வாழ்ந்து பார்த்த தருணம்…27

அடிமையாய் இருக்கத் தயாரா…

போனா வாரத்தில் ஒரு நாள் ஒரு பயிற்சிக்காக நண்பருடன் தஞ்சாவூர் வரை காரில் பயணம். மாலை மூன்று மணிக்கு கிளம்புவதாக ஏற்பாடு. வழக்கம் போல் கிளம்ப நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது. தஞ்சாவூர் நோக்கிப் போய்கொண்டிருந்த போது, ஒரு சுங்கசாவடியில் பணம் கட்டிக்கொண்டிருந்தோம். பணம் வாங்கும் பணியில் இருந்த அந்த பணியாள் மிக கடுமையாக முகத்தை வைத்தபடியே இருந்தார். வண்டி ஓட்டிய நண்பர் கொஞ்சம் சிரிச்சுட்டே கொடுத்தா என்ன சகோதரா என்றார். ஆனாலும், பணியில் இருந்தவரின் முகம் மாறவேயில்லை. எனக்கு அவரை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் நான் இதனைக் கவனித்திருக்கிறேன். ஒரே மாதிரியான வேலையில் பல நாட்களாக, எவ்விதமான புதிய யோசனையும் அற்று பணி செய்து கொண்டிருக்கும் ஒருவரது மனநிலை இப்படிப்பட்டதாக தான் இருக்கிறது. பாவம் அவர்களைச் சொல்லியும் பயனில்லை. காரணம், வேலை நேரம் என்பது வரையறுக்கப்பட்டது என்பதே இங்கு ஏட்டளவில் தான். எட்டு மணி நேரம் என்பதெல்லாம் பெரும்பாலும் பகற்கனவு தான். பெரும்பாலானவர்களின் வேலை நேரம் என்பது இங்கு கூட்டிக் கழித்துப் பார்த்தால் பதினோரு மணி நேரம் வரும். அதுவும் வேலை செய்பவனின் உடலின் ஆற்றல் மொத்தமாக, சுத்தமாக உறிஞ்சிவிட்டு தான் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள். அப்புறம் எப்படி வேலைத்தாண்டி சிந்திக்க முடியும், வேலைக்குச் சேர்ந்து வருடங்கள் ஆகிவிட்டால் முடிந்தது கதை. வேலை செய்பவனது மனநிலையை அவன் செய்யும் வேலையை தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்ற நிலைக்குப் படிப்படியாக தள்ளிவிடுகிறார்கள். அப்புறம் அவனைப் படைத்த கடவுளே வந்து சொன்னாலும், தனக்கு வேறு வேலை செய்யக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்பதை அவன் நம்பவேமாட்டான். இப்படிப்பட்டவர்கள் பணியிடத்தில் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு வந்து ஆகச்சிறந்த அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். இவர்களைப் போன்றவர்களிடத்தில் பேசிப்பாருங்கள். தாங்கள் வேலை செய்யும் இடத்தை பற்றி வண்டி, வண்டியாகப் புகார் கூறுவார்கள். ஆனால் வேறு வேலையைப் பற்றி கனவில் கூட யோசிக்க மாட்டார்கள். அதே சமயம் நிர்வாகத்திற்கு வெளியில் இருந்து ஒரு பிரச்சனையென்றால் முதல் ஆளாக உயிரைக் கொடுப்பார்கள், அதே ஆள் தன் குடும்பத்துக்காக கூட உயிரை கொடுக்கும் முடிவை எடுப்பார்களா என்பதே சந்தேகம். காரணம், விசுவாசம். ஆனால், இவர்களின் விசுவாசம் எதன் மீது என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

வேறு ஒரு வகை இருக்கிறார்கள், இவர்கள் அங்கிகார அடிமைகள், இவர்களுக்கு தன்னை தன் நிறுவனம் அங்கிகரிப்பதையே பெரிய விஷயமாக கருதி, வேலை செய்யும் இடத்தில் அதன் உரிமையாளரே புல்லரிக்கும் அளவுக்கு முழுநேரமும் தான் செய்யும் வேலைக்குள்ளேயே இருப்பார்கள். இவர்கள் செய்யும் வேலையை யோசித்தால் வாங்கும் சம்பளம் மிகச் சொற்பமானதாக இருக்கும். அதனைத் தாங்கள் உணராமல் வாங்கும் சம்பளமே அதிகம் என்கிற மனநிலையை, அந்த நிர்வாகம் இவர்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும். அதையும் இவர்கள் முழுதாக நம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் செய்யும் வேலை எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்பதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் உணராத அடிமைகளாக இருப்பார்கள். இவர்கள் கள யதார்தத்தை உணரும் போது வாழ்கையின் பெரும்பகுதி முடிந்துபோயிருக்கும். அதன் பின் மீண்டு வருவதெல்லாம் முடியாத நிலையாக இருக்கும்.

இப்படி பல நேரங்களில் என்னிடம் பேச வரும் நண்பர்கள். தான் அடிமையாய் இருப்பதின் வலியையும், அதிலிருந்து விடுபடமுடியாமல் இருக்கும் தன்னுடைய கையேறு நிலையையும் சொல்லிப் புலம்புவார்கள். அப்படிச் சமீபத்தில் என் மனைவியின் வழியே அவரின் தோழியின் கணவர் ஒருவர் என்னிடம் பேச வந்தார். என் மனைவி வேலையின் தன்மை என்பது குழுவாக பணிசெய்வது. இங்கே முதலாளி, தொழிலாளி பேதம் எல்லாம் இல்லை. வேலை நேர கட்டாயமில்லை, நீங்களாகவே உங்களின் வேலை நேரத்தை நிர்ணயம் செய்து வேலை செய்யலாம். வேலை செய்யும் நேரத்தை பொறுத்து உங்களுடைய வருமானமும் இருக்கும். நான் ஒரு வகையில் தன்னிறைவோடு வாழ்க்கை எதிர்கொள்வது எப்படி எனத் தன்னிம்பிக்கை அளிக்கும் பயிற்சியாளராக இருப்பதினால், அப்படிப்பட்ட என் மனைவியின் குழுவுக்கு நான் பயிற்சி அளிப்பதுண்டு, அந்த சமயத்தில் தான், என் மனைவியின் கல்லூரி தோழியின் கணவர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டுமெனக் கேட்டார், இதுபோல் பயிற்சி அளிக்கும் நாளில் நிறைய சமயங்களில் பயிற்சிக்கு வந்திருப்பவர்கள் தனியாக பேசவேண்டும் எனக் கேட்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். அதைக் காதுக் கொடுத்து தெளிவாகக் கேட்டு அதற்கேற்றாற் போல் தீர்வுகளை அவர்களிடதிலிருந்து யோசித்து புரிந்து சொன்னாலே ஏற்றுக்கொள்கிறார்கள்.

அப்படி வந்த என் மனைவியின் தோழியின் கணவர் வேலைசெய்யும் நிறுவனத்தில், ஒரு நாள் வேலை என்பது காலை ஒன்பது மணிக்கு தொடங்கி இரவு ஒன்பதரை மணிக்கு முடிகிறது. மதியம் நாற்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே மதிய உணவுக்கான நேரம். உணவு நேரத்தில்  ஐந்து நிமிடம் அதிகமாக எடுத்துக்கொண்டால் கூட, அதனையும் ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்திற்கானதாக கணக்கு வைத்து, சம்பளத்தில் பிடித்துவிடுவார்கள். அவருடைய சம்பளத்தில் பாதிக்கும் மேல் வீட்டின் வாடகைக்கும், மின்சாரத்துக்கும் போய்விடும் என்றார். மீதிப் பணத்தில் தான், சாப்பாடு இன்னபிற செலவுகள் எல்லாம். தினமும் இரவு வீட்டுக்கு வரும்போது ஆற்றல் என்பதே உடலில் இருக்காது. எப்படா படுக்கலாம் என்று தான் தோன்றும். வாரவிடுமுறை நாட்களில் கூட தூங்கத் தான் மனம் ஏங்குகிறது. உடல் முழுவதும் அப்படி ஒரு அயர்ச்சியும், வலியும் பரவி இருக்கும் போது, வேறு சிந்தனையே ஒடாது என்றார். அவர் சொல்வதை கேட்கவும், அவரை பார்க்கவும் பரிதாபமாக இருந்தது. நிறைய நேரம் அவருடன் பேசினேன். பல விஷயங்களை, உங்களின் வாழ்வில் நீங்கள் எப்படி எல்லாம் கையாண்டால் இதிலிருந்து விடுபட முடியும் எனச் சொன்னேன், மிக கவனமாகக் கேட்டுக்கொண்டவர், சொன்னதை மிகுந்த சிரத்தையுடனே கடைப்பிடிக்கிறார். விரைவில் மீண்டுவருவார் என மனப்பூர்வமாக நம்புகிறேன். இவர்களை போன்று சில பேர் மட்டுமே இந்த அடிமைத்தனதிலிருந்து வெளிவர வேண்டும் என்ற தேடுதலுடன் வருகிறார்கள். அவர்களிடம் பேசும்போதும், அந்த பேச்சின் வழியே நம்பிக்கையின் ஒளி அவர்களின் கண்களில் மின்னும்போதும், அதைப் பார்த்து ஒரு ஆத்ம திருப்தி மனதினுள் வருமே, அதற்கு ஈடானது இவ்வுலகில் வேறேதுமில்லை. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *