வாழ்ந்து பார்த்த தருணம்…195

Likeக்கால்…

சமீபகாலமாக மிக முக்கியமாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு செயல், என்னை மிகவும் பாதித்துக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டே இருக்கும் வேளையில், எழுதுவதிலிருந்தும், பேசுவதிலிருந்தும், வாசிப்பதில் இருந்தும், உரையாடுவதிலிருந்தும் தொடர்ந்து மிக, மிக மோசமாக அந்நியப்பட்டு விலகி ஓடிக் கொண்டே இருக்கிறோம். வார்த்தைகளற்ற மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம், அதுவும் இந்த சமூக ஊடகம் ஒன்றினை கையாளப் பழகிய பிறகு, அதனை நம் வாழ்வில் இருந்து தவிர்க்கவே முடியாது என்று ஆன பிறகு, அது மிக, மிக மோசமான மனநிலையை நோக்கி நம்மை நகர்த்தியபடி இருக்கிறது. இந்தச் சமூக ஊடகத்தை உருவாக்கியவர்கள் மிக, மிகத் தெளிவாக, நம் உணர்வுகள் அனைத்தையும் சிறிய அளவிலான பொம்மை வடிவங்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். எல்லாவித உணர்வுக்கும் அந்த பொம்மைகளைத் தேடி தட்டிவிட்டு, கடந்து போய்க் கொண்டிருக்கப் பழகி இருக்கிறோம். விருப்பம், அன்பு, காதல், கோபம், அழுகை, ஆச்சர்யம் என அனைத்திற்கும் இணையம் முழுவதும் எல்லாவிதமான சமூக ஊடகப் பக்கங்களிலும், வினையாற்றும் பொம்மைகள் (emojis) குவிந்து கிடக்கின்றன. எல்லா சமூக ஊடக தட்டச்சு பலகைகளிலும், பின்னூட்டத்திற்கு பக்கத்திலும் அவை காத்துக் கிடக்கின்றன. உண்மையில் இதனை உருவாக்கியவன் எந்த நோக்கத்தின் அடிப்படையில் இதனை உருவாக்கினான் எனத் தெரியவில்லை. நாம் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதின் வழியே நம்மிடம் இருக்கும் சொற்களை, உணர்வுகளை இழப்பது மட்டுமல்லாமல், உணர்வற்ற, சொற்களற்ற நடமாடும் இயந்திர மனிதர்களாக மாறிக் கொண்டே வருகிறோம். ஒரே ஒரு விருப்பக்குறியாவது (Like) இடுங்கள் என கேட்டுப் பெறும் மனநிலையை நோக்கி இந்தச் சமூகம் நகர்ந்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது எனத் தெரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு செயலுக்கான விளைவையும், முடிவையும், உடனடியாக எதிர்பார்க்கிறோம். இதனால் என்ன விளைகிறது எனக் கேட்டால், பொறுமை, நிதானம், காத்திருப்பு என்கிற பண்பெல்லாம் நம்மிடம் இருந்து விலகி ஓடிக் கொண்டிருக்கிறது. நின்று நிதானித்து, கவனிப்பது, உள்வாங்குவது, ரசிப்பது என எதுவும் இல்லை. விருப்பக் குறிகளுக்காகவே (Like) இங்கே எல்லாமே செய்யப்படுகின்றன. ஒரு நாளில் எத்தனை விருப்பக்குறிகள் (Like) பெற்றிருக்கிறோம் என்பதே, ஒவ்வொரு நாளுக்கான அதிகபட்ச மதிப்பீடாக மாறிக் கொண்டிருக்கிறது. விருப்பக்குறிகளை அதிகம் பெற வேண்டும் என்கிற வேட்கை ஒருவனை எந்த எல்லைக்கும் போக வைத்துக் கொண்டிருக்கிறது. எதை எல்லாம் பார்க்கிறோமோ அது எல்லாவற்றையும் உடனடியாக நுகர்ந்து விட ஆசைப்படுகிறோம். அது எவ்வளவு எதிர்மறை விஷயமாக இருந்தாலும், அதனால் இந்த சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்பை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், முழுக்க, முழுக்க எதிர்மறை வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட காணொளிகளால், கருத்துக்களால் சமூக ஊடகம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதுவே சதா சர்வகாலமும் நம் கண்களில் படும்படியான சலனப்படங்களாக அலைப்பேசிக்குள் அவைகள் அலைபாய்ந்தபடி இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால், விருப்பக்குறிக்காக (Like) சர்வசாதாரணமாக கருத்துக்கள் திருடப்படுகின்றன. அதுவும் திருடிய தடயமே இல்லாமல். பல நேரங்களில் தன்னுடைய கருத்து திருடப்பட்டிருக்கிறது என்பது கூட இங்கே பலரால் உணரப்படுவதில்லை. எல்லாமே விருப்பக்குறிகளால் தான் என்றான பிறகு, அதுவே கடவுள் என்கிற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். தன்னுடைய வாட்ஸப் ஸ்டேட்டசை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது அன்றைக்கான மிகப் பெரும் சாதனையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதற்கு நாம் நினைப்பவர்கள் எவ்விதமாக எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கொடுக்கும் அழுத்தம் இருக்கிறது இல்லையா, அதனைப் போலான மிக மோசமான அழுத்தத்தை என் காதுகளில் கேட்கும் புலம்பல்களின் வழியே அறிகையில் மனம் மிகுந்த அஞ்சமுறுகிறது. இறப்புத் தகவலைக் கூட நான் வாட்ஸப் ஸ்டேட்டசில் வைத்தேன் நீ பார்க்கவில்லையா என்கிற கேள்விகெல்லாம் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

உணர்வுகள் என்பது என்ன? அது வார்த்தைகளின் கட்டமைப்பு இல்லையா, இதற்கு முன்னால் அதனை எத்தனை, எத்தனை வடிவங்களில் பேசியிருக்கிறோம் சொல்லி இருக்கிறோம், இன்றைக்கு அவை அத்தனையும் ஒரே ஒரு வினையாற்றும் பொம்மையின் (emojis) முகபாவனைக்குள் அடங்கி விட்டன அல்லது அடக்கப்பட்டுவிட்டன. மனம் அந்த அளவுக்கு இறுகிப் போய் எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், இப்படி உணர்வுகளை அடக்கிக் கொண்டே போகும் மனம், ஒரு கட்டத்தில் எந்த இடத்தில் வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டுமோ, அந்த இடத்தில் மிகச் சரியாக வெடித்துச் சிதறிவிடுகிறது. அந்த சிதறலில் உறவுகள், நட்புகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. இதனை எல்லாம் யோசிக்கும் போது, ஒரு முறை நான் வாசித்த கவிதை ஒன்று இங்கே மிகச் சரியாய் ஞாபகம் வருகிறது. அந்தக் கவிதை, ஒரு எடுக்கப்படாத அலைப்பேசி அழைப்புக்குப் பின்னால் ஓராயிரம் கற்பனைகள் உருவாக்கப்படுகின்றன என்கிற வரிகள் தான் அவை. இது ஒரு பக்கம் என்றால், இன்று நம் மனதை, நாம் பதிவேற்றும் புகைப்படத்தையோ, எழுத்தையோ அல்லது வேறேதேனும் ஒன்றையோ கவனித்து விருப்பக்குறி (Like) இடாதவர்களை, நம்முடைய எதிரிகளாகவும், நமக்கு வேண்டாதவர்களாகவும், நம்மை புறக்கணிப்பவர்களாகவும் கற்பிதம் கொள்ள பழக்கி இருக்கிறோம். விருப்பக்குறி (Like) என்கிற ஒன்று நம் வாழ்வில் வந்த பிறகு, நாம் எப்பொழுதும் கவனிக்கப்படும், கொண்டாடப்படும் நபராக இருக்க வேண்டும், என்கிற எண்ணம் நம் மனதினுள் ஆழமாக வேரூன்றி, அது நம்மை, நம் மனதை ஆட்டுவிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வேர் மிக ஆழமாக, குழந்தைகளிடத்திலும் பரவிக் கொண்டிருப்பது தான், இந்த சமூகம் மிக, மிக மோசமான நோய் குறி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளம். அது தான் கவனிக்கப்படுதல் என்கிற ஒன்றிற்காக எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையை நோக்கி இன்றைய இளம் சமூகத்தினரை தள்ளிக் கொண்டு இருக்கிறது. அது தான் பலவிதான உயிர்பலியையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. முதலில் நாம் செய்யும் செயல், நம்முடைய விருப்பதிற்குரிய ஒன்றாக, நேசிப்பிற்குரிய ஒன்றாக இருக்கிறதா என்கிற கேள்வியை நம்மை நோக்கி நாமே மிக ஆழமாக கேட்கும் நொடியில் தான், இந்த மாற்றதிற்கான முதல் புரிதல் துவங்கும், அந்தத் துவக்கத்தை நம்மில் இருந்து முன்னெடுப்பது தான், நம் அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்ல வேண்டிய, கொடுக்க வேண்டிய மிகச் சிறந்த மாற்றமாய் இருக்க முடியும். அந்த மாற்றம் கண்டிப்பாக மற்றவர்கள் கொடுக்கும் விருப்பக்குறிக்காக அல்ல. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *