வாழ்ந்து பார்த்த தருணம்…200

ஏன் எழுதுகிறேன்…

கடந்த நான்கு, ஐந்து பதிவுகளுக்கு முன்னதாகவே, இந்த இருநூறாவது பதிவில் ஏன் எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு என்னுள் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பாக இந்தப் பதிவை எழுத வேண்டும் எனத் தோன்றிவிட்டது. சரி ஏன் எழுதுகிறேன். மிக எளிமையான அதே சமயம் மிக ஆழமான கேள்வி. என்னுடைய வாசிப்புப் பழக்கம் என்பது கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் என்னுடன் வந்து கொண்டிருக்கிறது. விழுந்து, விழுந்து வாசிக்கவில்லை என்றாலும், இந்த முப்பது வருட வாசிப்புப் பயணத்தில் என்னுடைய வாசிப்பில் ஒரு ஒழுங்கையும், அதில் ஒரு சின்ன தொடர்ச்சியையும் மட்டும் தொடர்ந்து தக்க வைத்தபடியே பயணித்துக் கொண்டிருக்கிறேன். தோராயமாக சுமார் பத்திலிருந்து பதினைந்து வருடங்களுக்கு முன்போ, இல்லை அதற்கும் முன்னரோ எழுத வேண்டும் என்கிற ஒரு உந்துதல் எனக்குள் ஒரு சிறு அலையைப் போல் மனதினுள் எழும்பி அடங்கிக் கொண்டே இருந்தது. அந்த அலையின் முதல் தொடக்கம் மிகச் சரியாக எந்தப் புள்ளியில் தொடங்கியது என என்னுடைய நினைவடுக்குகளில் தேடி கண்டடைய முடியவில்லை. உண்மையில் முகநூல் பக்கத்தில் வாழ்ந்து பார்த்த தருணம் என்கிற தலைப்பில் தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும் முன்னரே, எனக்கென்று பிளாக் ஒன்றை ஆரம்பித்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் நான் செய்த மிகப் பெரும் தவறு. எழுதி முடித்தவுடன், எழுதி முடித்தவைகளில் ஏதேனும் தவறாகப் போய்விடுமோ என்கிற பயத்தில், அதனைப் பதிவேற்றும் முன்னதாக, அப்பொழுது இருந்த சில நட்பு வட்டங்களில் உள்ளவர்களிடம் காண்பிப்பேன். காரணம், அப்பொழுது எல்லாம் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட எளிதில் உணர்ச்சி வசப்படும் மனநிலையில் சுற்றிக் கொண்டிருந்தேன் என்பதால், அதனை எழுத்திலும் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிடுகிறேனோ, எழுதும் வார்த்தைகளில் எனக்குக் கட்டுப்பாடுகள் இல்லையோ என்கிற பயம். அந்த பயத்தில் அப்பொழுதைய நண்பர்களிடம் காட்டப் போய், ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்தாகச் சொல்ல, அப்படி சொல்லப்பட்ட கருத்துக்கள் ஒவ்வொன்றையும் உள்வாங்கி, என்னுடைய எழுத்தில் மாற்றி, மாற்றி, மாற்றி முடிவில் நான் எழுதியதன் இறுதி வடிவம் எங்கோ போயிருக்கும். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், அதன்பின் கொஞ்சம் காலம் எழுதுவதையே நிறுத்தி இருந்தேன். அதன்பின் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்த போது, சரியோ, தவறோ அதனை பொதுவெளியில் பதிவேற்றுவோம். அதற்கு வரும் பின்னூட்டங்களை வைத்து நாம் எழுதும் வடிவத்தை சீர் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து எழுத ஆரம்பித்து, இப்பொழுது இருநூறாவது பதிவை தொட்டிருக்கிறேன்.

ஏன் எழுதுகிறேன். எழுதுதல் என்பது ஒரு வகையில் நமக்கு நாமே ஆசனாக இருக்கும் வாய்ப்பை கொடுக்கக் கூடிய கொடை என ஆழமாக நம்புகிறேன். அதனைத் தாண்டி எழுதுவதின் வழியே வார்த்தைகளைத் தொடர்ந்து கையாளும் வாய்ப்பை எழுத்து நமக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறது. மனித வாழ்வில் வார்த்தையைக் கையாள்வது என்பது மிகப் பெரும் கலை. பொதுவாக நம்மை சுற்றியுள்ள எல்லாவிதமான மனிதர்களிடமும் கேட்டுப் பாருங்கள். அப்படிக் கேட்கும் மனிதர்களில் வார்த்தையால் காயப்படாத ஒருவரைக் கூட உங்கள் வாழ்நாளில் பார்க்கவே முடியாது. இருக்கவும் மாட்டார். புத்தர் முன், தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டி நின்ற பெண்ணிடம், சாவே நிகழாத வீட்டில் போய் கடுகு விதை வாங்கிவா என்று புத்தர் சொன்ன நிகழ்வில், அதற்கு சாத்தியமே இல்லை என்பது எந்த அளவு உண்மையோ, அதே போலத் தான், வார்த்தையால் காயப்படாத மனிதன் என்பவனும் இந்த உலகத்தில் இல்லை. அப்படியெனில் மற்றவர்களை காயப்படுத்தாமல் நாம் பேச வேண்டுமெனில், நம்மில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் ஒழிய, நம்மால் அதனைக் கையாளவே முடியாது. அப்படி வார்த்தைகளைக் கையாள முடியாத போது, சர்வசாதாரணமாக மற்றவர்களை காயப்படுத்திக் கொண்டே இருப்போம். இதில் வெறுமனே மற்றவர்களைக் காயப்படுத்துவோம் என்கிற ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டும் இதனை சுருக்கிவிட முடியாது. வார்த்தை என்பது நாம் சாகும் வரை நம்முடன் பயணிக்கும் வரம், சாபம் ரெண்டுமே. அதனை வரமாக, சாபமாக மாற்றும் வரம் நம்மிடம் தான் இருக்கிறது. இப்படி நம் வாழ்வில் மிக முக்கியமாகத் திகழும் நம்மிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காக, நாம் எந்த வகையில் நம்மை தயார்படுத்துகிறோம். அதற்காக, என்ன மெனக்கெடுகிறோம், இல்லை பயிற்சி எடுக்கிறோம் என யோசித்தால், ஒரு வெங்காயமும் இல்லை. இவ்வளவு தூரம் முக்கியமான வார்த்தைகளால் ஏற்படும் இழப்புகளை வாழ்நாள் முழுக்க சுமந்து கொண்டிருப்பவர்களிடம் போய்க் கேட்டுப் பாருங்கள். அதன் வலியைக் கதை, கதையாக சொல்வார்கள். அதனைத் தாண்டி ஜெயமோகனின் அறம் தொகுப்பில் உள்ள உண்மை மனிதர்களின் கதைகளில், முதல் கதையான அறம் கதையை வாசித்துப் பாருங்கள் புரியும்.

ஒரு வகையில் இப்படி எழுத்தின் வழியே வார்த்தைகளை கையாளும் திறன் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால், இல்லை. அதனைத் தாண்டி இன்னும் ஏராளம் இருக்கிறது. நீங்கள் எழுத வேண்டும் என முடிவு செய்தால் கண்டிப்பாக வாசித்துத் தான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. அப்படி வாசிப்பதனால் நமக்குள் நிகழும் மாற்றம் நாம் யார் என்பதை நமக்கே காட்டும். இங்கே பெரும்பான்மையானவர்கள் தங்களின் உண்மை முகத்தை தாங்களே ஏற்றுக் கொள்ள முடியாமல் தான், அதனை மறைக்க இந்த சமூகத்தின் நடுவே நின்று கொண்டு நான் எப்படிப்பட்டவன் தெரியுமா, எனக் கதக்களி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான, சரியான, ஒழுங்கான வாசிப்பு, அந்தக் கதக்களி ஆட்டத்தை நிறுத்தும். அதன் அடுத்த கட்டமாக தான் எழுத ஆரம்பிப்பது. எழுத்து என்ன செய்யும்?. எழுத்தை முழுவதுமாக நேசித்து எழுத வேண்டும் என்கிற உந்துதல் உள்ளுக்குள் வந்துவிட்டால், அது என்னென்ன மாற்றத்தை எல்லாம், ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்த முடியும் என்பதற்கு என் வாழ்வே மிகச் சிறந்த உதாரணம். அதனை என் வாழ்வின் வழியாகவே கண் கூடாக பார்த்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் இருக்கிறேன். அதில் முதன்மையானது என் வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை சில வருடங்களுக்கு முன் தூக்கிப் பரணில் கிடாசியது. அதனை பரணியில் தூக்கி கிடாசியதில் இருந்து இன்று வரை, தொலைக்காட்சி பெட்டி என்கிற ஒன்றை எங்கு பார்த்தாலும் அதில் இருந்து பல அடி தூரம் விலகியே இருக்கிறேன். இதே நான் தான், ஒரு காலத்தில் ஒரு பஸ்சுல டிவி ஓடுனா கூட, ரோடுன்னு கூட பார்க்காம பின்னாடியே ஓடிப் போய் பார்ப்பான்டா இவன் என, பல நூறு பேரால், பல நூறு முறை மிக அதிகமாகவே கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன். தொலைக்காட்சியின் அடிமை, அவனுக்கு ஒரு டிவி இருந்தா போதும் என சொல்லப்பட்ட என் வாழ்வியல் பயணத்தில் இன்று தொலைக்காட்சி பெட்டியே இல்லை.

எந்த வகையிலும் தொலைக்காட்சி வாசிப்புக்கும், எழுத்துக்கும் சிறிதளவு கூட ஏற்புடையது அல்ல என்கிற புரிதல் வந்த பிறகு, அப்படி ஒன்று தேவையேயில்லை என்கிற முடிவை மிக தீர்க்கமாக எடுக்க வைத்தது எழுத்துத் தான். ஒரு வகையில், எது ஒன்றிலுமே நம் மனதினை எவ்விதமான சஞ்சலமும் இல்லாமல் மிகத் தீர்க்கமான முடிவை எடுக்க வைப்பதில், தொடர்ந்து எழுதுவதின் வழியே கிடைக்கும் ஆற்றலின் பங்கு மிக, மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். அதனைத் தாண்டி தொலைக்காட்சி எப்படியோ, அதே போல் தான் அலைப்பேசியும். என்னுடைய அலைப்பேசியில் எவ்விதமான இணைய விளையாட்டுகளும் கிடையாது. அலைப்பேசியில் பேசும் நேரம் தவிர, மற்ற பெரும்பான்மை நேரங்களை வாசிப்புத் தான் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. தொடர்ச்சியான வாசிப்பும், அதனைத் தொடர்ந்து எழுத்தும் ஒருவனுக்கு கொடுக்கும் தைரியமும், நம்பிக்கையும் இருக்கிறது இல்லையா, அதனைப் போலான தைரியத்தையும், நம்பிக்கையையும் கண்டிப்பாக வேறெதுவும் கொடுத்திட முடியாது. இப்பொழுது சமீபத்தில் கூட விஷ்ணுபுரம் விருது விழாவின் இறுதி நாளில், சாருவின் இலக்கிய அமர்வில், அவரிடம் கேட்கப்பட்ட மிக முக்கியமானக் கேள்வி. இன்றைய இளைஞர்கள் ஏன் அதிக மன அழுத்தத்தோடே இருக்கிறார்கள்?. அவர்களைப் பற்றி தங்களின் கருத்து என்ன என்கிற கேள்விக்கு. வாசிப்புத் தான் அந்த அழுத்ததில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, வேறு வழியே இல்லை எனச் சாரு சொல்லியதை அங்கிருக்கும் பார்வையாளர் வரிசையில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக அது தான் சத்தியமான உண்மையும் கூட. வாசிப்பையும், எழுத்தையும் தவிர வேறு எம்மாதிரியான வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அது உங்களை கண்டிப்பாக சீர்படுத்துமா என்பதற்கு எவ்விதமான உறுதியான உத்திரவாதமும் இல்லை. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *