வாழ்ந்து பார்த்த தருணம்…199

24×7 பி(பீ)டித்திருத்தல்…

இத்தனை நாட்கள் எழுத முடியாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும், அதெல்லாம் ஒரு பக்கம் ஓரமாய் இருக்கட்டும். இடைப்பட்ட காலங்களில் சில விஷயங்களை கொஞ்சம் ஆழமாக உள்வாங்க வேண்டி இருந்தது. அப்படி உள்வாங்கி எழுதும் போது அதில் இருக்கும் முழுமை என்பதே வேறு. ஒரு வகையில் அந்த முழுமைக்காகத் தான் இந்த தாமதமோ என்னவோ. பொதுவாக இந்த எழுத முடியாத இடைவெளிகளில் பழகும் மனிதர்களிடம் நான் கொஞ்சம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் நிறைய இருந்தன. இருந்து கொண்டும் இருக்கின்றன. அதில் முக்கியமானது, ஒருவரை நாம் எதன் அடிப்படையில் விரும்புகிறோம் என்பதற்கு ஒவ்வொருவரும் வைத்திருக்கும் வரையறை. அப்படியான ஒவ்வொருவருடைய வரையறைகளையும் பார்க்கும் போதும், அத்தோடு அதற்குள் என்னை உட்செலுத்தி கவனிக்கும் பொழுதும், பல தருணங்களில் கிர்ரென தலைசுற்றி விடுகிறது. இப்படி பலதரப்பட்ட மனிதர்களில் பலவிதமான வரையறைக்குள் இருந்து கொண்டு தான், நம்மை சுற்றியிருப்பவர்களின் விருப்பத்திற்குரிய நபராக வலம் வர வேண்டி இருக்கிறதா என ஒவ்வொரு முறையும் அந்த வரையறைக்குள் இருந்து செருப்பாலடித்து வெளியே தள்ளப்படும் போது எல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். அப்படியான யோசனையில் மூழ்கும் போது எல்லாம் அப்படியே மூச்சு முட்டுகிறது. சத்தியமா முடியலடா சாமி என்கிற நிலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அப்படி ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் பார்வையில் விருப்பத்திற்குரிய நபராக இல்லாமல் போய், அவர்களால் சர்வசாதாரணமாக உதாசீனப்படுத்தப்பட்டு குற்றவாளி கூண்டில் அலட்சியமாக ஏற்றப்படும் போது, மனதுக்குள் தோன்றும் அழுத்தம் இருக்கிறது இல்லையா, அதனை மட்டும் இந்த வாழ்வில் கையாளத் தெரியவில்லையெனில் சத்தியமாக முடிந்தது கதை. இதனை எல்லாம் தாண்டி ஒரு வகையில் அருஞ்சொல் தளத்தில் சமஸ் சாருவிடம் உரையாடி இருக்கும் பேட்டியில், கலை நல்ல தப்பித்தல் இல்லையா என்கிற கேள்விக்கு, சாரு அளித்திருக்கும் பதிலின் இறுதி வரியில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி, எனக்குக் கலை எனச் சொல்லியிருந்தார். அந்த வகையில் குறைந்த பட்சம் எதையாவது வாசித்துக் கொண்டும், அதன் அடிப்படையில் குறைந்த பட்சம் கட்டுரை வடிவிலாவது எதையெனும் எழுதிக் கொண்டிருப்பவனின் பார்வையில், சாரு சொல்லியுள்ள பதிலின் ஆழம் மனதின் உள்ளே பற்றி இழுத்து அமைதிப்படுத்திவிடுகிறது.

ஒருவரின் விருப்பத்திற்குரிய நபராக நான் எதன் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்படுகிறேன் என யோசித்தால். என்னை விரும்பும் அந்த ஒருவர், அவருடைய பார்வையில் எதனை எல்லாம் நான் செய்ய வேண்டும், சொல்ல வேண்டும், பேச வேண்டும், செயல்படுத்த வேண்டும் இன்னும் பல வேண்டும்களோடு சேர்த்து எதனை எல்லாம் செய்யக் கூடாது, செய்யவேக் கூடாது என்கிற பட்டியலும் தயாரித்து வைத்திருப்பார். அந்தப் பட்டியலில் உள்ளது படியே இம்மியளவும் பிசக்காமல் நடக்க வேண்டும். ஒருவேளை மேலே சொல்லியுள்ள ஏதேனும் ஒன்றில் என்னுடைய செயல்பாடு என்னை விரும்பும் நபரின் பார்வையில் அவரின் விருப்பத்திற்கு மாறாக நடந்து விட்டால் கிழிந்தது கதை. அதன்பின் நீங்கள் கேள்விகளால் கழுவில் ஏற்றப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். ஆனாலும் உங்களை விரும்பும் நபருக்கும் நீங்கள் விருப்பமானவர்களாக தொடர வேண்டுமெனில் கழுவில் ஏற்றப்பட்ட சுவடே தெரியாமல். மீண்டும் அவர்களின் விருப்பப்பட்டியலில் உள்ளபடி நடக்க ஆரம்பித்துத் தான் ஆக வேண்டும். விதி அப்படி. நீங்கள் உங்களை புரிந்து கொண்டிருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால், உங்களை விரும்பும் நபரின் ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, உங்களுக்கு ஒரு துறையிலோ அல்லது ஏதாவது வெளி பழக்க வழங்களிலோ நல்ல அனுபவம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். இப்படியான நிலையில், உங்களுக்கு எதில் அனுபவம் இருக்கிறதோ, அதனைப் பற்றி ஒரு மொக்கையான, திராபையான அறிவுரை ஒன்று உங்களை விரும்பும் நபரிடம் இருந்து வரும் பொழுது, உடனடியாக உங்களின் மனதினுள் நான் என்ன முட்டாக் கூமுட்டையா என்கிற மாதிரியான எண்ணம் எல்லாம் வரவேக் கூடாது. ஒருவேளை அப்படியும் தப்பித் தவறி ஏதேனும் எண்ணம் மனதினுள் தோன்றிவிட்டால், எக்காரணத்தைக் கொண்டும் அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடக் கூடாது. இந்த ஒரே ஒரு உதாரணமே போதுமானது என நினைக்கிறேன். காரணம், எல்லாவற்றையும் எழுதினால் நாடு தாங்காது என்பதாலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனபதாலும் இத்தோடு நிறுத்திவிடலாம்.

சரி இவ்வளையும் பொறுத்துக் கொண்டு என்ன வெங்காயத்துக்கு இப்படியான நபர்களின் விருப்பத்திற்கு உரிய நபராக நாம் ஏன் வலம் வர வேண்டும் என்கிற கேள்வி இயல்பாகவே தோன்றுகிறது இல்லையா?. அங்கே தான் ஒரு மிகப் பெரிய திருப்பமே, நீங்கள் வேண்டுமானால் உங்களை யாருமே விரும்பத் தேவையில்லை எனச் சொல்லலாம் அல்லது அப்படியே இருக்கவும் விருப்பப்படலாம். ஆனால், நீங்கள் விரும்பப்படுவது உங்களை விரும்புபவர்களின் விருப்பம் சம்பந்தப்பட்டது. அதில் நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தலையிட முடியாது, அதில் தலையிடும் உரிமையும் உங்களுக்கு இல்லை. உங்களை விரும்ப வேண்டும் என்பதும், எங்களால் நீங்கள் விரும்பப்படும் காரணத்தால், எங்களின் விருப்பப்படி தான் நீங்கள் நடந்தாக வேண்டும் என்பதும், ஒரு வகையில் எங்களின் இதயப்பூர்வமான, அக்கறையான, “பேரன்பான” விருப்பம். மீண்டும் சொல்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள் “பேரன்பான” விருப்பம். அதனால் அந்த பேரன்பினை புரிந்து கொண்டு எங்களின் விருப்பப்படி நடப்பது தான் உங்களின் பொறுப்பும், கடமையும் கூட. உங்களுக்கு வேறு வழியே இல்லை. வடிவேலின் நகைசுவையைப் போல் எப்படி மாட்டிருக்கேன்னு பார்த்தீயா என உங்களின் மனதுக்குள் வேண்டுமானால் கதறிக் கொள்ளலாம், ஆனால் அதனையும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் சொல்ல அனுமதியில்லை. ஏனெனில் உங்களை நாங்கள் அப்படி கண்மூடித்தனமாக பேரன்போடு விரும்பிக் கொண்டிருக்கிறோம் என்பதற்காக நாங்கள் எங்களுக்காகவே கட்டமைத்து வைத்திருக்கும் எங்களின் பிம்பம் எங்களுக்கு முக்கியம். ஒரு வேளை அந்த பிம்பம் மட்டும் உடைக்கப்படும் என்றால் இந்த நாடும், நாங்களும் தாங்க மாட்டோம். அதனைத் தாண்டி அப்படி நடந்ததற்கான தண்டனையும் எங்களின் விருப்பமானவரான தங்களுக்கே கொடுக்கப்படும். வேறு வழி(லி)யில்லை. மற்றபடி நீங்கள் எங்களை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரவு, பகல், புயல், காற்று, மழை இன்னும் என்னென்ன வந்தாலும் 24 மணிநேரமும் நாங்கள் உங்களை விரும்பிக் கொண்டே இருப்போம். காரணம் அது தான் எங்களின் பெரு விருப்பம். விருப்பமுடன் நன்றி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *