வாழ்ந்து பார்த்த தருணம்…173

மமதை…

உடல்நிலையில் சமநிலை இல்லையென்றால் ஒரு நாளின் சுழற்சியே படு மொன்னயாக மாறி மரண அடி வாங்க நேரிடுகிறது. கடந்த சில வாரங்களுக்கும் மேலாக மிக மோசமாக சளி பிடித்து ஆட்டி எடுத்துவிட்டது. சுவாச பாதையில் தொற்றோடு, ஒவ்வாமையும் ஏற்பட்டு விட்டால், நம் சிந்தனையிலிருந்து அனைத்தும் நம் சொல் பேச்சு கேட்காமல் ஆகிவிடுகின்றன. இந்த உடலின் ஒவ்வாமையால் நிதானமாக எதனையும் செய்ய இயலவில்லை. உடல் முழுவதும் குறிப்பாக எலும்புகளின் இணைப்பு பகுதிகளில் நிறைய வலி வேறு. இதனால் உடலில் உணரப்பட்ட அயர்ச்சி காரணமாக பெரும்பாலான நேரங்களில் உடல் தூக்கத்தையே அதிகம் விரும்பியது. என்னுடைய இப்படியான உடல்நிலையால், முதலில் அடிவாங்கியது, அதிகாலை உடற் பயிற்சிகள் தான். தொடர்ச்சியான அயர்ச்சியின் காரணமாக காலையில் வேகமாக எழுந்து கொள்ளவும் முடியவில்லை. கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கும் மேலாக இப்படியே போய்விட்டது. எல்லாவற்றையும் கடந்து இப்பொழுது தான் உடல்நிலை கொஞ்சம் சீராக தொடங்கியிருக்கிறது. உடல்நிலை சீராகத் தொடங்கியதும் மீண்டும் பழைய வேகத்தோடு உடற் பயிற்சிகளை தொடங்குவது கொஞ்சம் சவாலாக இருந்த போது தான், கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன்னதாக அதிகாலையிலேயே அந்த அலைப்பேசி அழைப்பு வந்தது. அங்கிள் இப்ப வந்தா விளையாடலாமா என என்னுடன் இதற்கு முன்னால் கிரிக்கெட் ஆடியிருக்கும் நாங்கள் இப்பொழுது குடியிருக்கும் கிராமத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கேட்டான். அவன் கேட்டவுடன் படுக்கையில் இருந்து எழுந்து மணியைப் பார்த்தேன். கடிகாரம் காலை 5:15 எனக் காட்டியது. சரி வாடா தம்பி விளையாடாலாம், இப்பத் தான் எந்திச்சிருக்கிறேன் ஒரு பதினைந்து நிமிடத்தில் தயார் ஆகிடுறேன் நீ வா என்றபடி அழைப்பைத் துண்டித்தேன். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் எனக்கு மிக, மிகப் பிடித்தமான விளையாட்டு. அதிலும் எனக்கு கிரிக்கெட்டைப் பார்ப்பதை விட, விளையாடுவது தான் மிகவும் பிடித்தமானது. அதனால் மீண்டும் அதிகாலை பழைய வேகத்துடன் எழுந்து கொள்ள இதனை விடச் சிறந்த காரணம் தேவையில்லை எனத் தோன்றியது. அழைப்பேசியில் என்னை அழைத்துப் பேசிய அவனுடன் ஒரு குழுவே வரும், அவர்கள் வருவதற்குள் எழுந்து தயாராகிவிட்டேன்.

ஏற்கனவே பல முறை எழுதியது தான், நாங்கள் இப்பொழுது குடியிருக்கும் வீட்டைச் சுற்றி முழுவதும் வயல்வெளிகள் தான். ஒரு முறை அறுவடை முடிந்துவிட்டால், அடுத்து வாய்காலில் தண்ணீர் வரும் வரை அடுத்த பயிரிடல் கிடையாது, அதற்கு வாய்காலின் தண்ணீர் வரத்து தான் முக்கியமான காரணம் என்றாலும், தொடச்சியான நெல் பயிரிடல் மண்ணின் உயிர்ப்புத் தன்மையை குறைக்கும், அதனால் அதற்கு ஓய்வளிக்க வேண்டும் என்கிற நோக்கிலும் பயிரிடல் அடுத்தடுத்து உடனடியாக நடைபெறாது. அப்படி இது போன்ற நேரங்களில், இப்பொழுது குடியிருக்கும் வீட்டில் எதிரே இருக்கும் நிலம், அடுத்த பயிரிடல் தொடங்கும் வரை எங்களுக்கான கிரிக்கெட் மைதானம் ஆகிவிடும். அங்கே ஆட்டத்தை ஆரம்பிக்கத் தான் அந்த அதிகாலை அழைப்பு. சொன்னது போலவே அடுத்த இருபது நிமிடத்தில் தன்னுடைய சகாக்களோட வந்து இறங்கி விட்டார்கள் தம்பிகள். அணி பிரிப்பது, யார், யார் அணியில், யார் என்கிற பஞ்சாயத்துக்கள் எல்லாம் முடிந்த பிறகு, நாணயத்தின் பக்கங்கள் யார் முதலில் மட்டையாடுவது என்பதை முடிவு செய்யும். எல்லாம் முடிந்து ஆட்டம் ஆரம்பமானது. முதலில் நான் இருக்கும் அணி மட்டையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த இடத்தில் இன்னுமொரு விஷயம். அணியை தேர்ந்தெடுப்பதிலோ, யார் மட்டையாடுவது என முடிவெடுப்பதிலோ இரண்டிலுமே நான் தலையிடமாட்டேன். பசங்களா நீங்களே எல்லாம் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க எனச் சொல்லிவிடுவேன். அப்படி எல்லாவிதமான முடிவுகளும் எடுத்த பிறகு, நாணயச் சுண்டலின் வழியே என் சார்ந்த அணி மட்டையாடுவது என முடிவெடுத்து ஆட்டம் ஆரம்பமானது. ஒரு அணியில், என்னையும் சேர்த்து நான்கு பேர்கள் என்பதால், ஒரு ஆட்டத்துக்கு ஐந்து ஓவர்கள் என முடிவானது. இது வழக்கமானது தான். முதலில் மூன்று ஓவர்கள் பசங்கள் விளையாடிய பிறகு, என்னிடம் மட்டை வரும், அப்படி வந்ததும் முதல் ஆட்டத்தில் நான்காவது ஓவர் முதல் பந்திலேயே நான் காலி. பல மாதங்கள் கழித்து ஆடுவதால் முதல் ஆட்டத்தில் முதல் பந்தில் மிக மொக்கையாக விளையாடி அவுட் ஆகி விட்டேன். இதனால் மொத்தமாக 12 ஓட்டங்கள் மட்டுமே எங்கள் அணியால் எடுக்கப்பட்டதால், எதிரணி சர்வ அலட்சியமாக ஜெயித்தார்கள். எங்களின் ஆட்டம் காலை ஆறரை மணிக்கு தொடங்கி எட்டு மணி வரை தொடரும் என்பதால் கண்டிப்பாக மூன்று ஆட்டங்கள் உண்டு.

முதல் ஆட்டத்தில் எங்களின் அணி படு தோல்வி. முதல் ஆட்டத்தில் மட்டுமே யார் முதலில் மட்டையாடுவது என்பதை நாணயம் முடிவு செய்யும். அடுத்தடுத்த ஆட்டங்களில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்குத் தோற்ற அணி கட்டுப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதன் அடிப்படையில் முதல் ஆட்டத்தில் நாங்கள் தோற்றதால் எதிர் அணியால் மீண்டும் மட்டையாட பணிக்கப்பட்டோம். இந்த முறை எல்லோருமே ஓரளவு சுதாரிப்புடன் ஆடியதால் ஐந்து ஓவர்களுக்கு முப்பதி மூன்று ஓட்டங்கள் எங்கள் அணியால் எடுக்கப்பட்டது. இம்முறை எதிர் அணி ஐந்து ஓவர்களுக்கு முப்பதி இரண்டு ஓட்டங்கள் வரை வந்து தோற்றார்கள். இதில் மிக முக்கியமான சூட்சமம் ஒன்று இருக்கிறது என்னுடைய அணியில் மூத்த அனுபவம் உள்ள ஆள், நான் மட்டுமே. மற்ற மூன்று பேரில் இரண்டு பேர் எழாம் வகுப்பு படிப்பவர்கள் ஓரளவுக்கு ஆடுவார்கள். மீதி ஒரு ஆள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். இதே போலவே எதிர் அணியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தான் மூத்தவன். நன்றாகவும் ஆடக்கூடியவன். மற்ற மூவரும் எங்கள் அணியில் உள்ளது போல் இரண்டு பேர் எழாம் வகுப்பு, ஒருவன் ஒன்றாம் வகுப்பு. இதில் நான் மட்டையாடும் போது எதிர் அணியில் இருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நன்றாக ஆடத் தெரிந்தவன் தான் எனக்குப் பந்து வீசுவான், அதே போல் தான் அவன் மட்டையாடும் போது பந்தை மற்றவர்களிடம் கொடுக்காமல் நான் தான் அவனுக்குப் பந்து வீசுவேன். ஆட்டத்தின் எந்த ஒரு சூழ்நிலையிலும் இது ஒரு அன்னிசை செயல் போல் தானாக நடைபெறும். இப்பொழுது இரண்டு ஆட்டங்கள் முடிந்திருக்கிறது, இரு அணிகளும் தலா ஒரு ஆட்டங்களில் ஜெயித்திருக்கிறோம். மூன்றாவது ஆட்டம் ஆரம்பமானது. இரண்டாவது ஆட்டத்தில் ஜெயித்த நாங்கள் அடுத்து மட்டையாடுவது எனத் தீர்மானித்து ஆடினோம். இம்முறை நாங்கள் முதலில் மட்டையாடி, ஐந்து ஓவர்களுக்கு முப்பத்தி ஆறு ஓட்டங்கள் எடுத்தோம். எதிரணி முப்பத்தி ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி. ஆட்டத்தின் இரண்டாம் பாதி ஆரம்பமானது. முதல் மூன்று ஓவர்களில் எதிரணியின் மற்ற மூவர் ஆடிய பிறகு அவுட் ஆனாலும் ஆகாவிட்டாலும் ஆளுக்கு ஒரு ஓவர் ஆடிவிட்டு, நான்காம் ஓவரில் இருந்து தங்கள் அணியின் மூத்தவரிடம் மட்டையை கொடுத்துவிடுவார்கள். அப்படி நான்காம் ஓவரில் எதிரணியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அந்த பையன் ஆட வந்தான், நான் அவனுக்கு பந்து வீச வந்தேன். மூன்றாம் ஆட்டம் என்பதாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு ஆடுவதாலும் இயல்பாகவே என்னுடைய உடல் தளர்ந்து இருந்தது. அதனால் தளர்வுடனே பந்து வீச, மட்டையாடிய பையன் நான் போட்ட எல்லா பந்துகளையும் போட்டு பொளக்க ஆரம்பித்தான். இதனை கவனித்த என்னுடைய அணியின் மற்ற பசங்கள் நாங்க வேணும்னா பந்து போடுறோம் எனச் சொல்ல, நான் நீங்க போட்ட அடிப்பான் எனச் சொல்லிவிட்டு நானே வீசிக் கொண்டிருந்தேன். அவன் விடாமல் அடிக்க நான்காம் ஓவரின் இறுதியில் முப்பத்தி ஓரு ஓட்டங்களை கடந்து கடைசி பந்தில் அவுட் ஆகிவிட்டான். இப்பொழுது ஐந்தாம் ஓவரில் எழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலை. ஆனால் ஆடுவதோ அனுபவம் குறைவான எழாம் வகுப்பு படிக்கும் பையன். அதனால் அந்த பையனுக்கு நான் பந்து போடுகிறேன் என என்னுடைய அணியில் இருந்த பையன் கேட்க, சரி என பந்தை அவனிடம் கொடுத்துவிட்டு, நான் பீல்டிங் செய்ய வந்துவிட்டேன். ஐந்தாம் ஓவரின் முதல் இரண்டு பந்தில் மூன்று ஓட்டங்கள் எடுக்கப்பட்டு விட, அடுத்த மூன்று பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலை.

அப்பொழுது தான் எனக்குள் இருந்த மமதை எழுந்து தாண்டவமாட ஆரம்பித்தது. நேராக பந்து வீசிக் கொண்டிருந்த பையனிடம் போய், பந்தை என்னிடம் கொடு, மீதி மூன்று பந்துகளை நான் வீசுகிறேன் எனச் சொல்லி விட்டேன். அவன் மறுப் பேச்சில்லாமல் என்னிடம் பந்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டான். காரணம் நான் பந்து போட்டால் கண்டிப்பாக எதிரில் மட்டையாடும் பையனால் அடிக்க முடியாது. உறுதியாக நம் அணி தான் ஜெயிக்கும் என அவனுக்குத் தெரியும். நானும் பந்தை வாங்கி நான் போடுகிறேன் நீ அடி பார்க்கலாம் என வீச, அடுத்த மூன்று பந்தையும் மட்டையாடிய பையனால் தொட முடியவில்லை. எங்கள் அணி ஜெயித்து விட்டது. ஆனால் அந்த சந்தோசத்தை என்னால் கொஞ்ச நேரம் கூட அனுபவிக்க முடியவில்லை. காரணம், ஜெயித்த பிறகு தான் நான் செய்தது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என எனக்கு விளங்கியது. காரணம் மட்டையாடியதும், பந்து போட்டதும் ஒத்த வயதுடைய விளையாட்டை இப்பொழுது தான் அனுபவித்து கற்றுக் கொண்டிருப்பவர்கள். அப்படி இருக்கையில் மூன்று பந்தில் நான்கு ஓட்டங்கள் வேண்டும் என மட்டையாடுபவனுக்கும், பந்து போடுபவன் என இருவருக்குமே தெரியும். அதனால் அவரவர் நிலையில் நாம் ஜெயிக்க என்ன மாதிரியாக விளையாடலாம் என யோசித்து ஆடிக் கொண்டிருந்தார்கள். அதனை அப்படியே விட்டிருந்தால், யார் ஜெயித்திருந்தாலும் களத்தில் ஆடிக் கொண்டிருந்த அந்த இரண்டு பையன்களுக்கும் தங்களின் நிறை குறைகளை கண்டு கொண்டு மெருகேற்றும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். நானும் கூட என்னுடைய அனுபவத்தில் இருந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து ஆட வைத்திருக்கலாம். ஆனால் ஒரு வேளை தோல்வி அடைந்தால் அது எனக்கு இழிவு என நினைத்துக் கொண்டு, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற என்னுடைய மமதையினால் அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய மொத்த அனுபவத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டேன் என்பதை யோசிக்கையில் எனக்கே என்னைப் பார்க்க அசிங்கமாக இருந்தது. உண்மையில் இங்கே வெற்றி பெற்றது யார் என யோசித்தால், என்னுடைய பந்தை தைரியமாக எதிர்கொண்ட அந்தப் பையன் தான் என எனக்குத் தோன்றியது. தொடர்ந்த நாட்களில் மீண்டும் அப்படியொரு கேவலமான தவறைச் செய்யவே கூடாது என முடிவெடுத்து ஆட ஆரம்பித்த பிறகு, தோல்வியில் கூட மிகப்பெரிய அனுபவமும், பசங்களுடன் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றிய கலந்துரையாடலும் அதிகமாகி இருக்கிறது. ஒன்றே ஒன்று தெளிவாக விளங்கியது. தகுதியான தோல்வியினால் கிடைக்கும் அற்புதமான அனுபவம், தகுதியில்லாமல் பெறும் வெற்றியினால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட மிகப் பெரியது. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *