வாழ்ந்து பார்த்த தருணம்…28

மத்தகம் – ஜெயமோகனின் செவ்வியல் ஆன்மா…

ஜெயமோகன் என்னுடைய வாசித்தலை அடுத்தத் தளத்துக்கு எடுத்துச் சென்ற மிக, மிக முக்கியமான எழுத்து ஆசான். ஒரு வகையில் எஸ்.ராமகிருஷ்ணனும் அப்படியே. அவரின் கதாவிலாசம் எனும் புத்தகத்தை வாசித்தலின் வழி தான் எனக்கு நிறைய எழுத்தாளர்களின் அறிமுகமும், அப்படி அறிமுகமான ஒவ்வொரு எழுத்தாளர்களின் தனித்த அடையாளமும் தெரிந்தது. ஏற்கனவே எழுதியிருந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல், ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் நாவலில் என்னை வெகுவாக ஈர்த்த, பாதித்த எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். செவ்வியல் தன்மையில் எழுத்தப்பட்ட மற்றுமொரு கதை மத்தகம். ஒரு எழுத்தாளன் தன்னுடைய மூச்சுக்காற்றில் கூட எழுத்தை சுவாசித்தால் ஒழிய, இப்படிப்பட்ட செவ்வியல் தன்மையுடன் கூடிய ஆழ்மனம் வரை சென்று உலுக்கும் ஒரு கதையை எழுத முடியாது. கண்டிப்பாக ஜெமோ அதில் வித்தகர்.

பொதுவாக ஒரு மொழியின் ஆன்மாவையும், அதன் ஆளுமைத் திறனையும் மிகக்கூர்மையாக உள்வாங்கினால் ஒழிய, அந்த மொழியை தன் வசப்படுத்தி எழுதுவது கடினம். அதற்கு மொழியின் மீதானப் பற்றும் அதன் மீது தீராக் காதலும் இருத்தல் வேண்டும். ஜெமோ அப்படியான காதலுடன் தமிழ் மொழியின் ஆழத்தையும், அதன் ஆளுமை திறனையும் சரியாக உட்கிரகித்து, தன்னுடைய மேம்பட்ட எழுத்து நடையில், தன்னுடைய படைப்பின் பல அடுக்குகளின் வழியே அவர்தம் படைப்புலகத்தை நம் கண்முன்னே விரியவிடுகிறார். தொடர்ச்சியாக வாசிப்பின் மீது காதல் கொண்டும், வாசித்துக் கொண்டும் இருக்கும் ஒருவனுக்கு, இப்படிப்பட்ட நாவல்கள் கொடுக்கும் உணர்வு என்பது வெகு அலாதியானது. அதனைத் தொடர்ந்து வாசித்தலின் வழியே மட்டுமே உணரமுடியும். கண்டிப்பாக எவ்வித வார்த்தை அடுக்குகளின் வழியாகவும் விளக்கி சொல்ல முடியாத ஒரு வித வாசிப்பு போதை அது.

மத்தகம், யானைப் பாகனின் உதவியாளனாய் சேரும் ஒருவன், அதன்பின் படிப்படியாக அந்த யானையையே கட்டுப்படுத்தும் பாகனாக எப்படி மாறுகிறான் அல்லது அவனுடைய வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் வழியே, அவன் எப்படி யானையை கட்டுப்படுத்தும் பாகன் என்கிற நிலையை அடைகிறான் என்பதை, அந்த உதவியாளனாய் சேரும் பாத்திரத்தினுடைய பார்வையின் வழியே சொல்லப்பட்டு, நம் கண்முன் விரியும் உலகம் தான் மத்தகம். இந்த நாவலின் வழியே நாம் பார்க்கும் உலகம் என்பது மிக, மிக நுட்பமான பல அடுக்குகளைக் கொண்டது. அதில் கேசவன் எனும் யானை. அதன் பாகன் ஆசான், தம்புரான், நாரயணன் எனும் மற்றோரு யானை, மற்றொரு உதவியாளன் அருணாசலம் என ஒவ்வொரு கதாபாத்திரமும், அது படைக்கப்பட்டிருக்கும் விதமும் அட்டகாசம். கண்டிப்பாக ஒரு முறைக்குப் பல முறை படிக்கவேண்டிய நாவல்.

சில படைப்புகள் மட்டுமே எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதான ஒரு கோணத்தை அல்லது உலகத்தை நமக்கு கொடுத்தபடி இருக்கும். அப்படியான ஒரு படைப்புத் தான் ஊமைசெந்நாய் எனும் புத்தகத்தில் இருக்கும் மத்தகம் எனும் படைப்பு. இந்த படைப்பின் வழியே யானை எனும் விலங்கை பற்றி வாசகன் தெரிந்து கொள்வது ஒருவகை என்றால். மற்றொன்று அதற்கும் மனிதனுக்குமான உணர்வு. அது மனிதனை, அவன் பேசும் மொழியை புரிந்துகொள்ளும் விதம். அந்த விலங்கினுள் இருக்கும் மிக நுட்பமான உணர்வுகள். அந்த உணர்வுகளை அது வெளிப்படுத்தும் விதம். அதன் அங்க அசைவுகளின் வழியே அதன் நிலையை அல்லது அதன் மனதை, மனிதன் புரிந்துகொள்ளும் விதம் என இன்னும், இன்னும் மிக ஆழமான எக்கச்சக்கமான விஷயங்கள் பல அடுக்களில், இந்தப் படைப்புக்குள் இருக்கின்றன. இங்கே யானை என்பதை வெறும் விலங்காகவும் பார்க்கலாம். அதே சமயம் மனிதனின் ஆழ்மனதுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டுமே ஒரு வகையில் ஏற்புடையதாகத் தான் இருக்கும். இப்படி இரண்டு விதமாகவும் பார்க்கும் பார்வை நம் மனதில் தோன்றும் போது, இந்த படைப்பின் வீரியம் என்பது எத்தகையது என்பது முழுமையாக விளங்கும். முப்பது நாட்களுக்குள் இரண்டு முறை முழுதாக வாசித்தாகி விட்டது, கண்டிப்பாக, ஒரு சிறு இடைவெளி விட்டு, விட்டு இன்னும் பல முறை வாசிப்பேன். அதுவே இந்தப் படைப்புக்கு நான் கொடுக்கும் மரியாதை என்பதை விட, இந்த படைப்பின் வழியே எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் மிக நுட்பமாக விஷயங்கள் அதிகம். அதுவே என்னை, என் எழுத்தை, என் வாழ்வின் மீதான புரிதலை அதிகப்படுத்தி என்னை முன்னோக்கி செலுத்துகிறது, நன்றி. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *