வாழ்ந்து பார்த்த தருணம்…31

ரணத்தின் பிரதிபலிப்பு…

அர்ஜூன் ரெட்டி தெலுங்கில் ஒரு புதியதோர் அலையை மிகப்பெரும் தாக்கத்தில் ஏற்படுத்திய ஆகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படம். அர்ஜூன் ரெட்டி இப்படி ஒரு ஆகப்பெரும் வெற்றியை பெற மிக முக்கியமான காரணமாக நான் கண்டது. அதன் பிரதான நாயக கதாபாத்திரம் மிக, மிக நுட்பமான உளவியலின் வழியே மிகச்சரியாக கட்டமைக்கப்பட்டது தான். இந்த ரசவாதமான பாத்திர படைப்பு எல்லா திரைப்படங்களுக்கும் அமைந்து விடுவதில்லை. அர்ஜூன் ரெட்டியில் அப்படி ஒரு நுட்பமான பாத்திரபடைப்பு அமைந்ததும், அதனை மிக, மிக சரியாக தன்னுள் உள்வாங்கி விஜய் தேவர்கொண்டா திரையில் வெளிப்படுத்தியதும், இந்தத் திரைப்படத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. இப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை வேறு மொழியில் திரும்ப உருவாக்கும் போது, அது கத்தி மேல் நடப்பது போல, பெரும்பாலான நேரங்களில் இந்த மாதிரியான மீள் உருவாக்கம், மிக பெரிய அளவில் சறுக்கி அதளபாதாளத்தில் போய் விழுந்து விடும். ஆனால் இந்த படத்திற்கு அது அப்படியே வேறு மாதிரியாக நடந்திருக்கிறது. அதற்கு மிக, மிக முதன்மையான காரணம் இயக்குநர் சந்தீப் வாங்கா என்றால் அது மிகையில்லை. தெலுங்கில் இந்தப் படம் ஏற்படுத்திய அதே ரசவாதத்தை, இன்னும் பல மடங்கு அதிகமாகவே ஹுந்தியில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் சந்தீப் வாங்கா. அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் நடிகரான ஷாகித் கபூரும் சும்மா சொல்லக்கூடாது, சும்மா அதிர விட்டிருக்கிறார். ஹுந்தியில் இன்னும் வெளிவரவில்லை, ஒரே ஒரு பாடலின் காட்சிமொழி மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. அதுவே இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறது. கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி திரையில் மீண்டும் ஒரு அற்புதமான ரசவாதத்தை காண காத்திருக்கிறேன்.

பொதுவாக ரணவேதனை என்ற வார்த்தையை நிறைய பேர் பேச்சு வழக்கில் பயன்படுத்துவார்கள். அந்த வலியை உணர்ந்து தெரிந்துகொள்ள வேண்டுமானால், யாரையாவது ஒருவரை ஆழ்மனத்திலிருந்து வெளிப்படும் பரிபூரண காதலோடு நேசித்து, அவர்களுக்காகவே வாழ்ந்து, நம் வாழ்நாள் முழுவதும் அந்த ஒருவர் நம்முடனே இருப்பார் என நம்பும் தருணத்தில், அவர்களை பிரியும் சந்தர்ப்பமொன்று வரும், அந்த பிரிவை முழுமையாக தாங்கி, பிரியும் நபரை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல், அவர்கள் எங்கிருந்தாலும் எவ்வித குறையுமில்லாமல், மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நம் மனம் ஏங்கும், ஆனாலும் அந்த ஒருவரின் வாழ்வு ஏப்படிப்பட்டதாக அமையவிருக்கிறதோ என யோசிக்கும் போது, அந்த நபரின் வாழ்வு நல்லபடியாக அமையப்போவதில்லை என நமக்குத் தெரிந்தும், நம்மால் ஏதுவும் செய்யமுடியாது என்ற கையேறு நிலையில், மனதின் அடி ஆழத்தில் தோன்றுமே ஒரு ரணம். அதைத் தான் அர்ஜூன் ரெட்டி நாயக கதாபாத்திரம் படம் முழுவதும் அனுபவிக்கும். இவ்வளவு ஆழமான உள்ளடுக்குகளின் வழியே புரிந்து உணர்ந்து வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரத்தை, விஜய் தேவர்கொண்டா மிகச்சரியாக உள்வாங்கி திரையில் வெளிபடுத்திய விதம் தான். அவரை இப்படி ஒரு முன்னனி நாயக நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

மேலே சொன்ன எல்லாவிதமான பண்புகளையும் உள்ளடக்கிய கதாபாத்திரத்தை, மீண்டும் ஒரு முறை திரையில் கொண்டு வர, அதுவும் வேறு மொழியில் அசாத்தியமாய் செய்யப்பட்ட பாத்திரத்தின் பாதிப்பை தன்னுள் உட்புகாவண்ணம் தவிர்த்து, அதைத் தனக்கான பாத்திரமாய் உயிரோட்டமாய் கொண்டுவருவது என்பது மிகப்பெரும் சவால். அதனை ஷாகித் கபூர் மிக, மிகச் சரியாய் உள்வாங்கி செய்திருக்கிறார். தெலுங்கில் இந்த படத்தின் இன்னுமொரு மிகப்பெரும் சிறப்பு. படத்தின் பெரும்பான்மையான துணை கதாபாத்திர தேர்வும். அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் நடிப்பும். மிகச்சரியானதாய் அமைந்திருக்கும். அர்ஜூன் ரெட்டியில் பிரதான நாயக, நாயகி கதாபாத்திரத்தை தாண்டி, என்னை மிகவும் கவர்ந்த மிக முக்கியமான கதாபாத்திரம், நாயகனின் அப்பாவின் அம்மாவாக, நாயகனின் பாட்டியாக நடித்திருந்த பழம்பெரும் நடிகை காஞ்சனா அவர்களின் கதாபாத்திரம். அந்த பாட்டி பாத்திரம் படத்தின் ஒரு முக்கியமானக் காட்சியில், நாயகனின் அண்ணனிடம் இப்படிச் சொல்லும். துன்பம் என்பது ஒரு மனிதனின் மிகவும் தனிப்பட்ட விஷயம். அவன் துன்பப்படட்டும் என்று. அந்த வசனம் திரைப்படத்தில், எந்த காட்சியில், எந்த இடத்தில் நாயகனின் பாட்டியான காஞ்சனா சொல்கிறார் என்பதை கவனித்தால். அதன் வீரியம் எப்படிப்பட்டதென புரியும். அந்த கதாபாத்திரத்தை ஹிந்தியில் யார் ஏற்று நடிக்கப்போகிறார்கள் என்பதைக் காண ஆவலாக காத்திருக்கிறேன். ஹிந்தியில் இன்னும் படம் வெளிவரவில்லை. ஒரே ஒரு பாடல் காட்சியின் காட்சிமொழி மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. அதுவே இவ்வளவு தூரம் என்னை எழுத தூண்டியிருக்கிறது. அந்தப் பாடலை ஒரு நாளில் எத்தனையோ முறை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பாடலை பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது, நீளம் கருதி….

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *