வாழ்ந்து பார்த்த தருணம்…41

தொடர் வண்டிக்குள் ஓர் இசை தேடும் பறவை…

நமக்கான நேரம், இது இன்றைக்கு எத்தனை பேருக்கு வாய்க்கிறது. கேட்டால் மிக, மிகச் சாதாரணமாக நேரமில்லை என்ற பதில் உடனடியாக வரும். நேரமில்லை என்ற வார்த்தையை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவேயில்லை. உண்மையில் நேரமில்லையா அல்லது நேரமில்லாமல் ஆக்கப்படுகிறோமா என யோசித்தால் நேரமில்லாமல் ஆக்கப்படுகிறோம் என்பதே உண்மை. இன்றைக்கு நம்முடைய பெரும்பாலான நேரங்களை ஒன்று தொலைக்காட்சி பெட்டிக்கு மற்றொன்று அலைப்பேசிக்கு என்று இரண்டுக்குமே தாரை வார்த்துக் கொடுத்து வெகுகாலம் ஆகிறது. இன்று நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னான், ஒரு வேலைக்கார அம்மாவை அவன் வீட்டின் வேலைக்காக சேர்ப்பதற்கு, அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த அம்மா போட்ட ஒரே நிபந்தனை, உங்கள் வீட்டில் இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை நான் வேலைப்பார்க்கமாட்டேன். அத்தோடு மட்டுமல்லாமல், அந்த ஒரு மணி நேரம் உங்கள் வீட்டின் தொலைக்காட்சி பெட்டி என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதற்குச் சம்மதித்தால் சம்பளத்தைக் கூட குறைத்துக்கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.

உண்மையில் இந்தத் தொழில்நுட்பம் வளர, வளர இந்தச் சமூகத்தில் அனைவரும் ஆகச்சிறந்த தொழில்நுட்ப அடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம். எங்கும், எதிலும், எதையுமே லயிப்போ, ஈடுபாடோ இல்லாமல் மேம்போக்காவே செய்து கொண்டிருக்கிறோம். இது நம் கண்முன்னே தினம், தினம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படித் தான் முடிந்த வார இறுதியில் சென்னைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். திங்கள் மதியம் சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை அதிவிரைவு வண்டியின் குளிர்சாதனப் பெட்டி. பெரும்பாலான பயணிகள் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில், அலைப்பேசியிலிருந்து ஒலி உமிழும் கருவியை காதுக்குள் இணைத்தபடி வேறு உலகத்துக்குள் போய்விடுகிறார்கள். முன்னால் எல்லாம் எவ்விதமான தொலைதூர பயணத்திலும் எந்த வண்டியாக இருந்தாலும், ஏறியவுடன் ஜன்னல் ஓரத்தில் அமர பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் பெரிய ரணகளமே நடக்கும். இன்று அப்படியான காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. அப்படி ஜன்னலோரத்தில் அமர்ந்தாலும் கடந்து போகும் உலகத்தைக் காண இன்றைக்கு யாருக்குமே நேரமில்லை. அப்படி ஜன்னலின் வழியே வேடிக்கை பார்க்கும் மனநிலையும் இன்றைக்கு அறுகிக்கொண்டே வருகிறது. பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு பயிற்சிகளில் என்காதுகளில் அடிக்கடி சொல்லப்பட்ட விஷயம் ஒன்று உண்டு. அது எத்தனை வயதானாலும் நமக்குள் இருக்கும் குழந்தை தன்மை நம்மால் தக்க வைக்க முடிந்தால், வயது என்பது மனிதனுக்கு ஒரு விஷயமேயில்லை என்பது தான் என் காதுகளுக்குள் சொல்லப்பட்ட வி(ரக)ஷயம்.

வைகை தொடர்வண்டியில் ஏறியதும் ஜன்னலோர இருக்கையை என மகள் பிடித்துக்கொண்டாள். அவள் தூங்கியவுடன் தான் இருக்கை எனக்குக் கிடைத்தது. வெளியில் என்னை கடந்து செல்லும் உலகத்தை ரசித்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. ஏகாந்தமாய் தெரியும் வானத்தின் ஓரத்தில் சூரியன் தன்னை பூமிக்குள் மறைக்க எத்தனித்து கொண்டிருந்தான். மறையப்போகும் சூரியனின் கதிர்கள் மஞ்சள்கீற்றாய் தொடர்வண்டிக்குள் பாய்ந்து பயணித்து கொண்டே வந்தது. இதையெல்லாம் ரசித்தபடியே ஜன்னலின் ஓரத்தில் உட்கார்ந்திருந்த எனக்கு, இத்தோடு ஒரு பாடலையும் இணைத்தால் எப்படி இருக்கும் என தோன்ற, கற்றது தமிழ் படத்திலிருந்து பறவையே எங்கு இருக்கிறாய் பாடலை காதுகளின் வழியே இதயத்துக்குள் நுழைத்தேன். அந்தப் பாடல் அப்படியே என்னை பறக்க வைத்தது. யுவன் இசையில் வெளிவந்த பயணப்பாடல்களில் ஆகச்சிறந்த பாடல் இந்த பாடல் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அந்த பாடலின் துவக்கத்தில் வரும் ஆனந்தி கதாபாத்திரத்தின் குரல், அதில் அக்கரையோடு கூடிய காதல் மனநிலையில் ஆனந்தி பகிரும் வார்த்தைகளில் தெறிக்கும் காதல். ஆனந்தி இப்படிச் சொல்வாள், வாரத்துக்கு மூணுநாளாவது குளி, அந்த சாக்ஸ துவைச்சு போடு, நகம் கடிக்காத என ஆனந்தி பேசி முடித்தவுடன், பின்னனியில் சின்னதாய் ஒலிக்க தொடங்கும் இசை என இவையெல்லாம் சேர்ந்து என் மனத்துக்குள் ஊடுருவ தொடங்கும் போது, தொடர்வண்டியின் ஜன்னலின் வழியே வெளியே பார்வையை படரவிட்டபடியே இருந்தேன். அந்தப் பாடலை உங்களின் காதுகளுக்குள் ஓடவிட்டப்படி தொடர்வண்டியின் ஜன்னலோர இருக்கையையும், ஜன்னலின் பின்னால் பின்னோக்கி ஓடும் இந்த உலகத்தையும் கற்பனை செய்து பாருங்கள், அப்போழுது தான் நாம் எப்படிப்பட்ட தருணங்களை தவறவிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.

இசை என்பதும் இன்றைக்கு, அன்றைக்கு மட்டுமான கொண்டாட்டமாக ஆகிவிட்ட பிறகு, ரசிப்புத்திறன் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக அற்று போய்க்கொண்டே இருக்கிறது. இசை என்பது நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து ஒன்றாக பயணித்த காலம் என்று ஒன்று இருந்தது. இளையாராஜாவையும், எம்.எஸ்.வியையும் ரசித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள், இந்த இரண்டு இசை மேதைகளும் எத்தனை எத்தனை பேரின் மனநிலையை சீர்படுத்தி, அவர்களின் வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பக்கம், பக்கமாகச் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு நம்மனநிலையை சீரமைக்கும் இசையும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதை கேட்கக் கூடிய மனநிலையும் நேரமும் நமக்கு இல்லை. இந்தச் சமூகத்தில் ஒரு மாதத்தில் எத்தனை பேர் எத்தனை முறை பயணிக்கிறோம். ஆனால் ஜன்னல் ஓர இருக்கையையோ அல்லது ஒரே ஒரு பாடலை மட்டும் முற்று முழுவதுமாக, ஆழமாகக் கேட்டு ரசிக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் பதில். இதில் மன அழுத்தமும், அதன் விளைவாக வியாதியும் வராமல் என்ன செய்யும். பயணத்தின் போது கூட நிறைய பேரின் அழைப்பேசிகளில் நெடுந்தொடரோ அல்லது திரைப்படமோ அதுவும் இல்லை என்றால் பாடலை காட்சி வடிவத்தில் காணொளியாகவோ ஓடிக்கொண்டிருப்பதை தான் நான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். மேலே சொன்ன அத்தனையும் நம் கண்களுக்கும், மூளைக்கும் கேடு தான். காரணம் தொடர்வண்டியின் அதிர்வின் இடையே, ஒரு குறிப்பிட்ட குறுகிய இடத்திற்குள் நம் பார்வையை குவிக்கும் போது, அது மிக, மிக மோசமாகவும், கொஞ்சம், கொஞ்சமாகவும், நம் பார்வையையும் அதன் வழியே நம் மூளையையும் பாதிக்கும். அதனால் உங்களுக்கான நேரம் என்பது இங்கே மிக, மிக அவசியம். அதனுள் அற்புதமான இசையோடும் ஏனைய உங்களின் ரசனையோடும் இரை(ற) தேடும் பறவையாய் ஆழ்ந்து போங்கள். அந்த நேரம், அந்த நிமிடம், அந்த நொடி உங்களுக்கானது… மகிழ்ச்சி

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *