வாழ்ந்து பார்த்த தருணம்…197

உங்களுக்கெல்லாம், உங்களால, உங்கள விட…

இப்பொழுதெல்லாம் திரையரங்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்தே வருகிறேன். இணையத்தில் திரைப்படத்தின் முன்னோட்டங்கள் பார்ப்பதோடு சரி, நன்றாக இருக்கிறது தவிர்க்காமல் பாருங்கள் என நெருக்கமான நண்பர்கள் யாரேனும் பரிந்துரைத்தால் மட்டுமே திரையரங்குப் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். இப்படியான நிலையில், கடந்த மாதம் இணையத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்று என்னை மிகவும் ஆழமாய் யோசிக்க வைத்தது. காரணம், சமீபத்தில் வாசித்த சாருவின் அன்பு நாவலில் உள்ளீடாக இருந்த மிக, மிக முக்கியமான கருத்தை அப்படியே அந்த வசனம் பிரதிபலித்தது தான். அந்த வசனம் உங்களுக்கு எல்லாம், உங்களால நாங்க நல்லாயிருக்கணும் உங்களவிட நல்லாயிருந்திரக் கூடாது என்பது தான் அந்த வசனம். வசனம் இடம்பெற்ற திரைப்படம் டாடா. இந்த நிமிடம் வரை படத்தின் முன்னோட்டத்தை மட்டுமே பார்த்திருக்கிறேனேத் தவிர படத்தை பார்க்கவில்லை. முன்னோட்டத்தைப் பார்த்த போதே, ஒரு பத்து தடவையாவது வசனம் இடம்பெற்ற இடத்தை மீண்டும், மீண்டும் பின்னோக்கி இழுத்து, பல முறை கேட்டுக் கொண்டே இருந்தேன். சமீபகாலங்களில் இவ்வளவு அடர்த்தியான, ஆழமான வசனம் ஒன்றினை வேறெந்த படத்திலும் கேட்கவில்லை. உண்மையில் அன்பு என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறையின் முதல் புள்ளி உங்களால நாங்க நல்லாயிருக்கணும் என்கிற இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. இதில் இந்த உறவில் இருப்பவர்கள் மட்டும் தான் அப்படி என்கிற வரையறைக்குள் எந்த உறவையும் அடைத்துவிட முடியாது. எல்லாவிதமான உறவுகளும் மேலே சொல்லியுள்ள உங்களுக்கு எல்லாம், உங்களால நாங்க நல்லாயிருக்கணும் என்கிற வரையறைக்குள் வந்து விடுவார்கள் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா என எல்லா உறவுகளுமே, விதிவிலக்கெல்லாம் இல்லை. இதனை என் வாழ்வில் மட்டுமல்லாமல், பலரின் வாழ்விலும் பல சந்தர்ப்பங்களில், பல்வேறு நிகழ்வுகளின் வழியே அனுபவித்து அடிவாங்கிய பிறகே எழுதுகிறேன். குடும்ப உறவுகளுக்குள் மட்டும் தான் இப்படியா எனக் கேட்டால் அதுவும் இல்லை. பணி செய்யும் இடத்திலும், எல்லா மட்டங்களிலும் இதே கூத்து தான். நான் மட்டும் இல்லைன்னா அவனோ, அவளோ, இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது என்கிற தேய்ந்து போன டயலாக் காலம் காலமாக என் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கிறது.

என்றும் அன்பு செலுத்தப்படும் நபர்களை, அன்பு செலுத்தும் நபர்கள் வைத்திருக்கும் இடமும் இது தான். என்னால மட்டும் தான் நீ நல்லாயிருக்கணும், வேற யாராலயும், ஏன் உன்னால கூட நீ நல்லா இருந்திடக் கூடாது என்பது தான் அன்பு செலுத்துபவரின் குறிக்கோள், வேண்டுதல் என எல்லாமே. அப்படியும் நீங்கள் உங்கள் மீது அன்பு செலுத்துபவரைத் தாண்டி நல்லாயிருந்து விட்டால், அதுவும் உங்கள் மீது அன்பு செலுத்துபவருக்கு தெரிந்துவிட்டால், உங்கள் கதி அதோ கதி தான். நீங்கள் அன்பு இல்லாதவர்களாக கட்டம் கட்டப்படுவீர்கள். என்ன விட்டுட்டு நீ மட்டும் எப்படி சந்தோசமா இருந்த, அவ்வளவு சுயநலவாதியா நீ என்கிற வசனம் சர்வ சாதாரணமாக முகத்துக்கு நேராகவே வரும். என்னது நான் சந்தோசமா இருந்தா? அதுக்கு பேரு சுயநலமா? என்கிற எதிர் கேள்விக்கெல்லாம் வாய்ப்பேயில்லை. நான் இல்லாம நீ சந்தோசமா இருந்தேல்ல அப்ப நீ சுயநலவாதி தான். ஏன்னா நான் உன் மீது அன்பாக இருக்கிறேன். அடங் கோ, என்னது, யப்பா சாமி இதுக்கு பேரு தான் அன்பா இருக்கிறதா என்று உங்களின் மனதினுள் வேண்டுமானால் நீங்கள் யோசித்துக் கொள்ளலாம், வெளியில் தப்பித் தவறி மூச். இந்த லட்சணத்தில் தான் அன்பு என்கிற வஸ்து இருக்கிறது. அதனாலேயே யாராவது உன் மேல நான் எவ்வளவு அன்பு வச்சுருக்கேன் தெரியுமா எனக் கேட்டால், உடனே மண்டைக்குள் பூச்சி பறக்கிறது. தப்பிச்சுடுடா சுணா பாணா என்கிற நிலையை நோக்கி இயல்பாகவே மனம் மிக, மிக ஜாக்கிரதை உணர்வோடு சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறது. அன்பின் மற்றுமொரு பிரச்சனை கட்டுப்படுத்துவது. ஏன் என்று கேட்டால், நம் மீதான அக்கறை என்கிற பதில் சர்வ நிச்சயமாய் வரும். கேட்டால், அது தான் பூரணத்துவமான, உண்மையான அன்பாம். இதனைக் கேட்டவுடன் சரிப்பா எனச் சொல்வதை தவிர உங்களுக்கு வேறு வழியே இல்லை.

அன்பு செலுத்துபவர்களால், தாங்கள் அன்பு செலுத்தும் நபர்கள் செய்யும் ஒரு செயலை மட்டும் எக்காரணம் கொண்டும் ஜீரணிக்கவே முடியாது. அந்த ஜீரணிக்க முடியாத விஷயம் எதுவெனில், அவரால் அன்பு செலுத்தப்படும் நபர் வேறு யாரிடமும் அன்பாய் பேசிடக் கூடாது, சிரிக்கக் கூடாது இன்னும் இன்னும் நிறையக் கூடாதுகள் உண்டு. கேட்டால் உங்களை அன்பு செலுத்தி ஏமாற்றிவிடுவார்களாம். இதனையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். காரணம், அன்பு செலுத்தும் நபர்களால் உங்கள் மீது செலுத்தப்படுவது பூரணத்துவமான உண்மையான அன்பு. ஆனால் அந்த அன்பை உணர்ந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக, சந்தோசமாக இருக்க வேண்டும். ஆனால், அதனை எக்காரணத்தை கொண்டும் யாரிடம் வெளிப்படுத்தக் கூடாது. வடிவேலு வசனம் போல் எப்படி சிக்கியிருக்கேன் பார்த்தீங்களா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளலாமே ஒழிய வெளியே மூச். இதெல்லாம் இல்லாமல் உங்கள் மீது செலுத்தப்படும் அன்பின் மகத்துவத்தை எப்பொழுதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நான் எப்படி அன்பாய் அக்கறையாய் நடத்தப்படுகிறேன் தெரியுமா, அந்த அன்பு மட்டும் இல்லாவிட்டால் என்றைக்கோ என்னை கழுவில் ஏற்றியிருப்பார்கள். என் மீது செலுத்தப்பட்ட அன்பு தான் என் மனிதனாக்கியது, மனிதருள் புனிதனாக்கியது என உங்களால் எந்த அளவு உங்கள் மீது செலுத்தப்படும் அன்பை பற்றி போகிற இடமெல்லாம் மற்றவர்களிடம் சிலாகிக்க முடியுமோ, அந்த அளவுக்கு அதனை விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் பக்கா சுயநலவாதி, உங்கள் மீது செலுத்தப்படும் அன்பை நீங்கள் புரிந்து கொள்ளவும் இல்லை, உணர்ந்து கொள்ளவும் இல்லை, உணர்ந்ததை சொல்லவும் இல்லை. மொத்தத்தில் உங்கள் மனதிற்குள் தோன்றும் உங்களால நல்லாயிருக்கணும் உங்கள விட நல்லா இருந்திரக் கூடாது என்கிற வசனத்தை உங்களின் மனதிற்குள்ளாகவே சொல்லிக் கொள்ள வேண்டுமே ஒழிய, வெளியே தப்பித் தவறிச் சொல்லிவிடக் கூடாது. அதையும் மீறி, நீங்கள் வெளியே சொல்லி விட்டால், அன்றிலிருந்து நீங்கள் நல்லாயிருக்க முடியாது. காரணம் அன்பு…

இறுதி பஞ்ச்
இதனை காதலர் தினத்தன்று பதிவேற்ற வேண்டும் என நினைத்து தான் எழுத ஆரம்பித்தேன், ஆனால் பாதி எழுதியதோடு நின்றுவிட்டது. அதற்கடுத்து தொடர்ந்து பணிச் சூழலின் இறுக்கம் காரணமாக எழுத முடியவில்லை. அதனால் தான் மிகத் தாமதமான பதிவு. மேலே உள்ளதைத் தாண்டியும் இதற்குள் எழுத இன்னும், இன்னும் நிறையவே இருக்கிறது. பதிவின் நீளம் கருதி நிறுத்திவிட்டேன். நன்றி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *