையில் இருந்து யோசித்தால், நான் மேலே சொல்லியிருப்பது போல் முட்டாக் கூ…………. இருக்கவே ஆசைப்படுகிறேன். மகிழ்ச்சி…
வலிமையான பின் குறிப்பு :
மேலே குறிப்பிட்டுள்ள கோடிட்ட இடங்களில் முட்டாக்கூ”முட்டை” என்பதற்கு பதிலாக உங்களின் மனம் வேறு எதையாவது யோசித்திருந்தால், அதற்கு உங்களின் எண்ணங்களும், நீங்களுமே பொறுப்பு கண்டிப்பாக நிர்வாகம் அல்ல. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *