வாழ்ந்து பார்த்த தருணம்…182

திரையில் தேநீர் சிந்தியவன்…

தேநீர் சிந்தியதற்கு எதற்கு ரத்தம் சிந்துன அளவுக்கு அலப்பறை எனக் கேட்பவர்களுக்கு, இதனை வாசித்து முடிக்கையில் ஏன் இந்த அலப்பறை என விளங்கிவிடும். முடிந்த ஒளரங்ஸேப் நாவல் பற்றிய பதிவில், ஒரு திரைப்படத்திற்கு போனது பற்றி எழுதியிருந்தேன் இல்லையா, அதனைப் பற்றித் தான் இந்தப் பதிவு. சுமார் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கும் முன்பு அன்றைய காலகட்டத்தில் நான் உணவகத் துறையில் பணியில் இருந்த நேரம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான வணிக நகரமொன்றில், அந்த நகரிலேயே மிகப் பிரபலமான உணவகம் ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பணி நேரம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் முடிய இரவு பதினோரு மணி ஆகிவிடும். இடையில் ஒரு அரை மணி நேரம் மட்டுமே ஓய்வெடுக்க நேரம் இருக்கும். இன்று என்னிடமிருக்கும் பல ஒழுங்குகளுக்கு அந்த உணவகத்தின் சட்டதிட்டங்கள் தான் மிக முக்கியமான காரணம் என்றால் அது மிகையில்லை. காலை உணவகத்தில் நுழையும் போது கண்டிப்பாக குளித்து முடித்து, முறையாக தலைவாரி, நேர்த்தியான உடையுடன் தான் உள்ளே வர வேண்டும் என்பதில் ஆரம்பித்து பல்வேறு ஒழுங்கு கட்டுப்பாடுகள் அங்கே உண்டு. மறுபேச்சில்லாமல் பின்பற்றியே ஆக வேண்டும். அப்படியான அந்த உணவகத்தில் தான், இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்யும் இடத்தில் என்னுடைய வேலை. இரவு உணவகத்தினை மூடும் நேரம் பத்தரையிலிருந்து பத்தே முக்கால் ஆகும். அதன் பின் இனிப்பு அடுக்கி வைத்திருக்கும் கண்ணாடி அடுக்குகள் கொண்ட அலமாரி முழுவதையும் துடைத்தெடுத்து, பின்னர் இனிப்பு அடுக்கி வைத்திருக்கும் நீள் வடிவ தட்டுகளின் பின்னால் உதிர்ந்து கிடக்கும் இனிப்பு துகள்களை எல்லாம் சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டு, அதன் பின் பழைய நிலையிலேயே எல்லாவற்றையும் அடுக்கிய பிறகு தான், உணவகத்தினை விட்டு வெளியே செல்லவே முடியும்.

ஒவ்வொரு நாளும் இந்த வேலைகள் சரியாக செய்யப்படுகிறதா என்கிற கண்காணிப்பு கண்டிப்பாக உண்டு. ஒவ்வொரு நாளும் மேற் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு சுமார் பதினோரு ணிக்கு வெளியே வருவேன். அப்படி பதினோரு மணிக்கு வெளியே வந்ததும் முதல் வேலை, அந்த உணவகத்தின் வாசலில் இருக்கும் ஒரு பெட்டிக் கடையின் முன்பு தொங்கவிடப்பட்டிருக்கும் வாரப்பத்திரிக்கை, மாதப்பத்திரிக்கை என ஒன்று விடாமல் எடுத்து வாசிக்கும் பழக்கம் எனக்கிருந்தது. அந்நாட்களில் ஆனந்த விகடன் மற்றும் இந்தியா டுடேவின் மிக தீவிரமான விசிறி நான். அதுவும் போக மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு திரைப்படத்திற்கு போவதும் தவறாமல் இருந்த பழக்கம். வாசிப்பு மற்றும் திரைப்படம் இரண்டும் தான் அந்நாட்களில் மோசமான வேலைப்பளுக்களில் இருந்து மனமும், உடலும் விடுபடும் மிக முக்கியமான என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்ளும் செயல்கள். இப்படியான நிலையில் ஒரு திரைப்படம் வெளிவந்து மொத்த தமிழ்நாடும் அந்தத் திரைப்படத்தைப் பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தது, அன்றிலிருந்து இன்று வரை என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்த ஒரு திரைப்படத்திற்கு செல்லும் முன்பும் அந்தத் திரைப்படத்தில் கதைகளனைப் பற்றி யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள மாட்டேன். இப்படியான நிலையில் என்னுடன் பணிபுரிந்த சக தோழர்கள் சில பேர், அந்தத் திரைப்படத்தினைப் பார்த்து வந்து சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். போதாக் குறைக்கு விகடன் வேறு அந்த வாரம் அட்டைப்படத்தில் அந்தப் படத்துக்கான விமர்சனத்தையே முன் அட்டைப்படமாக்கி வெளியிட்டிருந்தது. இது அத்தனையும் சேர்ந்து அந்தத் திரைப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்கிற உந்துதல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. விடுமுறை கிடைக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கிடையில் கடையில் வேலை முடிந்து வந்து இரவு தங்கும் அறைகளில், அந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்ட என்னுடன் பணிபுரிந்த சக நண்பர்கள், அதுவரை படம் பார்க்காதவர்களிடம் கதையை வேறு சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அந்த கதை என்னுடைய காதுகளில் விழா வண்ணம் விலகிப் போய்க் கொண்டே இருந்தேன். அப்படியிருந்தும் திரைப்படத்தின் இறுதி முடிவு பற்றிய ஒரே ஒரு தகவல் தவறி என் காதுகளில் விழுந்து விட்டது. ஆனாலும் அதனை சட்டை செய்யாமல் இருந்து விட்டேன். அதே நேரம் விடுமுறையும் கிடைத்தது. அன்றைய தேதியிலிருந்து இன்று வரை, ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து விட்டு வெளியே வந்த உடன் அடுத்த காட்சிக்கு அதே திரைப்படத்தையே பார்க்க நுழைவுச் சீட்டு வரிசையில் உடனடியாக நின்றது. இந்த ஒரு திரைப்படத்திற்கு மட்டும் தான்.

அன்றைய நாட்களில் ஒரு திரைப்படம் வெளியாகி நன்றாக இருக்கிறது எனப் பரவலாக தெரிந்துவிட்டால், திரையரங்கில் நுழைவு சீட்டு வாங்குவது லேசான காரியம் அல்ல. அப்படியிருந்தும் மிகச் சரியாய் திட்டமிட்டு காத்திருந்து நுழைவுச் சீட்டு எடுத்து திரையரங்கினுள் போயாயிற்று. திரைப்படம் ஆரம்பமாகியது தொடக்கமே அட்டகாசமான காதல் பாடல் தான். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும். அன்றைய காலகட்டத்தில் வேலை ஒன்றினைத் தவிர எனக்கு வேறு நினைவுகளே கிடையாது. அதனால் என் வாழ்வில் பெண், காதல் என்பதற்கான வாய்ப்பேயில்லை, யோசிக்கவும் முடியாது. இத்தனைக்கும் அது பதின்ம வயதுகளின் இடைப்பட்ட காலம். நம் வாழ்க்கையில் எல்லாம் காதலே கிடையாதா என்கிற ஏக்கம் மட்டுமே மிச்சமிருந்த காலகட்டம். இப்படியான கால கட்டத்தில் வெளியான அந்தத் திரைப்படம் தான் காதல் கோட்டை. எப்படியான மனநிலையில் அந்தத் திரைப்படத்தினைப் பார்த்தேன் என்பதற்காகத் தான் மேலே சொன்னத் தகவல். இப்பொழுது மீண்டும் திரையரங்கிற்கு வருவோம் காலமெல்லாம் காதல் வாழ்க எனத் தொடங்கும் படத்தின் தொடக்கப் பாடலுக்கு என் கால்கள் எல்லாம் தரையிலேயே இல்லை. திரையை நோக்கி உற்சாகமாகக் கத்திக் கதறிக் கொண்டிருந்தேன். அதன் பின் திரைப்படத்தின் கதைக்குள் அமிழ்ந்து போக ஆரம்பிக்க, வெள்ளரிக்கா பாட்டுக்கு சின்னதாகவும், கவலைப்படாதே சகோதராவுக்கு, அமர்ந்திருந்த இருக்கையே அதிரும் படியும் ஆடித் தீர்த்தேன். திரைப்படமும் இறுதிக் காட்சியான தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து விட்டது. மொத்த திரையரங்கமும் இமைக் கொட்டாமல் அஜித் சட்டைய கழட்டிறமாட்டாரா, அஜித்தும், தேவயானியும் சேர்ந்து விடுவார்களா என இதயம் அதிர, தனக்கு பிடித்தமான தெய்வங்களிடம் எல்லாம் எப்படியாவது அவங்க இரண்டு பேரும் சேர்ந்திரணும் சாமிய்ய்ய், அப்படி அவங்கச் சேர்ந்திட்டா நான் மொட்டையடிக்கிறேன், காது குத்துறேன், பொங்க வைக்கிறேன் என்கிற அளவுக்கு மொத்த திரையரங்கும் திரையையே பார்த்துக் கொண்டிருக்க, இங்கே தான் நான் முன்னரே கேட்ட இறுதி முடிவு பற்றிய அந்த ஒரு தகவல் என் காதுகளுக்குள் கேட்டது. நான் கேட்ட அந்த தகவல் என்னவெனில், அஜீத்தோட சட்டையில டீ விக்கிறவன் ஒருத்தன் வந்து டீய ஊத்திருவான் என்பது தான் அது. மொத்த திரையரங்கமும் அஜித் சட்டைய கழட்டணுமே, தேவயானியோட சேரணுமே என யோசித்துக் கொண்டிருக்க. நான் மட்டும் திரைக்குள் எங்க அந்த தேநீர் விக்கிறவன காணோம் எனத் தேடிக் கொண்டிருந்தேன். தேநீர் விற்பவன் வந்து தேநீரை அஜித்தின் சட்டையில் கொட்டியவுடன் நான் அடைந்த உற்சாகத்திற்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை. ஆனாலும் அடுத்த கொஞ்ச காலத்துக்கு காதல் கோட்டையின் மீது டீயை ஊற்றிய கதையை என் காதுபட சொன்னவனை, என் கண் முன்னே காணும் போதெல்லாம், இவன் மேல சூடா டீ ஊத்துனா என்ன என்கிற எண்ணம் எனக்கு மட்டும் தான் வந்ததா எனத் தெரியவில்லை. இருந்தும், கடைசி வரை அந்த கதை சொன்னவனின் மீது எதுவும் ஊற்றப்படவில்லை என்பதை இந்த சமூகத்திற்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *