வாழ்ந்து பார்த்த தருணம்…17

ஆழியே சூழினும் அடங்கமறு…

பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப்பொங்கல் அன்று ஒரு முக்கிய வேலை கடைசி நேர மாறுதலானது. சரி நாளை அலங்கநல்லூர் சென்று புகைப்படமெடுக்கலாம் என யோசனை மனதிற்குள் ஓடியது. அப்படியே போனாலும் யாரை தொடர்பு கொண்டால் அலங்காநல்லூரில் புகைப்படமெடுக்க இலகுவாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் இந்த வருடம் முன்னெப்போதையும் விட பெரும் கூட்டமிருக்கும் என்பதால். ஏன் கூட்டம் அதிகமிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். அப்பொழுது தான் என்னுடைய வீட்டிலிருந்து குறைந்த தூரத்தில் குலமங்கலம் ஊரிலிருக்கும் நண்பருடைய ஞாபகம் வந்தது. அலைபேசி எடுத்து அவருக்கு அழைத்தேன். அலைபேசியை எடுத்து பேசிய நண்பர் எதுக்கு நாளைக்கு அலங்காநல்லூர் போய் அந்தக் கூட்டத்துல மாட்டிகிட்டு, உங்களுக்கென்ன ஜல்லிக்கட்டு மாட்ட புகைப்படமெடுக்கணும் அவ்வளவு தான, மாலை மூணு மணிக்கு மேல குலமங்கலத்துக்கு கிளம்பி வாங்க என அலைபேசியை வைத்துவிட்டார். சரியென்று சரியாக மூணு மணிக்கு நண்பருக்கு அலைபேசியில் அழைத்து பேசி கிளம்பிவிட்டேன் எனச் சொன்னேன். அவர் நேரா எங்க வீட்டுக்கு வந்திடுங்க என்றார். கிளம்பி நேராக குலமங்கலம் போய் விட்டேன். அவர் வீட்டிற்கு போய் சிறிது நேர குசல விசாரிப்புகளுக்கு பிறகு, என்னுடைய மற்றொரு நண்பர் அங்கே வந்தார். அவருடன் கேமராவையும் எடுத்துக்கொண்டு ஊருக்குள் நடந்துபோக ஆரம்பித்தோம். அப்போழுது தான் நண்பர் சொன்னார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மாட்டை தயார் செய்து அனுப்புவதில் குலமங்கலத்துக்கு முக்கிய பங்குண்டு. வாருங்கள் அப்படித் தயார் செய்யப்பட்டு களம் காணும் காளைகளை தான் இப்போழுது நாம் பார்க்க போகிறோம் என கூட்டிச்சென்றார். அப்படி நாளை களம் காணும் காளைகளை இன்று அட்டகாசமாக அலங்காரம் செய்து ஊர் மந்தையில் வைத்திருப்பார்கள் என மந்தைக்கு கூட்டி சென்றார்.

மந்தைக்கு சற்று முன்னதாக ஒரு சிறிய குறுகலான சந்தில் கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்டிருக்கும் காளை மாடு ஒன்று அற்புதமான அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தது. அதை பார்த்து விட்டு மந்தைக்குப் போனால், விதம் விதமான அட்டகாசமான அலங்காரத்துடன் காளைமாடுகள், மந்தையின் இடையே ஆங்காங்கே கட்டிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாடும் தனித்தனியான கம்பிரத்துடன் நின்று கொண்டிருந்தன, புகைப்படமெடுக்க ஆரம்பித்தேன். புகைப்படமெடுக்கும் போது அதன் அருகில் சென்று அதன் கண்களை பார்க்க வேண்டுமே, கனல் தெறிக்கும் என்பார்களே, அதன் அர்த்தம் உணரவேண்டுமென நினைத்தால், ஜல்லிக்கட்டுக்கு தயாராய் இருக்கும் மாட்டின் கண்களை அருகில் சென்று பாருங்கள் சும்மா கனல் தெறிக்கும். மாட்டின் பக்கத்தில் சென்று புகைப்படமெடுக்கும் போது அதன் உரிமையாளர் அதை பிடித்துகொண்டோ, இல்லை பக்கத்தில் இருந்து கொண்டோ, நீங்க எடுங்க சார் அது ஒண்ணும் பண்ணாது என்றார்கள். எனக்கு தான் ஒவ்வொரு மாட்டின் அருகில் செல்லும்போதும் அடிவயிற்றிலிருந்து ஒரு பந்து உருண்டு தொண்டை வரை வந்துபோனது. சும்மாவா சொன்னார்கள் ஜல்லிக்கட்டு மாடு என்பது வீரத்தின் அடையாளமென்று, அதிலும் அந்த மந்தையில், அது தான் காரி என்று நண்பர் ஒரு மாட்டை காண்பித்தார். சும்மா தெறிக்கும் கருப்பு நிறத்தில் தன்னுடைய முன்னங்கால்களை மண்தரையில் தோண்டியபடி புழுதி பரக்க சத்தமிட்டு கொண்டிருந்தது அந்த ஜல்லிக்கட்டு காளை. அதன் சத்தம் சும்மா மா என்றேல்லாம் இல்லை அது ஒரு தினுசாக அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து கத்தியது. அந்த குரலில் சிங்கத்தின் கம்பிரமிருந்தது. அந்த மாட்டின் உரிமையாளர் அதை கட்டிவிட்டு அருகில் எங்கோ போய்விட்டார் போல, அந்த மாடு கட்டப்பட்டே இருந்தாலும் ஒரு பயலும் அருகில் செல்லவில்லை, அடங்கமறு என்பதின் அட்டகாசமான அடையாளம். அதிலேயே தெரிந்தது. அந்தக் காரி களத்தில் இறங்கும் போது எப்படியிருக்கும் என்பது. இப்படி ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு குணத்தில் சிறியது பெரியதுமாக ஊருக்குள் வலம் வர காத்திருந்தன. சொல்ல மறந்துவிட்டேன், இப்படி அந்த ஊரின் அனைத்து மாடுகளையும் அலங்காரம் செய்து ஊர்வலமாக கூட்டிசென்று ஊருக்கு நடுவிலிருக்கும் கோவில் பூசாரியிடம் திருநீறு பெற்று கூட்டிவருவது மரபு.

காளைகள் ஊர்வலமாக புறப்பட ஆரம்பித்ததும், கோவிலை தாண்டி காளை மாடுகள் கடந்து போகுமிடத்தில் ஒரு திருப்பத்தில் புகைப்படமெடுக்க வசதியாக, நானும் நண்பரும் நின்றுகொண்டோம். நாங்கள் நிற்குமிடத்தை தாண்டி வழிநெடுகிலும் அந்த ஊரின் இளைஞர் படை பெருங்கூட்டமே ஜல்லிக்கட்டு மாடுகள் செல்லும் வழியின் இருபுறமும் திரண்டிருந்தனர். எனக்கு இப்படி ஒரு நிகழ்வை பார்ப்பது இதுவே முதல் முறை என்பதால் ஜல்லிக்கட்டு நடக்குமிடத்தில் அதை பார்க்க கூட்டம் கூடுவது சரி, ஊர்வலமாக செல்லும் காளைகளை பார்க்க இவ்வளவு கூட்டமா என யோசித்தேன். அப்புறம் தான் தெரிந்தது, இது காசு கொடுத்து கூடிய கூட்டமல்ல தானா சேர்ந்த கூட்டமென்பது. கிட்டத்தட்ட ஒவ்வொரு காளையையும் கூட்டிவரும் பொழுதும் உச்சபட்ச புகழின் விளிம்பிலிருக்கும் தமிழ்நாட்டின் நாயகன் ஒருவன் திரையில் தோன்றும் போழுது சும்மா அரங்கம் அதிர விசில் பறக்குமே, அந்த விசில் ஓசையெல்லாம் குலமங்கலம் மக்களிடம் பிச்சை வாங்கவேண்டும், சும்மா அதிர, அதிர திறந்தவெளியில் இளைஞர்களின் விசில் சத்தம் காதை பிளந்தது. அது தான் தாங்கள் தங்களின் குடும்பத்தில் ஒருவராக மதிக்கும் நிஜநாயகர்களுக்கு இந்த மக்கள் கொடுக்கும் மிகச்சரியான, சிறப்பான மரியாதை. எவன்டா சொன்னது ஜல்லிக்கட்டு மாடுகள் துன்புறுத்தப்படுகிறதென்று, சொன்னவன் எவனாக இருந்தாலும் களத்திற்கு வந்து பாருங்களடா. இப்படி ஊரினுள் ஊர்வலமாக கூட்டிவரும் ஜல்லிக்கட்டு மாடுகளை மிகுந்த அக்கறையோடு அம்மக்கள் அலங்காரம் செய்யும் அழகு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, அருகில் இருந்து காணவேண்டிய அனுபவம் அது. தங்களது சொந்த மகனை, மகளை அலங்காரம் செய்வதற்கு ஒருபடி மேலே தான், மிகுந்த அக்கறையோடு ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பார்த்து பார்த்து அலங்காரம் செய்கிறார்கள். மாட்டுக்காக வாங்கப்படும் கயிற்றில் ஆரம்பித்து, அலங்காரத்துக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயத்துக்கும், அப்படி ஒரு மெனக்கெடல் சும்மா தெறிக்க விடுகிறார்கள். அந்த ஊர்வலத்தில் இரண்டு வயதுக்குவந்த பெண் பிள்ளைகள் கம்பிரமான ஜல்லிக்கட்டு மாடு ஒன்றை இருபுறம் கயிற்றை பிடித்து கூட்டிவந்தார்கள். அதை கூட்டிவரும்போது அந்த பெண்களிடத்தில் தெரிந்த கம்பிரமிருக்கிறதே அது, அருமை. அந்த மாடு அருகில் இருக்கும்போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று பேசக்கூட யோசிப்பார்களாம். இப்படிப்பட்ட விஷயங்களை கேட்கும்போது யாருடா அது பீட்டா உனக்கு என்னைக்கும் பேட்டா தான் என தோன்றியது. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *