வாழ்ந்து பார்த்த தருணம்…208

மை சன் வெற்றி விழாவா…

ஜாவானை தியேட்டரில் போய் தரிசித்து மெர்ஸலாகி, தெறிக்கவிடப் போகும் ராஜா ராணிக்கள் மற்றும் பிகில்களாகத் திரியும் மைக்கேல் ராயப்பன்கள் இந்த பதிவை தவிர்த்தல் நலம். அப்புறம் அட்லி தியேட்டர் திரையில் கொடுக்கப் போறதா நம்புற நம்பிக்கைகள் எல்லாம் நட்டுக்கும் ஆமா சொல்லிப் போட்டேன். அட்லியின் அல்வாவை நம்பாதவர்கள் மற்றும் மேற்கொண்டு படிக்கலாம் என யோசிப்பவர்கள் தொடர்ந்து துரத்தலாம்…

அட்லியோட அல்வா டிரைலர் ரீலிஸ் ஆனதும் நாம சொன்ன பதத்துல தான் கிண்டப்பட்டிருக்கான்னு பார்க்க எனக்கு மூணு நாள் ஆகிருச்சு. முதல் நாளே போக முடியல. பர்சனாலாவும் கொஞ்ச ஆபிஸியலாவும் எனக்கு கிண்ட வேண்டியது நிறைய இருந்ததனால இன்னிக்கு தான் போக முடிஞ்சிச்சி. இன்னிக்கி போய்ப் பார்த்தா அட்லீ கிண்டிருக்கது நாம சொன்ன அதே அல்வாவத் தான். ஆனா 1985 மாதிரியே பழைய பதத்துலயே கிண்டுனா நல்லா இருக்காதுல்ல. அதனால, புதுசா கொஞ்சம் சேர்ப்போம்னு ரோசனை பண்ணி, அதுல 1989ல கிண்டுன அல்வா கொஞ்சம். அப்புறம் இப்ப அதாவது 2022 & 2023ல் அயல்நாட்டுல கிண்டுன அல்வா பதத்தையும் கொஞ்சமா சேர்த்தா, கரிக்ட்டா இருக்கும்னு முடிவு பண்ணி கிண்டிருக்காப்ல. மத்தவனோட அல்வா ரெசிப்பிய அப்படியே லவட்டி எடுத்து கிண்டனும்னு முடிவு பண்ணியாச்சு. அல்வாவுக்காக நம்மகிட்ட மாட்டிருக்கதும் பெரிய கையி, பெரிய கையினால, கிண்டப்போறதும் பெரிய அண்டாவுல, அதுவும் ஹிந்தி அண்டாவுல, அதனால ஆரம்பமே அதகளமா இருக்கணும். ஆனா அந்த அதகளம் நாம யோசிச்சதா இருக்கக் கூடாது என்பது தான் நம்ம ஆளோட ஸ்டைலே. அதுக்குத்தான் இப்ப இருக்கற 2கே கிட்ஸ் பாக்காத இன்னொரு படத்த அதுவும் கமல் படத்தையே தூக்குவோம் அப்படின்னு முடிவு பண்ணி. வெற்றிவிழா படத்தோட நாயகனான கமல் அறிமுக மாகுற சீன அப்படியே பிசுறு தட்டாம 2023க்கு ஏத்த மாரி மாத்தி, கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து, தூக்கி வச்சுடாப்ல அப்பன் ஷாருக்கானுக்கு. சந்தேகம் இருக்கவங்க அதாவது 2கே கிட்ஸ் யூ டு ப்ல வெற்றி விழா படம் இருக்கு போய் பார்த்துக்கலாம். அதுல கமல் பேசுற டயலாக்ல முக்கியமானது நான் யாரு அப்படிங்குறது தான் சரியா. இங்க அப்பன் ஷாருக்கோட முதல் வசனமே அது தான். அங்க ஆரம்பிக்குது நம்ம ஆளோட அல்வா கிண்டுற ஸ்டைல். முதல் பாதியில வேற கதைய சொல்லிட்டு அப்புறமா டைரிய திறப்போம் அப்படின்னு யோசிச்சுருக்காப்ல நம்ம ஆள். காரணம், கைல மாட்டிருக்க ஆளோட அதாவது ஷாருக்கோட பேங்க் பேலன்ஸ் ஜாஸ்தி. அதுவும் அது வடநாட்டோட பேங்க் பேலன்ஸ் வேற. கம்பெனி பேர்ல வேற ரெட்டுன்னு வருது அப்படின்னு யோசிக்கிறப்பவே நம்ம ஆளுக்கு பொறி தட்டி, பேங்க், மணி, ஹீஸ்டு, ரெட்டு போட்றா வெடிய. கூப்பிடுறா ஒரு 5 பொண்ணுகள. ஆகா இது இந்தியாவாச்சே பொண்ணுகள கூப்பிட்டா மட்டும் பத்தாதே, ஏதாவது நெஞ்ச நக்கணுமே, சரி இருக்கவே இருக்கு விவசாய பிரச்சன. அத்தோட கொஞ்சம் மெடிக்கல் மெர்ஸலான ஆஸ்பித்திரி, கொஞ்சம் பேக்ட்ரி கெமிக்கல் எல்லாம் சேர்த்தா பாதி படம் அதுலயே ஓடிரும் ஆச்சா.

படத்தோட மெயின் மேட்டரே பாதிக்கு மேல தான். அப்பதான நீங்க டைரில இருந்து எல்லாம் எடுக்கவே இல்ல தெரியுமான்னு சொல்ல முடியும். அதையும் தாண்டி ஒரு கைதியின் டைரி கதையில மகனுக்கு கிட்டத்தட்ட கிளைமேக்ஸ்க்கு முன்னாடி தான், அதாவது கடைசியாத்தான் அப்பனோட கதை தெரியும். அத அப்படியே தூக்கிட்டு மகனுக்கு வளர்றப்பவே எல்லாமே சொல்லிப் போட்டு வளர்த்தா. அத்தோட அம்மாக்காரிக்கு 1985 மாதிரி கற்பழிக்கிற மாதிரி சீன் எல்லாம் வைக்க முடியாது. அதனால என்ன பண்ணலாம் யோச்சிக்கிறப்ப தான். அப்பனுக்கு வேற கமல் படத்தோட சீன கொடுத்தாச்சு. அப்ப டைரில இருக்குற கதையில உள்ளத, அதாவது அப்பன ஜெயிலுல போட்றத தூக்கி அப்படியே அம்மாக்காரிக்கு கொடுத்துட்டு. அவளயும் அங்கயே போட்டுத்தள்ளிட்டா. நெஞ்சயும் நக்கிறலாம் கதையும் மாத்திறலாம். ஆச்சா. அப்ப யாருடா அப்பனோட கதய மகனுக்கு சொல்றது. நம்ம ஜனகராஜ் கேரக்டர பத்தி டிரைலர் மேட்ருல பேசுறப்ப விட்டுட்டோம்ல அத, அதத் தான் நம்ம ஆள் மகனுக்கு கதய சொல்லி வளர்க்கிற ஒரு உப்புக்கு சப்பில்லாத கேரக்டரா அதாவது லேடி ஜெயிலறா மாத்திட்டாப்ல. மொத்த கதையும் கேட்டு வளர்ற பையன் அப்பனுக்கு உதவாம என்ன பண்ணுவான். ஆனாலும் மெயின் கதையில இருக்க மேட்டர என்ன மாத்துனாலும் நம்ம ஆளால சில இடத்த அசைக்க முடியல. ஒரு கைதியின் டைரியில மகனோட காதலிக்கு அப்பனே தன்னோட கதைய சொல்லுவாப்ல. உடனே அந்த புள்ளயும் கண்ணுல ஜலத்தோட அப்பன் பக்கம் சாய்ஞ்சி அவரோட ஐக்கியமாயிரும். அதே தான் இங்கயும். ஆனா இங்க கத சொல்ற ஆளு தான் மாறிடுச்சு, மத்தபடி அதே கண், அதே ஜலம், அதே ஐக்கியம். இது தான் மண்டைக்கு மேல இருக்குற கொண்டைய மறைக்க முடியலன்னு சொல்றது சரியா அடுத்து.

ஒரு கைதியின் டைரியில வர்ற மிக முக்கியமான டயலாக் அப்பன் கடைசியா சாகும் போது மை சன், மை சன் அப்படின்னு மைக்ல கத்திக்கிட்டே மகன் கையால குண்டு வாங்கி சாவாப்ல. ஆனா இங்க அப்பன் உயிரோட அதுவும் ஒரு கைதியின் டைரி கமலா இல்லாம, வெற்றி விழா கமலா இருக்காப்ல, அதனால தன்ன பத்தி தனக்கு தெரியுறதுக்கே டைம் எடுத்துகிடுறாப்ல வெற்றி விழா மாதிரியே. அது தெரிஞ்சதும், மகன் கையால சாகாம மை சன் அப்படின்னு சொல்றாப்ல. மத்தபடி ரெண்டும் வேற, வேற தான் புரியுதா. அதாவது, வெற்றி விழாவும், ஒரு கைதியின் டைரியும் ரெண்டும் வேற வேற படம் இல்லயா அதச் சொன்னேன். எதுவா இருந்தாலும் ஒரு ஞாயம் தர்மம் வேணும்ல கண்ணுகளா அதான் சரியா. இதுல மிக முக்கியமான கொசுறு செய்தி ஒண்ணு இருக்கு. வெற்றி விழா படமே, அந்த காலகட்டத்துல, அதாவது 1989ல the bourne identity அப்படிங்ற 1980ல ரிலிஸான ஆங்கில நாவலோட அடிப்படைக் கதைய சுட்டு எடுத்தது. அந்தக் காப்பியில இருந்து நம்ம ஆள திரும்பவும் உருவி ஜாவான்ல காப்பி பேஸ்ட் பண்ணிடாப்ல அப்பன் ஷாருக்கானுக்காக. ஆச்சா. அடுத்து இடையில மணி ஹீஸ்ட வேற இழுத்தமா. அதுல அந்த குருப்ல ஒருத்தி செத்திருவா இல்லயா. அதே மாதிரி இதுலயும் ஒருத்திய கொன்னுருவோம் ஒகேவா. மீண்டும் அதே தான். அதே ஞாயம் தர்மம் தான் சரியா. எல்லாத்துக்கும் மேலே 1985ல வந்திருந்தாலும் ஒரு கைதியின் டைரியில கொஞ்சமாவது லாஜிக் இருக்கும். பார்த்து, பார்த்து எடுத்திருப்பாங்க, ஆனா நம்ம ஆளு லாஜிக்காவது, வெங்காயமாவது. ஏய் ஷாருக்கான்டா அப்படின்னு சொல்லிட்டு, சும்மா இஷ்டத்துக்கு புகுந்து விளையாண்டு இருக்காப்ல, ஏன்பா ஷாருக்கான் தான் இல்லைன்னு சொல்லல, அதுக்காக எல்லாத்துலவும், ஏன் காப்பி அடிக்கிறதுல கூட ஞாயம் தர்மம் பார்த்த நீங்க. லாஜிக்ல கொஞ்சமாச்சும் பார்த்திருக்கக் கூடாதாப்பா. மிடியல…

பின் குறிப்பும், கடைசிக் குறிப்பும்
வாசித்தவர்களுக்கு வாகாக ஒரு வேண்டுகோள். பார்த்தத, தெரிஞ்சத தான் எழுதியிருக்கேன் இதுல வன்மமோ, வெங்காயமோ இல்லையென்பதை தெரிவித்துக் கொண்டு…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *