வாழ்ந்து பார்த்த தருணம்…39

அகவும் ஒலி இசையின் பின்னனியில் மிதந்த ஒற்றைப் படகு…

முடிந்த திங்களன்று சொந்த காரணங்களுக்காக திருசந்தூர் வரை செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. இன்றைய நிலையில் புகழ்பெற்ற கோவில் வாசஸ்தலங்களுக்கு செல்ல வேண்டுமென யோசித்தால், மனதினுள் முதலில் தோன்றுவது மிகப்பெரும் சலிப்பான அசூயை தான். காரணம் கடந்த ஏழு எட்டு வருடங்களாக கோவிலுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா வண்ணம் அதிகரித்து விட்டது தான். குறிப்பாக காஷ்மீரிலுருந்து கன்னியாக்குமரி வரை தங்க நார்ச்சக்கர சாலை போடப்பட்ட பிறகு, மக்கள் நினைத்த நேரத்தில் நான்கு சக்கர வாகனத்தில் புயலெனக் கிளம்பி விடுவது சர்வசாதாரணமான நிகழ்வாகிவிட்டது. அதுவும் நல்ல நாளில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என வீட்டில் யாராவது சொன்னால், கோவிலுக்கு வரும் கூட்டத்தை நினைத்து மனதினுள் கிலி கிளம்புகிறது. மனநிம்மதி தேடி கோவிலுக்கு கிளம்பி போனது போய், தேடிப்போன நிம்மதியை கூட்டத்தின் நெரிசல்களுக்கு இடையில் தொலைத்துவிட்ட வந்த கதை தான் பெரும்பாலும் நடக்கிறது.

இப்பொழுது திருசந்தூருக்கு வருவோம். இதற்கு முன்னர் திருச்சந்தூர் வந்த போதெல்லாம், ஊருக்குள் நுழையும் போதே முதலில் மனதினுள் வேண்டுவது, குறித்த நேரத்தில் வந்த வேலை முடிந்து, உடம்பில் அடி, இடி எதுவும் படாமல் பாதுகாப்பாக ஊரை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பதாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறை ஊருக்குள் இறங்கியவுடன் சந்தோச ஆச்சர்யம். இதற்கு முன்னால் பார்த்த திருச்சந்தூர் இல்லை, அப்படியே தலைகீழாக மிக, மிக குறைந்த அளவிலான மனித தலைகளே தென்பட்டன. அதனால் மனதின் கவனம் முழுமையாய் ஊரை உள்வாங்க ஆரம்பித்தது. நாங்கள் சென்று இறங்கிய நேரம் ஞாயிறு மாலை மூன்று மணிக்கு, மதுரையிலிருந்ந்து காலை பதினோரு மணிக்கு கிளம்பி ஒரு நான்கு மணி கால் மணி நேர பயணத்தில் திருசந்தூர் வந்துவிட்டோம். சற்றே சின்ன பயணம் செய்த சோம்பல் காரணமாக விடுதி அறைக்கு போய் ஓய்வு எடுத்துவிட்டு, அடுத்த நாள் வேலைக்கான பணியை முடித்துவீட்டு கடலைப் பார்க்க சென்றால், போகும் வழியெங்கும் மயிலின் அகவோசை கேட்டபடியே இருந்தது. இதற்கு முன்னர் வந்தபொழுதெல்லாம் இவ்வளவு துல்லியமாக அந்த ஓ(இ)சையை கவனித்ததே இல்லை. அப்படியே ஒலி வந்த திசையைப் பார்த்தால் இருட்டி விட்டபடியால் கண்களுக்கு மயில் புலப்படவில்லை. இப்படி தொடர்ச்சியாக கேட்ட அகவும் ஓசையை மனது முழுமையாய் நம்ப மறுத்தது. ஒரு வேளை யாராவது ஒரு தெய்வீக சுற்றுசுழலை வருவபர்வளுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒலிபெருக்கியின் வழியே இந்த ஓசையை ஒலிக்க விடுகிறார்களோ என்ற மிக, மிக முட்டாள்த்தனமான சந்தேகம் எல்லாம் வந்தது. காரணம், இதற்கு முன்னர் திருசந்தூர் வந்தபொழுதெல்லாம் இப்படி ஒரு ரம்மியமான சூழல் தான் இந்த ஊரை சுற்றி இருக்கிறது என்பதை உள்வாங்கியதே இல்லை. அந்த அளவு மக்கள் கூட்டத்தை பார்த்து ஊருக்குள் நுழைந்தது முதல் முருகனை தரிசித்து மீண்டும் வாகனம் ஏறி ஊருக்கும் புறப்படும் வரை தலைதெறிக்க ஓடியபடி தான் இருந்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் நகைப்பாக இருக்கிறது.

உண்மையில் எதற்காக கடவுளை பார்க்க கோவிலுக்கு வருகிறோமோ அதையெல்லாம் விட்டுவிட்டு, கடவுளை நிம்மதியாக பார்க்க முடிந்தால் சரி என்கிற மனநிலை தான் கடைசியில் மிஞ்சுகிறது. ஆனால் இந்த முறை அப்படி இருக்கவில்லை. வந்து சேர்ந்த அடுத்தநாள் திங்கட்கிழமை காலை ஏட்டரை மணிக்கு கோவிலுக்கு போக வேண்டிய வேலை இருந்ததால், காலையிலே நானும் கூடவே எனது தம்பி மற்றும் இருவருக்கும் பொதுவான நண்பரும் ஆறு மணிக்கு எழுந்து கடலுக்கு குளிக்கச் செல்லலாம் என கிளம்பினோம். திங்கள்கிழமை காலை ஆறரை மணி கடலின் பின்னனியில் கோவில் கோபுரத்தில் அமர்ந்து அகவும் மயில். அப்படியே கடலில் மிதந்த ஒற்றை படகு. பின்னர் இருபது, இருப்பத்தைந்து பேர் மட்டுமே நீராடிக்கொண்டிருந்து மக்கள் கூட்டமே இல்லாத கடல் என, அந்த நாள் காலை அற்புதமாக இருந்தது. கடலில் இறங்கி குளிக்கையில், நம் அருகே வரும் உயரமான அலையின் அருகாமை பார்வையின் வழியே கடலை பார்க்கும் போது ஒரு பய பந்து அடிவயிற்றிலிருந்து எழுந்து தொண்டைக்கு வருமே, அதையெல்லாம் உணர்ந்து கடலில் குளிக்க வேண்டுமென அன்றைக்கு தான் உறைத்தது. அதன்பின் ஆளே இல்லாத நாளிக்கிணறு குளியல். முடித்து பத்தே கால் மணிக்கு கடவுளின் தரிசனம். அதுவும் எவ்வித அவசரபடுத்துதலும் இல்லாமல் நிறுத்தி நிதானமான தரிசனம் என ஒவ்வொன்றையும் உணர்ந்து செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி. உண்மையில் நல்ல நாளில் மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே தவறு என்பது என்றைக்குமே என்னுடைய கருத்தாக இருந்திருக்கிறது. அதுவும் போகக் கடவுளை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதிலும் இங்கே மிகப்பெரிய முரண்பாடு இருக்கிறது. கடந்து சில நாட்களுக்கு முன்னதாக, என்னுடைய நண்பனும், உடன்பிறவா சகோதரனுமான ஜோசப் கோவிலின் உள்ளே இருக்கும் நந்தி சிலை வெளிப்படுத்தும் கருத்து என்ன என்பதை முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தான். ஏற்கனவே எந்தக் கோவிலுக்கு போனாலும் நன்றியை மட்டுமே சொல்லிகொண்டிருந்த நான். நந்தி வெளிப்படுத்தும் கருத்தை படித்தவுடன், கோவிலுக்குள் செல்லும் போதெல்லாம் விழிப்புணர்வுடன் கூடிய ஆழ்ந்த மவுனத்துக்குச் செல்கிறேன். அதுவே என்னை சுற்றி இருக்கும் அகவோசையும், கடலில் மிதக்கும் ஒற்றை படகையும், கோவிலினுள் வியாபித்திருக்கும் பேரமைதியையும் உள்வாங்கி லயிக்க வைக்கிறது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *