வாழ்ந்து பார்த்த தருணம்…25

என்னுடைய எழுத்துக்களில் முதன்முதலாக சற்றேப் பெரிய சிறுகதை…

ஏன் என்றால் அது வாள்…

கொஞ்ச நாட்களாக தான் அந்த செய்தி நாடு முழுவதும் பரவியபடி இருந்தது. அந்தச் செய்தி என் காதுகளுக்கு வந்து சேர்வதற்குள் கிட்டத்தட்ட நாடு முழுவதும் பெரும்பாலானவர்களை சென்றடைந்துவிட்டது. அதையும் தாண்டி உலகம் முழுக்க கூட பரவியபடி இருந்தது. எல்லாருடைய விவாதத்திலும் கண்டிப்பாக அந்த செய்தி தவறாமல் இடம் பிடித்தது. கேள்விப்பட்ட செய்தி பற்றி மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், சிரத்தையுடனும் பேசினார்கள். அந்த செய்தி இது தான் புதியதாக ஒரு வாள் ஒன்று உருவாக்கபட்டிருக்கிறது. அந்த வாள் சாதாரணமானதில்லை, அதை கையில் எடுத்து சுழற்ற ஆரம்பித்தால், அது நிகழ்த்தும் மாயாலஜாலம் சொல்லில் அடங்காதவை, அதை மிகச்சரியாக கையாள தெரிந்தவனை அது வீரனாக்கிவிடும் என்றும், ஆனால் அதனை வசப்படுத்தி கையாள தனித்த பயிற்சி வேண்டும் எனப் பேசிக்கொண்டார்கள். இதை எல்லாம் கேள்விப்பட்ட எனக்கு, அந்த வாள் பயிற்சியை கற்றுக்கொண்டு பெரிய வீரனாக வேண்டும் என வண்ண, வண்ணக் கனவுகள் தோன்றி மறைய, அந்த கனவுகளை நிஜமாக்கும் எண்ணம் மிக ஆழமாக மனதினுள் வேரூன்ற ஆரம்பித்தது, அதற்காக தினமும் சிறிது நேரமேனும் ஒதுக்கி அந்த வாள் சுழற்றும் பயிற்சியை பற்றிய விபரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். நான் அப்படி விவரங்களை சேகரிக்கிறேன் என்பதை தெரிந்து கொண்ட நண்பர்களும் ஆர்வமாகி, அதைப் பற்றி தாங்கள் தெரிந்து கொண்டதை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு முக்கியமான நாளில், நான் அந்த வாள் பயிற்சி கொடுப்பவரைத் தேடி புறப்பட்டுப் போய் பயிற்சி முடித்து விட்டு தான் ஊர் திரும்புவது எனத் தீர்மானித்தேன். என்னுடைய முடிவுக்கு உடன்பட்ட என்னுடைய நண்பர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். எங்களின் பயணம் அந்தப் பயிற்சியாளரை நோக்கி ஆரம்பமானது. பயணம் என்றைக்குமே சுவாராஸ்யமானது தான், ஆனால் நாம் என்ன மனநிலையில் பயணிக்கிறோம், எதற்காக பயணிக்கிறோம் இந்த இரண்டு விஷயங்கள் தான், அந்த பயணத்தின் சுவாரஸ்யத்தை தீர்மானிக்கின்றன. எங்கள் அனைவரின் நோக்கம் ஒன்றாக இருந்ததால், பயணத்தின் போது அந்த வாள் பயிற்சியை சுற்றி தான் பெரும்பாலான நேரங்களில் பேச்சும் இருந்தது. பயணத்தின் இடையில் சந்திக்கும் மக்களிடமும் வாள் பயிற்சி பற்றியே பேசினோம். சில பேர் கிண்டல் செய்தார்கள், சில பேர் அது முடியாத காரியம் என்றார்கள், இன்னும் சில பேர் நாங்கள் அப்படிப் போய் பயிற்சி எடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றார்கள். இப்படி பல தரப்பட்ட பேச்சுகள் எங்களின் பயணத்தின் ஊடே காதில் விழுந்தபடியே இருந்தது. பெரும்பான்மையான பேச்சுகள் கண்டிப்பாக எங்களின் பயணத்தை நிறுத்திவிட்டு ஊர்போய் சேருங்கள் என்பதாக இருந்தது. அந்தப் பேச்சுகளை நம்பியும் கூட வந்த நண்பர்கள் சிலர் பயணத்தை பாதியில் விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பிப் போய்விட்டார்கள். கடைசியில் பயிற்சியாளரை சென்று சந்திக்கும் நிலையில் சொற்ப நண்பர்களே மிஞ்சினர்.

கடைசியாக பயிற்சியாளர் இருக்குமிடத்தை வந்தடைந்தோம். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு பயிற்சியாளர் எங்களை பற்றிய விபரங்களை கேட்டுக்கொண்டார். எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறீர்கள். எத்தனை நாள் பயணம் என்பதை எல்லாம் கேட்டு அறிந்து கொண்டார். பயிற்சியாளர் சொன்னார், என்னிடம் பயிற்சி எடுத்துச் சென்ற சில பேர் வெவ்வேறு ஊர்களில் பயிற்சியாளராக இருக்கிறார்கள், அவர்கள் இன்னும் வெளியில் அதிகமாக அறியப்படவில்லை என்றார். எங்களுக்கு அந்தத் தகவல் ஆச்சர்யமாக இருந்தது. இப்படியே பேச்சு போய்க் கொண்டிருந்தாலும் எங்கள் அனைவரின் மனநிலையும் அந்த வாளை முதலில் பார்க்க வேண்டும் என்பதில் இருந்தது. எங்களின் மனநிலையை மிகச்சரியாக உள்வாங்கியவராய் பயிற்சியாளர், சரி முதலில் அந்த வாளை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் தான் புரிந்தது, இவ்வளவு நேரமும் எங்களிடம் பேசிக்கொண்டிருந்த பயிற்சியாளர், நாங்கள் என்ன யோசிக்கிறோம், என்ன கேட்கப்போகிறோம் என்பதை முன்னரே உணர்ந்து பதில் அளிக்கிறார். இவர் வாள் பயிற்சியில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர் இல்லை. அதைத்தாண்டி நிறைய வித்தைகளில் தேர்ச்சி பெற்றவர் என்பது.

வாள் இருக்குமிடத்திற்கு எங்களை அழைத்து சென்றவுடன், அனைவரும் அந்த வாளினை கையில் ஏந்தியபடி, தொட்டு தடவிப்பார்த்தோம். அந்த அபூர்வ வாள் எந்தெந்த உலோகங்களின் கலவை என்பதையும், எந்த உலோகங்கள் எல்லாம் எந்தெந்த அளவுகளில் எவ்வளவு சேர்மானம் ஆகியிருக்கின்றன, மொத்தத்தில் செய்து முடித்த போது அதன் எடை என்ன, கைப்பிடிக்கு மேல் என்ன எடை இருந்தால், அதை சுழற்ற ஏதுவாக இருக்கும் என்ற கணக்கீடு, என்ன முறையில் கணக்கிடப்பட்டது, என்பது உட்பட ஒன்றுவிடாமல், அதன் தயாரிப்பில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் முழுமையாக விளக்கினார். அவர் விளக்கி முடித்ததும் நண்பன் ஒருவன் கேட்டான், இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள் என்றால், இதனை யார் வேண்டுமானாலும் தயாரித்து விட முடியும் இல்லையா என்றான், அதற்கு பயிற்சியாளர் கண்டிப்பாக, தாராளமாக, இந்த விபரங்களை கேட்டறியும் யாரும் இந்த வாளினை தயாரித்து விடலாம். ஆனால் ஒன்று நீங்கள் பயிற்சியை மிகச்சரியாக புரிந்து கொண்டு கற்றுக்கொண்டால் ஒழிய, அந்த வாளினை தயாரிப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. காரணம், ஒவ்வொரு உலோகங்களுக்கும் ஒவ்வொரு குணாதசியம் உண்டு, அது ஒன்றோடு ஒன்று சேரும் போது அது பல்வேறு தன்மைகளில் தன்னை வெளிப்படுத்தும். அதனை மிகச்சரியாக உள்வாங்கினால் ஒழிய, அந்த வாளை அதன் முழுமையான தன்மையுடன் தயாரிக்க முடியாது என்றார். அத்தோடு யாரும் எதுவும் கேட்கவில்லை.

தினமும் காலை எத்தனை மணிக்கு பயிற்சி தொடங்கும். மாலை எத்தனை மணிக்கு முடியும். எவ்வளவு நாள் பயிற்சி என்பதை விரிவாக விவரித்தார். கேட்டுக்கொண்டோம். அதிகாலை 4:30 மணிக்கு பயிற்சி தொடங்கி மாலை 6:30 மணிக்கு முடியும். அதன் பிறகும் உங்களுக்கு விருப்பமென்றால் நீங்கள் கற்றுக்கொண்டதை தனித்துப் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதற்கு எவ்வித தடையுமில்லை. அது உங்களின் ஆர்வத்தை பொறுத்தது எனச் சொல்லிவிட்டார். பயிற்சி நாட்கள் என்பது உங்களின் கற்றுக்கொள்ளும் ஈடுபாட்டை பொறுத்தது. பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போதே கற்றுக்கொண்டவரை போதும் என நினைப்பவர்கள் தாராளமாக இடைநிறுத்தம் செய்துகொண்டு போய்விடலாம் என்றார். பயிற்சி கற்றுக்கொள்வதை பற்றி ஒரு வகையில் யோசித்தால், எல்லாமே எங்கள் கைகளில் தான் இருந்தது. பயிற்சியாளர் தன்னுடைய பயிற்சியை மட்டும் எவ்வித பாரபட்சம் இல்லாமல் முழுமையான ஈடுபாட்டுடன், அதன் அனைத்து தன்மைகளோடு கற்றுக்கொடுப்பார். மற்றவை அனைத்தும் எங்கள் கைகளில் தான் என்பது தெளிவாகப் புரிந்தது.

பயிற்சி ஆரம்பமானது ஈடுபாட்டோடு கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், மற்றவர்களும் அதே போல் தான், பயிற்சியின் இடையில் பயிற்சியாளர் வேறு சிந்தனை எதனையும் மனதினுள் இருத்தாமல், எவ்வளவு தூரம் முழுமையான ஈடுபாட்டோடு பயிற்சியினுள் ஆழ்ந்து இருக்கிறீர்களோ, அதனை பொறுத்தே உங்களின் திறனும் மேன்மேலும் வளர்ந்த படி இருக்கும். அதே நேரம், பயிற்சி என்பது, பயிற்சி அளிக்கப்படும் களத்துக்குள் மட்டுமே ஈடுபடுவது அல்ல. அதையும் தாண்டியது என்றார். அவர் சொன்னது முழுவதும் புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. ஆனால் நான் எதையும் மனதில் இருத்தாமல் ஆழ்ந்த கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் முழுவீச்சில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன், பயிற்சியாளர் சொன்னது போல் இந்த பயிற்சி களத்தினுள் மட்டும் செய்ய வேண்டியது அல்ல, அதை தாண்டிய தினசரி நடைமுறை வாழ்விலும் இந்த பயிற்சி ஏப்பேர்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்பது புரிய ஆரம்பித்தது. ஒரு நாள் கற்றுகொண்ட வரை போதும் என பயிற்சியாளர் சொல்லிவிட்டு, இனிக் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துங்கள் அதுவே பெரும் பயிற்சி என்று சொன்னார். பயிற்சிக்கு வந்த நண்பர்கள் அனைவரும் ஊருக்கு புறப்பட்டோம் வழி எங்கும் பயிற்சி பற்றிய உரையாடல் தொடர்ந்தபடி இருந்ததால், ஊர் வந்து சேரும் வரை களைப்பே தெரியவில்லை.

ஊருக்கு வந்து சேர்ந்ததும் கண்டிப்பாக தினசரி பயிற்சி செய்ய வேண்டுமென அனைவரும் முடிவு செய்தோம். நானும் வேலைக்கிடையில் பயிற்சி செய்வதை தொடர்ந்தேன். பயிற்சி முடித்த வந்த பெரும்பாலான நண்பர்கள், அந்தப் பிரதான வாளினை போல் ஒன்றை முதலில் உருவாக்கிட வேண்டுமென உத்வேகத்தில் அதற்கான வேலைகளில் இறங்கினார்கள். பயிற்சியாளர் சொன்னது போல், அந்த வாள் செய்ய பயன்படுத்தும் உலோகங்களை அதனதன் அளவுகளில் சேர்க்கும் நேரத்தில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மைகளை வெளிப்படுத்தியது. சில உலோகங்கள் அதீதமான சூட்டை வெளிப்படுத்தின. சிலது சட்டென முழுவதும் சில்லிட்ட குளிர்ச்சியானது. இப்படி அதன் தன்மைகள் சடாரென மாறும் நேரத்தில், அதனை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல், நண்பர்கள் திணற ஆரம்பித்தனர். ஒரு வழியாக திக்கித்திணறி வாள் தயாரிப்பில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வாளை உருவாக்கி விட்டனர். ஆனால் யாருக்கும் தாங்கள் உருவாக்கிய வாளில் முழுமையான திருப்தியில்லை. தாங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திக் கற்றுக்கொண்ட அந்த பிரதான வாளின் தன்மை இதில் இல்லை. மிக, மிக முக்கியமான ஏதோ ஒன்று கண்டிப்பாக தாங்கள் தயார் செய்த வாள்களில் இல்லை. என்பதை எல்லோரும் உணர்ந்தனர். அனைவருமாக சேர்ந்து தயார் செய்த வாள்களை எடுத்துக்கொண்டு, பயிற்சியாளரிமே சென்று தங்களின் சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம் என ஏக மனதாக முடிவெடுத்தோம். மீண்டும் பயிற்சியாளரை நோக்கிய பயணம் ஆரம்பமானது.

பயிற்சியாளர் இருக்குமிடத்தை அடைந்தோம். எங்களை பார்த்தவர் இவ்வளவு சீக்கிரம் திரும்ப வருவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என்றார். அதன் பின் வந்த விஷயத்தை சொன்னதும் நாங்கள் கொண்டு வந்த வாள்களை வாங்கிப் பார்த்தவர், கொண்டு வந்த வாள்களை ஒவ்வொன்றாக எடுத்து சில நிமிடங்கள் சுழற்றி, சுழற்றிப் பார்த்தார். பின்னர், இதில் எதிலுமே நீங்கள் சொல்வது போல் எவ்வித குறையுமில்லை, ஒவ்வொருன்றும் அதன்தன் தன்மைகளில் சிறப்பாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயிற்சியின் போது பயன்படுத்திய பிரதான வாளுக்கு எந்த வகையிலும் நீங்கள் உருவாக்கிய வாள் சளைத்தது அல்ல. நீங்களே பிரதான வாளையும், நீங்கள் உருவாக்கிய வாளையும் வைத்து பயிற்சி எடுத்துப் பாருங்கள் என சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு போய்விட்டார். எல்லோரும் அவர் சொன்னதுபடி செய்துப்பார்க்க ஆரம்பித்தார்கள். அப்படிப் பயிற்சி செய்த பின்னரும், பயிற்சியாளர் சொன்னதை நண்பர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதான வாளினை போல் தாங்கள் தயார் செய்த வாள் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். இதனை கேட்ட பயிற்சியாளர் சரி இப்பொழுது என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டார். சொல்லி வைத்தது போல் அனைவரும் எங்கள் அனைவரின் முன்னிலையில் நீங்கள் புதியதொரு வாளை உருவாக்கி காண்பிக்க வேண்டுமென சொன்னார்கள். பயிற்சியாளர் சற்றுநேரம் எங்களையே பார்த்தவர் பின் ஒரு சின்னபுன்முறுவலுடன் சரி செய்கிறேன். நாளை காலை ஆரம்பித்து விடலாம் என்றார். அனைவருக்கும் மகிழ்ச்சி. இரவானது உறங்கச் சென்றுவிட்டோம்.

இரவு படுத்தால் ஒருவருக்கும் உறக்கமில்லை. எனக்கு நாங்கள் செய்வது சரியா, அப்படியே எங்கள் முன் புதிய வாள் உருவாக்கப்பட்டாலும், அதைப் பார்த்து புதிய வாளை பிரதான வாளின் தன்மை மாறாமல் உருவாக்கிடமுடியமா என பலவகையான கேள்விகள் உருவாகி நீண்டு கொண்டே போனது. அப்படியே அயர்ந்துவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் களைந்து எழுந்துவிட்டேன். மற்றவர்களும் அப்படியே. அனைவரும் காலை கடன்களை எல்லாம் வேகமாக முடித்துவிட்டு தயாரானோம். பயிற்சி களத்துக்கு வந்தால் வாள் தயாரிப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருந்தன. பயிற்சியாளர் வந்தார், சிறிது நேரம் அமர்ந்து அமைதியாக தியானத்தில் ஆழ்ந்தார். சில நிமிடங்கள் அது தொடர்ந்தது, பின்னர் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் வாளை உருவாக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தார். எல்லோருடைய கவனமும் அவர் எப்படி உலோகங்களை கையாள்கிறார் என்பதில் இருந்தது. ஆனால் நான் மட்டும், பயிற்சியாளரின் உடல்மொழியையும், தயார் செய்யும் போது அவரின் மனநிலை என்னவாக இருக்கிறது, என்பதனை ஆழமாக கவனிக்க ஆரம்பித்தேன். மெல்ல, மெல்ல வாள் உருவாகி முழுமையான அதன் பூரணத்துவத்தை அடைந்தது. முழுமையடைந்ததும் பயிற்சியாளர் அதனை கையில் எடுத்து தன் முகத்துக்கு நேரே வைத்து கொண்டு சிறிது நேரம் அதனுடன் ஏதோ பேசினார், இல்லை அவர் பேசுவது போல் எங்களுக்கு தெரிந்தது. பின்னர் வாளை எங்கள் கைகளில் கொடுத்தார். அந்த புதிய வாளை தங்களின் கைகளில் வாங்கி பார்த்த அனைவருக்கும், பிரதான வாளின் தன்மை சற்றும் குறையாத அற்புதமான புதிய வாளாக அது ஜொலித்தது. வந்திருந்த அனைவருக்கும், இனி தங்களால் புதிய வாளினை எவ்வித குறையுமில்லாமல் உருவாக்கிடமுடியும் என நம்பிக்கை பிறக்க, திருப்தியுடன் பயிற்சியாளருக்கு நன்றி சொல்லி ஊர்திரும்ப ஆயுத்தமானார்கள். எனக்கு மட்டும் ஏனோ மனதிற்குள் திருப்தியில்லை. ஊருக்கு கிளம்பிய நண்பர்களிடம், நான் மட்டும் வருவதாக இல்லை, சிறிது நாள் பயிற்சி எடுத்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டேன். நான் அப்படி சொன்னதற்கு யாரும் ஏன், எதற்கு என எந்த கேள்வியும் கேட்கவில்லை. சரி என தலையசைத்துவிட்டு அனைவரும் ஊரை நோக்கி கிளம்பிவிட்டார்கள்.

நான் அன்று பயிற்சிகூடத்திற்குள் இருக்கும் ஒய்வு அறைக்கு உறங்கச் சென்றேன். உறக்கம் வரவில்லை கண்களை மூடினால் வாளினை தயாரிக்கும் காட்சிதான் வந்து வந்து போனது. கொஞ்சநேரத்தில் வாள் தயாரிப்பில் நானே ஈடுபடுவது போலான காட்சி தோன்ற ஆரம்பித்தது. உடனே நான் சுதாரித்து, வாள் தயாரிப்பின் போது நான் ஆழ்ந்து கவனித்த பயிற்சியாளரின் உடல்மொழியையும், அவரின் மனநிலையையும் என்னவாக இருந்ததோ, அதனை எனக்குள் கொண்டுவந்து வாளினை தயாரிக்க எத்தனித்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் வாள் தயாரிப்பினை தொடர முடியாமல் மூச்சு திணறி கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். எழுந்து பார்த்தால் அதிகாலை நான்கு மணி. வெளியே பயிற்சியாளர் கூப்பிடும் தூரத்தில் களத்தில் புதிய வாளோடு பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் என் பக்கம் திரும்பாமலேயே, என்ன நேற்று இரவு புதியவாளை செய்துவிட்டாயா எனக் கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. எழுந்து அவரை நோக்கி ஓடினேன். அவர் அருகில் சென்றதும் பயிற்சி செய்துகொண்டே சின்ன புன்முறுவலுடன், என்ன முழுமையடையவில்லையா எனக் கேட்டார். அந்த ஒரு கேள்விக்குள் அனைத்தும் இருந்தது. எவ்வித சலனமும் இல்லாமல் நின்றிருந்தேன். சட்டென சொன்னார் இந்த நிலையைத் தக்கவை என்றார். பின்னர் வா என என்னைக் கூட்டி சென்றவர் மிகப்பெரும் அறை ஒன்றை திறந்தார். அது திறக்கப்பட்டவுடன் நான் பார்த்தகாட்சி என்னை சில நிமிடம் நிசப்த மனநிலையில் உறைய வைத்தது. அந்த அறைக்குள் நாங்கள் பயிற்சி செய்த பிரதான வாள் நடுநாயகமாக இருக்க சுற்றிலும் ஆயிரக்கணக்கான வாள்கள் சுவர் முழுமைக்கும் மாட்டப்பட்டிருந்தது. எதனையும் எதனுடனும் ஒப்பிட முடியவில்லை. எல்லா வாள்களும் அதனதன் தன்மையில் பூரணத்துவத்துடன் இருப்பதாகப் பட்டது. அத்தனை வாள்களையும் ஒரே இடத்தில் பார்த்த பிரம்மிப்பில் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். உறை நிலையில் வாள்களையே பார்த்து கொண்டிருந்த என்னை பயிற்சியாளர் வெளியில் அழைத்து வந்தார். சில நிமிட அமைதிக்கு பின் என் அருகில் வந்தவர், என் கைகளில் முந்தைய நாள் செய்த புதிய வாளினை கொடுத்து விழிப்போடு உனக்குள் ஆழ்ந்து கவனித்து பயிற்சியை தொடர்ந்து செய் என சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டார். நான் கையில் கொடுக்கப்பட்ட புதிய வாளுடன், என் முன்னே இருக்கும் அந்த பெரிய அறையினுள் பிரதானமாக இருக்கும் அந்த வாளை பார்த்தபடி சிறிது நேரம் அப்படியே இருந்தேன். சில நிமிடங்களில் இயல்பாக என் கைகள் புதிய வாளை சுழற்ற ஆரம்பித்தது. அதை கவனித்த பயிற்சியாளர் என்னை பார்த்து இப்படிச் சொன்னார். நாளை நான் இறந்து போகலாம், மற்றோரு நாளில் நீயும் இறந்து போகலாம். வேறு பலரும் இங்கு வரலாம். ஆனால் அந்த பிரதான வாள் இங்கு தான் இருக்கும். அதன் தன்மை மாறாமல் என்று உரக்கச் சொன்னார், அவரின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்த எனக்கு என்னுள் எதோ ஒன்று தெளிவடைவது போல் இருந்தது. அந்த நேரத்தில் காலை கதிரவனின் ஒளி ஜன்னலின் வழியே ஊடுருவி அந்த பெரிய அறையினுள் நடுநாயகமாக இருக்கும் பிரதான வாளின் மீது படர்ந்து அந்த அறைமுழுவதையும் வெளிச்சமாக்கியது. அந்த ஒளி என்னுடைய கண்களை கூசச்செய்ய, நான் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் பெரிய அறைக்குள் இருக்கும் அந்த பிரதான வாளினை பார்த்தபடியே புதிய வாளை சுழற்றி பயிற்சித்தபடியே இருந்தேன். எவ்வளவோ விஷயங்கள் தன்முன்னே ந(க)டந்தபடி இருந்தாலும், அந்த பெரிய அறையின் சுவற்றில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருக்கும் அந்த பிரதான வாள் எவ்வித சலனமும் அற்று எல்லாவற்றையும் பார்த்தபடி பேரமைதியாக இருந்தது, ஏன் என்றால் அது வாள்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *