வாழ்ந்து பார்த்த தருணம்…33

பாடி Strong தான், ஆனா Basement தான் மொத்தமா வீக்…

நம்பிக்கை என்பது உண்மையில் என்ன. அது ஏப்பேர்ப்பட்ட சூழலில் நம்மிடம் எப்படி வெளிப்படவேண்டும். இதில் உள்ள சூட்சமம் தான் ஒரு மனிதனின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பத்தில் மிக, மிக முக்கியமான பங்காற்றுகிறது. யார் ஒருவர் இதனை மிகச்சரியாக புரிந்து கொண்டு, அந்த புரிதலோடு தன்னுள் உள்ள நம்பிக்கையின் ஒளியை எவ்வளவு பெரிய மோசமான சூழலிலும் அணையவிடாமல் தக்கவைக்கிறார்களோ, அவர்கள் தோல்வியே அடைந்தாலும், அவர்களை இந்த உலகம் கொண்டாடும். ஆனால் அந்த நம்பிக்கையை கைவிடும் ஒருவர், அதுவும் அவர் தலைமைத்துவத்தில் இருக்கும் நபர் என்றால், அந்த நம்பிக்கையற்றத் தன்மை அந்த குறிப்பிட்ட நபரை மட்டுமல்லாமல், அவரின் வழிநடத்தலுக்கு கீழ் இருக்கும் எல்லோரது செயல்பாடுகளையும் கண்டிப்பாய் சிதைத்துவிடும். அதற்கு நம் கண்முன்னால் மிகச் சிறந்த உதாரணம் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி. இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் வீராட் கோஹ்லி மேலே சொன்ன அந்த நம்பிக்கையற்ற தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவரின் அந்த நம்பிக்கையற்ற மனநிலை தான், அவருடைய அணியின் ஒட்டுமொத்த கனவை, அவரின் கண்முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை பார்க்கவைத்தது.

கிரிக்கெட் விளையாட்டை பற்றி நேர விரயம், பிதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பதினோராயிரம் முட்டாள்கள் அமர்ந்து பார்க்கிறார்கள் என்று, பல வகைகளிலும் கிரிகெட்டின் மீது மிகப் பெரும் விமர்சனம் வைக்கப்பட்டாலும், இந்தியாவை பொறுத்த அளவில் இந்த விளையாட்டு ஒரு மதம், அதனை ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். இந்த விளையாட்டு என்பது மேலே சொல்லப்படும் விமர்சனத்தைத் தாண்டி, இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான, குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து இழுப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மிகப்பெரும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இங்கே வெற்றி பெற்ற ஒருவன், அதுவும் கிரிக்கெட் போன்ற விளையாட்டில் மட்டையாளனாக இருக்கும் ஒருவன், தன்னுடைய செயல்பாடுகளின் வழியே கொடுக்கும் நம்பிக்கை என்பது, இந்தியா போன்ற மிகப் பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டின் பெரும்பான்மையான மக்களை சென்றைடைகிறது. அதனை உணர்ந்து செயல்படும் ஒருவன் அந்த மக்களின் மத்தியில் மிகபெரும் நாயகன் ஆகிறான். அப்படி தன்னுடைய விளையாட்டு திறனால் மட்டுமல்லாமல், தன்னுடைய செயல்பாடுகளின் வழியாகவும் முன்னுதாரணமாக இருக்கும் ஒருவன், தோல்வி அடைந்தாலும் இந்த உலகம் அதனைப் புரிந்து கொண்டு அவனை அரவணைக்கும். அதுதான் நிதர்சனம். அப்படிப்பட்ட உயர்வான இடத்தில் வைத்துப்பார்க்கப்படும் ஒரு நாட்டின் முக்கியமான விளையாட்டை விளையாடும் அணியின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவன், எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்கு தோனியையும், எப்படிப்பட்டவனாக இருக்கக்கூடாது என்பதற்கு கோஹ்லியையும் உதாரணமாகச் சொல்லாம்.

கோஹ்லியை பற்றி இப்படி சொல்வதை எத்தனை பேரால் ஏற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. ஆனால் என்னளவில் நிதர்சனம் இது தான். குறிப்பாக நடந்து முடிந்த அரையிறுப்போட்டியில். நாம் மட்டையாட தொடங்கி அடுத்தடுத்து இரண்டு மட்டையாளர்களை இழந்தாயிற்று. அதில் கோஹ்லியும் ஒருவர். கோடிக்கணக்கான பேர் தொலைக்காட்சி மட்டுமல்லாது, பல்வேறு வகைகளிலும் நேரலையில் போட்டியை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதன்பின் களத்திலிருந்து தன்னுடைய விக்கெட்டை இழந்துவிட்டு வந்த கோஹ்லி. அறையில் இருந்தபடி களத்தை பார்க்கிறார். களத்தை காட்டி கொண்டிருக்கும் ஒளிப்பதிவு கருவி. அப்படியே அவரை நோக்கி திரும்புகிறது. களத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவரின் முகத்தில் ஈயாடவில்லை. அப்பட்டமாய் அவர் முகத்தில் நாம் தோற்றுப் போய்விடுவோம் என்பது தெரிந்தது. தான் களத்தை விட்டு போனவுடன் தன் அணி தோற்றுப் போய்விடும் என்று தன்னுடைய உடல்மொழியில் மற்றும் முகபாவனைகளின் வழியே அப்பட்டமாய் வெளிப்படுத்தும் ஒருவன் எப்படி அணித்தலைவராக இருக்க முடியும். இந்த மாதிரி நேரங்களில் தோனியிடம் கண்டிப்பாய் எதிர்மறையான சிந்தனை ஓட்டத்தை பார்க்கவே முடியாது. பெரும்பாலும் அவர் சலனமற்று தான் இருப்பார். தன்னுடைய உணர்ச்சிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கையாளத் தெரிந்த ஒருவனே சிறந்த தலைவனாக இருக்க முடியும். பொதுவெளியிலும் சரி, களத்திலும் சரி, தோனி அதில் வித்தகர். கோஹ்லி அதற்கு நேரெதிர். தன்னுடைய உணர்ச்சிகளை களத்திலும், களத்திற்கு வெளியேயும் கட்டுப்படுத்தாமல் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். அதற்காகவே சில நேரங்களில் அவர் கொண்டாடப்பட்டார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் உலககோப்பை போன்ற தொடர்களில், அது கொடுக்கும் அழுத்தத்திற்கு இடையில் விளையாடும் போது, தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்கத் தெரியாத ஒருவரால், கண்டிப்பாக சிறப்பாக அணியை வழிநடத்த முடியாது. இந்த தொடர் தொடங்கியதில் இருந்தே இடையிடையில் இந்த பிரச்சனை வெளிப்பட்டாலும். வெற்றி எல்லோர் கண்களில் இருந்தும் அதனை மறைத்துவிட்டது. அணித்தேர்வில் இருந்து எல்லா இடத்திலும் கோஹ்லியின் இந்த நிலையற்ற உணர்ச்சிவசப்பட்ட மனநிலை தான், அவரை இப்படிப்பட்ட மோசமான தோல்வியை நோக்கி கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. ரவிசாஸ்திரி தான் பயிற்சியாளராக வேண்டுமெனக் கேட்டு பெற்றது கோஹ்லி தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். அப்படியிருக்கையில் களத்தில் அடுத்தடுத்து எந்த மட்டையாளரை களமிறங்க வேண்டும் என்பதில் இருவரும் காரசாரமாக மோதிக்கொண்டார்கள் என்பதெல்லாம் சப்பைக்கட்டு.

மொத்தத்தில் நான்காம் வரிசையில் யார் இறங்கவேண்டும் என்பதில் இருந்த நிலையற்றத் தன்மை. அதனை சரிசெய்யாமலேயே, உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் கூட சோதனைகளை செய்தபடியே இருந்தது. குறிப்பாக அனுபவ வீரர்களை உதாசீனப்படுத்தியது. அனுபவமற்றவர்கள் ஆடினால் என்ன ஆகும் என்பதற்கு ரிஷபண்ட் ஆட்டக்களத்தில் இருந்து வெளியேறிய விதமே மிகச்சிறந்த உதாரணம். மிக முக்கிய போட்டியில், அதுவும் வாழ்வா, சாவா என்ற நேரத்தில் கூட என்ன மாதிரியான கேவலமான ஷாட்டை அடித்து வெளியேற முடியும் என்பதை ஆடிக்காட்டிவிட்டு போயிருக்கிறார் ரிஷபண்ட். ஆப்கானிஸ்தான் நமக்கு தண்ணிக்காட்டி கொண்டிருந்தபோது, களத்தில் ஒழுங்காக விளையாடிய இரண்டு பேர் கேதர்ஜாதவ் மற்றும் தோனி. ஆனால் மிக முக்கியமான அரையிறுதியில் கேதர் அணிக்குள் இல்லை. அம்பதிராயுடுவை பற்றி இவர்கள் யோசிக்கவேயில்லை. தோனியும், ரவிந்திரஜடஜாவும் இல்லையென்றால் இந்தியாவின் அரையிறுதிப்போட்டி மொத்தமாக நாறியிருக்கும். கோஹ்லியைப் போல் அறையில் அமர்ந்தபடி தோல்வி அடைந்துவிடுவோம் என்று கேவலமாய் ஊரே நேரலையில் பார்க்க அமர்ந்து இருந்தது போல் அல்லாமல், தோனி களத்தில் இருந்தவரை இந்தியா ஜெயிக்கும் என முழுமையாய் நம்பிய ரசிகனே இந்திய அணித்தலைவரைவிட சிறந்தவனாய் தோன்றுகிறான்…

பின்குறிப்பு : ஞாபகம் இருக்கிறதா மார்ச் 12 வருடம் 2006 தென்னாப்பிரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 434 ரன்கள். கண்டிப்பாக யாரைக்கேட்டாலும் தென்னாப்பிரிக்கா ஜெயிக்கும் என சொன்னால் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவர் நம்பினார். அது தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் ஸ்மித். அவர் தான் இரண்டாவது தென்னாப்பிரிக்கா களத்திற்கு வருவதற்கு முன், உடைமாற்றும் அறையில் தன்னுடைய அணியினரிடம் இப்படி சொன்னாராம், ஆஸ்திரேலியா அணி 450 ரன் அடிப்பாங்கன்னு நினைச்சேன், ஆனா 15ரன் கம்மியாதான் அடிச்சிருக்காங்க என்று, இந்த ஒரு வார்தையைக் கேட்டுவிட்டு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வீரர்கள் என்ன செய்தார்கள் என்பது வரலாறு.
கடைசியாக சில வரிகள். மேலே எங்கேயுமே நியுசிலாந்து அணியின் ஆட்டத்தை பற்றியோ அல்லது அந்த அணியின் தலைவர் கேன்வில்லியம்சன் பற்றியோ சொல்லவில்லை. ஒரு அரையிறுதி போட்டியில் விளையாடும் அணி. ஆடும் களத்தை புரிந்துகொண்டு எப்படி ஆடவேண்டும் என்பதற்கு உதாரணமாய் ஆடினார்கள், இன்னும் நிறைய நியூசிலாந்து அணியை பற்றி எழுதலாம் என நினைத்தேன் வயிற்றேறிச்சலை கொட்டவேண்டாம் என இத்துடன் நிறுத்துகிறேன் நன்றி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *