வாழ்ந்து பார்த்த தருணம்…36

நாடற்றவனின் வலி…

இன்று 73வது சுதந்திர தினம், பராளுமன்றத்தில் ஆரம்பித்து பள்ளிகள் வரை கொண்டாட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது சரி. ஆனால் இன்றைய தலைமுறைக்கு உண்மையில் நம் நாட்டினுடைய சுதந்திரதின நாளின் முக்கியத்துவத்தையும், அதன் பின்னால் இருக்கும் பல்லாயிரகணக்கான பேரின் போராட்ட, தியாக, உயிர்நீத்த வரலாற்றையும் கடத்தியிருக்கிறோமா என்றால் இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். காரணம் இன்றைய தலைமுறைக்கு ஆகஸ்ட் 15 என்பது மற்றுமொரு விடுமுறை தினம் அவ்வளவே. அதைத் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் இன்னொரு உண்மை, சில பள்ளிகளில் நேற்றே சுதந்திரதினத்தை கொண்டி விட்டு இன்று முழுமையாக பள்ளிக்கு விடுமுறை. நேற்று தான் பாகிஸ்தானின் சுதந்திர தினம். எப்பேர்ப்பட்ட நகை முரண் பாருங்கள். இந்த லட்சணத்தில் இன்றைய தலைமுறை எப்படி சுதந்திர தினத்தை தனக்குள் உள்வாங்கும் என யோசித்தால் வலி மட்டுமே மிஞ்சுகிறது.

மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு நான் திரைத்துறையில் இருந்த சமயம். திரைப்படம் சம்பந்தமான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடக்கும்போது, அங்கு போகும் நம்மூர் மக்களுக்கான வசதிகளை எல்லாம் செய்துகொடுக்கும் ஒருவர். ஒரு வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்திருந்தார். அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பவர். அவர் உண்மையில் இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு புலம்பெயர்ந்தவர். அவருடன் ஒருநாள் சென்னைக்குள் பயணித்துக் கொண்டிருந்தேன். கூடவே, பயணம் செய்து கொண்டிருந்தவர் ஏக்கத்தோடு வெளியே பார்த்தபடி வந்தார். அப்படிப் பார்த்துக்கொண்டிருந்தவர் சில நிமிடம் கழித்து என் பக்கம் திரும்பி, நான் இப்பொழுது இருக்கும் நாட்டோடு ஒப்பீட்டால், இங்கே நிறைய முரண்கள் இருக்கின்றன. போக்குவரத்தில் ஆரம்பித்து, சாலை விதிகளை மதிப்பதில் ஆரம்பித்து, சாலையின் தரம் மற்றும் சுத்தம் இப்படி பல விஷயங்கள் கண்டிப்பாக மோசமாக இருக்கின்றன. ஆனாலும், ஒரு மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த நாடு உங்களுக்கானது என்று அவர் சொன்ன பொழுது அவர் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

அவர் மேலும் பேச்சை தொடர்ந்தார். நான் இருக்கும் நாட்டில் எங்களுடைய அடையாளம் என்னத் தெரியுமா என என்னை நோக்கி கேட்டுவிட்டு. தாங்கள் எப்படி அடையாளப்படுத்தப்படுகிறோம் என அந்த வார்த்தையைச் சொன்னார். அது எந்த வார்த்தை என்று இதை படிக்கும் எல்லோருக்கும் தெரியும். அந்த வலிமிகுந்த வார்த்தையை நான் தவிர்க்கிறேன். அவர் கடைசியாக இப்படிச் சொன்னார். வேறொரு நாட்டில் இருந்து கொண்டு, அந்த அடையாளத்தோடு பார்க்கும் போது சொந்த நாடற்ற எங்களின் வலியை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நீங்கள் சொந்த நாட்டில் இருந்து கொண்டே அதன் அருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று சொல்லி கொள்ள நாடும், ஊரும் இருக்கும் பொழுது. அது எதுவுமே இருந்தும் இல்லாமல் இருக்கும் எங்களுக்கு தான் நாடற்றவனின் வலி தெரியும் என்று சொன்னார். கண்டிப்பாக சத்தியமான வார்த்தைகள். உண்மையில் இன்றைய தலைமுறையினரிடம் பொய் சேரவேண்டிய மிக, மிக முக்கியமான விஷயம் இது தான். இந்த நாட்டின் மீதும், இங்கிருக்கும் அரசியலின் மீதும், இங்கே இருக்கும் முரணனான பல விஷயங்களின் மீது நமக்கு பல்வேறு மாற்று கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த மண்ணும், மக்களும், நாடும் நமக்கானது என்பதையும். அதைத் தாண்டி அதனை நமக்கு பெற்றுக்கொடுத்த வரலாற்றையும் நாம் மறந்தோமென்றால், கண்டிப்பாக நம்மை எந்த இடத்தில் நிறுத்தினால் நமக்கு மேலே சொன்னவையெல்லாம் உரைக்குமோ, அந்த இடத்தில் நம்மை கொண்டு போய் நிறுத்த இந்த வரலாறு தயங்காது. அதற்கு முன் சுதாரித்து கொள்வது நல்லது…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *