வாழ்ந்து பார்த்த தருணம்…175

சிதையும் சமநிலை…

முடிந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள்ளாகவே ஆசிரியர் ஒருவரை அடிப்பது போல் மிரட்டியது காணொளியாக வெளி வந்து பரபரப்பான செய்தியாக விவாதிக்கப்பட்டது. மற்றொன்று கடந்த வாரம் இணையத்தின் வழியாக சீட்டு விளையாடி அதனால் ஏற்பட்ட கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்ணை பற்றிய செய்தி பரப்பரப்பாக மாறி, அரசு அதனை தடை செய்வதற்கான முன்னெடுப்புகளில் இறங்கியிருக்கிறது. அதே போல் கடந்த வாரத்தில் பெரும் பேசு பொருளான விக்ரம் திரைப்படத்தின் வெற்றி. அதற்கு அடுத்த பரபரப்பாக நடிகையின் திருமணமும், அந்த திருமணத்தின் இணையதள விற்பனைச் சந்தை மதிப்பும். மேலே சொல்லியுள்ள நான்கு செய்திகளுக்குள்ளும் பொதிந்திருக்கும் ஆழமான, மறைமுகமான ஒற்றுமை ஒன்று இருக்கிறது அது என்ன?. ஒரே வார்த்தையில் சொல்வதானால் அலைப்பேசி. அது எப்படி அலைப்பேசி எனப் பார்க்கலாம். அதற்கு முன்னதாக ஒரு சின்ன விளக்கம், இன்று 80’S Kids, 90’S Kids என்று நக்கலாக அழைக்கப்படும் அலைப்பேசிகள் அற்ற அந்த காலகட்ட இளைஞர்களின் பள்ளிப் பருவ வயதுகளில் வெளியான திரைப்படங்கள் இருக்கிறது இல்லையா, அதில் ஒரு சமநிலை உண்டு. அந்த காலகட்டத்தில் ஆக்‌ஷன் படங்களாக விக்ரம், மூன்று முகம் வெளியாகும் அதே நேரம், ஒரு உதிரிப்பூக்கள், ஒரு முள்ளும் மலரும், ஒரு மெளன ராகம் என உணர்வுப்பூர்வமான மனதை தொடும் திரைப்படங்களும் வெளியாகி அது வணிகரீதியிலும் பெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் இன்று அந்த சமநிலைக்கு நேர் எதிராக நாம் போய்க் கொண்டிருக்கிறோம். அதற்கு மிக சமீபத்திய உதாரணம் எனத் தமிழில் எடுத்துக் கொண்டால் வலிமை, பீஸ்ட் இப்பொழுது விக்ரம். அதே போல் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாகப் பார்த்தால் கே ஜி எஃப், புஷ்பா, ஆர் ஆர் ஆர் என அதன் வரிசைப் போகிறது. இப்படி மேலே சொல்லியுள்ள ஆறு திரைப்படங்களின் கதைகளுமே, அடிப்படையில் வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்டது தான். அதில் மிகப் பெரும் வசூலை வாரிக் குவித்துள்ள நான்கு திரைப்படங்களில் காட்சிகளின் வழியே, திரையில் நிகழ்த்தப்பட்டுள்ள வன்முறைகள் கணக்கில் அடங்காதவை. அதிலும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியும் அதனைப் பார்வையாளர்கள் அணுகும் விதத்தையும் பார்த்தால் உண்மையில் கதிகலங்குகிறது. ஒரு வகையில் மேலே குறிப்பிட்டுள்ள மற்றத் திரைப்படங்களை விட இந்தச் சமூகத்தில் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்திடம் விக்ரம் ஏற்படுத்தியிருக்கும், ஏற்படுத்தப் போகும் (அலைப்பேசி வழியாக) தாக்கம் மிக மிக மோசமானது, எப்படி?.

விக்ரம் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், அதன் முதல் காட்சியில், பிரதான கதாபாத்திரத்தை கத்தியால் நடு நெஞ்சை கிழிக்கும் காட்சியில் இருந்து தொடங்கி, விதம், விதமான, ரகம், ரகமான வன்முறைகள் திரைப்படம் முழுவதும் நிறைந்திருக்கிறது. இத்தகைய வன்முறையைத் தான் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சரி, இந்தத் திரைப்படம் மற்றத் திரைப்படங்களை விட எங்கு மோசமானதாக மாறுகிறது, பொதுவாக இங்கே காலம் காலமாக ஆக்‌ஷன் கதைகளாக சொல்லப்படும் கதையிலோ அல்லது திரைப்படத்திலோ அடிப்படையில் நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் இடையில் நடக்கும் சண்டையாகத் தான் அது கட்டமைக்கப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக கதை கேட்பவனுக்கோ அல்லது அதனைத் திரைப்படமாகப் பார்க்கும் பார்வையாளனுக்கோ கெட்டவனுக்கு எதிரான ஒரு மனநிலை உருவாகும், அப்படியான கெட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்கிற மனநிலை உருவாகும். இதில் கொல்லப்பட வேண்டும் என்பது கூட ஒரு வகையில் யோசித்தால் தவறான மனநிலை தான். ஆனால் விக்ரமில் என்ன நிகழ்ந்திருக்கிறது எனப் பார்த்தால், திரைப்படத்தின் பிரதான எதிர் கதாபாத்திரமான சந்தனம் மற்றும் ரோலக்ஸ் என்கிற இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சமகால திரைப்பட நாயகர்களை தூக்கிப் பொருத்தியிருக்கிறார்கள். அப்படி நடித்திருக்கும் இரண்டு பேரின் சமூக அந்தஸ்தையும் இதனுடன் பொருத்திப் பார்க்கும் கட்டாயமும் இருக்கிறது. இந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இருவருமே சமகால இளைஞர்களிடம் சமூகரீதியாக வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள். இது போன்ற காரணங்களால் அந்த இருவருக்கும் அறிமுகக் காட்சி என்பது விக்ரம் திரைப்படத்தில் நாயகனுக்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி அமைக்கப்பட்டிருக்கும் இருவருக்குமான அறிமுகக் காட்சியையும் திரையரங்கில் பார்வையாளன் கொண்டாடி மகிழ்கிறான். அந்தக் கொண்டாட்டம் எந்த அளவுக்கு என்றால், ஒரு காட்சியில் (இடைவேளைக்கு முன்பாக வரும் காட்சி) அந்த எதிர் கதாபாத்திரம் போதை பொருள் ஒன்றினை உட்கொண்டு கிளர்ந்தெழுந்து சண்டையிடும் போது, பார்வையாளனும் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறான். சமீப காலங்களில் இப்படி ஒரு மோசமான எதிர்மறை கதாபாத்திரம் ஒன்றிற்கு இந்தளவுக்கான வரவேற்பை வேறு எங்குமே கண்டதில்லை. அதில் இன்னுமொரு மிக, மிக மோசமான உதாரணம், திரைப்படத்தின் இறுதியில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திர அறிமுகம், அது முழுக்க, முழுக்க போதை பொருளால் கட்டமைக்கப்பட்டு, அந்த கதாபாத்திரத்தின் உடை, உடல்மொழி, உடலில் அணிந்திருக்கும் பொருட்கள், பச்சை குத்தியிருக்கும் வரைப்படம் எனப் போய், அப்படியே ஒருவனின் தலையை துண்டாடுவதில் அறிமுகமாகி ரசிகனின் கொண்டாட்ட கூத்தில் திரையரங்கே அதிர்கிறது. நாளை அந்தக் கதாபாத்திரம் அணிந்திருந்த அணிகலன்களில் ஆரம்பித்து, பச்சை குத்தியிருக்கும் வரைப்படம் என ஒவ்வொன்றையும் இன்றைய இளைஞர்கள் நகலெடுக்க ஆரம்பிப்பார்கள். அது அதோடு நிற்குமா என்றால் இல்லை. இதில் ஏற்கனவே திரைப்படத்தில் இடம்பெற்ற த்தா பார்த்துக்கலாம் என்கிற வசனம் பொறித்த மேலாடைகள் இணைய வெளி விற்பனையை ஏற்கனவே தொடங்கி விட்டன. இதையெல்லாம் கேட்டால் திரைப்படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பாருங்கள் என்கிற சப்பை கட்டு கட்டும் கெனத்தனமான பதில் ஒன்று வரும். அடிப்படையில் திரைப்படத்தை வெறும் திரைப்படமாக பார்க்கும் சமூகத்தை உருவாக்கும் குறைந்த பட்ச முன்னெடுப்புகள் எதையுமே செய்யாமல், அதனைப் பற்றி குறைந்த பட்சம் சிந்திக்காமல், திரைப்படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பாருங்கள் என்கிற பதிலை கேட்கும் போதெல்லாம், அப்படியான பதில் சொல்பவர்களின் பொடனியிலேயே ஒன்று போட வேண்டும் எனத் தோன்றுகிறது.

சரி உண்மையில் இங்கே திரைப்படம் ஒன்றினை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்து கடந்து செல்லும் சமூகமாக நாம் இருக்கிறோமா என்றால்?. கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மையான, நேர்மையான முகத்தில் அறையும் பதில். இல்லையெனில் இங்கே ஆள்பவர்களும், அடுத்து எப்படியாவது ஆள வேண்டும் ஆசைப்படுபவர்களும் திரை நட்சத்திரங்களை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவும், தனக்குள்ளிருந்து திரை நட்சத்திரம் ஒன்றினை உருவாக்கவும் இவ்வளவு முனைப்போடு செயலாற்ற வேண்டிய அவசியம் என்ன?. இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் இங்கே வெள்ளித்திரை என்பது என்றைக்கும் இந்த சமூகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அப்படியிருக்கையில் திரைப்படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பாருங்கள் என்கிற பதில் அயோக்கியத்தனமானது. எந்த 80’S Kids, 90’S Kids காலகட்டத்தை மேலே தூக்கிப் பிடித்தேனோ, அதே காலகட்டத்தில் திரை நாயகர்களால் நிகழ்ந்த மோசமான சமூகதாக்கத்தையும் இங்கு சொல்லித் தான் ஆக வேண்டும். அன்றைய காலகட்டத்தில் ஆண்மையின் அடையாளமாக அன்றைய திரை நாயகர்களால், குறிப்பாக ரஜினியால் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்பிடிக்கும் கலாச்சாரம், அதன் பின் மிகப் பரவலாக அன்றைய இளைஞர்களை பாதித்தது என்பதை இங்கே மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இப்படியான நிலையில் இன்றைய காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் விக்ரமைத் தவிர மற்ற திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், உதாரணமாகச் சமகாலத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கே ஜி எஃப் திரைப்படத்தின் இரு பாகங்களிலுமே எதிர்மறை கதாபாத்திரத்தின் மீது எந்த இடத்திலும் நமக்கு நேர்மறையான தாக்கம் வராது. அதுவும் போக அந்த எதிர்மறை கதாபாத்திரங்களின் மீது பார்வையாளனுக்கு கோபமே வரும். ஆனால் விக்ரமில் சந்தனம் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளனுக்கு அப்படியான கோபமே இல்லை எனும் போது, அந்தக் கதாபாத்திரம் செய்யும் அனைத்தையும் பார்வையாளர்களாகிய நாம் ஒருவகையில் ஏற்றுக் கொள்கிறோம் என்கிற மனநிலையை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் அடுத்தடுத்து விக்ரம் திரைப்படம் சம்பந்தமாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் அதனைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஒருவிதமான மன அழுத்தத்தை ஒரு வகையில் இங்கே கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனை எல்லாம் தாண்டி இந்தத் திரைப்படத்தை ஒடிடியில் விற்ற பிறகு இன்னும், இன்னும், இன்னும், பலமுறை இளைஞர்களின் பார்வைக்குப் போகப் போகிறது, இப்பொழுதே சந்தனம் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திர அறிமுக காட்சியின் திரைதுணுக்குகளின் காணொளி காட்சிகள் இணையமெங்கும் விரவிக் கிடக்கிறன, அதுவும் அந்த கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் காட்சியின் பின்னனி இசை வேறு கொண்டாடப்பட்டு பதிவேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது, இன்றைக்கு பல பேரின் அலைபேசி அழைப்பு மணியும் அதுவாகத் தான் மாறிக் கொண்டு இருக்கிறது.

இவ்வளையும் தாண்டி, திரையில் இத்தனை கொடூரமான வன்முறைகளை, கொஞ்சம் கூட முகச்சுளிப்பே இல்லாமல் இன்றைய தலைமுறையை எது ரசிக்க வைக்கிறது என யோசித்தால், முதல் பத்தியில் சொல்லியுள்ள அலைப்பேசி தான் சந்தேகமே வேண்டாம். எப்படி? இன்றைக்கு அலைபேசியில் கேம் விளையாடாத இளைஞர்கள் இருக்கிறார்களா? அப்படி கேம் விளையாடாத இளைஞர்களைத் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. எங்கும், எதிலும் குழந்தை பிறந்து பேச ஆரம்பித்த நொடியில் இருந்து படிப்பை முடிக்கும் வரை, ஏன் அதையும் தாண்டி கூட அலைப்பேசி வைத்திருக்கும் கரங்களால் கேம்கள் ஆடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதில் மிகப் பெரும்பாலான கேம்கள் அடிப்படையில் வன்முறையின் மீது தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியான கேம்களின் வழியாக அலைபேசியின் திரைகளுக்குள் பலதரப்பட்ட உயிர்களை வகை தொகையில்லாமல் கொன்று குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வகையில் அப்படியான கொன்று குவிக்கும் வன்முறை அவர்களுக்கு சுவாரஸ்யமாகவும் மாறிவிடுகிறது. அதையே தான் பேசவும் செய்கிறார்கள். அவர்களின் பேச்சில் மச்சி இன்னைக்கு நீ எத்தனை பேர கொன்ன, என்ன லெவல தாண்டியிருக்க என்பது போன்ற பேச்சுக்கள் இன்றைய இளைய சமூதத்திடம் சர்வசாதாரணமாகப் புழங்குபவை. இளைஞர்கள் தான் இப்படியென்றால், நடுத்தர வயதுடையவர்களை, நீங்கள் உங்களின் அலைப்பேசியின் வழியே ஆன்லைனில் ரம்மி ஆடினால், கண்டிப்பாக பணக்காரன் ஆகிவிடலாம் என்று திரை நட்சத்திரங்களின் வழியே சூடமேற்றி சத்தியம் செய்கிறது, அவர்களும் அலைபேசிக்குள் தங்களை பணக்காரனாக்கும் பணத்தை தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடுதல் பெரும்பாலும் நடுத் தெருவை நோக்கி அவர்களை இழுக்க, முடிவு உயிரினை மாய்த்துக் கொள்வதில் போய் முடிகிறது. ஒரு காலகட்டத்தில் ஒரு சாராசரி மனிதன் தடம்புரள்வதற்கான வாய்ப்பைத் தேடி, ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே போக வேண்டியிருந்தது. ஆனால் இன்றைக்குக் காரணமே தேவையில்லை. நம் கைகளில் மூன்றாம் விரலாக முடி சூடிக் கொண்டிருக்கும் அலைப்பேசிக்குள்ளாகவே அது இருக்கிறது. அதனுடைய அடிமையாக நாம் இருக்கும் வரை, அதனை நேரம் போவதே தெரியாமல் ரசிக்கும் வரை, மேலே முதல் பத்தியில் சொல்லியுள்ள நான்கு சம்பவங்களில் ஆசிரியரை மிரட்டும் மனநிலை முதல் தன்னுடைய திருமணத்தை அலைப்பேசியின் வழியே கண்டு ரசிக்க இங்கு இருக்கும் பெரும் கூட்டத்தின் சந்தை மதிப்பை இருப்பத்தி ஐந்து கோடிக்கு விற்பது வரை நான்கு சம்பவங்கள் மட்டுமல்ல, இதைப் போல் நானூறு சம்பவங்கள் கூட நடக்கும். காரணம், அலைப்பேசியின் வழியாக இன்றைய சமூகத்தின் சமநிலை சிதைந்து கொண்டிருக்கிறது. அதனை மாற்ற வேண்டிய பொறுப்பு நம் எல்லோருடைய கைகளுக்குள் இருக்கும் மூன்றாம் விரலான அலைப்பேசியினை நாம் கையாள்வதில் இருக்கிறது. மகிழ்ச்சி.

கடைசியாக :
பதிவின் நீளம் கருதி இன்னும் சொல்ல வேண்டிய சில விஷயங்களை சொல்லாமல் விட்டிருக்கிறேன். அதனை கண்டிப்பாக அடுத்த பதிவில் தொடர்கிறேன். நன்றி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *