வாழ்ந்து பார்த்த தருணம்…35

வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்கிறோம்…

ஒரு வார்த்தையை உள்வாங்கும் பொழுது எந்த இடத்தில் இருந்து அதனை புரிந்துகொள்கிறோம் என்பதில் தான் வாழ்வின் ஆதாரப் புள்ளியே இருக்கிறது என்பதை இந்த வாழ்வு ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. என்னை நோக்கி வரும் வார்த்தைகளை நான் நிற்கும் இடத்தில் இருந்து மட்டும் புரிந்து கொள்கிறேனா? அல்லது அந்த வார்த்தை எங்கிருந்து வருகிறதோ அந்த இடத்தில் என்னை இருத்தி அந்த வார்த்தை உருவாகி வந்த இடத்திலிருந்து அந்த வார்த்தையை உள்வாங்குகிறேனா என்ற என்னுடைய புரிதல் தான், என்னுடைய வாழ்வில் நிகழும் எல்லாவற்றுக்குமான பின்புலமாக இருக்கிறது.

மேலே நான் சொன்னவைகளை மிகச்சரியாக புரிந்து கொண்டால், எதிலுமே உடனடியான எதிர்வினை புரியமாட்டோம் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. ஆனால் உண்மை நிலவரம் பெரும்பாலான நேரங்களில் அப்படி இருப்பதில்லை. நம்மை நோக்கி வரும் வார்த்தைகளுக்கு உடனடியாக நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தான், நாம் யார் என்பதையே முடிவு செய்கிறது. இந்த இடத்தில் தான் மிகப்பெரும்பாலவர்கள் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு வார்த்தை எந்த அளவுக்கு ஒருவனின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என யோசித்தால், அந்த வார்த்தை தான் பல சாம்ராஜ்யங்களையே ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கிறது.

நம்மை நோக்கி வரும் வார்த்தைகளுக்கு உடனடியான முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தி. சில நிமிடங்கள் யோசித்தாலே பல விஷயங்கள் இங்கே பெரும் அளவில் மாறும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பெரும்பாலான நேரங்கள் அப்படி நடப்பதேயில்லை. நம்மை நோக்கி வரும் ஒரு வார்த்தையை நமக்கு ஏற்றவாறு உள்வாங்கும் தருணத்தில் இருந்து, அந்த ஒரு வார்த்தையின் மீது ஓராயிரம் வார்த்தைகளை, அதுவும், நமக்கு ஏற்றவாறு கட்டமைக்க ஆரம்பித்து விடுகிறோம். அப்புறம் எப்படி யோசிக்க முடியும். வாய்ப்பேயில்லை. அப்படி நமக்கு ஏற்றவாறு வார்த்தைகளை கட்டமைக்க ஆரம்பித்தவுடன், நாம் முழுமையாக அந்த வார்த்தைகளின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடுகிறோம். அதன் பிறகு நடப்பது எல்லாமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. முதலில் நம்மை நோக்கி வரும் ஒரு வார்த்தையின் பின்னால் என்ன மாதிரியான விஷயங்கள் இருக்கின்றன என கேவலமாக யோசிக்கும் பொதுப் புத்தியை விட்டாலே போதும் என நினைக்கிறேன்.

இதில் இன்னொரு விதமான நிகழ்வும் நடக்கும். நம்மை நோக்கி வரும் வார்த்தைகளுக்கு நாமே பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து யோசிக்காமல், இந்த வார்த்தை ஏன் நம்மை நோக்கி வருகிறது என்ற கேள்வியோடு மனதினை சமநிலையில் வைத்திருந்தால் கூட, நம் கூடவே இருக்கும் இன்னொருவருடைய மனம் அதெப்படி உன்னைப் பார்த்து அந்த வார்த்தையை சொல்லலாம் எனப் பொங்கி. நம்முடைய மனச்சமநிலையை சிதைக்கும் குரலும், உங்களின் செவிக்கு அருகிலேயே ஒலிக்கும். சில நேரங்களில் அப்படி உங்களின் செவிக்கு அருகில் ஒலிக்கும் வார்த்தைகளுக்கும், முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணிப்பதற்கும், ஒரு தனித்த மனநிலை தேவை. இப்படி நம்மை நாமே ஒவ்வொரு நிமிடமும் தயார் நிலையில் வைத்திருந்தால் ஒழிய, நாம் என்றைக்குமே நம்மை நோக்கி வரும் வார்த்தைகளின் அடிமைகளாவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டிருப்போம். உங்களை நோக்கி வரும் வார்த்தை பிரயோகங்களுக்கு உடனடி எதிர்வினையை கொடுக்காமல், சில நொடிகளேனும் அதன் மீதான கவனத்தை மாற்றினாலே, இயல்பாய், அற்புதமாய் பல மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்களின் ருசியை இந்த மனம் ஒரு முறை உணர்ந்துவிட்டாலே போதும். நாம் வார்த்தைகளின் அடிமையாய் இல்லாமல், நேர்மறையான மாற்றங்களுக்கு நம் மனதினை தயார்படுத்திவிடலாம்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *