வாழ்ந்து பார்த்த தருணம்…194

அதிகாலை அலைப்பறைகள்…

அதிகாலை மூன்று மணி, அலைப்பேசியின் அலாரம் அலறியது, எழுந்து அணைத்தேன். காலைக் குளிர் முகத்தில் அறைந்தது. அதனை உள்வாங்கிக் கொண்டே நடுங்கியபடி எழுந்தால் கண்களில் எரிச்சல் மிச்சமிருந்தது. மூன்றே காலுக்கு அடுத்து அலறப்போகும் அலாரத்தின் சத்தம் வரும் வரை மீண்டும் தூங்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் மூளைக்குள் தொடர்வண்டி நிலையம் இங்கிருந்து 15 கிலோமீட்டர்கள், சீக்கிரம் எழுந்திருடா வெங்காயம் என்கிற எண்ணங்கள் மனதினுள் உந்தித் தள்ள, சட்டென எழுந்து மூன்றே காலுக்கு அலறத்தயாராக இருந்த அலாரத்தை அமைதியாக்கினேன். முந்தைய இரவு எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டுப் படுக்க பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அந்த அலுப்பு உடலில் மிச்சமிருந்தது. ஒரு நாள் முன்னதாக தான் இந்தப் பயணம் முடிவானது. திடீர் பயணம் தெலுங்கானா வரை, நேற்றைக்கு முந்தய நாள் முடிவெடுத்து, நேற்றைக்குள் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகளை அவசர அவசரமாக முடித்துவிட்டு. இரவு வீட்டுக்கு வர தாமதமாகி, கிளம்ப வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு உறங்கச் செல்வதற்குள் ஒரு மாதிரி ஆகிவிட்டது. 5:30 மணிக்குள் தொடர்வண்டி நிலையத்தை அடைய வேண்டும் என மனதினுள் இருந்து பட்சி மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்த, தண்ணிரை வெந்நீர் ஆக்கும் வேலையை தொடங்கிவிட்டு, மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். எல்லாம் சுபமாய் முடிந்து குளித்து முடித்து, வீட்டில் இருந்து கீழிறங்கி குளிருக்கான ஆடையோடு தோளிலும், முதுகிலும் சுமையோடு இருசக்கர வாகனத்தை முடுக்கினேன். வீட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பெரும்பாலும் வயல்வெளிகள் என்பதால், தலைக்கவசத்தைத் தாண்டி குளிர் முகத்தில் அறைந்தபடி இருந்தது. சாலையில் பெரிய அரவமில்லை. சாலை விளக்குகள் இல்லாத இடங்களில் வாகனத்தின் முகப்பு வெளிச்சம் மட்டுமே கூட பயணித்தது. அந்த அதிகாலையிலேயே ரோட்டோரத்தில் காலை கடனுக்காக குத்த வைத்து அமர்ந்திருந்தவரின் முகத்தில், அவர் நோண்டிக் கொண்டிருந்த அலைப்பேசியின் வெளிச்சம் பரவியிருந்தது, என்னுடைய இரு சக்கர வாகனத்தின் சத்தமோ, விளக்கு வெளிச்சமோ அலைப்பேசியின் மீதான அவரின் கவனத்தை ஒன்றுமே செய்யவில்லை. கடனை முடித்த பிறகாவது எழுந்து கொள்வாரா அல்லது… அது அவர் நோண்டிக் கொண்டிருக்கும் அலைப்பேசிக்கே வெளிச்சம்.

அதையும் தாண்டிப் பயணித்தால் ஒரு சின்ன வலதுபுற திருப்பத்தில், சாலையோரம் வயலுக்கு நீர் செல்லும் வாய்காலில் இரு லாரிகள் கழுவப்பட்டுக் கொண்டிருந்தன, அதனைத் தாண்டிய சிறிது தூரத்தில், ஒரு சிறிய ரோட்டோர உணவகத்தின் சமையல், வாசலில் வீற்றிருந்த விறகு அடுப்பில் தொடங்கி, பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது, அதனைத் தனியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த பெண் என்னுடைய வாகன சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தார். அந்த அதிகாலை குளிருக்கு இதமாக விறகு அடுப்பு தணலின் கதகதப்பில் நின்று கொண்டிருந்த அவரைப் பார்க்கையில் கொஞ்சம் பொறாமையாய் இருந்தது. சாலைக்கு நடுவே இருந்த சிறிய தடுப்புச் சுவரின் ஓரத்தில், தார்சாலையில் மிச்சமிருக்கு சூட்டை தன் உடலுக்குள் உறிஞ்சியபடி அதிகாலைக் குளிருக்கு இதமாய் நாய்கள் உறங்கிக் கொண்டிருந்தன. கொஞ்ச நேரத்தில் பிரதான சாலையை அடைந்தேன், அந்தச் சாலை அதிகாலை பரபரப்பினைத் தொடங்க எத்தனித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கவனமாய் தான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது, காரணம், சாலையில் ஆங்காங்கே மாடுகள் சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு கன்றுக் குட்டி தாயின் மடுவில் பால் குடித்துக் கொண்டிருந்தது, அதனைப் பார்த்தவுடன் பயணச் செலவுக்கு பணம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற, அடுத்த சில நிமிடங்களில் வரப் போகும் வங்கியின் பணமெடுக்கும் இயந்திரம் இருக்கும் இடம் ஞாபகத்தில் வந்து, வாகனத்தை சரியாக அதன் முன்னர் போய் நிறுத்தினேன். வெளியில் இருக்கும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க இரவுக் காவலாளி இயந்திரமிருக்கும் குளிருட்டப்பட்ட அறைக்குள் இருக்கையை போட்டு வாகாக அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். உள்ளே போனதும் தூங்கம் களைத்தவராய், ஹெல்மெட்ட கழட்டுங்க தம்பி என்று சொல்லிக் கொண்டே, இது ஒழுங்கா எடுக்காது, அந்த மெசின் சரியா எடுக்கும் அதுல போடுங்க என்றார், பணத்தை எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வாகனத்தை அலுவலக கீழ்தளத்தில் நிறுத்திவிட்டு தொடர்வண்டி நிலையம் நோக்கி நடந்தேன், அலுவலகத்திலிருந்து பிரதான சாலையை அடையும் திருப்பத்தில் இருக்கும் தேநீர் கடை, காலை நேர பரபரப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. சாலையில் யாருமில்லை, சுமையோடு நடந்து போய் தொடர்வண்டியின் பின் பக்க வாசலை அடைந்தால், சற்று முன் ஏதோ ஒரு தொடர்வண்டியில் வந்திறங்கிய கணவன், மனைவி இருவரும் தாங்கள் சாக்கில் போட்டு கொண்டு வந்திருந்த கோழிகளை ஆட்டோவின் பின்னே ஏற்றிக் கொண்டிருந்தார்கள், சாக்குக்குள் இருந்த கோழிகளின் சத்தத்தை கடந்து நடந்து போனால், போக வேண்டிய தொடர் வண்டி ஐந்தாம் எண் நடைமேடையில் இருப்பதாக ஒலிப்பதிவு பெண் அறிவித்துக் கொண்டிருந்தார். உள்ளே நுழைந்து படிக்கட்டுகளை நோக்கி நடந்து போகையில் தான் கவனித்தேன், அந்த தொடர்வண்டி நிலையத்தில் வலது ஓரமாய் முளைத்திருந்த புற்களை சில குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன, ஆமாம், வைகை கரையை ஒட்டி சுற்று சுவர் எழுப்பட்ட பிறகு, குதிரைகள் மேயப் போக்கிடமில்லாமல் இப்படித் தான் மதுரையெங்கும் சுற்றியலைந்து கொண்டிருக்கின்றன. அதனை யோசித்துக் கொண்டே தானியங்கி படிக்கட்டுகளை நோக்கி நடந்தால், இறங்கிக் கொண்டிருந்த படிக்கட்டுகள் இயங்கிக் கொண்டிருந்தன, ஏற வேண்டிய படிக்கட்டுகள் யாராவது வாங்களேன் என இயங்காமல் நின்று கொண்டிருந்தன. அதன் அருகில் போனதும், அது ஆசையாய் மேல் நோக்கி ஓட ஆரம்பிக்க, கொண்டு வந்த சுமை ஒன்றினை அதன் மீது வைத்துவிட்டு அசுவாசமானேன். மேலே ஏறும் வரை படிக்கட்டுகளுடன் இருந்த பந்தம், மேலே ஏறியதும் விடுபட்டுவிட்டது. அங்கிருந்து ஐந்தாம் நடைமேடையில் இறங்கி ஏற வேண்டிய பெட்டியை நோக்கி போய் கொண்டிருந்த போது, பசியின் நாக்குகள் வயிற்றுக்குள் தென்படத் தொடங்கின, அந்நேரத்துக்கு ஏற வேண்டிய பெட்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்த தேநீர் விற்பவர் என் கண்களுக்கு அந்தக் குளிருக்கும், பசிக்கும் தேவதையாய் தெரிந்தார். அப்பொழுது தான் பர்சுக்குள் சில்லரையே இல்லை என்பது மண்டையில் உறைத்தது. தேநீர் விற்பவரிடம் 500ரூபாய்க்கு சில்லரை இருக்காண்னே என வினவினேன், இல்லை என அவர் உதட்டை பிதுக்கும் போது, காலங்காத்தால வந்திட்டானுக என அவர் மனதில் ஓடுவது முகத்தில் தெரிந்தது. சற்றுமுன் தேவதையாய் தெரிந்தவர், அடுத்த நிமிடத்தில் கண்முன்னே காணாமல் போனார். பெட்டிக்குள் சுமையை வைத்துவிட்டு கூட பயணிக்கும் நண்பனுக்காக காத்திருந்தேன். அடுத்த தேநீர் விற்கும் ஆண் தேவதையை பார்ப்பதற்காக, அடுத்த நிறுத்தம் போகும் வரை ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதிகாலை 3 மணிக்கு எழுந்து 5:30 மணிக்கு ஒரு தேநீருக்காக காத்திருப்பவனின் பயணம் தொடர்வண்டியின் சங்கோசையுடன் இனிதே தொடங்கியது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *